Wednesday, March 17, 2021

காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்!

 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் காந்தளூர் சாலையும் இராஜராஜ சோழனும்! தொடர்பிருக்கிறது. அதனால்தான் ஓர் உரையாடலாக இந்தப் பதிவு. 2373 words... எவ்வளவு பெரிய மாத்திரை! தமிழக அரசர்கள் முதன் முதலாக பேரரசர்களாக உயர்ந்தது பிற்கால சோழர்களின் காலத்தில்தான். அதற்கு வித்திட்டவர் இராஜராஜ சோழன். பாண்டியர்களையும் சேரர்களையும் ஒடுக்கி மொத்த தமிழகத்தையும் ஒரே அரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவரும் இவரேதான். ஆனால், இவரது மெய்கீர்த்திகள் அனைத்தும் ஒரு வெற்றியில் இருந்தே தொடங்குகிறது. மட்டுமல்ல. இவருக்கு பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு திரும்பத் திரும்ப இராஜராஜ சோழரின் குறிப்பிட்ட அந்த வெற்றியை தங்கள் மெய்கீர்த்திகளில் சொன்ன பிறகே தங்களது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்கள்; கல்வெட்டிலும் பொறித்துள்ளார்கள்; சாசனமாகவும் வடித்திருக்கிறார்கள். அதுதான் ‘காந்தளூர் சாலை கலமறுத்த’ என்ற சொற்றொடர். ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் / தனக்கேயுரிமை பூண்டமை மனங்கொளக் கருதிக் / காந்தளூர்ச் சாலை கலமறுத்தறுளி...’ இப்படித்தான் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி தொடங்குகிறது. ‘காந்தளூர் சாலை’ வெற்றியை இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் தங்கள் மெய்கீர்த்திகளில் பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் - ‘காந்தளூர் சாலை’ என்பது மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பரப்பா..? பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் போல் ஏதேனும் அரசக் குடியா..? இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்! ஏன் ஒரு கல்விக்கூடத்தின் மேல் இராஜராஜர் படையெடுத்துச் சென்றார்..? இதற்கான விடையை அறிவதற்கு முன், இந்த ‘காந்தளூர்’ எங்கிருக்கிறது... என்று பார்த்துவிடுவோம். தமிழகக் கல்வெட்டுகளில் காந்தளூர் என்னும் ஊர்ப்பகுதி முதன் முதலில் முத்தரையர் கல்வெட்டு ஒன்றில் இடம்பெறுகிறது. இதற்கு அடுத்து திருவண்ணாமலை திருக்கோயிலில் காணப்படும் முதலாம் பராந்தகர் காலத்து கல்வெட்டு ஒன்று காந்தளூர் என்னும் நாட்டுப் பகுதியை, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு 15வது வாணகோப்பாடி பெண்ணை வடகரைக் காந்தளூர் நாட்டு விச்சூர்...’ என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு கல்வெட்டுகளிலும் இடம்பெறும் காந்தளூரும் இராஜராஜர் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்படும் காந்தளூரும் ஒன்றல்ல என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒரே குரலில். இன்றைய மாநில வரைபடங்களில் காந்தளூரை தேடினால் பலப்பல ஊர்கள் அதே பெயரில் வந்து நிற்கின்றன. செங்கல்பட்டுக்கு அருகில், திருச்சிக்கு அருகில், கேரள இரிஞ்ஞாலக் குடைக்கருகில் ஒன்று... என பட்டியல் நீள்கிறது. இவற்றில் இராஜராஜர் குறிப்பிடும் காந்தளூர் எது? அறிந்து கொள்ள, காந்தளூரை அடுத்து வரும் ‘சாலை’ என்னும் பதம் உதவுகிறது. ‘சாலை’கள் சமஸ்கிருதத்தில் ‘சாலா’ என்றழைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் அக்காலத்தில் நிறுவப்பட்ட ‘கடிகா’ அல்லது ‘கடிகை’ என்னும் நிறுவனங்களை ஒட்டியே ‘சாலை’களின் செயல்பாடுகள் அமைந்தன. பல்லவர்கள் காலத்தில் மட்டுமல்ல சோழர் காலத்திலும் கடிகைகள், சாலைகள் தமிழகம் எங்கும் இயங்கியிருக்கின்றன. இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. கடிகைகளும், சாலைகளும் ஏதாவது ஒரு திருக்கோயிலோடு தம்மை இணைத்துக் கொண்ட நிறுவனங்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இதற்கான முக்கியமான ஆதாரம் ஆய்வேள் மன்னர் கோக்கருந்தடக்கரின் செப்பேட்டில் காணப்படுகிறது. இதில் பார்த்திவசேகரபுரத்து விஷ்ணு பட்டாரகர் திருக்கோயிலை ஒட்டி, தாம் அமைக்கப்போகும் சாலையைப் பற்றிய பல முக்கியத் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆக, காந்தளூரில் அமைந்திருந்த சாலையும் ஏதோ ஒரு திருக்கோயிலுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அந்தக் கோயில் இப்போது எங்கிருக்கிறது? கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நெரிசல் மிக்க வலியசாலை பகுதியில் அமைந்திருக்கும் ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலே என்கிறார் அறிஞர் டி.ஏ.கோபிநாத ராவ். தான், பதிப்பித்த ‘திருவிதாங்கூர் சமஸ்தானக் கல்வெட்டுகள்’ என்னும் தொகுப்பின் இரண்டாம் பாகத்துக்கான முன்னுரையில் காந்தளூர் பற்றியும் சாலை குறித்தும் ஆழமாக விவாதித்திருக்கிறார். ஜுவாலா மகாதேவர் திருக்கோயிலை காந்தளூருடன் நேரடியாக தொடர்புபடுத்தும் ஒரே ஆதாரம், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ‘மதிலகம் ஆவணம்’. இந்த ஆவணங்களில் இக்கோயில் ‘காந்தளூர் மகாதேவர் கோயில்’ என்றே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டும் டி.ஏ.கோபிநாத ராவ், இக்கோயிலுடன்தான் காந்தளூர் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். இக்கோயில் இறைவனின் பெயரான ‘ஜுவாலா மஹாதேவர்’ என்பதும் ‘சாலா மகாதேவர்’ என்பதன் திரிபே. ஏனெனில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூற்றுப்படி ‘சாலா’ என்னும் சொல் வடமொழியில் ‘ஜுவாலா’. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஆதாரம், ஜுவாலா மகாதேவர் திருக்கோயில் என்கிற ‘சாலா மகாதேவர்’ திருக்கோயிலின் கருவறை மேற்குச்சுவரில் காணப்படும் முதலாம் இராஜேந்திரரின் சிதைந்த மெய்கீர்த்தி! இதற்கிடையில் பரதப்புழா நதிக்கரையில் வேறொரு காந்தளூர் திருக்கோயிலை வில்லியம் லோகனின் புகழ்பெற்ற ‘மலபார் மேனுவல்’ அறிமுகம் செய்வதை சில ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுத்து டி.ஏ.கோபிநாத ராவ் குறிப்பிடுவதையே ஏற்கிறார்கள். அடுத்து சாலை. காந்தளூரில் அமைந்திருந்த சாலை பற்றி இன்றைய தேதியில் விரிவாக விவாதிக்கும் ஒரே கட்டுரை, கேரள வரலாற்று அறிஞர் எம்.ஜி.எஸ்.நாராயணன் எழுதியுள்ள ‘Bachelors of Science’. இதில் சாலைப் பாரம்பரியம் பற்றியும் அங்கு கொடுக்கப்பட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் குறித்தும் அலசுகிறார். ‘சட்டர்கள்’ என்றழைக்கப்பட்ட அந்நாளைய நம்புதிரி அந்தணர்களுக்கு வேதம், வேதாந்தம், வியாகர்ணம் (இலக்கணம்), அரசியல் மற்றும் போர்ப் பயிற்சி முறைகளை கற்றுத் தந்த இடம்தான் சாலை என்கிறார். கேரளத்தில் காந்தளூரையும் சேர்த்து குறைந்தபட்சம் நான்கைந்து சாலைகள் அமைந்திருந்தன. அவை அனைத்தும் 13 - 14ம் நூற்றாண்டு வரை செயல்பட்டிருக்கின்றன. ஆக காந்தளூர் சாலை என்பது அந்நாளில் கேரளத்தில் - சேர நாட்டில் - மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஒரு கல்வி நிறுவனம் என்பது தெளிவாகிறது. இப்போது இராஜராஜ சோழருக்கு வருவோம். அவருடைய வெற்றிகளைப் பதிவு செய்யும் திருவாலங்காடு செப்பேடு, அவர் மதுரையில் இருந்து தனது திக்விஜயத்தை தொடங்கினார் என்றும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை வென்றார் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மதுரை வெற்றியையும் அமரபுஜங்கனையும் இராஜராஜர் ஏனோ தமது மெய்கீர்த்திகளில் அவ்வளவாக குறிப்பிடவில்லை. பாண்டியரையே பொதுவாக ‘செழியரைத் தேசு கொள்’ என்று கூறி சென்றுவிடுகிறார். ஆனால், காந்தளூர் இராஜராஜருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. தமக்கென்று முறையான மெய்கீர்த்தி உருவாக்கப்படும் காலம் வரை அவர் தன்னை ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மர்’ என்றுதான் குறிப்பிட்டுக் கொள்கிறார். அப்படி என்ன இராஜராஜருக்கு காந்தளூர் மேல் பகை? அப்போது அங்கே யார் அவரை எதிர்த்தார்கள்? சாலையோ ஒரு கல்வி நிறுவனம். அதனை அவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? அது என்னவிதமான தாக்குதல்? நிச்சயம் காந்தளூரை ஒட்டுமொத்தமாக அழித்தொழித்த தாக்குதல் அல்ல. ஏனெனில் இராஜராஜருக்கு பிறகு மீண்டும் மீண்டும் பல மன்னர்கள் - சோழர்கள் - காந்தளூரை கலமறுத்துள்ளனர். அட... ‘மூன்று கை மாசேனை’ என்னும் சோழப் படை கூட காந்தளூரை கலமறுத்ததாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். போலவே ‘வேலை அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ’ என்கிற ‘கலிங்கத்துப் பரணி’யின் வினாவிலும் அழித்தொழிப்பது வேறு சாலை கொள்வது வேறு என்ற அர்த்தம் நிரம்பி வழிகிறது. சாலை கொள்வதற்கும் சாலை கலமறுப்பதற்கும் என்ன தொடர்பு? இதை சரிவர புரிந்து கொள்ள அப்போதைய அரசியல் பின்னணியை கொஞ்சம் பார்க்க வேண்டும். தென்னாட்டின் அந்நாளைய அரசியல் நிலவரம் சேரர், சோழர், பாண்டியர் என்று அறியப்பட்ட முப்பெரும் சக்திகளாலும் அவர்களுக்குக் கீழ் தத்தம் நிலப்பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களாலுமே வரையறுக்கப்பட்டது. இவர்களுக்குள் நிரந்தர நட்போ பகையோ என்றுமே இருந்ததில்லை. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களுக்குள் கூட்டு சேர்ந்தார்கள் அல்லது சண்டையிட்டார்கள். தமிழகத்துக்கு வடக்கே அமைந்திருந்த தேசங்கள் இந்த மூன்று மண்டலங்களையும் வளைக்கத் தருணம் பார்த்து காத்திருந்தன. பலகீனமான சமயங்களில் ஆதாயம் தேடின. ஏதாவது ஒரு சக்தியுடன் இணைந்து மற்ற இரு சக்திகளையும் அழித்து தமது இராஜ்ஜியத்தை பெரிதாக்கிக் கொள்ள எப்பொழுதும் சிந்தித்தன. இதன் விளைவுதான் தமிழகத்தின் 2 ஆயிரம் கால வரலாறு. இந்த இடத்தில் சேர நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய அமைப்பைக் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. கி.மு.2ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் ஒரு பகுதியாக அறியப்பட்ட சேர நாடு அதற்குப் பின்வந்த காலத்தில் மெல்ல மெல்ல தனக்கென தனியாக அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணியை உருவாக்கிக் கொண்டது. களப்பிரர் ஆட்சி கேரளத்தில் பரவவில்லை. களப்பிரர்களுக்கு பின் தமிழகத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் மலர்ந்த அதே காலத்தில் சேர நாட்டில் பெருமாள் வம்சத்தவரின் ஆட்சி உருவாகியது. இக்குலத்தின் மூத்த மன்னராக அறியப்படும் குலசேகரப் பெருமாள், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவருக்குப் பின் குறிப்பிடத்தக்க சேர மன்னராக திகழ்ந்தவர் 64 நாயன்மார்களில் ஒருவரான பெருமாக்கோதையார். இவரது இயற்பெயர் மறைந்து ‘சேரமான் பெருமாள்’ என்றே பக்தி இலக்கியங்களில் அறியப்படுகிறார். உண்மையில் பெருமாள் வம்சத்து மன்னர்கள் அனைவருமே ‘சேரமான் பெருமாள்’ என்றழைக்கப்பட்டனர். பெருமாள் வம்சத்து அரசர்கள் தங்களைக் ‘கேரளாதிநாதர்’, ‘சக்ரவர்த்திகள்’, ‘கோனேரின்மை கொண்டான் கோ’ என பலவாறு அழைத்துக் கொண்டாலும் அவர்களது அரசியல் பலமும் அதிகாரமும் குறுகியது. உண்மையில் மலைநாட்டின் அரசியல் பலத்தை நிர்ணயித்தது அதன் பல்வேறு கூறுகளாக அமைந்திருந்த நாடுகளும் அந்தந்த நாடுகளில் தத்தம் அதிகாரங்களை செலுத்திய நாடுவாழிகளுமே. இவர்களை கிட்டத்தட்ட தமிழக குறுநில மன்னர்களுடன் ஒப்பிடலாம். கேரளத்தின் வடக்கே அமைந்திருந்த கொளத்து நாட்டில் தொடங்கி புரைக்கிழநாடு, குறும்பொறை நாடு, இராம வளநாடு, குட்ட நாடு என்று விரிந்து தெற்கில் வேணாடு, வள்ளுவநாடு, குறுநாடு, படப்பாநாடு, முடாலநாடு என்று படர்ந்து நாஞ்சில் நாட்டில் முடியும். ‘நாடுவாழிகள்’, ‘நாடுடையவர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்த மரபினர் வம்சாவழியாகத் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களுக்கென்று படை, அதிகாரம், வருமானம்... என எல்லாம் இருந்தன. போர்க் காலங்களில் ‘பெருமாளுக்கு’ தோள் கொடுக்க படைகளை அனுப்புவார்கள். இப்படி கேரளத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமுதாய சக்தியாக நாடுவாழிகள் மட்டும் விளங்கவில்லை. இவர்களை ஈடுகட்டும் வகையில் வலிமை வாய்ந்த பிரிவினராக நம்புதரி அந்தணர்கள் வளர்ந்திருந்தார்கள்! ‘ரிஷிபர்யனான’ (பரசுராமரை குறிக்கும் மலையாள சொல்) பார்க்கவ இராமன் தன் வலிமை வாய்ந்த கோடரியைக் கொண்டு நிறுவிய ‘பிரம்ம ஷேத்திரமாக’ மலை நாட்டை கேரள அந்தணர்கள் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள். இவர்களது மூத்த குடியிருப்புகள் கேரளா முழுக்க 32 கிராமங்களில் வேரூன்றியிருந்தன. இவற்றுள் ‘பெருஞ்செல்லூர்’ முதலான கிராமங்கள் சங்ககாலம் முதல் அறியப்பட்டிருந்தவை. இந்த கேரள அந்தணர்கள் தத்தம் கிராமங்களில் பண்டைய ஆகம முறைப்படி கோயில்கள் அமைத்தார்கள். ஊருக்கு மேற்கே விஷ்ணு, கிழக்கே சிவன் ஆலயங்கள். இந்தக் கோயில்களுக்கான நிலங்கள், ‘சேரமான் பெருமாள்’களால் நிவந்தங்களாக வந்து சேர்ந்தன. கோயில் வழிபாடுகளைக் கண்காணிக்கவும், ஊரை நிர்வகிக்கவும் மகாசபை என்னும் அமைப்புகள் தோன்றின. இவற்றுள் அரசியல் வலிமை வாய்ந்த அமைப்பாக மகோதயபுரத்தின் ‘நாலுதளிச்சபை’ உருவானது. மகோதகையின் நான்கு திக்குகளிலும் அமைந்திருந்த மூழிக்குளம், ஜரணிக்குளம், பரவூர் மற்றும் இரிஞ்ஞாலக் குடை என்னும் அந்தண கிராமங்களில் அமைந்திருந்த கீழ்த்தளி, மேற்றளி, நெடியதளி, சிங்கபுரத்தளி என்ற நான்கு திருக்கோயில்களின் தளியதிகாரிகளைக் கொண்டிருந்த அமைப்பே ‘நாலுதளிச்சபை’. ஒவ்வொரு கோயிலில் இருந்தும் இரு தளி அதிகாரிகள் இந்த அமைப்பில் செயல்பட்டார்கள். இந்த ‘நாலுதளிச்சபை’, சேரமான் பெருமாளின் அந்தரங்க ஆலோசனைக் குழுவாக விளங்கியது! மேலே குறிப்பிட்ட நான்கு கிராமங்களும், கேரளா முழுக்க அமைந்திருந்த 32 கிராமங்களுக்கும் தலைமை செயலகமாக விளங்கியது! இவர்களது குரலே சேர நாட்டின் குரல்! தமிழகம் முழுவதும் அக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருந்தும், சேர நாட்டின் ‘நாலுதளிச்சபை’க்கு இணையான அரசியல் - சமுதாய அமைப்பு இங்கு தோன்றவேயில்லை! ஆனால், பல்லவ, சோழ, பாண்டிய தேசங்களில் அப்படி தோன்ற வேண்டும் என்று ‘நாலுதளிச்சபை’ பல நூற்றாண்டுகளாக முயன்றது! இதற்காகவே சாலை அல்லது சாலா என்றழைக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட பல்லவர் காலத்தில் காஞ்சியில் இயங்கிய கடிகைக்கு சமமானது என்றாலும் நம்புதரி அந்தணர்களின் பின்புலத்தை ஒட்டி வேறுபட்டும் இருந்தன. இந்த வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்கது சாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதப் பயிற்சி! இந்த ஆயுதப் பயிற்சி முறைகள் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் உருவாக்கப்பட்டு நுட்பமான முறையில் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி எடுத்த அந்தண மாணவர்கள், ‘சட்டர்கள்’ அல்லது ‘சாத்திரர்கள்’ என்றழைக்கப்பட்டார்கள். பின்னாளில் தமிழக வழக்கத்துக்கு வந்த ‘சட்டாம் பிள்ளை’ என்ற சொல்லுக்கான வேர், ‘சட்டர்கள்’தான்! பயிற்சி பெறும் அந்தண மாணவர்கள் இடையே ‘கலங்கள்’ என்றழைக்கப்பட்ட பிரிவுகள் இருந்தன. பவிஷிய சரணத்தார் கலம், தைத்திரிய சரணத்தார் கலம், தலவகார சரணத்தார் கலம்... என வேதாகமங்களை ஒட்டி ஒவ்வொரு கலத்துக்கும் பெயரிடப்பட்டன. வேதம், வேதாந்தம், இலக்கணம், பண்டைய சாத்திரங்கள், அரசியல் விவகாரங்கள், மருத்துவம், விஞ்ஞானம், மாந்திரீகம், வர்மம், நுண்கலைகள்... என சகலமும் அந்தண மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. அரசர்கள் சாலைகளை பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாகக் கொடுத்ததால், இதற்கு ஈடாக அந்த அரசருக்கு தேவையான அமைச்சர்கள், தளபதிகள், போர் வீரர்களை சாலைகள் உருவாக்கிக் கொடுத்தது. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... சிம்மாசனத்தில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என சாலைகளில் பயிற்சி பெறும் ஒவ்வொரு அந்தண மாணவர்களும் நினைத்தார்கள். அப்படி நினைக்க வைப்பதற்காகவே விவரம் தெரியும் வயதுக்குள் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். எனவே அந்தண மாணவர்களின் சிந்தனை, நினைப்பு, செயல்... என சகலத்தையும் முதுபெரும் நம்புதரி ஆசான்களால் வடிவமைக்க முடிந்தது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். சேர நாட்டின் - கேரளத்தின் - இப்படிப்பட்ட சமுதாய அமைப்பு தமிழகத்துக்கு எப்படி பொருந்தும்..? இதற்கும் இராஜராஜ சோழருக்கும் என்ன தொடர்பு..? இதற்கான விடை சேர அரசர்களுக்கும் தமிழக அரசர்களுக்கும் நிலவி வந்த அரசியல் உறவுகளில் புதைந்திருக்கிறது! பன்னெடுங்காலமாக சேர நாடு பல்லவ, சோழ, பாண்டியர்களோடு கொண்டிருந்த நெருங்கியத் தொடர்புகளால் கேரளத்தின் குறுநில மன்னர்களும் இதர பிரிவினரும் - குறிப்பாக அந்தணர்கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர். இவர்கள் அனைவருமே ‘சாலை’களுடன் தொடர்புடையவர்கள்! இக்குடியினரில் மிகவும் தொன்மை வாய்ந்தவர்கள் ‘தில்லை மூவாயிரவர்’ என சுந்தரமூர்த்தி பெருமானால் குறிக்கப்படும் சிதம்பரத்தின் தில்லைவாழ் அந்தணர்கள்! சோழ அரசர்கள் தில்லையம்பதியின் பெருமானை தங்கள் குலதெய்வமாக குறித்தனர். சோழ வம்சத்தவர் சக்கரவர்த்தியாக முடிசூடும்போது மணிமுடியை மன்னரின் முடியில் இருத்தும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே இருந்தது! இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன் காலத்தில் கடலில் போடப்பட்ட நிகழ்வும்... இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மூண்ட சைவ - வைணவ மதக் கலவரங்களையும் நினைவில் கொள்வது நல்லது! போலவே தில்லை ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார ஓலைகளை இராஜராஜ சோழர் படையுடன் சென்று மீட்டு மக்களுக்கு கொடுத்த சம்பவத்தையும்! விஷயத்துக்கு வருவோம். சிதம்பரத்தை தவிர திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பழுவூரிலும் சேர மரபினர் வாழ்ந்து வந்தனர். திருஞானசம்பந்தரின் பழுவூர்ப் பதிகம் இதை நிரூபிக்கிறது. தவிர, ‘மன்னுபெரும் பழுவூர்’ என்றே கல்வெட்டுகள் பழுவூரைக் குறிக்கின்றன. சோழர் காலத்தில் இப்பகுதி சேர மரபை சார்ந்த பழுவேட்டரையர்கள் என்னும் குறுநில மன்னரின் ஆளுக்கு உட்பட்டிருந்தது. சோழ அரசக் குலத்தவருடன் இவர்கள் மணவினைத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். இந்த பழுவேட்டரையர்களும் ‘சாலை’களுடன் தொடர்பு கொண்டவர்களே! பிற்கால சோழர்களுள் பெருவீரராக விளங்கிய முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் சோழ - சேர உறவு மிக நெருக்கமாக வளர்ந்தது. அப்போது சேர நாட்டை ஆட்சி செய்து வந்த ஸ்தாணு ரவியின் நெருங்கிய நண்பராக முதலாம் ஆதித்தர் விளங்கினார். இந்த சோழ - சேர உறவு முதலாம் ஆதித்தரின் மகனான முதலாம் பராந்தகர் காலத்தில் மேலும் பலப்பட்டது. ஸ்தாணு ரவியின் பேத்தியான கோக்கிழானடிகளையே முதலாம் பராந்தகர் மணந்தார். இந்த சேர இளவரசிக்கும் முதலாம் பராந்தகருக்கும் பிறந்தவர்தான் சோழ இளவரசரான இராஜாதித்தர். சோழ இளவரசர் தங்கள் வம்சத்தின் கொழுந்து என்பதால் சேர நாடே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. குறிப்பாக அங்கிருந்த ‘சாலை’கள்! தங்கள் அதிகாரத்தை சேர நாட்டில் நிலை நாட்டியது போலவே சோழ தேசத்திலும் நிறுவலாம் என ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் திட்டமிட்டார்கள். சோழ சைன்யத்தின் வடதிசை தளபதியாக விளங்கிய இராஜாதித்தரின் படையில், சேர வீரர்களைக் கொண்ட தனிப்படை ஒன்று இயங்கி வந்தது. இப்படை வீரர்கள் அனைவரும் ‘சாலை’களில் பயிற்சி பெற்றவர்கள்! இராஜாதித்தரின் அந்தரங்க மெய்க்காப்பாளாராகவும் சேனானிநாயகமாக விளங்கியவரும் மலைநாட்டின் வள்ளுவ நாடுவாழிகள் குடும்பத்தை சேர்ந்த மாவீரரான நந்திக்கரைப்புத்தூர் வெள்ளிங்குமரன்தான்! (பார்க்க Travancore Archaeological Series Vol 1, Page 291). முதலாம் பராந்தகர் காலத்தில் உடையார்குடிக்கு அருகில் வீரநாராயணபுரம் என்னும் சதுர்வேதி மங்கல குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து அனந்தீசுவரம் என்னும் கோயிலும் உருவாகின. இப்பகுதியில் பலகாலமாகவே புகழ்பெற்றதொரு திருமால் கோயில் இருந்து வந்தது. ஆழ்வார்கள் இத்தலத்தின் வீரநாராயண பெருமாளை பாடியுள்ளனர். இப்படி கீழ்த்தளியான அனந்தீசுவரம், மேற்றளியான விண்ணகரக் கோயில் என்று நம்புதரி அந்தணர்களால் சேர நாட்டில் வகுக்கப்பட்ட இலக்கணத்துடன் தமிழகத்தில் - சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள். இந்த அந்தணர்கள்தான் - உடையார்குடி - பின்னாளில் இராஜராஜ சோழரின் அண்ணனான ஆதித்த கரிகாலனை கொலை செய்யப் போகிறார்கள்! இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த சோழ - சேர உறவில் முதல் விரிசலை ஏற்படுத்தியது தக்கோலப் பெரும் போர். முதலாம் ஆதித்த சோழர் இராஷ்டிரகூடத்து இளவரசியை மணந்திருந்தார். இந்த இளவரசி வழியாக அவருக்கு கன்னர தேவன் என்ற மகன் பிறந்திருந்தார். இந்த கன்னரதேவன் பட்டம் ஏற்காமல் பராந்தகர் சோழர் தில்லைவாழ் அந்தணர்களின் ஆதரவுடன் சிம்மாசனம் ஏறியது இராஷ்டிரகூடர்களுக்கு பிடிக்கவில்லை. பகை முற்றி இராஷ்டிரகூடத்து மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தார். இன்றைய அரக்கோணமான அன்றைய தக்கோலத்தில் சோழர் படை இராஷ்டிரகூடர்களை சந்தித்தது. இப்பெரும் போரில் கங்க அரசன் பூதுகன், யானை மீதிருந்த இளவரசர் இராஜாதித்தரை தாக்கிக் கொன்றார். நமது வம்சத்து இளவல் சோழ அரியணையில் அமரப் போகிறார் என்று கனவு கண்டு வந்த சேர மன்னர் - குறிப்பாக ‘சாலை’களின் ஆசான்களான நம்புதரி அந்தணர்கள் - இராஜித்தரின் மரணத்தை அடுத்து நிலைகுலைந்தார்கள். சோழ நாட்டின் அரசியல் நிலவரமும் இதன் பிறகு பலம் குன்றியது. வடக்கே இராஷ்டிரகூடர்கள் வலு பெற்றார்கள். தெற்கிலோ ஈழத்துடன் இணைந்து பாண்டியர்கள் பல்வேறு தொல்லைகளை கொடுத்தார்கள். இதற்கிடையில் சேர நாட்டுடன் தாய்வழியில் உறவு கொண்டிருந்த பாண்டிய அரசர் இராஜசிம்மர், மலைநாட்டில் அடைக்கலம் புகுந்து அங்கேயே காலமானார். பராந்தகருக்கு பின் சோழ அரியணை ஏறிய கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், அரிஞ்சயரின் புதல்வரான இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர்... என்று தொடர்ந்த சோழ இராஜ வம்சத்தில் சேர குலத்துடனான உறவு பழையபடி வலுவாக இல்லாமல் அதேநேரம் முற்றிலும் துடைக்கப்படாமலும் இருந்தது. இதற்குக் காரணம் சேர வம்சத்தை சேர்ந்த பழுவேட்டரையர்களுடன் சோழர்கள் நெருக்கமான மணவினை உறவு வைத்திருந்ததே. என்றாலும் இரண்டாம் பராந்தகர் என்கிற சுந்தர சோழர் காலத்தில் உரிய வயதை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வரான மதுராந்தகருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படவில்லை. மாறாக சுந்தர சோழரின் மூத்த மகனான இரண்டாம் ஆதித்தர் என்கிற ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. இதை ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உடையார்குடி அந்தணர்கள் ஏற்கவில்லை. இராஜாதித்தர் வழியே தாங்கள் நிறைவேற்ற எண்ணிய கனவை - சேர நாட்டைப் போன்ற சமுதாய அமைப்பை - மதுராந்தகர் வழியே நிறைவேற்றலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள். இதனையடுத்து அவர்கள் எதிர்பார்த்தது போலவே மதுராந்தகர் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். தனது சிற்றப்பா மதுராந்தகர், சோழ சிம்மாசனத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனை தன் மனதாலும் தீண்டுவதில்லை என ஆதித்த கரிகாலனின் தம்பியான அருள்மொழி என்கிற இராஜராஜர் திட்டவட்டமாக அறிவித்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. படிப்படியாக பலவீனம் அடைந்து கொண்டிருந்த சோழ சாம்பிராஜ்ஜியத்தை மேலை சாளுக்கிய மன்னரான சத்யாச்ரயர் கி.பி.980ல் தாக்கியபோது, உத்தம சோழர் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகரால் அவரை வெற்றி கொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் சோழ நாட்டில் நடந்தன. ‘சாலை’களின் ஆதிக்கத்தாலேயே சோழர்கள் பலவீனமடைந்திருக்கிறார்கள் என மற்ற தமிழக குறுநில மன்னர்கள் உணர்ந்தார்கள். வேறுவழியின்றி கி.பி.985ல் உத்தம சோழர் என்கிற மதுராந்தகர் பதவி விலகினார். இராஜராஜர் என்னும் அடைமொழியுடன் அருள்மொழி சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தார். பட்டம் ஏற்ற கையோடு இராஜராஜர் செய்த முதல் காரியம், தன் அண்ணன் ஆதித்த கரிகாலரின் படுகொலைக்கு காரணமாக இருந்த - ‘சாலை’களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த - உடையார்குடி அந்தணர்கள் அனைவரையும் - குழந்தை, பெண்கள், வயதானவர்கள் உட்பட - உடுத்திய ஆடைகளுடன் கால்நடையாக நடந்து நாடு கடக்கும்படி செய்ததுதான். உடையார்குடி அனந்தீஸ்வரம் திருக்கோயிலின் விமான மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள இராஜராஜரின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (Epigraphia Indica, Vol 21, No 27) இதற்கான தெளிவான சான்று. இராஜராஜ சோழர் வழங்கிய இந்தத் தண்டனையை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கருதிய ‘சாலை’கள் மதுராந்தகர் என்னும் உத்தம சோழரின் மகனை சோழ சிம்மாசனத்தில் அமர்த்த திட்டமிட்டன. இதற்காக ஆதித்த கரிகாலனை போலவே இராஜராஜ சோழரையும் படுகொலை செய்யவும் உள்நாட்டில் குழப்பங்களை உருவாக்கவும் காய்களை நகர்த்தினார்கள். இதற்கு மேலும் ‘சாலை’களை விட்டு வைத்தால் சோழ தேசத்தின் - தமிழகத்தின் - எதிர்காலமே கேள்விக்குறியாகும்... சேர நாட்டின் சமூக அமைப்பு இங்கும் உருவாகும்... அதைத் தடுக்க வேண்டும் என்றே ‘சாலை’களின் தலைமையகமாக விளங்கிய ‘காந்தளூர் சாலை’ மீது இராஜராஜர் போர் தொடுத்தார். அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களில் ஒரு பிரிவினரை - கலம் - ஒடுக்கினார். அதேநேரம், நம்புதரி அந்தணர்கள் மட்டுமே - சேர சமுதாயத்தை எல்லா இடங்களிலும் ஏற்படுத்த முற்படுபவர்களே - தங்கள் எதிரி என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் இராஜராஜருக்கு ஏற்பட்டது. எனவேதான் பழைய கோயில்களை புனரமைத்தார். புதிய ஆலயங்களை எழுப்பினார். அரசு பதவி, அதிகாரங்களில் ஆர்வம் செலுத்தாத மற்ற அந்தணர்களுக்காக ஏராளமான பிரம்மதேயங்களை உருவாக்கினார். ஒரு மன்னராக இப்படி தராசு முள் எப்பக்கமும் சாயாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அதேநேரம் இப்படி பிரம்மதேயங்களால் பலனடைந்த அந்தணர்கள் ‘சாலை’ சட்டர்களாக மெல்ல மெல்ல மாறுவதையும் அவரால் தடுக்க முடியவில்லை. இராஜராஜர் காலத்தில் மட்டுமல்ல... அதன் பிறகு ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சாலை’கள் தமிழகத்தில் கால் பதிக்கத் துடித்தன. அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டன. இதனால்தான் பிற்கால சோழர்களில் பெரும்பாலானவர்கள் ‘காந்தளூர் சாலை’யை கலமறுத்தபடியே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகியும் ‘சாலை’கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ‘நான்தான் சிறந்தவன்... நான் சொல்வதே சரி... நான் எழுதுவதே வரலாறு... ஆட்சியில் தாராளமாக யார் வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால், அப்படி அமர்பவர்கள் என் சொல்படியே கேட்டு நடக்க வேண்டும்... வருவாய், வரிகளை தீர்மானிப்பது முதல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உண்டு...’ என்று கருதும் ‘காந்தளூர் சாலை’யின் மாணவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கைப்பாவை வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வதை கண்கூடாகப் பார்க்கலாம். தங்களை ஆலோசகராக, வழிகாட்டியாக ஏற்காத அரசியல் கட்சியை, தலைமையை எந்தளவு அவதூறு செய்கிறார்கள்? ‘என்னைத் தவிர ஒருத்தனுக்கும் எதுவும் தெரியாது...’ என்ற கர்வமும் உடல்மொழியும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களிடம் வெளிப்படுவதை கணம்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ‘தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்...’ என்று நினைக்கும், பேசும், எழுதும் ‘காந்தளூர் சாலை’ சட்டகர்களை எதிர்க்க தந்தை பெரியார் எடுத்த ஆயுதம் அற்புதமானது மட்டுமல்ல; வலுவானதும் கூட. ஆம். ‘உங்களுக்கு எதுவும் தெரியாது... நீங்க திருடங்க... பொய் சொல்லி ஏமாத்தறவங்க... ஃபிராடு...’ என்ற முழக்கத்தைக் கண்டுதானே ‘காந்தளூர்சாலை’ சட்டகர்கள் அலறுகிறார்கள். ‘காந்தளூர் சாலை’ என்பது இன்று குறியீடு. இது எந்தளவு உண்மையோ அதே அளவுக்கு நிஜம், இப்போது நம்புதரி அந்தணர்கள் மட்டுமல்ல... எல்லா சமுதாய மக்களும் ‘சாலை’களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பது. சற்றே ஏமாந்தால் சேர நாட்டின் சமுதாய அமைப்பு தமிழகத்திலும் வேரூன்றி விடும். மக்களுக்கான ஆலயங்கள் ‘சட்டர்களின்’ பிடிக்கு சென்றுவிடும். வாக்களிப்பது நம் உரிமை. உரிமையை பறிகொடுக்காமல் இருக்க ‘காந்தளூர் சாலை’க்கு எதிராக வாக்களிப்போம்!