நீதிக்கட்சியின் 106 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916)
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1900 - 1920 ஆம் ஆண்டுகளின் இடையில் சென்னை மாகாணத்தில் வர்ணாசிரமப் பாதுகாப்புச் சங்கம், சனாதன தர்ம சங்கம், சனாதனச் சங்கம் என்ற பெயர்களில் கிராமங்கள் மட்டத்திலும் இயங்கக்கூடிய இந்துமதச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்து மதத்தின் பெயரால் உயர்வு தாழ்வுகளை உறுதிசெய்வதும், வேத, ஆகம, இதிகாச, புராணங்களின் பெயரால் மூடப்பழக்கங்கள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை நிலை பெறுகின்ற அளவில் தொடர்ந்து பரப்புரை செய்வதும் இந்தச் சங்கங்களின் நோக்கங்களாக இருந்தன.
1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய மாகாணங்களில் சட்டமன்றம் போன்ற ஒர் அமைப்பை ஏற்படுத்த வகை செய்தது. இதில் உள்ள 'இந்திய உறுப்பினர்'களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. விவாதங்கள் செய்யலாம். ஆனால் அதைப் பிரிட்டிஷ் கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இந்திய உறுப்பினர்கள் ஒரு சில இஸ்லாமியர், ஜமீன்தார்கள் தவிரப் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கப் பதவிகளிலும் இதே நிலைதான் நீடித்தது.
இந்தக் காலகட்டத்தில் சென்னையில் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு என்னும் இரண்டு வழக்கறிஞர்கள் "மெட்ராஸ் பார்ப்பனரல்லாதார் சங்கம்" (Madras Non-brahmin Association) என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், பார்ப்பன அரசு ஊழியர்களால் பிற சாதியினர் இன்னல் அடைவதைக் கண்டித்து "தி மெட்ராஸ் யுனைடெட் லீக்" (The Madras United League) என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இது ஒரு தொழிற்சங்க அமைப்புப் போலச் செயல்பட்டது. இதன் செயலாளராக டாக்டர் சி. நடேசன் இருந்தார். இதற்கு அரசு, அரசு சாரா அமைப்புகளின் ஆதரவு ஓரளவு இருந்தது.
மேற்கூறிய அமைப்பினர், பின்னாட்களில் இச்சங்கத்தின் பெயரைப் "பார்ப்பனரல்லாதார் சங்கம்" என மாற்றக் கருதினர். ஆனால் எதிர்மறைப் பெயராக இருக்கிறது என்பதால் "சென்னை திராவிட சங்கம்" என்று பெயர் மாற்றம் செய்தனர் (10.11.1912). டாக்டர் நடேசன் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்தார். பின்னர் சங்கத்தின் சார்பில் 1914 ஆம் ஆண்டில் திராவிட மாணவர் விடுதி நடத்தப்பட்டது. பொதுவாகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று குறிப்பிடும் வழக்கம் இதற்கு முன்பாகவே சமூக நிலைகளில் வழக்கத்தில் இருந்து வந்தது. இது அரசு ஆவணங்களிலும் எதிரொலித்தது. 1870-71 பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித்துறை அறிக்கையில் "பார்ப்பனர், இந்து பார்ப்பனரல்லாதார்" (Brahmins, Hindu's Non-brahmins) என்று குறிப்பிடப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிராமணர்கள், பிராமணரல்லாதார், தீண்டத்தகாதவர்கள் என்ற மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி கணக்கெடுக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலாம் உலக யுத்தம் குறுக்கிட்டது. அப்போது பார்ப்பனர்களைப் பெருவாரியாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியாவுக்கு டொமினியன் ஆட்சி வேண்டும் என்று கோரி வந்தது. "அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால் தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பார்ப்பனர் ஆதிக்கமாகவே இருக்கும் என்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர்.
இக்காலகட்டத்தில் நிலவிய சனாதன சங்கங்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஆதரவாகப் பார்ப்பன ஏடுகளின் அச்சுறுத்தல்களும் பார்ப்பனர் அல்லாதவருக்குக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில் டாக்டர் டி. எம். நாயர், பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசன் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் விளைவாகச் சென்னை வேப்பேரியில் 20.11.1916 அன்று பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தோற்றம் பெற்றது. இதில் பார்ப்பனர் தவிர்ந்த அனைத்துச் சாதியினரும் கலந்து கொண்டனர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர், டாக்டர் நடேசன், ராவ்பகதூர் எம். சி. ராஜா, திரு ஜான் ரத்தினம், வரதராஜுலு நாயுடு, முத்தையா முதலியார் உள்ளிட்ட 26 தலைவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து திரு. ராஜரத்தினம் முதலியார் தலைமையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினைத் தோற்றுவித்தனர்.
இவ்வமைப்பு, "திராவிட சங்கம்" அல்லது "பார்ப்பனர் அல்லாதார் சங்கம்" அல்லது "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு), திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) என்னும் மூன்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலப் பத்திரிகையான ஜஸ்டிஸ் அந்நாளில் பிரபலமாகவே, இந்த இயக்கத்தின் பெயரும் ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என்று வழங்கலாயிற்று. தமிழில் வெளிவந்த பத்திரிகையான திராவிடன் என்ற பெயரால் திராவிட இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.
நீதிக்கட்சியின் தோற்றத்திலும், அதன் தொடக்ககாலச் செயல்பாடுகளிலும் தந்தை பெரியாருக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார், 1925 ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கினார். பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கத்தின் மாபெரும் போராட்டமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டில், அவர் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி