Thursday, December 11, 2025

குலதெய்வம்

 கடவுள் நம்பிக்கையில்லாத கருப்பு சட்டைக் கூட்டத்தினரிடையே கூட இப்படி பேசுவதை நீங்கள் கேள்வியுறலாம். 


"மத்த எந்த கோவிலுக்கும் எந்த விசேசத்துக்கும் போகலன்னாலும் குலதெய்வம் கோவிலுக்கு மட்டும் குடும்பத்தோட போறதுண்டு, என்ன இருந்தாலும் அவங்க நம்ம முன்னோர்கள்தானே, அந்த எண்ணத்துல கும்பிடறது"


உண்மைதான், குலதெய்வங்கள் பெரும்பாலும் குடும்பத்தின் மூத்தோர்களாகவும் முன்னோர்களாகவும்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வழிபாட்டுக்காக மட்டும்தான் இருக்கிறார்களா என்பதுதான் இங்கு கேள்வி. 


பல்லாண்டு கால பகுத்தறிவு பிரச்சாரம், சுயமரியாதை விழிப்புணர்வுகளால் தடுக்கப்பட்டதுதான் பெயருக்கு பின்னால் சாதிப்பட்டம் போடுவது, அடுத்து ஒருவரது சாதி என்ன என்று கேட்பதை அநாகரீகமாக உணர வைத்தது. இந்த இரண்டிற்கும் மாற்றாக வந்ததுதான் குலதெய்வ அடையாளங்கள்.


ஒவ்வொரு வாகனத்திலும் குலதெய்வத்தின் பெயர் போட்டு துணை என்று எழுதியிருப்பார்கள். விவரமறிந்தவர்கள் என்ன சாதி, என்ன கூட்டம் என்பது வரை அதிலிருந்து புரிந்துக் கொள்வார்கள். எழுதுவோர் அந்த எண்ணத்தில் எழுதி வைக்கவில்லை என்றாலும் அது நடக்கிறது. ஏன்?


ஏனென்றால் குலதெய்வங்கள்தான் சாதியை அகமணமுறைவழி காக்கிறது. ஒன்றுமில்லை, உங்கள் மாற்று சாதி நண்பர்களை உங்கள் வீட்டிற்கு கூட கூட்டி செல்ல அனுமதிப்பார்கள், ஆனால் குல தெய்வ கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், ஒரே சாதியென்றாலும் கூட குறிப்பிட்ட கூட்டத்தினருக்குத்தான் அனுமதி என்று சொல்லும் கோவில்களும் உண்டு. இப்படி சாதிய அடையாளத்தை கட்டிக் காப்பது மட்டும் குல தெய்வங்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல.


ஒவ்வொரு குலதெய்வத்திற்கென சொல்லப்படும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் கதைகளை சரி புராணங்களை கேட்டுப் பாருங்கள், அனைத்தும் சிவன் அல்லது விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தி, பார்ப்பனியத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படி ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் இருந்தும் சனாதன மதத்துடன் பிணைக்கப் பட்டிருப்பதால்தான் ஆர் எஸ் எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷித் போன்ற அமைப்புகள் குலதெய்வங்களை குறிவைத்து வேலை பார்க்கின்றன.


இதே குலதெய்வங்களைக் கொண்டுதான் வேத மதத்திற்கு எதிராக உருவான புத்த மதம் வீழ்த்தப் பட்டிருக்கிறது என்ற தகவல் எனக்கு இப்புத்தகம் மூலம்தான் கிடைத்தது.


வெறுமனே போகிறப் போக்கில் இக்கருத்துக்களை இப்புத்தகம் பேசவில்லை. மொத்தம் 14 கட்டுரைகள், அதில் 6 கட்டுரைகள் கள ஆய்வு அறிக்கைகள். அதிலிருந்துதான் குலதெய்வங்கள் எங்ஙனம் சாதிக்கட்டுகளை இறுக்கமாக வைத்திருக்க உதவுகின்றன என விளக்குகிறார்கள்.


அனைத்திலும் கொடுமை, சாதிக்கொரு கோவில் என்றாலும் அதற்கு கும்பாபிஷேகம் செய்ய மட்டும் பார்ப்பனர்கள்தான் வர வேண்டும். பூஜை யார் செய்தாலும் அதற்கு அங்கீகாரமளிப்பது அவாக்கள்தான். மன்னராட்சி காலத்திலிருந்து தெளிவாக திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள்.

இது புரியாமல் அரைகுறை பகுத்தறிவு பேசுகிறது ஒரு கூட்டம். 


புத்தகத்தை வாசித்தால் உங்கள் நிலை என்ன என்பது புரிய வரலாம்.

Wednesday, June 04, 2025

தேவதாசி

இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என்று இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார்.

கட்டுரையை படித்த திமுக தலைவர் கலைஞர், உடனடியாக வாஸந்தியை அழைத்து, "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று கூறினார்.

துடித்துப் போனார் வாஸந்தி. 
தனக்குத் தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். 

மூத்த தலைவர்கள் 
வாஸந்தியின் வருத்தத்தை  கலைஞரிடம் தெரிவிக்கவும் அவர், "பின்ன என்னய்யா... 
தேவதாசி முறை வேணுமாம். ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்..." என்று கண்டு கொள்ளவேயில்லை.

கலைஞரின்  விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, சில நாட்களிலேயே, தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ஒரு சிறுகதை எழுதினார். 

உடனே கலைஞர் அவரை அழைத்துப் பாராட்டினார்.

பின்னர், தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து, "விட்டு விடுதலையாகி" என்று ஒரு புதினத்தையே படைத்தார் வாஸந்தி.

🔹தேவதாசி முறை பற்றி
அந்தக் காலத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், சத்தியமூர்த்திக்குக்குக் கொடுத்த பதிலடியும் இதைப் போன்றதே.

தேவதாசி ஒழிப்புப் சட்டத்தை எதிர்த்து, "அப்படித் தடை செய்தால், தெய்வ அபச்சாரம் ஆகிவிடும்" என்றாராம் சத்திய மூர்த்தி ஐயர்.

அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,
"அப்டியானால் உங்கள் பிராமண குலப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி தேவதாசிகளாக இருக்கக் செய்யுங்கள்" என்றாராம்.

தனது ஒன்பது வாயில்களையும் பொத்திக் கொண்டு சத்தியமூர்த்தி அடங்கிவிட்டார். 

வசந்திக்கு அதே பாணியில் அறிவுரை தந்து திருத்தினார், வரலாற்றினை மறக்காத கலைஞர் !