Showing posts with label Socialjustice. Show all posts
Showing posts with label Socialjustice. Show all posts

Monday, July 23, 2018

இவர்தான் மகாத்மா.... இவர்தான் கல்வியின் அன்னை.. இவர்கள் தான் சீர்திருத்த போராளிகள்..

மகாத்மா ஜோதிராவ் பூலே - இவர்தான் மகாத்மா.... இவர்தான் கல்வியின் அன்னை.. இவர்கள் தான் சீர்திருத்த போராளிகள்..
பிராமண ஜாதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட ஜோதிராவ், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதைப் பார்த்த நண்பரின் உறவினர், “சூத்திரனான நீ பிராமண கல்யாணத்தில் பிராமணர்களுக்கு இணையாக ஊர்வலத்தில் வருவதா? எங்களை அவமானப்படுத்திவிட்டாய் நீ” என்று கோபமாக திட்டி, நண்பரின் திருமண ஊர்வலத்திலிருந்து விரட்டிவிட்டார்.
அவமானப்படுத்தப்பட்ட ஜோதிராவ் ஆழ்ந்து சிந்தித்தார். அரசியல் அடிமைத்தனத்தை விட மோசமானது சமூக அடிமைத்தனமும், அதை வலியுறுத்தும் ஜாதி அமைப்பும். அதற்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்தினார். சமூக விடுதலைக்கு வழிவகுக்க அனைவருக்கும் கல்வி, குறிப்பாக பெண்களுக்கு கல்வி தேவை என்று முடிவெடுத்தார்.
1848-ல் பூனாவில் புதன்வார பேட்டையில் தனது நண்பர் பீடே என்பவரது வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார், ஜோதிராவ். இவர்தான் பெண்களுக்காக பள்ளியைத் துவங்கிய முதல் இந்தியர்.
பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே கஷ்டம். அதிலும் பெண்கள் என்றால் மிகவும் கடினம். எனவே, பள்ளியைத் துவங்கி எட்டு மாதம் கூட நடத்த முடியவில்லை.
இதனிடையே தீய சக்திகள் ஜோதிராவின் தந்தையின் மனதைக் கெடுக்க, அவர் மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். பிழைப்புத் தேடி ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தார் ஜோதிராவ்.
ஆரம்பத்திலிருந்தே தன் மனைவிக்கு கல்வியறிவு கொடுத்த ஜோதிராவ், கல்வித் துறையிலிருந்த தன் நண்பரின் உதவி கொண்டு சாவித்ரிக்கு ஆசிரியர் பயிற்சியும் கொடுத்தார்.
தனக்கும் இரண்டாண்டுக்கும் மேலாக கல்வித் துறையில் கிடைத்த அனுபவத்துடன் மீண்டும் 1851 ஜூலை மாதம் 5-ம் நாள் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். 8 பேர்களுடன் துவங்கி சில மாதங்களிலேயே மாணவிகளின் எண்ணிக்கை 48- ஆக உயர்ந்தது.
பூலே தொடங்கிய பள்ளியில் ஆசிரியையாக சேவை செய்ய துவங்கினார் சாவித்ரி பாய். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் இவர்தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்று கொடுத்ததை அறிந்த உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்.
சாவித்திரி பாய் பள்ளிக்கு நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர். சாவித்திரி பாய் ஜோதிராவ் பூலே விடம் புலம்பியதும் “பள்ளிக்கு போகும் போது அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ.. பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் ”என்றார் அவ்வாறே செய்தார்.
தன் கணவர் ஜோதிராவ் புலே செய்யும் சமூகப் பணிக்கு தன்னையும் ஒப்புக் கொடுத்து, ஒரு சக பயணியாக பயணித்து பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை போதித்து சமூக சீர்திருத்தத்தின் பெண் ஆளுமையாக களத்தில் நின்று போராடியவர் சாவித்திரி புலே.
பழமைவாதம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரான சாவித்திரி பட்ட பாடுகள் அளவிட முடியாதவை. சமூகத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் அதே வேளையில், குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளையும் சமாளித்து அவர்களுக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை புரிய வைத்து சமூகப் பணியாற்றியவர் சாவித்திரி.
சமூகப் பணிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்ட சாவித்திரி, உடல் நலமில்லாமல் தனது தாய்வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்து கொண்டார். அப்போது சாவித்திரி தனது கணவர் ஜோதிராவ் புலேவிற்கு எழுதும் கடிதத்தில் தனது சகோதரருக்கும் தனக்கும் நடந்த உரையாடல்களை பதிவு செய்கிறார்.
அதில், சகோதரர் தன்னை நன்றாக கவனித்து வருகிறார் என்று எழுதும் சாவித்திரி, “கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைகளை செய்து குடும்பத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளீர்கள். சமூகத்தில் என்ன பழக்க வழக்கம் இருக்கிறதோ அதனை பின்பற்றுங்கள்.” என்று தனது சகோதரர் சாவித்திரியிடம் கடுமையாக பேசியதை குறிப்பிட்டுள்ளார்.
“ஆடு மாடுகளிடம் நீங்கள் தீண்டாமை கடைபிடிப்பதில்லை. அவற்றை நேசிக்கின்றீர்கள். பாம்புத் திருவிழாவின் போது, பாம்புகளைப் பிடித்து பால் புகுட்டுகின்றீர்கள். ஆனால், உங்களைப் போன்ற மனிதர்களான தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமை கடைபிடிக்கின்றீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? பிராமணர்கள் உங்களை அசுத்தமானவராகவும் தீண்டத்தகாதவராகவும்தான் நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள். தாழ்ப்பட்டவர்களையும் உன்னையும் அவர்கள் வெவ்வேறாக நடத்துவதில்லை” என்று சகோதரின் பேச்சுக்கு சாவித்திரி கோபப்படாமல் பதில் உரைத்ததையும் கடிதத்தில் பதிவிடுகிறார்.
“பெண்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கற்பிக்கிறோம். இதனால் பிராமணர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர்கள் நினைப்பதால்தான், அவர்கள் நம்மை எதிர்கிறார்கள். என் கணவரின் இந்த செயல்பாடுகளுக்கு ஆங்கிலேய அரசு அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கடவுளின் வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் துணையாய் இருக்கிறேன். இந்த வேலைகளை நான் செய்வதன் மூலம் அளவிடமுடியாத மகிழ்ச்சியை அடைகிறேன்” என்று சாவித்திரி தனது சகோதரருக்கு சமூகப் பிரச்சனைகளை புரிய வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதையும் தனது கணவருக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
.
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கடந்து போனது. இந்த சீர்திருத்த தம்பதிகளுக்கு. ஒவ்வொரு மூடப்பழக்கத்தையும் ஒழிக்க களத்தில் நின்று போராடினர்.
பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது. அந்தப் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் பூலே.
ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார்.
பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே.
பள்ளியை தனியாக துவங்காமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து ஒரு அமைப்பை (டிரஸ்ட்) ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளியை நடத்தினார்.
பள்ளி மாணவியர்களின் கல்வி அறிவை ஆங்கில அரசு அதிகாரிகள் பொதுமக்கள் முன்பாக சோதித்தனர். மாணவியரின் பதில் அவர்களை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. எனவே அரசு மானியமாக ரூ. 75-ஐ கொடுக்கத் துவங்கியது. மேலும் வேறு சில இடங்களில் பள்ளியைத் துவங்கினார் ஜோதிராவ். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒரு பள்ளியும் துவங்கப்பட்டது.
ஜோதிராவின் பணியின் வளர்ச்சியும் அதனால் பெண்களிடையே கல்வியறிவு ஏற்படுவதையும், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுவதையும் சகிக்க முடியாத தீய சக்திகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தன.
ரமோஷி, கும்பார் என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் (அந்தக் காலத்திலேயே) கொடுத்து ஜோதிராவை கொலை செய்ய அனுப்பினர். இரவில் சத்தம் கேட்டு எழுந்த ஜோதிராவ், அவர்களை யார் என்று கேட்டார். விஷயத்தைத் தெரிந்துகொண்ட அவர், ‘என்னுடைய மரணம் தாழ்த்தப்பட்ட உங்கள் வாழ்வில் வளத்தைச் சேர்க்கும் என்றால் அதுவும் நல்லதே ’என்று வெட்ட வசதியாக தலையை நீட்டினார். அவரது பேச்சும் செயலும் கொலையாளிகளின் உள்ளத்தை மாற்றின.
பின்னர் அவர்கள் ஜோதிராவ் நடத்திய மாலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியறிவும் சமூக விழிப்புணர்வும் பெற்றனர். அதில் ஒருவரான ரமோஷி பின்னர் ஜோதிராவின் பாதுகாவலராக மாறி அவருடனே இருந்தார். கும்பார் பின்னர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். ஜோதிராவ் ஆரம்பித்த ‘சத்யசோதக் சமாஜம்’ அமைப்பின் தூணாக விளங்கினார்.
பெண்கல்வி மட்டுமன்றி விதவா மறுமணம் போன்ற புரட்சிகரமான கொள்கைகளை முன்னோடியாக நடைமுறைப்படுத்திக்காட்டிய ஜோதிராவ் இப்புரட்சி கருத்துக்களை பரப்ப சத்யசோதக் சமாஜத்தை 1873 செப்டம்பர் 24-ல் துவங்கினார்.
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் முதன்முதலில் அமைப்பு ரீதியாகத் திரட்டி, சங்கம் அமைத்துப் போராடி உரிமைகளை பெற்றுத்தரக் காரணமாக இருந்தவர் ஜோதிராவும், அவர் ஆரம்பித்த சத்ய சோதக் சமாஜமும் தான்.
சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ஜோதிராவுக்கு பெரிதும் கடன்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது 60-வது வயது நிறைவின்போது 1888-ல், மிகப் பெரிய மாநாடு நடத்தி அதில் அவரை ‘மகாத்மா’ என்று போற்றி வணங்கினர்.
சமத்துவம், அறிவு, மனித நேயம் என்ற மூன்றையும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டி, மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட ஜோதிராவ் புலே 1890, நவம்பர் 28-ம் நாள் மறைந்தார்.
1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.
பிராமண எதிர்ப்பாளன், இந்துமத விரோதி, சண்டாளன், பண்பாடு தெரியாதவன் என்றெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் உயர்சாதி மக்களால் தூற்றப்பட்டவர். பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், அரிஜனர் கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களது சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக பாடுபட்ட முன்னோடி.

Monday, July 16, 2018

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!
களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.
இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது.
தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது.
தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது.
மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.
தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிருத மயமாக்கப்பட்டன.
ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டு பிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.
தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது.
உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.
இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது.
இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள்.
தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்து விடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று.
வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன.
இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.
மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள்.
பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது.
மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன.
பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன.
பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன ?
பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம்.
இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.
எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.
ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள்.
சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது.
கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது.
தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.
பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது.
பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன.
பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது.
பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே.
பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.
களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.
அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது.
களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபூம்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன.
ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.
சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர்.
போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர்.
இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.
உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தருமம்.
அதுவும் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும்,
அதற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களின் செயல்கள்.
கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 350 வருடங்கள் கழித்து கி.பி.600-ல் முடிவிற்கு வந்தது.
தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள்.
பிடுங்கபட்ட பிராமணர்களின் ஆதிக்கச் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்தது.

Friday, July 13, 2018

பெண்கள் கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்

வெள்ளிக்கிழமை முடிந்து weekend வரவேற்கும் முன் evening அலுவலக அரட்டையில்..... பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு பற்றிய எதேச்சையான விவாதத்தில் பெண்கள் தண்டால் எடுக்க வேண்டும் கைகளை பலப்படுத்தவேண்டும் என்று சொன்னேன்...உடனே அனவைரும் சிரித்து விட்டார்கள்..நான் கவலை பட வில்லை..ஏற்கனவே பதிவிட்டதை ஆங்கிலத்தில் சொன்னேன்..
கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்...
1. சேலை ஒரு அடிமைத்தனமான ஆடை...பெண்களை சுதந்திரமாக செய்யவிடாது...மாற்று நிறைய இருக்கிறது..உங்கள் தேவை என்ன என்பதை சரியாக தேர்ந்துங்கள்....உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்கவேண்டும்.,...
2. தண்டால் எடுங்கள்....கைகளை பலப்படுத்துங்கள்....ஒல்லியாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை அப்படி இருக்க வைக்க ஆணாதிக்கம் விரும்புகிறது.....ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமல்ல Flexibility மிக முக்கியம்..
3. கல்வியை எப்பாற்பட்டவது முடித்துவிடுங்கள் ....நூலகத்தை பயன்படுத்துங்கள்...அடிப்படை சமுக பொருளாதார விழிப்புணர்வை பெறுங்கள்....பெரியாரையும் அம்பேகாரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டேர் என்றால் நீங்கள் மனஅளவில் பலசாலி ஆகிவிட்டர்கள் என்று பொருள்...பெண்களுக்கு என்ன வகையில் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்...சொத்துரிமை பற்றிய தெளிவை பெறுங்கள்..
4. பேச்சுரிமை மட்டுமல்ல சுயமரியாதை என்ற எண்ணமே உயிரைவிட முக்கியமாக நினையுங்கள்...அதற்கு பங்கம் வந்தால் எதிர்த்து நின்று போராடுங்கள்..
5. மேல சொன்ன அனைத்தை விட தனிப்பட்ட பொருளாதார பலத்தை ஈட்டும் திறமையை பெறுங்கள்....கணவனுக்கு புரிய வையுங்கள் தற்காலத்திய விலை வாசி மற்றும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் பாதிப்புகளை..

Friday, June 22, 2018

வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?

வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.
விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.
கல்வியும் கிடையாது... 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.
இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.
ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.
தவிர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.
இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.
ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.
விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.
இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.
அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.
சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.
கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.
கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.
முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.
ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?...
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

Tuesday, June 05, 2018

NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது.

இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி அதைசாத்தியமாக்கியது இதே தமிழ்நாடு. இப்போது NEETஐ தமிழ்நாட்டின் மீது பலவந்தமாக திணித்திருப்பது அதே உச்சநீதிமன்றம்.
இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது தமிழ்நாடு மட்டும் அதை எதிர்த்திருக்காவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலுமே கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தனை கோடி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வளவு குறுகியகாலத்தில் பள்ளிக்கல்வியோடு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வாளராகவெல்லாம் ஆகியிருக்க முடியாது. பல லட்சம்பேர் வெளிநாடுகளில் குடியேறி கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கமுடியாது.
அதையெல்லாம் செய்தவர் பெரியார் என்கிற ஒற்றை மனிதன். தனக்கென சொந்தமாக ஒரு குழந்தை இல்லாத அவன் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் தன் சொந்தப்பிள்ளைகளாக நினைத்தான். அவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டபோதெல்லாம் அவன் துடித்தான். அதன் விளைவே நம்மில் பலர் உயர்கல்வி கற்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு விமானம் ஏறிப்பறக்கவும் வெளிநாடுகளுக்கு கோடை விடுமுறைகள் செல்லுமளவுக்கும் செல்வந்தர்களாக முடிந்தது. சீரோடும் சிறப்போடும் செல்வாக்கோடும் வாழ முடிந்தது.
இன்று மருத்துவப்படிப்பில் பொதுசுகாதாரத்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத்திகழும் தமிழ்நாட்டின் மீது இப்போது அதே இந்திய உச்சநீதிமன்றம் NEETஐ பலவந்தமாக திணித்திருக்கிறது. அதை எதிர்த்து சட்டத்திருத்தம் மூலம் NEETஐ ஒழிக்கவேண்டியதும் அதே தமிழ்நாடு. அதற்குத்தேவை அரசியல் அதிகாரம். அரசியல் அதிகாரத்தால் மட்டுமே அது இனி சாத்தியப்படும். அடிமைக்கும்பல்களால் அல்ல. எனவே அடிமைகளை அகற்றி அரசியல்சட்டப்படிக்கு NEETஐ ஒழிக்க என்ன வழி என்பது மட்டுமே ஒற்றை இலக்காக இருக்கவேண்டும்.
NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது. இந்திய அரசியல் சட்டத்தை திருத்த முடிந்த தமிழ்நாட்டால் இந்த சுண்டைக்காய் NEETஐ தூக்கி எறிய முடியாது என்பது ஏற்கக்கூடிய வாதமும் அல்ல; ஏற்கவேண்டிய வாதமும் அல்ல. அது ஏமாற்றுப்பேர்வழிகளின் வாதம். ஏமாளிகள் மட்டுமே அதை நம்புவார்கள். ஏழுகோடித்தமிழர்களும் ஏமாளிகள் அல்ல.

Sunday, June 03, 2018

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

இலவசமாக பொருட்களை பெறுவது பிச்சையெடுப்பதற்கு சமம்.

இதுபோன்ற வசனங்கள் நீண்டகாலமாக பல்வேறு இடங்களில் பல்வேறு ஆட்களால் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில் இலவசங்கள் தவறா…?

தவறே இல்லை. அவை சமூகநீதியையும், சமூக சமத்துவத்தையும் நிலைநாட்டும் மற்றுமொரு வழிமுறையே.

ஏழை பணக்காரன் வேறுபாடின்றி இன்று எல்லோர் வீடுகளிலும் "TV, Mixi, Grinder, fan, Cycle, Gas stove என எல்லாம் உள்ளது. இவை பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக தரப்பட்டவைகளே.

ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி பயணித்துப்பாருங்கள், மேற்கண்ட பொருட்கள் யார் வீட்டில் இருந்தது என்றும் அவர்கள் இதுபோன்ற பொருட்கள் இல்லாதவர்களை எப்படி பார்த்தார்கள் என்று.

பொருட்கள் வெறும் அஃறினை பண்டங்கள் அல்ல, அவை சமூக உயர்நிலையை காட்டும் குறியீடுகள்.

இன்றும் கூட Motor bike, Car போன்றவைகளை வைத்திருப்பது சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் அடையாளமாக கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதன் மற்ற மனிதனிடமிருந்து தன்னை உயர்வானவனாக காட்டிக்கொள்ள இந்த பொருட்கள் காரணமாக இருப்பதால், இவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் போலியான சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யலாம்.

இது உங்களுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத காரணமாக தோன்றலாம்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் TV பார்க்க பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்களால் வெளியே விரட்டப்பட்டு கதவடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட குழந்தைகளை கேட்டுப்பாருங்கள், இதன் சமூக நீதி விளங்கும்.

தங்களுக்கு மட்டுமே கிடைத்து, தங்களின் சமூக நிலையை மற்றவர்களை விட உயர்வாக காட்டிய பொருட்கள் இன்று அனைவருக்கும் கிடைத்து அனைவரையும் தங்களுக்கு சமமாக மாற்றிவிட்டதை ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டம் தான் இலவசங்கள் தவறு என்றும், இலவசங்களால் சமூகம் சீரழிந்துவிட்டது என்றும் பதறுகிறது.

TV Fan மட்டுமல்ல, அரசால் முடிந்தால் Car Bike போன்றவைகளை கூட இலவசமாக தரலாம். Car, Bike போன்றவைகளை வைத்துக்கொண்டு "பந்தா" செய்யும் ஆட்களின் ஆணவம் அடங்கட்டுமே.

இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை கூறும் தகுதி அவைகளை விலை கொடுத்த வாங்க இயலாத சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே உள்ளது.

புளி ஏப்பம் விடுபவர்களுக்கு பசி ஏப்பத்தின் வலி புரியாது

Thursday, April 12, 2018

சமூக நீதி காவலர் வி.பி. சிங்


தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வி.பி. சிங் என்பவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.அப்பொழுது பலவித எதிர்ப்புகளுக்கு இடையில் மண்டல் கமிசன் எனும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(obc) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

இதனால் கூட்டணி கட்சிகள் முதற்கொண்டு அனைத்து கட்சிகளும் அவரது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரது ஆட்சியை கலைத்தன.பிரதமர் பதவியும் பறி போகிறது.

இப்போது மண்டல் கமிசன் அமைய காரணமாக இருந்த மேலும் அந்த கமிசன் அமல்படுத்தியதால் பயன்பெற்ற ஒரு மண் அவரை பாராட்ட/கொண்டாட அழைக்கிறது.அவரும் வருகிறார் பிரதமராக அல்ல முன்னாள் பிரதமராக.

அந்த மண் அவரை உச்சி முகர்ந்து வரவேற்கிறது.தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.'சமூக நீதி காவலர்' என பட்டம் அளித்து மகிழ்கிறது.

ஏன் அந்த மண் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது??

ஏனென்றால் அந்த மண் சுயமரியாதை மண்;சமூகநீதி மண்.அந்த மண்ணிற்கு தெரியும் யாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்!யாரை தலை தெறிக்க ஓட விட வேண்டும் என்று!

அந்த வகையில் இன்று(12/4/2018) அந்த மண் சுயமரியாதை மண்;சமூக நீதி மண் என மீண்டும் நிரூபித்துள்ளது.

அந்த மண் தமிழகம்❤️


Tuesday, January 16, 2018

தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி

1977 ஆம் ஆண்டு
புதுடில்லியில் உள்ள Constitution club of India வில் ஜாதி ஒழிப்பு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதை தொடங்கி வைத்த மத்திய சுகாரதுறை அமைச்சரான ராஜ் நாராயண் தன் துவக்க உரையின் போது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை “ஹரிஜன்” என்ற வார்த்தையை கொண்டு அடிக்கடி குறிப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த இளம்பெண் எழுந்து “ மந்திரி அவர்களே நீங்கள் அடிக்கடி எங்களை நோக்கி ஹரிஜன் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது சரியான முறை அல்ல “ என்கிறார்.
அதற்கு மத்திய அமைச்சர் “ இது தேசத்தந்தையான காந்தி பட்டியல் இனம் மற்று பழங்குடியினரை குறிப்பிட உபயோகித்த வார்த்தைதானே. அதைத்தானே நானும் குறிப்பிடுகிறேன்”
என்றிருக்கிறார்.
அதற்கு அந்த இளம் பெண் ”இந்த ஹரிஜன் வார்த்தையை காந்தி குறிப்பிடுவதை சுட்டிக் காட்டிய அம்பேத்கர் “நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள் பேய்களின் குழந்தைகளா என்ன? “ என்று பதிலுக்கு ஏற்கனவே கேட்டுவிட்டார். இந்த ஹரிஜன் வார்த்தை தவறு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றிருக்கிறார்.
மத்திய அமைச்சர் மறுக்க அந்த இளம்பெண்ணோட ஒத்த கருத்துடையவர்கள் அதை ஆமோதித்து கோஷம் எழுப்ப மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு போய்விட்டார்.
அந்த தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி கேட்கும் திறனைக் கண்டு வியந்த பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினரை ஒன்றிணைக்கும் வேலையில் இருந்த அரசியல் தலைவர் ஒருவர் உடனே அவரை தேடிச் சென்றார்.
அந்த பெண்ணின் அப்பா “நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வர வேண்டும். நாங்களே வந்திருப்போமே” என்று அரசியல் தலைவரை வரவேற்கிறார்.
அரசியல் தலைவர் அப்பெண்ணை பாராட்டி “ உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன “ என்று கேட்க படித்து ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகி மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும்” என்றிருக்கிறார்.
அதற்கு தலைவர் “ நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டால் ஒரு மந்திரி சொல்லும் பொறுப்பை முடிப்பதுதான் வேலையாக இருக்கும். அதே சமயம் தனியாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் நீங்களே முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெற முடியும். அப்போது இன்னும் அடக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும்” என்று சொல்ல,
அந்த அரசியல் தலைவர் முதலில் தொடங்கிய இயக்கத்தில் உடனே சேர்கிறார் அந்த இளம்பெண்.
அந்த அரசியல் தலைவர்தான் கன்ஷிராம் அவர்கள்.
அந்த தைரியமான இளம்பெண்தான் மூன்று முறை உத்திரபிரதேச முதல்வரான மாயாவதி அவர்கள்.
பகுஜன் சமாஜன் தலைவர் கோபிநாத் அவர்கள் பேசும் உரையில் கேட்டு புரிந்து கொண்டதை எழுதி இருக்கிறேன்.
அன்று (1977) மாயாவதி என்ற இளம்பெண் மத்திய அமைச்சரை தன்னம்பிக்கையாய் கேள்வி கேட்டு பின் மூன்று முறை உத்திர பிரதேச முதல்வராய் இருந்து சமூகநீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்று (2018) ஜிக்னேஷ் மேவானி தொடர்ச்சியாக அட்டூழியம் செய்யும் ரிப்பளிக் டிவியை ‘எழுந்து போ”என்று விரட்டி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜிக்னேஷின் இந்த நேரடியான அதிரடி நிச்சயம் போராட்ட உணர்வை உடைய மக்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
”நேரடியான தைரியம்” என்பதை விட சிறந்த போராட்ட குணம் ஏதாவது உண்டா என்ன...

Friday, January 12, 2018

ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் குடிப்பது

தனிமனித சுதந்திர அடிப்படையில் குடிப்பது பெரிய தவறாகாது.
கொஞ்சம் மதுவை எடுத்து உடம்பை புத்துணர்ச்சி அடைய வைப்பதில் பெரிய பிரச்சனையில்லைதான். ஆனால் ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் அதற்கான அர்த்தம் வேறாக இருக்கிறது.
ஆண்களின் குடி பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.
இந்தப் பார்வையைத்தான் இளைஞர்களிடம் திரும்ப திரும்ப சொல்லி ஏற்படுத்த வேண்டும்.
ஒருவருடம் முன்பு கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அச்சமயத்தில் என்னை இரண்டு நாட்களாக தூங்கவிடாமல் செய்தது.
ஒரு அப்பா தன் ஏழுவயது மகனுடன் சிறுநகர பேருந்தில் இன்னொரு பெருநகரத்துக்கு பயணம் செய்வதற்காக ஏறியிருக்கிறார்.
அவர் குடித்துப் பழகியவர். பொதுவாக குடித்து ரசித்தவர்கள் இரவு பஸ் பிரயாணத்தில் குடித்து விட்டு தூங்க விரும்புவார்கள். இந்த அப்பாவும் அதை விரும்பியிருக்கிறார். மகனை எப்படி மதுக்கடைக்கு அழைத்துச் செல்வது. முடியாது.
“நீ இதோ இங்க இருந்துக்க. அப்பாவோட சீட்ட யாருக்கும் கொடுத்திராத கேட்டியா. அப்பா இதோ ஒண்ணுக்கிருந்துட்டு வந்திர்றேன் என்ன?” என்று சொல்லிவிட்டு மதுவாங்கி அருந்த போயிருக்கிறார்.
பையன் சரி என்றிருக்கிறான். அப்பாவின் பையை இருக்கையில் பிடித்துக் கொள்கிறான்.
இறங்கி அப்பா கண் மறைவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். உருவம் மறைந்ததும் பயம் வருகிறது. அப்பா இங்கேதானே போயிருக்கிறார்
வந்துவிடுவார்.
இங்கே பார்க்கிறான் அங்கே பார்க்கிறான். அப்பா அருகே இருக்கும் போது சாதரணமாக தெரிந்த மனிதர்கள் அனைவரும் அப்பா அருகில் இல்லாமல் இருக்கும் போது பெரிய பெரிய உருவங்களாகவும், பயமுறுத்துபவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் தெரிகிறார்கள்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறான். அப்பா வரவில்லை. தன் கால்களுக்கு கீழே இருக்கும் கடலைத் தொலிகளை, பஸ் சீட் கிழிசலை, பஸ் கம்பியின் துருவை, அத்துருவில் இருந்து கிளம்பும் உலோக வாடையை, சீட் ரிவெட்டுகளை, கண்ணாடிகளை கவனிக்கிறான். ஜன்னல் வழியே பார்க்கிறான். அப்பா வரவில்லை.
வெளியே பழவண்டி, எச்சித்துப்பல்,காய்ந்த சிறுநீர் குட்டைத்தடங்கள், உணவங்கள், டீக்கடை, டீக்கடையில் கத்தி பேசும் கண்டக்டர் டிரைவர்கள் என்று பார்த்து விட்டு அப்பாவைப் பார்க்கிறான். அப்பா வரவில்லை.
அப்பா எப்படி வராமல் போவார். வந்துவிடுவாராய் இருக்கும். இதோ இந்த கூட்டத்தில் அப்பா அப்படி தோன்றுவார். இதோ எதுவுமில்லாமல் இருக்கிறது. அதில் அப்பா அப்படி அப்படித்தான் சட்டென்று சிரித்தபடி வந்துவிடுவார். அப்படி நினைக்கிறான் அவன்.
எல்லா பொருட்களும் மனிதர்களும் அவன் கண்களில் இருந்து மறைந்துவிட்டன. இனிமேல் ரசிப்பதற்கு எதுவுமில்லை என்று அவன் மூளை அப்பதட்டத்தில் நினைத்துவிட்டது. அங்கே ஒரு வெட்ட வெளி மட்டும்தான் இருக்கிறது. வெட்டவெளியில் அப்பா தோன்றுகிறாரா இல்லையா என்பது மட்டும்தான் அவன் கவலையாகிவிட்டது. ஒரு சுற்றும் உலகத்தில் அவனிருந்தான்.
“என்ன தம்பி டேய் ரொம்ப நேரமா இங்க இருக்க. உன் கூட யாரு வந்தா. தனியா இருக்கியேன்னு கேட்டேன்”
என்கிறார் பக்கத்தில் உள்ள சீட்காரர்.
“அப்பா அப்பா வருவாங்க”
“அப்ப எங்குன போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
அவர் அமைதியாகிவிட்டார். ஏழு வயது பையனுக்கு இப்போது கண்கலங்க ஆரம்பித்துவிட்டது. மெல்ல முனகிக் கொண்டு அழக் காத்திருக்கிறான். பஸ்ஸில் கண்டக்டர் ஏறிவிட்டார். இவனைப் பார்க்க ஏதோ வித்தியாசம் தெரிய, அருகில் வந்ததும் பையன் அழ ஆரம்பித்துவிட்டான். மற்றவர்கள் எழுந்து என்ன என்று பார்த்ததும் விசாரித்ததும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.
“அப்பாவ காணோம். அப்பா வரல”
“எங்க போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
“யூரின் போக இவ்வளவு நேரமாகாதே. போன் நம்பர்
தெரியுமா”
“.. தெரியும்”
“சொல்லு”
“84.................”
போன் அடித்தால் நாட் ரீச்சபிள் வருகிறது. இன்னும் பலரும் போன் அடிக்க அப்போதும் நாட் ரீச்சபிள் வருகிறது.
பையன் இன்னும் அழ ஆரம்பித்துவிட்டான்.
“தம்பி வேற யாராவது நம்பர் தெரியுமா”
“சித்தப்பா நம்பர் ஞாபகமிருக்கு கொஞ்சம்”
“அவுங்க எங்க இருக்காங்க”
“இங்கதான் அவுங்க வீட்டுக்குதான் வந்தோம்”
“சரி சொல்லு”
“...84.........”
போன் செய்கிறார்கள்.
“நீங்க பையனோட சித்தப்பாவா. இங்கே இப்படி விஷயம்”
“பையன அப்படியே வெச்சிருங்க சார். நான் இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவேன்”
“சீக்கிரம் வாங்க சார். பஸ்ல இருந்து இறக்கியும் விட மனசில்ல. பையன் ரொம்ப அழறான். நீங்க வந்துட்டா நாங்க நிம்மதியாயிருவோம்”
“இதோ பைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் சார். பத்து நிமிசம்தான்”
பையன் அழுது கொண்டே இருக்கிறான்.
“அழாதப்பா சித்தப்பா வந்திருவாராம்”
“அப்பா எங்க”
“சித்தப்பாவ வந்துட்கிட்டே இருக்காரு”
“அப்பா எங்க ”
“வருவாரு அப்பா. சித்தப்பாவும் வந்துகிட்டே இருக்காரு”
சித்தப்பா ஒடிவந்து பஸ்ஸுக்குள் ஏறுகிறார். போய் பையனை அணைத்துக் கொள்கிறார்.
சித்தபாவைப் பார்த்ததும் பையன் ஒவென்று அழுகிறான்.
அவன் முகத்தின் சதையெல்லாம் திமிருகிறது. அந்தத் சதையைத் தாங்கும் எலும்புக் கூட திமிருகிறது. கண்கள் சுருங்கி அந்த பயந்த முகத்தில் காணாமல் போகிறது. எங்கிருந்தோ கண்ணீர் வருவது மாதிரி இருக்கிறது. பையனை இறக்கி கீழே இறங்க பையை எடுக்கும் போது அப்பா அங்கிருந்து ஒடிவருகிறார்.
அசடு வழிந்தபடி ஒடிவருகிறார். அவர் எங்கு போய்விட்டு வருகிறார் என்று அனைவருக்கும் தெரியும். பஸ்ஸில் உள்ளவர்கள் அனைவரும் கண்டபடி திட்டுகிறார்கள்.
தம்பிக்கு அண்ணனைத் திட்ட வருகிறது. ஆனால் சுற்றி உள்ளவர்கள் திட்டும் போது வேறு வழியில்லாமல் அண்ணனைக் காப்பாற்றி விடுகிறார். பஸ் எடுக்கும் நேரம் வந்தாயிற்று. அப்பா பையன் அருகே அமர்ந்து கொள்கிறார்.
பையனிடம் எதுவும் பேசவில்லை.
பையன் அப்பா தோளில் சாய்ந்து கொள்கிறான். பையன் தோளில் அப்பாவின் கைகள் விழுந்திருக்கின்றன. கூட்டம் அவரவர் இருக்கையில் அமர்ந்து பேருந்து ஒட்டத்தை ஆரம்பிக்கும் போது “நாதான் வந்திருவேன்னு சொன்னேன்லால. பிறகு எதுக்கு அழுது இவ்வளவு கூட்டத்த கூட்டினா நீ ..பொட்டப்பயல. பொம்பளையால நீ. இப்படியால அழுவ. பொட்டப்பயல” என்று சொல்லி அவன் தலையில் தன் கைமுட்டியை மடக்கி இரண்டு கொட்டு கொட்டி விட்டிருக்கிறார்.
அப்பா காணாமல் போன துன்பத்தை விட அந்த வலி கொடுக்கும் துன்பம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால் அந்த மனஇறுக்கமும், பதட்டமும் அவனுக்குள் படிந்து விட்டிருக்கலாம்.
தன் பையனின் பர்சனாலிட்டி வளர்ச்சியில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறோம் என்று தெரியாமல் அந்த குடிக்கார அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார்.
நெடுநாள்வரைக்கும் அப்பா வீட்டுக்குள் வரும் போது ஒருவிதமான நடுக்கம் பையனுக்கு ஏற்பட்டு பின் சரியானது என்று கேள்விப்பட்டேன்.
இளைஞர்களே குடித்துப் பழகாதீர்கள். எதற்காகவும் எப்போதும்
ஏதாவது ஒரு இடத்தில் அது துன்பம் தராமல் போகவே போகாது.

Tuesday, January 09, 2018

கா. நமச்சிவாயனார்

கா. நமச்சிவாயனார்
தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.
திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்
அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.
தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.
அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.
முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.
தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.
காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.
(விடுதலை 15.2.1960)
இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!
குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).
- மயிலாடன்

ஆன்மிக அரசியல் & நீதிக்கட்சி

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. அது திராவிட இயக்கத்திற்கு எதிரானதும் அல்ல. ஆன்மிகத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசியல் களத்தில் ஆயுதமாக ஏந்திய வரலாறு அதற்கு உண்டு. சரியாக சொல்லவேண்டும் என்றால், திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி தோன்றியதே ஆன்மிக உரிமையினால்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் தங்கம் 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு 10ஆயிரம் ரூபாய் நிதியளித்தார் சென்னை மாநகராட்சித் தலைவராக (முதல் மேயர்) இருந்த பிட்டி.தியாகராயர். குடமுழுக்கு நாளில் பிராமணர்கள் பலர் கோபுரத்தின் மீது நின்றனர். ஆனால், 10ஆயிரம் கொடுத்த தியாகராயர் பிராமணரல்லர். ஒரு சூத்திரர் என்பதால் அவரை கோவில் கோபுரத்தின் மீது ஏற விடவில்லை. பிறப்பின் காரணமாக அவருக்கு அந்த உரிமையில்லை என்று தடுத்தவர், சென்னை (மா)நகராட்சியில் அவரிடம் வேலை பார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு குமாஸ்தா. அந்த குமாஸ்தா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.
திருப்பணிக்கு பணம் வாங்கும்போது பிறப்பில் பேதம் தெரியாத நிலையில், கோபுரத்தில் ஏறவும், கருவறையில் நுழையவும் பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டப்படுவதால் விரக்தியும் கோபமும் அடைந்த தியாகராயர் அங்கிருந்து வெளியேறி, டி.எம்.நாயரையும் நடேசனாரையும் சந்தித்ததன் விளைவுதான், மூவரும் இணைந்து 1916-ல் உருவாக்கிய நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஆன்மிக உரிமையின் காரணமாக தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கல்வி-வேலை வாய்ப்பு என அனைத்து நிலையிலும் சமூக நீதியை நிலைநாட்டி, இந்தியாவுக்கே வழிகாட்டியானது.
1920ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமூக நீதி அடிப்படையிலான அதன் செயல்பாடுகளில் ஆன்மிக உரிமையும் அடங்கியிருந்தது. அதன் விளைவுதான் 1925-ல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதா. இதனைக் கொண்டு வருவதற்கு முன்பாக சங்கராச்சாரியார் உள்ளிட்ட "இந்துமத மேலோர்'களிடமும் "நூலோர்'களிடமும் ஆலோசனை பெற்று அதன் பின்னரே, 1925-ல் சட்டமாக நிறைவேற்றினார் பனகல் அரசர் ராமராய நிங்கர். அதுபோலவே, குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கோவில் பணி என்னும் பெயரில் இழிவாக நடத்தும் தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமும் நீதிக்கட்சி ஆட்சியில் 1929-ல் நிறைவேற்றப்பட்டது.
அதனைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்றத்திலேயே, ""தாசிகள் கோவில் பணிகளுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிப்பதென்பது கடவுள் கட்டளையை மீறும் அடாத செயலாகும்'' என்றார். அதற்கு பதிலளித்த தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ""இது கடவுள் தொண்டு என்றால் அந்த தொண்டினை ஒரு குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?''’என்று சத்தியமூர்த்தியைப் பார்த்துக்கேட்டு "ஷட் அப்' செய்தார்.
நாத்திகரான பெரியாரின் பங்கேற்புக்குப் பிறகு நீதிக்கட்சி வேகம் பெற்று, திராவிட இயக்கத்தின் அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்தபோதும், ஆன்மிக உரிமைகளில் சமூக நீதி என்பது மேலும் தீவிரமான போராட்டமாக மாறியது. பெரியாருடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் உள்ளிட்ட சமய அறிஞர்கள் ஆரியத்திடமிருந்து தமிழை மீட்பதில் இணைந்திருந்தனர். தமிழகத்திலும் மலேயாவிலும் (மலேசியா-சிங்கப்பூர்) சுயமரியாதை பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டபோது, அவருக்கு போட்டியாக ஆன்மிக பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர்தான் குன்றக்குடி அடிகளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, ஆரியத்தின் பிடியிலிருந்து ஆன்மிகத்தை விடுவித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார் குன்றக்குடி அடிகளார்.
ஆன்மிகத்திலும் "சமூகநீதி' என்கிற அரசியல் ஆயுதத்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உறுதியாகக் கையாண்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நாடார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து 1926-ல் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது. 1927-ல் "திராவிடன்' இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததற்காக அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய கொடுமையும் நடந்தது. இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டு பின்னர் விடுதலையடைந்தனர்.
1927-ல் திருச்சி- மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதனை தடுத்துத் தாக்கிய அடியாட்கள், கோவிலில் நுழைய முயன்றவர்களைப் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டார்கள். அதே ஆண்டில், மயிலாடுதுறை மயூரநாதசாமி கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரையும் அழைத்துச் செல்லும் போராட்டம் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் நடந்தது.
1929-ல் ஈரோடு -கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆதி திராவிடர் சமூகத்தினரை அழைத்துக் கொண்டு பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் போன்றோரும் நுழைந்தனர். அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய கும்பல், இரண்டு நாட்களுக்கு கதவைத் திறக்கவில்லை. திராவிட இயக்கம் மேற்கொண்ட இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, 1939ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஆலயப் பிரவேசம் செய்தார் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத அய்யர். அந்தப் போராட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உறுதுணையாக இருந்தார்.
கோவிலுக்குச் சென்று வழிபடுகிற உரிமை மட்டுமல்ல, கருவறையில் வழிபாட்டை நடத்துகின்ற உரிமையும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கவேண்டும் என்பதற்கான போராட்டக் களத்திற்குப் பெரியார் தயாரானார். இதனையடுத்து, 1970-ல் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதற்கு நீதிமன்றம் மூலம் நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தியபோது, அந்த உரிமைப் பறிப்பை, "தன் நெஞ்சில் தைத்த முள்' என்று பெரியார் குறிப்பிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற பல சமூகத்து அர்ச்சக மாணவர்களும் தங்கள் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை ஆரியச் சதியை எதிர்த்து இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது. இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, ""நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது''’என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.
தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.
வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.
வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.
ஆன்மிக அரசியலை ஆதரிப்பவர்கள் சமஸ்கிருத பகவத் கீதை வழியைக் கையாளப் போகிறார்களா? தமிழ்மறையான திருக்குறள் பாதையில் நடக்கப் போகிறார்களா? தேர்ந்தெடுக்கும் முறையில் அடங்கியிருக்கிறது ஆன்மிக அரசியலின் உண்மை முகம்.
-மாவலி (நக்கீரன்)

Thursday, January 04, 2018

அன்னை மீனாம்பாள் சிவராஜ்



பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்களின் விடுதலைக்காக போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் பிறந்ததினம்  26/12/1904.
பெரியாருக்கு சரித்திர புகழ்வாய்ந்த பெயரான 'பெரியார்' என்ற பெயரை சூடியவரும் அன்னைதான்.
என் அன்புச் சகோதரி என்று அண்ணல் அம்பேத்கர் உள்ளன்போடு அழைத்ததும் அன்னை மீனாம்பாள் அவர்களைத்தான்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவி
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்...
இன்னும் எண்ணற்ற பெரும் பதவிகளை அலங்கரித்தவர்.
30 நவம்பர் 1992 இல் நம்மை விட்டு மறைந்தார்.

சாவித்திரி ராவ் பூலே

சாவித்திரி ராவ் பூலே
(3 January 1831 – 10 March 1897)
ஆயிஷாவை உயர்த்திய படிகள்.
பெண்ணுரிமை போராளிகள் தொடர்
டிசம்பர் இறுதி, நல்ல பனி, இரவு பதினொரு மணி , கோவை பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. மடிக்கணிணியை இருக்கையில் வைத்து விட்டு கீழிறங்கி நின்ற போதுதான் மசூது பாய் எதிரில் வந்தார். கூடவே அவர் மகள் ஆயிஷா. ,
சலாம் சொல்லி விட்டு அவரே தொடங்கினார். "லீவு முடிஞ்சு காலேஜுக்கு போறா?! அதான் பஸ் ஏத்தி விட வந்தேன் .நீங்களும் கோயம்புத்தூருக்கா , இறங்கும் போது பாத்துகிடுங்க ". எஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாளாம். கொஞ்சநேரம் பேசிகொண்டிருக்கும் போதே பேருந்து நகர ஆரம்பித்தது. மசூது பாய், ஆயிஷாவிடம் இறங்கியதும் போன் பண்ணச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
.
ஆயிஷா யார் துணையும் இன்றி ஒரு இரவுப் பயணத்தை தாண்டி தன் உயர்கல்விக்க்காக செல்கிறாள். தமிழகத்தில் இன்றைய நாளில் இது இயல்பானது. இதில் வியப்படைவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும் இது எப்படிச் சத்தியப் பட்டது , சாத்தியப் படுத்த உழைத்த கரங்கள் எவை என்பதில் தான் சிந்தனை.
இன்றில் இருந்து சற்றேறக் குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான இந்தியாவில் இதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடிந்திருக்குமா ?!
சமைக்க, துணி துவைக்க, இரவில் இயைந்து கொடுக்க,
வரிசையாய் பெற்றுத்தள்ள, வாழ்நாள் எல்லாம் வளர்த்து வரும் ஒரு அடிமை என்ற எண்ணம் தாண்டி பெண்களைக் கண்டிராத ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயத்தில், பெண்கள் படிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தை , அதைச் சாத்தியமாக்க 1840களில் உழைத்த கரங்கள் சொல்லவா ?!
மகாராஷ்டிரத்தின் நய்காவ்ன் என்கிற ஊரில் பிறந்த சாவித்திரி ராவ் பூலே(பிறப்பு: 1831 ஜனவரி 03) தெரியுமா?!, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை . அவர் கணவர் ஜோதிராவ் பூலே, முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கியவர். குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்த நேரம், சாவித்திரி ராவின் ஒன்பதாம் வயதில் திருமணம். மனைவியாய் தானே பாடம் நடத்தி அவரை கல்வியாளராய் உருவாக்குகிறார் ஜோதிராவ் புலே .
அண்டை அயலார் ஏற்கவில்லை. "பொட்டச்சிக்கு என்ன படிப்பு வேண்டிகிடக்கு?!" என்ற முப்பாட்டன் காலத்து வசனங்கள் மெல்லக் கடிந்து , அவை கேட்கப் படாது போன போது வன்முறை கட்டவிழ்த்து விட்டும் பார்த்தன.
யாருக்கும் அஞ்சினார்கள் இல்லை. எதிர்த்து நின்றார்கள் கணவனும், மனைவியும். படித்ததோடு மட்டும் அல்ல , மற்ற பெண்களையும் படிக்க வைத்தாக வேண்டும். அதிலும் விவசாயப் பெருங்குடிப் பெண்கள் படிக்க வேண்டும் என்று சாவித்திரி ராவ் பூலே உரக்கச் சொல்கிறார்.

பத்தாம்பசலிகள், பழம் பெருச்சாளிகள் , என்னென்னவோ செய்து பார்க்கின்றனர். சாவித்திரி ராவ் பூலேவைப் பற்றி அசிங்கமான அர்ச்சனைகள் , சாலையில் நடக்கும் போது கல் எறிந்து பார்த்தார்கள். சாணத்தை எறிந்து பார்த்தார்கள். ஒரு நாள் அப்படி கல்லெறிய வந்தவனுக்கு கன்னம் பழுத்தது. சாவித்திரி தான். அதிர்ந்து அடங்கிப் போனது சில கும்பல்கள்.

பெண்களைப் படிக்க வைக்க பெண் தான் சரி என்று முதல் பெண் ஆசிரியையை தானே உருவெடுத்தார். 1848 இல். அது தான் முதல் பெண்களுக்கான பள்ளி . கூட இணைந்து கொண்ட இன்னோர் பெண் பாத்திமா ஷேக் .
பள்ளி நடந்து கொண்டிருந்தாலும்,ஒளிந்திருந்து சேறு வீசுகிறவர்கள் முழுதும் அடங்கியபாடில்லை. கருத்து ஒத்துப் போன கணவர் ஜோதிராவ் புலே ஆலோசனைப் படி பள்ளிக்கு செல்லும் போது பழைய புடவை உடுத்திச் செல்வார். சாணம் வீசுகிறவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்கள். சாவித்திரி பள்ளிக்கு சென்றதும் சேறான புடவையை மாற்றி புதிய புடவையை உடுத்திக் கொள்வார். எடுத்த பணியில் சோர்ந்து போனதாய்த் தெரியவில்லை.
பெண்களுக்கான பணி, கல்வி மட்டும் இல்லை என்றும் உணர்கிறார்கள் புலே தம்பதியினர்.
ஆண்களுக்கு என்றுமே பெண்கள் போகப் பொருட்கள்,
அவள் உடை, இடை,நடை என அனைத்தும் ஆண்களுக்காகவே படைக்கப் பட்டவை என்ற எண்ணம் இன்றும் மறையாத ஒன்று.
கணவன் இல்லா உலகம், பெண்ணுக்கு அவசியம் இல்லை என்று உறுதியாக நம்பிய காலம். உடன் கட்டையும், விதவையானால் முடி மழித்து மூலையில் இருத்தும் வழக்கத்தில் இருந்த காலம்.
ஏன் விதவைகள் மொட்டை அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள் புரட்சித் தம்பதியினர். முடிதிருத்தும் தொழிலாளர்களை ஒன்று திரட்டுகிறார்கள் . விதவைகள் தலையில் கை வைப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்கள் முடிதிருத்துவோர்.
இந்நேரத்திலே(1849-50) பெண்களுக்கான ஐந்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள்.
அடுத்த படியாக தாழ்த்தப்படோர்களுக்கான பெண்கள் பள்ளி(1852).
1870களில் , பஞ்சம் நிலவிய காலத்திலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஐம்பதிற்கும் மேல் நிறுவியிருந்தார்கள் புலே தம்பதியினர்.
சமூகத்துடன் இடைவிடா போராட்டத்துடன் நகர்ந்த நேரத்தில் ஜோதிராவ் பூலே , சாவித்திரியை தனியே போராடவிட்டு இறந்து போனார்(1890, நவம்பர் . 28). "வீதிவரை மனைவி" என்ற வெட்டிச் சொற்களை எல்லாம் சாவித்திரி புலே ஏற்க மறுத்து, தனக்கான உரிமை என ஜோதிராவ் புலேவின் சிதையை தீ மூட்டி அவரை வழி அனுப்பி வைத்தார். பெண் போகாத இடம் ஏது என்றார். ஜோதிராவ் என்னவோ மகிழ்வோடு தான் காற்றில் கரைந்திருப்பர் என நினைக்கிறேன்.
ஜோதிராவ் மறைந்த பின்னரும், எடுத்த பணி நோக்கியே நகர்ந்த சாவித்திரி ராவ் புலேவை (1897 மார்ச் 10) பிளேக் நோய் கொண்டு சென்றது.
இன்றைக்கு சில நூறு கிலோமீட்டர் தூரம் தாண்டிப் உயர்கல்வி பயிலும் மசூது பாய் மகள் ஆயிஷா, சாவித்திரி பாய் பூலேவை அறிந்திருப்பாளா ?! பாத்திமா ஷேக் யார் என்று கேட்டால் சொல்வாளா ?!
நாளை காந்திபுரம் நிறுத்தத்தில் இறங்கும் போது கேட்க வேண்டும். அவள் அறிந்திருப்பதன் சாத்தியம் குறைவு தான்.

இந்திய வரலாறல்ல ,உலக வரலாற்றிலே கூட பெண்களுக்கான பக்கங்கள் மிகச் சிறிய எழுத்துகளால் தானே எழுதப் படுகின்றன.
இன்னும் ஆயிஷாக்களை, மணிமேகலைகளை, மேரிகளை உயர்த்த நினைத்த படிக்கட்டுகளைக் குறித்து சொல்ல வேண்டும்.
படிகள் உயரும்