மாதம் முப்பது நாற்பதினாயிரம் பொருளீட்டும் சக்தி படைத்த ஒரு இடைநிலை பொருளாதார வர்க்கம் இருக்கிறதே, அவர்களின் பிரத்யேக சமூகப் பார்வை, பொருளாதார நோக்கங்கள் உண்டு. அந்த சிந்தனா வினோதத்தின் மொத்த உருவம் அப்துல் கலாம்.
மூன்று பக்க மொக்கை வாட்சப் பகிர்வின் முடிவில் ஒரு பன்ச் லைன் வருமே "எம் தேசத்தை அழிப்பது இலவசங்களும் மானியங்களும்" என்று, அதன் தோற்றுவாய் கலாம்.
அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமே முன்னேற்றம், வளர்ச்சி என்ற அபத்தத்தின் அடித்தளம் அப்துல் கலாம்.
"எல்லாரும் செல் போன் வச்சிருக்கானுங்க சார், பசி பட்டினி இந்தியாவுலன்னு புளுகிறானுங்க" என்று அக்கவுன்ட் வைத்து டீ குடித்துக் கொண்டே பேசுபவர் கலாமின் அசிஸ்ட்டென்ட் தான்.
இடஒதுக்கீட்டில் படித்து பயன் பெற்று, அதிக பொருளீட்டும் வாய்ப்பு கிடைத்ததும், "மொதல்ல இந்த ரிசர்வேசன ஒழிக்கணும் சார்" என்ற டயலாக்கில் கலாம் ஒளிந்திருந்து சிரிப்பார்.
நாட்டில் எந்த மூலையில் பழங்குடியினரின், மீனவர்களின், சிறு விவசாயிகளின் இன்ன பிற எளியோரின் வாழ்வாதார அடிப்படை பறிப் போகிறது என்று போராட்டங்கள் நடந்தாலும், "இவனுங்களுக்கு இதே வேலைங்க, நாடு உருப்படாம போறதுக்கு காரணமே இவனுங்க தான், வளர்ச்சிய கெடுக்கிறாங்க.. பூரா வெளிநாட்டு பணம்.. நிக்க வச்சி சுட்டா தான் சரி வரும்" என்று ஆயுத ஏந்த சொல்பவர் அகிம்சாவாத கலாம் ஐயாவின் வன்மையான மாற்று வடிவமே.
"டேய், அதின்னா புஸ்தகம், தூக்கிப் போட்டுட்டு பாடத்த படி" என்று அப்பா அதட்டுவதில் அப்துல் கலாம் காணச் சொல்லிக் கொடுத்த சாதனைக் கனவுகள் தெறிக்கும்.
நான் சாதியே பார்ப்பதில்லை, அதனால் உலகத்தில் சாதிப் பிரச்சினைகளே இல்லை, இந்த போலி முற்போக்குவாதிகளின் தொல்லை தாங்க முடிவதில்லை என்ற திருட்டுத்தனமான சலிப்பிலும், என் பிள்ளைக்கு நான் சாதி சான்றிதழே வாங்கப் போவதில்லை என்ற கௌரவ அறியாமையிலும் கலாம் புகுந்திருக்கிறார்.
ஊழல் ஒன்று மட்டும் தான் இந்த தேசத்தின் பிரச்சினை என்கிற ரீதியில் இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதிக்கிறார்களே, டைரக்டர்கள் சினிமா எடுக்கிறார்களே, நாடாளத் துடிக்கும் நடிக சாம்ராட்டுகள் சீறுகிறார்களே, அனைவரும் கலாம் ஐயாவின் வழித்தோன்றல்களே.
தேசத்துரோகி என பாஜவும், பயங்கரவாத நக்சல்கள் என அதிமுகவும் போராடுபவர்கள் மேல் குதிக்கிறார்களே, கலாம் சாருக்கு பிடித்த விசயங்கள் தாம் அவை.
பணம் பார்த்ததும், கிராம தலித் காலனியில் இருந்தோ நகர குடிசைப்பகுதியில் இருந்தோ வெளியேறி, நகர எல்லையில் ஒரு வீடு வாங்கி குடியேறி, வெள்ளைத் தோலுடையவர் ஒருவரைத் தேடி மணம் புரிந்து, அதே நிறத்தில் பிள்ளை பெற்று, அண்டை வீட்டானிடம் சாதியை மறைத்து, அமாவாசை கிருத்திகை கும்பிட்டு, "இவனுங்கள்லாம் திருந்த மாட்டானுங்கபா, அவன் சாதி புத்தி அப்டி.. கேவலமானவனுங்க" என்று அயலான் இவன் சாதியை குறித்து பேசும் போது, இளித்துக் கொண்டே ஆமாஞ்சாமி போடுவது கலாம் ஐயாவின் தற்கால வார்ப்புகளே.
"இப்பல்லாம் யாரு சார் ஜாதி/மதம் பார்க்கிறா" என்று ஒலிக்கும் குரல்கள் அனைத்து கலாமின் டப் செய்யப்பட்ட குரல்களே.
மாடும் பன்றியும் தின்று உடல் வளர்த்துவிட்டு, நகர பன்மாடி சமூக குடியிருப்பு ஒன்றில் குடியேறியதும், சைவ உணவின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தையும் வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் ஃபார்வர்ட் செய்வது சாக்ஷாத் கலாம் சாஸ்திரிகள் ஐயாவே.
தேசம் என்பது மக்கள் அல்ல, நிலமும் எல்லைக் கோடுகளும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் கலாமின் வாரிசுகள் தான். தேச வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதும், எளியவரின் வாழ்வாதாரங்களை கபளீகரம் செய்வதும் தான் என்ற நவீன சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் நாம் அனைவரும் ஐயாவின் பிள்ளைகள் தாம்.
தேசபக்தி, எல்லை, ராணுவம் என்பவற்றை வைத்து எதையும் மூடி மறைக்கலாம் என்பதன் அடையாள சின்னம் அப்துல் கலாம்.
கடைசியாக, "யோகி ஆதித்யனாத் ஒரு முறை கக்கூஸ் இருக்க செல்லும் போது" என்று காவி கொலைகார கும்பலின் தியாக வரலாற்றை எழுத வைப்பது கலாம் ஐயா சிலாகித்த நம் தேசபக்தி தான்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நமது அரசியல்/சமூக அறியாமைகள் மற்றும் கயமைகள், அதனை பயன்படுத்தி அரசியல் செய்வோரின் கேப்மாறித்தனத்துடன் கைக்குலுக்கும் இடம் தான் அப்துல் கலாம்.
தனது சொந்தத் துறையில் அவர் பல அறிவியல் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் அவரது அரசியல் சமூக சித்தாந்தங்கள் மூடத் தனமானவை அல்லது கயமைத்தனமானவை
No comments:
Post a Comment