Monday, December 30, 2019

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?
Krishnan Nallaperumal, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்-இல் அறிவியற்புல முதன்மையர், மூத்த பேராசிரியர் (1992-தற்போது)
7 நவம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது.
"காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?" என்ற உங்கள் வினாவின் விடையைப் புரிந்துகொள்ள, ஒரு சுருக்கமான "FLASHBACK" தேவைப்படுகிறது.
எழுத்துமுறையும், எண் முறையும் இல்லாமல், பேச்சுவழக்கில் மட்டுமே இருந்த வேதமொழியைப் பேசிக்கொண்டு வடமேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், சிந்து கங்கைச் சமவெளி தொடங்கி, இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்தனர்.
தொடக்க காலத்தில், அவர்களின் நாடோடி இன இலக்கியமாக வேதப்பாடல்களைச் செவி-வழியாக ஓதி, மனப்பாடம் செய்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆங்காங்கே குலம் குலமாகத் தங்கிய இடங்களில் வாழ்ந்த பண்டைய இந்திய மக்களுடன் பழகி, தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.
ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த மக்கள் ஒரே மொழி பேசிய ஓரினம் என்பது இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழி அமைப்பும் - Orthography, ஒரே வகை-எழுத்துமுறை-வரிசையும் - Ordering of Alphabets as Vowels, Consonants and Consonant-al Vowels கொண்டு விளங்குவதை ஆரியர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள்.
நாகரிகத்தில் பலபடிகள் முன்னேறி, எழுத்தும், எண் முறையும் கொண்ட வளர்ச்சியடைந்த மொழிகளைப் பேசிய பண்டைய இந்திய மக்கள், ஆரியர்களின் சிவந்த நிறமும், எடுப்பான ஓசையுடன் கூடிய வேத மொழியையும் கண்டு, ஏமார்ந்துவிட்டனர். ஆரியர்களை மிக மதிப்புடன் நடத்தினர்.
பண்டைய இந்திய மக்களின் ஏமாறும் தன்மையைக் கண்டுகொண்ட ஆரியர்கள் "அடிமை சிக்கிட்டாண்டா!" என்றார் வடிவேலு பாணியில், தங்களைப் 'பூசுரர்கள்' - அதாவது பூமியில் வாழும் தேவர்கள் என்றும், தாங்கள் பேசும் மொழி 'தேவபாஷை' என்றும் விட்ட கதைகளை நம்பியவர்களின் முகில் குதிரை ஏறி, ஓட்டத் தொடங்கினார்கள்.
உள்ளூர் மக்களுக்கு மழை வேண்டி யாகம், குழந்தை வேண்டி யாகம், ஆயுள் வேண்டி யாகம், பொருள் வேண்டி யாகம் என்று தங்கள் வேத வேள்வியை முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டு, பெரும் பணம் ஈட்டினர். உடல்-உழைப்பு இல்லாத மதிப்பான வாழ்க்கை, ஆரியர்களின் அதிகார போதையை அதிகப்படுத்தியது.
தங்கள் வேதமொழியைப் பிறர் அறியாதவாறு காக்க வேண்டும் என்று நினைத்ததால், வீட்டில் மட்டும் வேதமொழியைப் பேசினார்கள்.
பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமையால், உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்தனர். இதன் காரணமாக, ஆரியர்கள் பலரும் வீட்டில் உள்ளூர் மொழியையே பேச நேர்ந்தது. யாகம் செய்யும் தொழிலுக்காக, ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வேதமொழி கற்றுத்தரப்பட்டது.
பெண்களுக்கு வேதக்கல்வி மறுக்கப்பட்டதால், வீட்டில் உள்ளூர் பிராகிருத மொழிகளே பேசப்பட்டு, காலப்போக்கில், வேதமொழி பேச்சுவழக்கில் இருந்து போய்விட்டது.
உள்ளூர் மக்களின் பிராகிருத எழுத்துமுறையை உள்வாங்கி, தங்கள் மொழிக்கு எழுத்துமுறையும், இலக்கண முறையும் உருவாக்கிக் கொண்டனர். அவற்றுக்கு பிராதி-சாக்கியங்கள் என்று பெயர்.
எனவே, வேதமொழிக்கான ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், எழுத்துமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்டதால், காலப்போக்கில், பல வேறுபாடுகள் வேதத்தில் உருவாகின.
இவற்றை ஒன்றுபடுத்தினார் வேத வியாசர். இந்தியாவெங்கும் வாழ்ந்துவந்த ஆரியர்களுக்கு வேதம் எழுதுவதற்குப் பொதுவான எழுத்துமொழியாக, பாஷா என்ற ஏட்டு-எழுத்துமொழி உருவானது.
இந்தமொழிக்குத்தான் பாணினி 'வ்யாகரணம்' என்னும் இலக்கண நூல் எழுதினர். இதுவே பின்னாளில் சமஸ்கிருதம் ஆனது.
சமஸ்கிருதம் ஏன் எவருடைய தாய் மொழியும் இல்லை என்பது இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.
உள்ளூர்க்காரர்களை ஏமாற்றி, உடலுழைப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கைக்காக, வேத வேள்வி செய்த ஆரியர்கள், தொழிலுக்காகத் தாய்மொழியைத் தொலைத்துவிட்டனர். ஆரிய ஆண்களுக்குப் பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அன்றும், இன்றும் இருந்து வருகிறது.
எனவே, ஆரிய இனம், மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூர் மொழியைத் தாய்மொழியாகவும், சமஸ்கிருத மொழியை, வேள்வித் தொழிலுக்கான தந்தை மொழியாகவும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் உள்ளூர் பிராகிருத மொழிகள், தாய் மொழிகளாக இருந்தாலும், ஆரிய மூதாதையருக்குச் சொந்தமான பண்டைய வேதமொழி என்னும் தாய்மொழியின் வேர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதற்காக, பிராகிருத மொழிகளில், சம்ஸ்கிருதச் சொற்களிச் சேர்த்துப் பேசத் தொடங்கி, உள்ளூர் மொழிகளின் அடையாளத்தை அழிக்கத் தொடங்கினர்.
ஆரியர்களின் சதித்திட்டத்தை உணராத வடஇந்தியர்கள், தங்கள் மொழிகளின் மரபுச் சொற்களைப் பேணாமல், சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிட்டு, அவையே மீண்டும் சில பல மாற்றங்களுடன் சமஸ்கிருதச் சொற்களாகத் திரும்பி, அவர்தம் பிராகிருத மொழியில் சம்ஸ்கிருத அடையாளத்துடன் கலந்தன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும், பல சிதைவுகளை உண்டுபண்ணி, பிராகிருத மொழிகளைச் சின்னாபின்னப் படுத்தினர்.
தமிழகத்தில் ஆரியர் எண்ணிக்கை மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தமையாலும், தமிழர்களின் மொழிப் பற்றினாலும், தமிழ் மொழியை மட்டும் அவர்களால், அழிக்க முடியவில்லை.
ஆனால், தமிழுடன் வடமொழியைக் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் உருவாகின. தமிழர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பகுதியாகக் குறைந்தது.
தனித்து இயங்க முடியாத ஏட்டுச் சுரைக்காய் சம்ஸ்கிருத மொழியைத் தமிழ் மொழியுடன் கலந்து பேசும் மொழிநடைக்கு 'மணிப் பவளம்' அல்லது 'மணிப்பிரவாளம்' என்று பெயர்.
மணிப்பிரவாளம் முற்றியதும், துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் (തുഞ്ചത്ത് രാമാനുജൻ എഴുത്തച്ഛൻ) என்பவர் மலையாள மொழிக்கு இலக்கணம் கிபி 16ம் நூற்றாண்டில் எழுதினர்.
இவ்வாறு, நான்கில் மூன்று பகுதி தமிழின மக்களை வடமொழி கலந்து வேற்று மொழியினராக்கிய ஆரியர்கள், தொடர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும் தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதம் கலந்து அழித்துவிடத் துடிக்கிறார்கள்.
FLASHBACK முடிந்தது! - ———————
இந்நிலையில்தான், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காஞ்சி மடத்தின் தலைவரானார். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஹிந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளும் அறிந்தவர். மொழி இலக்கணங்கள் இவருக்கு அத்துபடி!
தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதப்படுத்தி, மாசுபடுத்தி, தமிழின் அடையாளத்தைஅழித்துவிடுவது என்ற சூழுரை கொண்டவர்.
சிந்தித்துப் பாருங்கள், தமிழ் மொழியிலிருந்து பிரிந்த கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளை ஏன் நீசமொழிகள் என்று ஆரியர்கள் சொல்வதில்லை?
இதற்கான விடை, மக்களால் பேசப்படும் இம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டால், அவை மீண்டும் தமிழாகிவிடும் என்பதால், கன்னடம் உள்ளிட்ட தென்மொழிகள் தம் தனித்தன்மையைக் காக்க, தங்கள் மொழிச் சொற்களில் சமஸ்கிருதக் கலவையைப் பாதுகாக்கவும், போற்றவும் பெருமையுடன் முற்படுகிறார்கள்.
ஆரியமொழி சமஸ்கிருதம் கலக்காமல் இயங்கும் தூய செம்மொழி பேசும் தமிழ்மொழி மக்கள், தமிழின் தனித்தன்மையைப் பாதுகாக்க, தமிழில் கலந்துள்ள ஓரிரு சமஸ்கிருதச் சொற்களையும் நீக்க முற்படுவதால், தமிழ் மொழியை மட்டுமே ஆரியர்கள் 'நீசமொழி' என்பார்கள்.
மகாப்பெரியவரின் ஆசியோடு, மத்திய அரசுகள், கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில், சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது என்று தொடர்ந்து பொய்க்கணக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அக்கிராம மக்கள், பத்திரிக்கைக்காரர்கள் அந்தப் பக்கம் போனதும், கன்னடம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என்னதான் அழகான மெழுகு பொம்மை உண்மைபோல் தோன்றினாலும், அதனுடன் குடும்பம் நடத்த முடியாதல்லவா? அப்படித்தான் சம்ஸ்கிருத மொழியில் நடைமுறை வாழ்வில் பேசுவது இயலாத காரியம்.
மகாப் பெரியவா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் மகாப் பெரியவா-வின் தமிழ் வெறுப்பைப் பற்றி, அவரது இணையதளத்தில் வெளிட்டுள்ளார்.
"பூஜை வேளைகளில் 'நீசபாஷை' தமிழில் நான் பேசமாட்டேன்", என்று பெரியவா கூறியதாகவும், இச்செய்தி, காஞ்சிமடத்தில் அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தாத்தாச்சாரி தமது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
காஞ்சி மகாப் பெரியவரின் போதாத காலம், பரிதிமாற்கலைஞர், தமிழ் மாமலைப் பெரியார் மறைமலையடிகள் ஆகியோர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழர்களுக்கு அவர்தம் மொழியின் தனித்தன்மை குறித்து விழிப்புணர்வு உருவாக்கினார்கள்.
"முடிந்தால் ஒழித்துவிடு! இல்லையேல் விழுங்கிவிடு!" என்பது ஆரியர்கள் இந்தியா நுழைந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் ஆரிய மேலாண்மைத் தத்துவம். காஞ்சி மாமுனிவரின் கொள்கையும் அதுதான்.
தனித்தமிழ் இயக்கத்தால், 'தேவபாடை' சமஸ்கிருதச் சொற்கள் தமிழிலிருந்து பத்தாண்டு காலங்களுக்குள் ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டன. இதைப் பொறுக்க இயலாமல், புலம்பிய 'தெய்வத்தின் குரல்' உங்கள் பார்வைக்கு:
தமிழில் 'மனிதநேயம்' என்ற சொல் அறிமுகமானபோது மகாப்பெரியவா சொன்ன புலம்பல்:
"ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!
ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.
அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.அது போகட்டும்.
`மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே?
ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன."
தமிழ்மொழியைத் தமிழர்கள் தூய்மை செய்யும்போது, இவருக்கு எப்படி பொத்துக்கொண்டு வழிகிறது பாருங்கள்!
பிராகிருத மொழிகள், தமிழ் மொழி ஆகிவற்றில் இருந்து எழுத்துமுறைகளை - Orthography கடன்வாங்கி, எழுத்துக்களை உருவாக்கிய சமஸ்கிருத மொழியின் கொச்சை வடிவம் பிராகிருத மொழியாம்! 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்று 'மகாப் பெரியவா' சொன்னா ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!
வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவர் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது மகாப்பெரியவா கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.
குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.
தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர் மகாப்பெரியவா.
தமிழர்கள் 'உலகப் பொதுமறை' என்று பெருமையுடன் அழைக்கும் தமிழ் நான்மறையாம் 'அறம், பொருள், இன்பம், வீடு' பேசும் 'திருக்குறளை' எப்படியாவது ஒழித்துவிடுவது என்பது காஞ்சி மகாப்பெரியவரின் முதல் திட்டமாயிருந்தது.
இத்திட்டத்திற்கு வரைபடம் போடுவதற்கு, முதலில் மார்கழி மாதத்தில் பெரும்பான்மைத் தமிழர்களின் வீடுகளிலும், தமிழக வைணவ, சைவத் திருக்கோயில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பு நோற்கும் விழாவைக் கையில் எடுத்தார் மகாப் பெரியவா.
திருக்குறளை ஒழிப்பதற்கும், திருப்பாவை-திருவெம்பாவை விழாவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். திருக்குறள் மோசமான நூல் என்று சொல்வதற்கு, திருப்பாவையில் வரும்
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
என்னும் பாடலை, திருக்குறளுக்கு எதிராக முன்நிறுத்துவது என்பது மகாப்பெரியவரின் திட்டம்.
தமிழகமெங்கும் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் திருக்கோயில்களில் பாடவும், அவை சார்ந்த மனப்பாடப் போட்டிகள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி ஆகியன நடத்த காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு செய்தது.
மகாப்பெரியவரின் அரசியல் செல்வாக்கால், இவ்விழாவைத் தமிழக அரசே இந்து அறநிலையத்துறை விழாவாக அறிவித்தது.
அப்படி நடந்த அரசுவிழாவில்தான் மகாப்பெரியவாவின் 'தெய்வத்தின் குரலாகத் திருவாய் மலர்ந்து' ("அது வேற வாய்; இது . . .வாய்" என்ற வடிவேல் காமெடி உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லன்!) திருக்குறளுக்கு எதிராக 'தம் பிரம்மாஸ்திரமாக திருப்பாவைப் பாடல் விளக்கத்தைப் பொதுமேடையில் பேசினார்.
"திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்", என்ற புதிய விளக்கத்தை திருக்குறளுக்கு எதிராகச் சொன்னார் சங்கராச்சாரியார் மகாப்பெரியவா!!!
"பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!" என்று தமிழர்களிடையே ஒரு சொல் வழக்கு உண்டு.
அப்படியிருக்க, "மகாப்பெரியவா சொன்னா பெருமாளே விஸ்வரூபம் எடுத்துச் சொன்ன மாதிரி!" என்று தம் 'தெய்வத்தின் குரல்' மக்களிடம் பரவி, திருக்குறள் ஒரே அடியாக மக்கள் மனதிலிருந்து ஒழிந்துவிடும் என்பது காஞ்சி மகாப்பெரியவா-வின் கணக்காக இருந்தது.
ஆனால், நடந்ததோ அவர் நினைத்ததற்குத் தலைகீழாக! குமுதம் நாளிதழ் மகாப்பெரியவா சொன்னதை சிறப்புச் செய்தியாக வெளியிட்டு, செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டது.
மகாப்பெரியவரின் திருக்குறளுக்கு எதிரான கருத்துக்கு, தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்புக் குரல்கள் என திமிலோகப்பட்டது. மகாப்பெரியவா-வின் கருத்துக்கு எதிராக எழுந்த வைணவர்களின் எதிர்ப்புக்குரல்கள் மிகக்கடுமையாக இருந்தன. குமுதம் 'வருத்தம்' தெரிவித்தது.
மகாப்பெரியவா தன்னிலை விளக்கமாக, ஒரு 'சப்பைக்கட்டு' சொல்லி, சமாளித்தார். ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றுக்காக அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்? திட்டம் 'பணால்' ஆனதற்கு கட்டாயம் வருத்தப்பட்டிருப்பார்.
'முடிந்தால் ஒழித்துவிடு!" என்ற ஆரிய முதல் ஆயுதத்தை ஏவிய , மகாப்பெரியவா செய்த வலக்காரங்கள்(தந்திரங்கள் என்பதன் தமிழ்) பலன் தரவில்லை.
இனி, "இல்லையேல் விழுங்கிவிடு!" என்ற அடுத்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் மகாப் பெரியவா. அதுதான், திருக்குறளை ஆரிய சாஸ்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று பரப்புரை செய்து, திருக்குறள் ஆரிய நூலே என்று நிறுவுவது!
பெரியவா காலத்தில், தமிழ்ப் பேராசியர்களில் பல பல ஆரியக் கைக்கூலிகள், நான், நீ என்று போட்டி போட்டுகொண்டு எழுதித் தள்ளினார்கள். காலம் அவற்றைக் குப்பை கூடைகளில் கொண்டு சேர்த்தது.
சமீபத்தில், தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற திரு.நாகசாமி என்ற ஆரியப் பார்ப்பனர் 'Tirukkural - An Abridgement of Sastras" என்ற தலைப்பில், தப்பும், தவறுமான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஒரு நூல் எழுதி, வெளியிட்டார்.
அந்த விழாவில்தான், 'மகாப்பெரியவா'-வின் இடத்தில் இன்று அமர்ந்திருக்கும் முன்னாளைய 'பாலப்பெரியவா', தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆரியர்கள் வேதாளம்-விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங்கள்! மீண்டும் மீண்டும் தமிழை அழிக்க ஏதாவது ஒரு வடிவில் அவதாரங்கள் எடுப்பார்கள்.
பண்பாட்டு அளவில், ஆரியர்கள் "அழிக்கவும் இயலாமல், விழுங்கவும் இயலாமல்" தவிக்கும் திருக்குறளும், செம்மொழி தமிழும் அவர்களை உலகம் உள்ளவரை உறங்க விடாது என்பது உறுதி!
——————
அன்பர் பத்ரிநாத் பக்தவத்சலம் அவர்கள் என்னிடம் 'ஆண்டாள் நாச்சியார்' அன்னையின் திருப்பாவை குறித்த ஒரு விளக்கம் கேட்டிருந்தார். அனைவருக்கும் பயன்படும் என்பதால், இங்கு தருகிறேன்:
ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக அவதரித்த தாயார் ஆண்டாள் நாச்சியார் இறைப்பணியில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்.
'ஆண்டாள் நாச்சியார்' உலகத்துக்கே தாயார்! அன்னையார் 'தீக்குறளை' என்று சொன்னதன் பொருள் 'தீய கோள்கள் சொல்ல மாட்டோம், அதாவது புறம் பேசுதல் செய்ய மாட்டோம்' என்பதுதான்.
'மகாப்பெரியவா' தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, 'தீய குறள்' என்று வேண்டுமென்றே திரித்துக் கூறிவிட்டார்.
சங்கராச்சாரியாரின் இப்பொருள் திரிப்புக் கருத்துக்கு, வைணவப் பெருமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
உங்கள் ஐயம் சரிதான்.
வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கே முதல் வழிபாடு செய்யும் தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அன்னை ஆண்டாள் நாச்சியார் சொன்ன திருப்பாவை 'சங்கத் தமிழ் முப்பதும்' என்று நாச்சியாரின் திருவாய் மொழியே அருளி உள்ளதைக் காணுங்கள்!
அன்னை ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு திருப்பாசுரத் தொகுதிகளிலும் 'பிராமணர்' என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தவில்லை.
தாயார் தம்மைக் குறிக்க, 'பட்டர்பிரான் கோதை' மற்றும், 'விட்டுசித்தன் கோதை' என்ற இரண்டு அடைமொழிகளால் மட்டுமே குறித்துள்ளார் என்பது இங்கு அனைவரும் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.