Wednesday, January 31, 2018

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உங்கள் தலைவரே உட்கார்ந்து தான் இருக்காரு

நண்பர்களுடன் அண்ணா நகர் பூங்காவில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தப்போது, என் பள்ளிக்கால ஆசிரியரிடமிருந்து whatsAppல் ஒரு வீடியோ செய்தி. என்னை வளர்த்து ஆளாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர். பார்ப்பனர்தான், ஆனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரிந்தவர். தூரத்திலிருந்து என் திராவிட அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளை அவர் கவனித்துவந்தாலும், இத்தனை ஆண்டுகளில் அவர் எனக்கு அனுப்பிய முதல் குறுஞ்செய்தி இதுதான்.
"மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்,
ஏம்ப்பா திராவிட பகுத்தறிவு ஜீவிகளே 2010 செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உங்கள் தலைவரே உட்கார்ந்து தான் இருக்காரு அதுக்கு முதலில் பதில் சொல்லுங்கப்பா" (வீடியோ முதல் கமெண்டில்)
அதனைத் தொடர்ந்து அவரோடு நடந்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றத்தை அப்படியே தருகிறேன்:
நான்: ஹாஹா 😃 மேடம் இதுப்போன்ற அவதூறுகளுக்கு நீங்களுமா ஏமாறுகிறீர்கள்?
2009 பிப்ரவரி மாதத்திலிருந்து தலைவர் கலைஞரால் வயது மூப்பின் காரணமாகவும், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின் காரணமாகவும் நடக்கவோ, நிற்கவோ முடியாமல் போனது நாடறிந்த செய்தி. (அவர் வயதிற்கு நாமெல்லாம் உயிரோடு இருப்போமா என்பதே சந்தேகம்)
85வயதில் உடல் ஆரோக்கியமில்லாத ஒரு முதியவர் உட்கார்ந்திருந்ததும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் விஜயேந்திரன் கொழுப்பெடுத்து அமர்ந்திருந்ததும் ஒன்றா மேடம்? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத விஜயேந்திரன் தேசிய கீதத்திற்கு நின்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவே தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் முதியவர் ஜெயேந்திரன் உடல்நலம் காரணமாக எழாமல் போயிருந்தால் எந்தக் கேள்வியும் எழுந்திருக்காது.
அவர்: ஏம்மா, அப்ப பக்கத்தில் உட்கார்ந்திருப்பதும் உடல் நலம் இல்லாதவரா? நியாயம் என்பது அனைவருக்கும் பொதுதானே வக்கீல் சார்!
நான்: மேடம் எங்கள் பேராசிரியர் அன்பழகனார் உட்பட அனைவரும் நிற்கிறார்கள். கலைஞருக்குப் பக்கத்தில் சந்தனப் பொட்டு வைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருப்பதை நானும் கவனித்தேன். அவர் தி.மு.க நபர் அல்ல. அவர் யாரென்றும் எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் நான் எப்படி அவருக்காக வாதிடமுடியும்?
நீங்கள் அனுப்பியது எங்கள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றியது. அதற்குரிய விடையை நான் அளித்துவிட்டதாகவே கருதுகிறேன் மேடம் 
அவர்: அப்ப உடம்பு சரியில்லை என்றால் விதிவிலக்கு உண்டா வக்கீல் சார்? ஏன் உங்கள் தமிழினத் தலைவர்கள் உட்கார்ந்தருப்பது தவறு என்று மேடையிலேயே சுட்டிக் காட்டவில்லை. (நான் வக்கீலை உருவாக்கிய ஆசிரியையாக்கும்)
நான்: yes madam.. Law exempts persons with physical infirmities and ailments. Even central Govt notification on 'National Anthem' issued in 2015 and various court verdicts, clearly exempts aged persons and other special categories of persons. Above all, no reasonable person will expect an old man or a phyiscally challenged person to stand up when they actually cannot 😃
ஆனால் விஜயேந்திரன் விசயத்தில் அவரிடம் இதுப்போன்ற எந்ண நியாயமானக் காரணமும் இல்லையே.
So here, you are trying to defend the indefensible ma'am 😉
கண்டிப்பாக என்னை ஆளாக்கியவர்களுள் ஒருவர் நீங்கள். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் தாய்(நீங்கள்) பத்தடிப் பாய்ந்தால், குட்டி(நான்) பதினாறடிப் பாய்வதுதானே உங்களுக்கும் சிறப்பு? 😍
அவர்: ஹாஹா. விவாதம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
Any how, உன் வாதத்திறமைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
நான்: மிக்க நன்றி மேடம்
-------------------------------------------------------------
சொல்லப்போனால் இதில் என் வாதத்திறமை என்று பெரிதாக எதுவுமேயில்லை என்பதை நானே அறிவேன். உள்ள உண்மைகளை உள்ளபடி சொல்லியிருக்கிறேன். அவ்வளவே!
ஆனால், திராவிட இயக்கத்தைப் பற்றி இந்த சங்கிகள் பரப்பும் அவதூறுகள் எவ்வளவு மொன்னைத்தனமாக இருந்தாலும், அதற்கு பலியாக இங்கு ஏராளமான படித்த மனிதர்களும், அறிவாளிகளும்கூட தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுதான் இது.
மெத்தப்படித்த அறிஞர் ஒருவர் இவ்வளவு பலவீனமான ஒரு மொக்கை செய்தியை, ஏதோ கலைஞருக்கு எதிரான நெத்தியடி ஆவணம் கிடைத்துவிட்டதாக நம்பி எனக்கு அனுப்புகிறார் என்றால், இவர்களை நினைத்துப் பரிதாபப்படவே தோன்றுகிறது.
திராவிடப் பகுத்தறிவாளர்களான நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
                                                                                                                                   –  வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

***

ந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் தேவதாசி பரஸ்மணி
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான                     பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.

ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.

பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.

***

1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான                    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.

***

20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

இது பிராமணாள் ஸ்பெஷல்...

பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். `வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ (அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். `இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ (அத்தியாயம்:சம்ஹாரம்).
`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’
`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். நானும் என் இனத் தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழக்கவும் இத்தகைய சுய நலத்தையும் துவேஷத்தை யும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம். `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன. ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது. நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (clan) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. ஆனால், தமிழினப் பாரம்பரியமோ `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. எனவே `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

Monday, January 29, 2018

மெக்காலே கல்விமுறை

வழக்கமாக மெக்காலே கல்விமுறையை திட்டுவது RSS ஆட்களின் வேலை.
ஏனெனில் அதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலோருக்கு படிக்க வாய்ப்பு கிடையவே கிடையாது. அதற்கு பிறகுதான் கல்வி உரிமை அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்தது.நீங்க எல்லாம் ஏண்டா படிக்க வந்தீங்கன்னு அவனுங்களுக்கு வயித்தெரிச்சல்.
வேலைக்காரன் படத்தில் மெக்காலே கல்வி முறையை எதிர்த்து வசனம் வருகிறாதாம்.
இந்த முட்டாள் சினிமா டைரக்டர்கள் தமிழகத்தை சீரழிக்காமல் விட மாட்டார்கள் போல.

மெக்காலே கல்வி முறை சிறந்ததா இல்லையா

மெக்காலே கல்வி முறை சிறந்ததா இல்லையா என்ற வாதம் நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கல்வி கற்கவேண்டும் என்பதே மெக்காலே கல்வித்திட்டம். இந்த ஒரேயொரு காரணத்தை வைத்துக்கொண்டே மெக்காலே கல்வித்திட்டம் மிகச்சிறந்தது என சொல்லிவிடலாம்.
என்னவோ மெக்காலே வருவதற்கு முன்னால் இங்கே பூரா பேரும் ஸ்காலர்களாக இருந்தது போல ரீல் சுற்றுவதெல்லாம் சுத்த புருடா. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அரசாங்க வேலையில் இருந்த 90 சதவீதம் பேர் பிராமணர்கள். ஏனென்றால் அவர்கள் தான் படித்திருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமே படிக்கிற வாய்ப்பை நமது சமூக கட்டமைப்பு வழங்கியிருந்தது. So, NEET Exam போல தகுதித்தேர்வுலாம் கூட தேவையில்லை. ஜஸ்ட் எவன்லாம் எழுத படிக்க கூட்டல் கழித்தல் கணக்கு போடத் தெரிஞ்சு வச்சிருந்தானோ அவனுக்கெல்லாம் கவர்ன்மென்ட் வேலை தேடி தேடி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மெக்காலே இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கான கல்வி முறையை கொண்டுவந்தார். வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் வராமல் இருந்திருந்தால் நாம் கல்வியில் குறைந்தது நூறாண்டுகள் பின்னோக்கி இருந்திருப்போம் .
நமது முன்னோர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் மட்டும் சொல்லி முடிக்கிறேன். 1925 ம் ஆண்டு வரை சென்னையின் புகழ்பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் பட்டியல் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க அனுமதியில்லை. இந்த லட்சணத்தில் தான் இங்கே இருந்தது. (இணைப்புத் தகவல் : 1927ம் ஆண்டு அதே பச்சையப்பன் கல்லூரியில் நடந்த முதல் ஆதிதிராவிடர்கள் நல மாநாட்டின் தலைவராக திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த மாநாட்டில் தான் முதன்முறையாக பட்டியல் வகுப்பினருக்கென தனித் தொகுதி பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற வரலாற்றுச்சிறப்புவாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது) .
எனவே இந்த மக்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட எவரும் மெக்காலே கல்வித்திட்டத்தை குறை சொல்ல முடியாது. எல்லா சாதிக்காரனும் படிச்சுட்டாங்களே என்ற பொச்சரிப்பு உள்ளவர்களால் தான் மெக்காலே வை குறைசொல்ல முடியும்..!

மெக்காலே கல்வித்திட்டம்

மெக்காலே கல்வித்திட்டம் ஒரு அடிமை கல்வித்திட்டம் என அந்த கல்வியை கற்றே முன்னேறிய ஒரு கூட்டம் ஒரு உள்நோக்கத்துடன் குறை கூறிக்கொண்டு திரிவது வேடிக்கையாக இருக்கிறது.
இங்கு பலபேர் தலையில் தூக்கி கொண்டாடும் அய்யா அப்துல் கலாமே அந்த அடிமைக்கல்வி ப்ராடக்ட் தான் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.ஒரு சமூகத்தை தவிர மற்றவர்கள் கல்வி கற்க இருந்த தடையை உடைத்த ஆங்கிலேயர்களின் வழியில் அதனை தொடர்ந்து தமிழகத்தில் கல்வி மலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட பேரியக்கத்தின் அரும் சாதனை.
கடும் வெய்யில், குளிர்,பனியில் உன்னை வெளியே நிறுத்தி வைத்த கூட்டத்திற்கு எதிராக உனக்கு வீட்டின் கதவை திறந்துவிட்டவன் ஆங்கிலேயன், நீங்கள் இப்போது இருக்கும் அவன் திறந்துவிட்டிருக்கும் கல்வி எனும் வீட்டை சீரமைத்து கொள்ளவேண்டியது நாம்தானே தவிர, ஆங்கிலேய ர்களோ,மறைந்த மெக்காலேவோ அல்ல.
அதிலும் குறிப்பாக இன்று தமிழகத்தில் நம் உயர் கல்வியை,மருத்துவ கல்வியை எனும் நம் வீட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியாக NEET என்ற நுழைவு தேர்வின் மூலம் அழிக்க நினைக்கும் மத்திய காவி அரசாங்கதை பார்த்து மக்களாகிய நாம் சுரணையற்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
மாநிலத்தை ஆளும் அடிமை அதிமுக எடுபுடிகளின் அரசு தமிழக சட்டமன்றத்தில் NEET தேர்வுகெதிராக சட்டமியற்றிவிட்டு,அதனை பற்றி சிறிதும் கவலைபடாமல்,அதனை சிறிதும் மதிக்காத மத்திய அரசை நோக்கி,தன் எஜமானர்களை நோக்கி எந்த கேள்வியும் வைக்காமல்,மாநில சுயாட்சியை பறிக்கொடுத்துவிட்டு,மத்திய அரசின் 400-க்கும் மேற்பட்ட NEET பயிற்சி மையங்களை தமிழகத்தில் திறக்க பரபரப்பாக அலைகிறது என்பதை புரிந்தாலே தமிழகத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்ற தெளிவு தமிழக மக்களுக்கு கிடைக்கும் .

நாடார்களுக்கு திராவிடம் என்ன செய்தது

நாடார்களுக்கு திராவிடம் என்ன செய்து என்போரே.. காமராஜரை ஏன் புகழ்கிறோம் என்போரே.. குடியாத்தம் அரசியல் தெரியுமா ..??

தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை தந்தது குடியாத்தம் இடைத்தேர்தல் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த பார்ப்பன நரி ராஜாஜியை அரசியலில் ஒன்றுமில்லாதாக்க பெரியார் நினைத்தார்..அதற்கு சரியான போட்டியாளராக காமராஜரை தேர்வு செய்தார்..
..
1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்..பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்..

அப்போது காமராஜர் சொன்னார் நான் சாதாரண மிகவும் பிற்படுத்த பிரிவை சார்ந்த நாடார் குலத்திலே பிறந்தவன் என்னை குடியாத்தத்தில் நிற்க சொல்கிறீர்களே அங்கே முதலியார்களும் முஸ்லீம்களும்தானே அதிகமிருக்கிறார்கள் என தயக்கம் காட்டுகிறார்..

உன்னை எப்படி ஜெயிக்க வைக்கவேண்டுமென்று எனக்கு தெரியும்..எனச்சொல்லி #தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார்.. இதிலிருந்தே தமிழர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்பதை மிகதெளிவாக சொல்லியிருக்கிறார்..
..
அறிஞர் அண்ணாவும் பெருந்தலைவரை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் #குணாளா_மணாளா_குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு .. திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்..

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் பெரியார் நிற்கவைத்திருக்கிறார் அண்ணா சொல்லிவிட்டார் பிறகு கேள்வியே எழவில்லையென காமராஜரை ஆதரித்தார்..

காமராஜர் வெற்றிப்பெறுகிறார்..

உடனே காமராஜர் பெரியாரை சந்தித்து எதில் முதல் கையெழுத்து போடவேண்டுமென கேட்கிறார்..
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர்
யூ.என். தேவரைபார்த்து கேட்கவில்லை.. பெரியாரைதான் கேட்டார் பெரியாரும் ஒரு தாழ்த்தப்பட்டவனை இந்து அறநிலையதுறை அமைச்சராக்கு என்றார்.. அப்போதுதான் #பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர் அறநிலைய துறை அமைச்சரானார்..

அப்போது பேரறிஞர் அண்ணா
#பரமேஸ்வரன் வருகை கண்டு #தில்லைநடராசரும்_ஸ்ரீரங்கம்_ரங்கநாதரும் பதறும் காட்சிக்கண்டேன் அந்த மாட்சி கண்டேன் ..என்றார்..
..
அப்போது டாக்டர் அம்பேத்கர் சொன்னார் என் இனத்திலே பிறந்தவனை குளத்தில் குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குனிந்து அள்ளி தண்ணி அள்ளி குடிக்கவும் விட மாட்டேன் என்கிறான்.. பெரியார் பிறந்த மண்ணில் தான் என் இனத்தவன் கடவுளின் மூலவிக்ரகத்துக்குள்ளே போகும் அதிகாரத்தை பெற்றான் என்றார்..
..
பெரியாரை இன்றைக்கும் சிலர் வெறுக்கிறார்கள் என்றால் காரணம் புரியுமே ஆனால் அந்த பெருங்கிழவன் பெற்று தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டே பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் முன்னேறி இருக்கவே முடியாதா என்கிறார்கள்....உ.பி.யிலும் குஜராத்திலும் பீகாரிலும் இருப்பதை போல இருந்திருப்பான்..
..
பெருந்தலைவரை சரியான நேரத்தில் கொண்டுவந்து பார்பனர்களின் அதிகார மையத்தையே ஆட்டிவைத்தவர் பெரியார்..
ராஜாஜி அரசியல் வாழ்வின் வீழிச்சி இங்குதான் குறிக்கப்பட்டது..

1967 ல் திமுகவோடு கூட்டணி வைத்தார் திமுக வெற்றி பெறும் சேதி வந்துக்கொண்டிருக்கிறது.. ராஜாஜி மிஸ்டர் அண்ணாதுரை முதல்வர் யாரென்று தீர்மானித்து விடுவோமா என்ற போது அருகில் இருந்த கலைஞர் திமுக பெரும்பான்மை பெறும் அண்ணாதான் முதல்வர் என்றார்.. திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது அண்ணா நேராக பெரியாரைதான் போய் பார்த்தார்..

பெரியாரின் காலடியில் அமர்ந்து அண்ணா கண்ணீர் சிந்துகிறார்.. உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேட்டபோது பெரியார் புதுப்பெண்ணின் மனநிலையில் இருக்கிறேன் என்றார்.. பெரியாரை ராஜாஜி சந்தித்தது குறித்து அண்ணாவிடம் என்னை ஏமாற்றி விட்டீர்களே என்றபோது காலமெல்லாம் எங்கள் இனத்தை ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டுதினம் ஏமாற்றகூடாதா என்றார்..
..
அண்ணாவை, கலைஞரை ,மட்டுமல்ல
#பெருந்தலைவரை உருவாக்கியதில் பெரும்பங்கு எங்கள் பெருங்கிழவனுக்குண்டு..

என்ன கிழித்தது #திராவிடம்.. புரிகிறதா..??

நாடார்களும் திராவிட இயக்கமும்

நாடார்களும் திராவிட இயக்கமும்..
நாடார்களின் கோவில் நுழைவுக்கு அச்சாரமிட்ட தந்தை பெரியார்... -- "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை செய்தி..
கேரளா வைக்கத்தில் ஈழவர் சாதி (இங்கே நாடார் என்று அழைக்கப்படுகிறார்கள்) பொது தெருவில் நடக்க உரிமை பெற்று தந்தவர் தந்தை பெரியார்...
டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மிகமுகியமான நீதிக்கட்சி தலைவர்.. திராவிட இயக்க முன்னோடி.. இவரின் நினைவால்தான் தி.நகரின் "பாண்டி பஜார்" அழைக்கபடுகிறது..
முதன்முதலாக தமிழன் செய்தித்தாள் ஆரம்பிக்கிறான் என்று ஆதித்தானருக்கு வேப்பேரியில் உள்ள பெரியார்திடலின் ஒரு பகுதி நிலத்தை தந்து உதவியர் பெரியார்..
பெருந்தலைவர் காமராஜரை, ராஜாஜிக்கு போட்டியாக காங்கிரஸ்சில் வளர்த்தெடுத்து, குலகல்வி திட்டதுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி.. எதிர்ப்பின் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்தவுடன், குடியாத்தம் தொகுதியில் காமராஜரை நிற்கசொல்லி, அவரை வெற்றிபெற செய்து, முதல்வராக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் தந்தை பெரியார்... அவரின் பல சாதனைகளுக்கு "காரியம் நானென்றாலும், காரணம் பெரியார்" என காமராஜரே குறிப்பிட்டுள்ளார்...
நாடார் சமையல் :
நான் (பெரியார்) ஏன் நாடார் சமையலை விரும்புகிறேன் என்றால் வைக்கம் போராட்டம் நடத்தியதே அங்குள்ள ஈழவ சமுதாயத்துக்காகத்தானே. இங்கு நாடார்கள் அங்கு ஈழவர்கள். அன்றிலிருந்து அந்த இனமக்கள் மீது எனக்கொரு பற்று, அவர்கள் சமூகத்தில் அவர்ணஸ்தர்களாக கருதப்பட்டவர்கள்.
அவர்ணஸ்தவர்கள் என்பவர்கள் எந்த வர்ணத்திலும் ஜாதியிலும் சேராமல் ஒதுக்கப்பட்டவர்கள் என ஜாதி ஆணவம் அவர்களை கருதியது. அதை உடைப்பதற்காக அவர்களை கொண்டே சமைக்க வைத்து மற்ற அனைவரையும் சாப்பிட வைப்பதன் மூலம் ஜாதி உணர்வை ஒழிப்பதாகும் அல்லவா. எனவே தான் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டிலிருந்து இன்றுவரை நாடார்கள் சமையலையே எற்பாடு செய்கிறேன் என்றார், தந்தை பெரியார்.
-- முன்னாள் அமைச்சர் இராசாராம் அவர்களின் சுயசரிதை
நாடார் ஆலய பிரவேசம்..
1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர்.
"மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத்தியநாத அய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று. அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப்பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923 இல் தந்தை பெரியார் அவர்களுடைய உரையை வெளியிட்டிருந்தது.
"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ்வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள்.
நாடார் சகோதரர்களின் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும்.
எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயாராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றியிருந்தார்.
-- "நாடார்குல மித்திரன்" 11.8.1923 செய்தி