Monday, August 07, 2017

வெறும் எல்லைக்கருப்பன் இன்று ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார்

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேண்டுதலுக்காக வேலின் மீது சேவலைக் குத்திவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, எதிரிகளின் அக்கிரமங்களை பேப்பரில் எழுதி, சுருட்டிக் கட்டி வேலில் தொங்கவிட்டு வந்தபோது வெறும் எல்லைக்கருப்பன் என்றே அழைக்கப்பட்டது.

இன்று வாரிசுகள் ஐ.டி. வேலைக்கும், அயல்நாடுகளுக்கும், அரசு உத்தியோகத்திற்கும் சென்றபின் வருமானம் அதிகமாகிவிட்டதால் ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார். இன்னும் சில வருடங்களில் ஸ்ரீ எல்லைக்கருப்பணாரீஸ்வரன் என்றோ அல்லது ஸ்ரீ எல்லைக்கருப்பணார்பதி என்றோ உருமாற்றம் அடைந்து சமஸ்கிருத மந்திர உச்சாடனத்தில் ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




எங்க குலதெய்வங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாமற்போய் வெகுநாட்களாகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சம்ஸ்கிருதத்தில் சொன்னால்தான் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.. கருப்பராயன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி யாகி, அண்ணமார் அண்ணன்மார் சுவாமி நாமதேஸ்யங்களாகி , ஆயுர் ஆரோக்ய குலசம்பத்தானாம் என்றுதான் எங்கள் கோரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.

என் குலதெய்வக் கோயிலில் மல்லாந்து படுத்து தூங்க முடியும். நாளையே ஆகம விதிப்படி நீங்கள் அங்கே படுக்கக் கூடாது என்றால் எனக்கு நிச்சயமாக கோபம் வரும். கிடா வெட்டுவது என்பது அசைவ உணவு சாப்பிடவதற்காக அல்ல. அது ஒரு கொண்டாட்டம்.

நான் -வெஜ். நம்ம கிராமத்து கோயில் திருவிழாவில் நல்லா கறி சோறு தின்னுட்டு தெம்பா சாமி கும்பிடுவோம். இப்போ சாமியையும் சைவமாக்கிடுவாங்க போல. செவ்வாய், சனி, கிருத்திகை கவுச்சி கலக்க கூடாதுன்னு சொல்றாங்க. அந்த நாள் ல சாப்பிடுறது தப்புன்னா மற்ற நாள்ல பரவாயில்லையா?