Tuesday, August 31, 2021

வாழ்க்கையை wild-ஆ வாழணும்யா

 

நிறைய இளைஞர்கள், தனியார் நிறுவனங்களின் middle level managers, ஒரு சில அரசு ஊழியர்கள் வாழ்க்கையில் ஏதோ சலிப்பு தட்டிய மாதிரி "வாழ்க்கைய raw-வா வாழனும், நிறைய ட்ராவல் பண்ணனும், தேவைக்கு மட்டும் சம்பாரிக்கணும், நமக்கு புடிச்ச மாதிரி டீம் செட் பண்ணி புராஜக்ட் செய்யணும், வருசக்கணக்குல ஒரே எடத்துல ஒரே மாதிரி வேலையை செஞ்சுகிட்டே இருக்கக் கூடாது, ரிமோட் லொக்கேஷன்-ல சில நாள் தனியா வேலை பாக்கணும்'' என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.
Into the wild மாதிரி நிறைய படம் பார்த்து travel fetish வாழ்க்கையை கற்பனை செய்து ஏங்குகிறார்கள்.
அதிலும் மனைவி நல்ல சம்பளத்தில் வேலை செய்து சம்பாதிப்பவராக இருந்தால் 35 வயதிலேயே ஆண்களுக்கு ஏனோ ''வாழ்க்கையை wild-ஆ வாழணும்யா'' ஏக்கம் வந்து விடுகிறது.
இப்படிப் பேசுகிறவர்கள் கடைசியாக ஏதாவது farm stay resort, ஈஷா யோகா மையம், நம்மாழ்வார் ஐயாவின் வானகம் ரிசார்ட் மாதிரியான இடங்களுக்குச் சென்று சேர்கிறார்கள்.
அதுவும் ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விட்டால் மாநகர எல்லையில் இருந்து 30 கிலோமீட்டருக்குள் பூர்வீக சொத்து இருப்பவர்கள் ஆர்கானிக் ஃபார்மிங், பால் பண்ணை, பரண் மேல் ஆட்டுப்பண்ணை, ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழி வளர்ப்பு என்று புறப்பட்டு விடுகிறார்கள்.
இன்று கிணறு வெட்ட மூன்று கன அடிக்கு சுமார் 800 ரூபாய் வாங்குகிறார்கள். 60 அடிக்குக் கீழே என்றால் 1300 ரூபாய் வரை வாங்குகிறார்கள். இந்த தொழிலில் மட்டும் பெங்களூரூ ஐ-டி கம்பெனியில் மாதம் இரண்டு இலட்சம், அமெரிக்காவில் ஆறு இலட்சம் சம்பளம் வாங்கியதை விட்டு வேர்களைத் தேடி வருபவர்கள் ஒருவரும் வந்த்தாகக் காணோம்.
"வாழ்க்கைய raw-வா வாழனும், நிறைய ட்ராவல் பண்ணனும், தேவைக்கு மட்டும் சம்பாரிக்கணும், நமக்கு புடிச்ச மாதிரி டீம் செட் பண்ணி புராஜக்ட் செய்யணும், வருசக்கணக்குல ஒரே எடத்துல ஒரே மாதிரி வேலையை செஞ்சுகிட்டே இருக்கக் கூடாது, ரிமோட் லொக்கேஷன்-ல சில நாள் தனியா வேலை பாக்கணும்'' என்று சொல்லும் கனவான்களுக்குக் கிணறு வெட்டுவது மாதிரி ஒரு raw-வான, wild-ஆன, adventurous-ஆன வேலையைத் தவிர வேறு ஒன்று இருக்குமா என்று தெரியவில்லை.
வீகன், இயற்கை ஆர்வலர், வனவிலங்குப் பிரியர், வெவசாய விரும்பி என அத்தனை பேருக்கும் ஏற்ற தொழில்.
கிணறு வெட்டுவதற்கு என்று agri tech என்று startup-கள் வரவில்லை, ஆழத்தை அளப்பதற்கு ஆன்ட்ராய்டு ஆப்-கள் இல்லை, ஐஐடி-யில் படித்த யாருமே வரவில்லை, innovation வரவில்லை, out of box thinking வேணும் என்று சொல்லும் globe trotting மிடில் லெவல் மேனேஜர்களும் வரவில்லை.
வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை உறுதி, அதுவும் நான்கு மாதங்களுக்கு ஒரு கின்று என இரண்டு இடங்களில் வேலை செய்யலாம், டார்கெட் பிரஷர் கிடையாது, சாதாரண மனிதர்களால் இறங்கி வர முடியாத, செலபோன் தொந்தரவுகள் இல்லாத இடத்தில் workplace, free range வாழ்க்கை, fitness, peace of mind என கிணறு வெட்டுவதில் அத்தனை அற்புதமான, அழகான வாழ்வியல் இரகசியம் அடங்கி இருக்கிறது. ஆனால் ஒரு பயலும் இந்த மாதிரி வேலைக்கெல்லாம் வருவதில்லை.
கோயமுத்தூர் நகரில் மட்டும் வருடத்திற்கு பத்து நிறுவனங்களாவது பண்ணையில் இருந்து கறந்த, தூய பால் ஊற்றுகிறோம் என்று கிளம்பி வருகிறார்கள். அடுத்த வருடம் இருப்பதில்லை. அப்படி என்னதான் கால்நடைகள் மீது காதலோ?
போன வருடம் எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் பால் பண்ணை வைத்து கோயமுத்தூருக்கு டெலிவரி கொடுத்துப் பார்த்துவிட்டு கைவிட்டு விட்டனர். "இதுக்கு சாணி வார்றதவிட நாலு ஏக்கரா வெங்காயம், ரெண்டு ஏக்கர் இலை வாழை சேத்தி போட்டா பொழைக்கலாம்" என்று சொல்லிவிட்டனர்.
இன்று நாளேட்டுடன் ஒரு புதிய பால் விநியோக நிறுவனத்தின் விளம்பரத் தாள் வந்திருந்தது. IIM Graduates நடத்துகிறார்களாம். ஆரம்பிக்கும்போதே அபசகுனமாகப் பேசக்கூடாதுதான். அவர்களுக்கு வேறு ஏதாவது தொழில் இருக்கலாம். ஓய்வுநேரத்திற்காக அல்லது ஒரு மாறுதலுக்காக இதையும் நடத்தலாம். அதில் தவறில்லை. ஆனால் run by IIM graduates என்று USP போடுவதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
மேலை நாடுகளிலும், ஜப்பான் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஓய்வு நேர புராஜக்ட்கள், மனமகிழ்வுக்கான பகுதி நேர காரியங்களில் ஈடுபடுவதற்கும் நம் ஊரில் உள்ளவர்கள் செய்வதற்கும் உள்ள அடிப்படையான வித்தியாசமும், அதன் impact-உம் பூர்வீக சொத்தும்,பெற்றோர்களின் செல்வமும் வந்து சேர்வதைப் பொறுத்துதான் அமைகிறது.