Monday, September 13, 2021

ஜெயலலிதா பற்றி தலைவி என்ற பெயரில் ஒரு படம்

 ஜெயலலிதா பற்றி தலைவி என்ற பெயரில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்...... என்னதான் அப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமே என நினைத்து நேற்று வேலூர் திரையரங்கில் இப்படத்தை பார்த்தேன். 

             மிகவும் பிரயத்தனப்பட்டு....

 ஜெயலலிதாவை இந்த நாட்டை காக்க வந்த தலைவி போல சித்தரிக்க முயன்று தோற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் ஜெயலலிதா 1991 இல் ஆட்சிக்கு வந்த அந்த கட்டம வரை  நிறுத்திவிட்டு இதற்கு மேல் சென்றால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதால் அதோடு கதையை முடித்து இருக்கிறார்கள்.

               எடுத்த வரை அந்த பார்த்த திரைப்படத்தில் அப்பட்டமாக பல உண்மைகளை தலைகீழாக மாற்றி படமெடுத்து ஓட விட்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு செய்தியை சொல்கிறேன்.  தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியி 1989 ஆம் ஆண்டு மலர்கிறது. 

                சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதா தாக்கப்பட்டதை போல ஒரு உண்மைக்கு மாறான காட்சி அந்த திரைப்படத்தில் வருகிறது.

அன்றைய சட்டமன்றத்தில் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் அண்ணன் அன்பில் பொய்யாமொழி, பரிதி இளம்வழுதி,, நண்பர் பிச்சாண்டி, குன்னூர் முபாரக், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, அவர்களோடு நானும் சேர்ந்து இளைஞர் அணியைச் சேர்ந்த பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக முதன்முதலில் சட்டமன்றத்திலே அமர்ந்திருக்கிறோம்.

             அப்போது ஜெயலலிதாவும் சட்டமன்றத்திற்கு எங்களைப் போலவே புதிய சட்டமன்ற உறுப்பினர். ஆளும் கட்சியைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கா.மு. கதிரவன் அவர்கள் அரசு கொறடா.

             அந்த சட்டமன்றத்தில் அண்ணன் தளபதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைக்கு பக்கத்தில் நான் அமர்ந்திருந்த மிகப்பெரிய வாய்ப்பு.

             அன்று பட்ஜெட் கூட்டத்தொடர். கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே நான் தளபதி அவர்களின் பக்கத்தில் எனது இருக்கையில் வந்து அமர்ந்து விட்டேன். சக சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே அவரவர் இருக்கையில்  வந்து அமர்ந்து விட்டார்கள்.

            தளபதியும் நானும் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே அரசு கொரடா கதிரவன் அவர்கள் நெருங்கி வந்து  அண்ணன் தளபதி அவர்களிடம்.... இன்றைக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால்.... ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில்  கலவரம் பண்ண முடிவெடுத்த தனது போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசி அதற்கான திட்டத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

              அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் உங்கள் தலைமையில் சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய இளைஞரணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது இருக்கையை விட்டு எழுந்திருக்க கூடாது. கட்டுப்பாடு காக்க வேண்டும்.

நம்முடைய தலைவர் அவர்களுடைய உத்தரவு என்று சொல்லிவிட்டு சென்றார்..

             நாங்களும் ஒருவித அச்ச உணர்வோடு அவையிலே அமைதியோடு அமர்ந்திருந்தோம். ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் சகிதமாக சபையில் வந்து முன்னதாகவே அமர்ந்துவிட்டார் விட்டார்.

முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நுழைகிறார். நாங்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறோம்.

             அதன்பிறகு பேரவை தலைவர் முனைவர் மு. தமிழ்குடிமகன் அவர்கள் அவைக்கு வர அனைவரும் எழுந்து நிற்கிறோம். தொடக்கத்தில் ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்க உரையும் வாசித்து விட்டு.. மாண்புமிகு முதல்வர் அவர்கள் வரவு செலவுத் திட்டத்தை இந்த அவைக்கு சமர்ப்பிப்பார்கள் என்று அறிவிக்கிறார்.

             அன்றைக்கு இருந்த அவையிலே குளிர்சாதன வசதி கிடையாது. மன்றக் கூட்டத்தில் மேற்கூரையில் இருந்து தொங்குகின்ற மிகப்பெரிய மின்விசிறிகள் மட்டுமே.

            பட்ஜெட் என்பதால் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மேசையில் பாடப்புத்தகங்களை உள்ளடிக்கிய மிகப்பெரிய புத்தகக் கட்டு. தன்மானத் தலைவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட் புத்தகத்தோடு எழுந்து நின்று வாசிக்கத் தொடங்கினார்.

              ஜெயலலிதா தலைவர் பேச  பேசத் தொடங்கியதும் அவசரமாக எழுந்து நின்று அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை ஒலி பெருக்கி இல்லாமலே சபையில் கூறி தலைவரை இழிவு படுத்துகிறார். தலைவர் அவர்களும் உடனடியாக அதற்கு பதில் சொல்லிவிட்டு வாசிக்கத் தொடங்கு கிறார்.

             கண் இமைக்கும் நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கரத்திலிருந்த வரவு செலவுத்திட்ட அறிவியல் புத்தகம் பிடுங்கப்பட்டு அதேவேகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் முகம் தாக்கப்பட்டு அவரது கண்ணாடி உடைந்து என்ன நடந்தது என்று நாங்கள் சுதாரிக்கும் முன்பே.. சபையிலிருந்த முன்னோடிகள் தலைவர் கலைஞர் அவர்களை பாதுகாப்பாக தளபதி அவர்களும் நானும் இருந்த இருக்கைக்கு  பாதுகாப்பாக அழைத்து வந்து அந்த இருக்கையில் அமர வைக்கிறார்கள்.

               கம்பீரமான அந்த தலைவர் தனது கேசம் கலைந்து கண்ணாடி உடைந்து இந்த அநாகரிக செயல் சகித்துக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். எங்களுக்கு அப்போதிருந்த மெஜாரிட்டியில் நாங்கள் நினைத்திருந்தால் அவர்களிடம் இருந்த சொற்ப சட்டமன்ற உறுப்பினர்களை அப்பளம் போல நொறுக்கி இருக்க முடியும்.

           ஆனால் தலைவர் கலைஞர் அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு அனைவரும் செய்வது அறியாமல் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தோம். எனக்கு அப்போது சரியாக வயது இருபத்தி ஒன்பது. தலைவர் முகத்தைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

                கோபத்திலும் ஆவேசத்திலும் முன் வரிசையில் இருந்த பெஞ்ச் மீது ஏறிவிட்டேன். என் அருகில் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் வீராங்கனை சகோதரி சற்குண பாண்டியன்.. அந்த பெஞ்ச் மீது ஏறி நின்ற போதுதான் ஜெயலலிதா அவர்கள் உண்மையான நடிகை என்பதை நான் கண்கூடாக அறிந்தேன்.

             ஜெயலலிதா அவர்களின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தகக் கட்டுக்களை தூக்கி வீசிக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர்களும் அதேபோல் புத்தக கட்டுகளை பயன்படுத்திக் கொண்டார்கள்.

              ஆனால் ஜெயலலிதா அவர்களும் அந்த அவையில் இருந்த சோபாவில் வசதியாக சாய்ந்துகொண்டு ஓவென்று குரலெடுத்து கத்தி கொண்டு இருந்தார். பக்கத்திலே அண்ணன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மற்றும் இன்னொரு முக்கியமான சட்டமன்ற உறுப்பினர் ( மன்னிக்கவும் பெயர் சொல்ல இயலாது). இருவரும் ஆளுக்கு ஒருபுறமாக அணைத்துக் கொண்டார்கள்.

            நான் சிறியவன். அப்போது யோசித்தேன் இந்த அம்மா எதற்கு அவர்களுக்கு எந்த பாதகமும் நடக்காமல் தானாகவே கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று. சிறிது நேரத்தில் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்கள். 

            இது தான் அன்று நடந்தது. அன்று மாலையில் அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். தலைவர் அவர்கள் அந்தக் கூட்டத்தில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனது வேண்டுகோளை ஏற்று அமைதி காப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார் கள். 

           கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மாலைப் பத்திரிகைகள் அந்த அரங்கத்திற்கு வந்து சேர்ந்தன. பத்திரிகை படித்தவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. கழகத்தின் மூத்த முன்னோடி அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜெயலலிதா அவருடைய சேலையை பிடித்து இழுத்தாக செய்தி.

           தலைவர் கலைஞர் அண்ணன் தளபதி மற்றும் அண்ணன் துரைமுருகன் உட்பட அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி. நடக்காத ஒன்றை இப்படி திட்டம் போட்டு தான் ஒரு நடிகை என்பதை அன்றைக்கு நிரூபித்தார் ஜெயலலிதா. தலைவர் கலைஞர் அவர்களுக்கு மனசு ஆறவில்லை. தம்பி துரைமுருகன் மீது இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி விட்டார்களே என்று அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

           தமிழ்நாடு முழுவதும் அண்ணன் துரைமுருகன் அவர்களை பல ஊர்களுக்கு அனுப்பி நடந்த சம்பவத்தை பொதுக்கூட்ட மயிலாக பேச வைத்தார். 

          அப்போது செய்யாறு சந்தைமேடு திடலில் கழக பெரியவர் ஐயா புலவர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் முன்னாள் ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்ட செயலாளர் பாபு  ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

            அண்ணன் துரைமுருகன் அவர்களை நான் அந்த பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். மிகவும் மனம் வேதனைப்பட்டு அந்த கூட்டத்தில் பேசி அழுதார்.

இது தான் திமுகவின் மனசாட்சி.

இதை ஒரு வரலாற்று பிசகான காட்சியாக தலைவி படத்தில் எடுத்திருக்கிறார்கள்.

             எம்ஜிஆர் அவர்கள் 1984 அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த பிறகு 1985 ல் செய்யாறில் சட்டமன்ற இடைத்தேர்தல். அதில் கழகத்தின் சார்பாக நான் வேட்பாளர். எனது வெற்றி பிரகாசமாக இருந்த காரணத்தால் எம்ஜிஆர் அவர்கள் உடல் நலிவுற்று இருந்த போதும் தேர்தல் பொறுப்பாளர்கள் அவரை வற்புறுத்தி அழைத்து வந்து ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்து அந்த மேடையிலே அவரை வரலை காட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும் கள்ள ஓட்டு காரணமாக நான் தோல்வி அடைந்தேன் அது வேறு செய்தி.

               அப்போது ஜெயலலிதா அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர். எம்ஜிஆர் அவர்கள் ஜெயலலிதாவை அந்த தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒருநாள் கூட அந்த தொகுதியில் அவர் ஓட்டு கேட்க வரவில்லை.

           அதையெல்லாம் திரைப்படத்தில் காட்டாமல் நேரடியாக 1991 தேர்தல் காட்சியை காட்டியிருக்கிறார்கள். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்து கொன்றார் என்று ஜெயலலிதா சொன்னதைச சொல்ல முடிந்ததா அந்தத் திரைப்படத்தில்..

முடியாது. அவர்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளப்பட்ட வரலாறு இல்லாத ஒரு  வெற்று படம். வரலாறு  அறிந்தவன்... தொடர்புடையவன் நான் என்பதால் முடிந்தவரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். 

                  செய்யார் வ . அன்பழகன்

   சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்

                  துணைச் செயலாளர்

திமுக விவசாய தொழிலாளர் அணி