Sunday, July 05, 2020

கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் செய்யட்டுமே

IT வேலையில் சலித்துக்கொள்பவர், நகரத்தை நரகம் என்று சபித்துக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓட போவதாக சொல்பவர்கள்,
நகரத்து குழந்தைகள் பெற்றோரிடம் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பதாகவும், கிராமங்களில் பெற்றோரின் அரவணைப்பில் குழந்தைகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்றும் கதைப்பவர்கள் என சிலருக்கு கிராமத்தில் வாழ்க்கை, விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ?,
வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையே கொண்ட கிராமங்களில், எல்லா பெற்றோர்களின் பகலும் ,இரவும் வயலில்தான் கழியும்,
விவசாயம் என்பதை புனித தொழிலாக பரப்புரை செய்யும் அனேகர், அந்த தொழில் IT மற்றும் இன்ன பிற தொழிற்சாலை வேலைகளை விடவும் கொடூரமாக விவசாயிகளின் உழைப்பை சுரண்டி கொண்டு இருக்கிறது என்பதை அறிவார்களா?
பூர்விக சொத்து என்று பெரிதாக பெரும்பாலானவர்களிடம் இருக்காத விவசாய கூலிகள், தங்கள் உழைப்பில் வாங்கிய வயலில், வேலை பார்க்க வருபவர்களோடு, தன்னையும் ஒரு கூலி ஆளாக “பாத்தி-பாசன” கணக்கு போட்டு வேலை செய்பவர்களாகதான் இருக்கின்றனர்.
குழந்தைகளை முந்தானையில் முடிந்து தோளில் போட்டுக்கொண்டு வயல் வேலை பார்க்கும் அம்மாக்கள் உண்டு, ஆண்களுக்கு சளைக்காத கடின உழைப்பாளிகள்.
காலை 5 மணியில் தொடங்கி, இரவு 7 மணி வரை வயலில் ஓயாத உழைப்பு பின் வீட்டில் அடுத்தநாளைய வேலைக்கு செய்ய வேண்டிய தயாரிப்புகள், பிள்ளைகளுக்கு தேவையான உணவிற்க்கு சமையல் பின் சிறிது ஓய்வு, இதுதான் அவர்களின் routine…
பிள்ளைகள் தூங்கி எழும் முன்னே வயலுக்கு செல்லும் அவர்கள், தூங்கும் நேரத்திற்க்குதான் வீடு திரும்புவார்கள், வீட்டிற்க்கு வந்து சாப்பாடு செய்ய ஆரம்பிக்கும் போதே குழந்தைகள் தூங்க ஆயத்தமாகிவிடுவர். பெற்றோரிடம் ஆற அமர பேசிய interactions எல்லாமே பிள்ளைகளின் பள்ளி ஓய்வு நாட்களில், அவர்களின் பெற்றோர்களோடு ஓயாயமல் வயல்காட்டில் சிறு வேலைகளை செய்துகொண்டிருந்த நேரங்களில்தான்.
இப்படிப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலும் அவர்களின் மூத்த சகோதரிகள்தான் பெற்றோர் இல்லாத குறையை சிறிது தீர்த்து வைக்கிறார்கள்,
கிராமங்களில் 1980 மற்றும் 90களின் தொடக்கத்தில்
காலை மற்றும் இரவு வேளைகளில் இட்லி, மதியம் சூடான சோறு என்பதே பல வீடுகளில் மிகவும் அரிதான உணவு.
அப்படி சாப்பிடும் ஆட்களே பெரிய பணக்காரங்க என்று எண்ணும் குழந்தைகள் உண்டு (அது சிறிதளவு உண்மையும் கூட)
சொல்லப்போனால் இட்லி, தோசை என்பது கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே பெரும்பாலான விவசாய குடும்பங்களில் கிடைத்திருக்கிறது.
அதே போல, விவசாய குடும்பங்களில் தீபாவளி பண்டிகையை பெரிய அளவில் அதாவது நகரங்களில் கொண்டாடுவது போல் கொண்டாடி பார்த்ததே இல்லை, இன்றும் சிலருக்கு தீபாவளி எப்படி கொண்டாடுவது என்று தெரியாது, காரணம் பெரிய அளவில் அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் அந்த பண்டிகையை கொண்டாடியதே கிடையாது
(ஆனால் இன்று வீட்டில் விடுமுறை தினமாக கொண்டாடி கொள்கின்றனர் )
சரியாக பண்டிகை நாளில்தான் அந்த வீட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கப்படும், பெரிசா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு டிசைன்கள் என்பதே அன்றை பொழுதில் இருக்காது, எல்லாரும் பார்த்து கழித்து போட்ட துணிதான் கிடைக்கும்,
இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களின் விவசாய வேலை, கிராமத்து வாழ்க்கைமுறை.
அந்த கடின உழைப்புக்கு பலனாக அவர்கள் சம்பாதித்தது, சேமித்தது என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை..
தன்னை கழித்தது என்று கிராமத்தில் சொல்வார்களே, அது போல வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருந்து இருக்கிறது. பெண்களுக்கு நகை செய்து திருமணம் செய்தது, ஆண் பிள்ளைகளை படிக்க வைத்தது என்பதை தவிர அவர்களின் சேமிப்பு என்று சொல்லிக்கொள்ளபடி எதுவுமே இருப்பதில்லை.
நான் கண்டும் கேட்டும் அனுபவித்த கிராமத்து விவசாய வாழ்க்கையில்,
நல்லதோ கெட்டதோ IT வேலை பார்க்கும் அல்லது பிஸியானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நகரத்து ஆட்களை போலவேதான் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள்
ஆனால் நகரத்து குழந்தைகளுக்கு கிடைக்கும் வெளி உலக தொடர்போ, exposureயோ அந்தந்த வயதில் சரியாக கிராமத்தில் கிடைப்பதில்லை என்பதுதானே உண்மை. ஆனால் அதற்க்கு பதிலாக சாதிய இறுக்கங்களை புற்றுநோய் போல திணித்துவிடுவதும் கிராமங்கள்தானே?
நான் கணினியை தொட்டது என்னுடை கல்லூரியில்தான் ஆனால் என் மகன் ஒன்றரை வயதில் மடிக்கணியை ஆன் ஆஃப் செய்ய கற்றுக்கொண்டான்..
என் பிள்ளைகள் இட்லியும் தோசையும் சாப்பிட்டுக்கொண்டு பீஸாவுக்கு கனவு காண்பவர்களாக நகரத்தில் வளர்ந்து இருக்கிறார்கள் இந்த வளர்ச்சியில் எனக்கு மகிழ்ச்சியே..
யாரோ எவனோ எங்கோ உட்கார்ந்து கொண்டு மைக்ரோ பாலிடிக்ஸ் செய்ய விவசாய/கிராமத்து வாழ்க்கை மட்டுமே சொர்க்கம் என்று கற்பனையில் எழுதுவதை படித்தும் பார்த்தும் இந்த தொழிலுக்கு அந்த தொழில் மேல், இந்த ஊருக்கு அந்த ஊர் மேல் என்பதல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை போல்தானே தவிர வேறோன்றும் இல்லை.
சிறு குறு விவசாயிகளின் / விவசாய கூலிகளின் வாரிசுகளே உங்கள் தலைமுறையை உயர் கல்வி கற்க செய்யுங்கள், இதுவரையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பிறர் கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் படிக்கட்டும்,பின் செய்யட்டுமே....