From Land of the Pallavas

யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம். - மகாக்கவி பாரதியார்.

Monday, September 04, 2017

அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க

உன்னோட பிளஸ் டூ கட் ஆஃப் என்ன”
”278”
”எந்த காலேஜ்ல படிச்ச”
“ஆர்.ஈ.சி திருச்சில”
“278 க்கு எப்படி ஆர்.ஈ.சி திருச்சி கிடைச்சது”
“எனக்கு பிசி கோட்டா உண்டு அதுல கிடைச்சது”
“சூப்பர். பிசி கோட்டான்னா என்ன அது ஏன் வந்துச்சுன்னு தெரியுமா?”
“தெரியாது”
“அந்த வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு பின்னாடி அம்பேத்கர் மாதிரி ஆட்களோட உழைப்பும் தியாகமும் இருக்கு தெரியுமா”
“யாரு அம்பேத்கர்?”
”அம்பேத்கர் தெரியாதா உனக்கு”
“தெரியாது. நான் படிச்சேன். நான் ஆர்.ஈ.சி போனேன். நா நல்லா சம்பாதிக்கிறேன். இதுல ஏன் அம்பேத்கர் பத்தி தெரிஞ்சிக்கனும் சொல்லு. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. நான் பூஜைக்கு சாமான் செட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போகனும்”
“சரஸ்வதி பூஜை எதுக்கு கொண்டாடுற?”
“என்ன நீ.. அம்பேத்கர் அது இதுன்னுட்டு தேவையில்லாத எல்லாம் பேசுற. ஆனா சரஸ்வதின்னா யாருன்னு தெரியாதுங்கற. சரஸ்வதிதான் நம்ம கல்விக்கு கடவுள். அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க”
“இப்பதான் நீ படிச்சே நீ அர்.ஈ.சி போனேன்னு சொன்ன”
“அது நான் படிச்சாலும் சரஸ்வதி கடாட்சம் இல்லாம ஆர்.ஈ.சிக்குள்ள போயிருக்க முடியுமா”
“ஸோ நீ ஆர்.ஈ.சிக்குள்ள போனதுக்கு காரணம், அம்பேத்கர் இல்ல சரஸ்வதின்னு முழுமையா நம்புற”
“ஆமா சரஸ்வதி தேவிதான் கல்விக்கு அதிபதி”
“அப்ப அந்த சரஸ்வதி தேவி ஏன் உன் தாத்தாவுக்கு கல்வி கொடுக்கல, பத்மநாபன், பார்த்தசாரதி தாத்தாவுக்கு மட்டும் கல்வி கொடுத்தாங்க. அப்படி நினைச்சிப் பாத்தியா. அப்ப எப்பத்துல இருந்து உனக்கு கல்வி கிடைக்க ஆரம்பிச்சது, அதுக்கான வாய்ப்ப யாரெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தா யோசிச்சியா”
“இதப்பாரு எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சரஸ்வதி பூஜைக்கு சாமான் வாங்கனும். போய் புத்தகங்களுக்கெல்லாம் மஞ்சள் கரைச்சி பிள்ளையார் சுழி போடனும். நிறைய வேலை இருக்கு. நா போறேன்”
“சரி போடா இந்திய குடிமகனே போ. ’கலைவாணி நின்கருணை தேன்மழையே பாடிகிட்டே போ’” நல்லா இரு...சமூக அறிவு உனக்கு நிறைய இருக்கு... நீ கலக்கு..

Friday, September 01, 2017

மெண்டல்கள் பலவிதம்

இன்றைக்கு OMR வழியாக வருகிற போது "SAVE RIVER" ன்னு ஒரு கும்பல் கொட்டுகிற மழையில் பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றது.
நான் அருகில் போய் BROTHER , இந்த BLUE WHALE விளையாட்டென்று பயமுறுத்திக் கொண்டிருக்காங்களே அது மாதிரியானதா இப்ப நீங்க பதாகை பிடித் து நிற்பது என்று நான் கேட்க, அவரு கொஞ்சம் குழம்பி பின்பு சுதாரித்து கொண்டவராக, BROTHER கிண்டலடிக்க வேண்டாம். நாங்க நநதியை காப்பற்றுவதற்காக மழையில் நிற்கிறோம் என்றார். நான் அவரிடம் நானும் அதைத் தான் சொல்கிறேன் . நதியை காப்பாற்றனும் என்றால் வெயில் காலத்தில் மக்களிடம் போய் எடுத்துச் சொல்லலாமே. நதிகளில் தண்ணீர் கரை புரண்டோடுகிற மழைக்காலத்தில் நனைந்து கொண்டே சொன்னால் எப்படி brother என்றேன். அப்படியே "கோவையில் காட்டை அழித்து ஆசிரமம் அமைத்திருக்கிற சக்கி வாசுதேவின் செயலை பற்றி என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டவுடன், Brother உங்களது ஆதரவை கொடுக்க முடித்தால் கொடுங்க விதண்டாவாதம் பண்ணாதீங்க என்றார். நான் அவரிடம் Brother காடுகளிலிருந்து தானே ஆறுகள் பிறக்கிறது நீங்கள் காட்டை அழித்து ஆசிரமங்கள் அமைப்பவர்களை பற்றி பேசாமல் விட்டு விட்டு ஆறுகளை காப்பற்றப் போகிறோம் என்பது எப்படி சரியாகும் என்றதும் அமைதியாகி விட்டார்.
நானும் இந்த மெண்டல்களோடு சேர்ந்து நாமும் ஏன் மழையில் நனையனும் என்றெண்ணி நகர்ந்து வந்து விட்டேன் .

 இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

சென்னை ஆக்கிரமிப்பு செய்திருப்பது இப்பொழுது கோவை - திருப்பூர் - ஈரோடு மற்றும் மதுரை - திருநெல்வேலி - தூத்துக்குடி பகுதி சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒற்றுமை ஜாதி, மதம், முதலாளித்துவ வெறியர்கள்

இது பாஜகவின் பிராக்சிகள் அதாவது நவீன பெயரில் சுற்றுச்சூழல் ஆா்வலா் என்ற பெயரில்லிருப்பவா்கள் ஆனால் இவா்களுக்கும் இயற்கைக்கும் எந்தச்சம்பந்தமமுமில்லை

Thursday, August 24, 2017

சமூத்ரகனியிசம்

ஒரு விஷயத்தை
”மேலோட்டமான உணர்ச்சிவசப்படலால் கொண்டாடுவது” என்பதற்கு
”சமுத்ரகனியிசம்” என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
சமுத்ரகனியிசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி இருப்பார்கள்
- தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி உடல்நலத்துக்கு கேடு.. தடுப்பூசியே மருந்து கம்பெனிகளின் சதி என்று நினைப்பது.
- பசுமாட்டில் இருந்து கறந்து அந்தவிநாடியே குடிக்கும் பால் மட்டுமே சத்துள்ளது என்று நம்புவது.
-400 சுகர் இருக்கும் போது அலோபதி மாத்திரைகள் இல்லாமல் ”பித்தாவில்” லேகியம் வாங்கி உண்டு சரிசெய்யலாம் என்று நம்புவது.
-மெட்டி போடுவது, தாலி போடுவது, உடன்கட்டை ஏறுவதில் எல்லாம் அறிவியலை தேடி தேடி கண்டுபிடிப்பது மாதிரி காட்டி அதை நிருபிப்பது.
- மிக்சியில் சட்னி அரைத்தால் சுவையிருக்காது. அம்மாவோ அத்தையோ பாட்டியோ நெஞ்சுவலிக்க வலிக்க அம்மியில் அரைத்த சட்னிதான் சுவை என்று நினைப்பது.
- நேச்சுரோபதி, அக்குபஞ்சர் போன்றவற்றைப் புகழ்ந்து, அங்கப் போங்க எல்லாம் சரியாகும் என்று சொல்வது.
- நாட்டுக்கத்திரிக்காய், நாட்டுக்கோழி, நாட்டு நாட்டு என்று தொடங்கும் எதுவும்தான் உடலுக்கு நல்லது, மீதம் அனைத்தும் விஷம் விஷம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வது.
- டூமச்சாக பிளாஸ்டிக் பொருட்களை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
- ஜாதிப் பிரச்சனை பற்றி, அடக்கப்பட்டோர் நிலை பற்றி சமுத்தரகனிசம் எப்போதும் பேசாது. அது மரம் நடுவது, பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் கொடுப்பது, எங்கோ ஒரு பாட்டி பட்டாணி விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவதை சிலிர்ப்பது இப்படியாக சமூகத்தைப் பார்க்கும்.

Monday, August 07, 2017

வெறும் எல்லைக்கருப்பன் இன்று ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார்

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேண்டுதலுக்காக வேலின் மீது சேவலைக் குத்திவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, எதிரிகளின் அக்கிரமங்களை பேப்பரில் எழுதி, சுருட்டிக் கட்டி வேலில் தொங்கவிட்டு வந்தபோது வெறும் எல்லைக்கருப்பன் என்றே அழைக்கப்பட்டது.

இன்று வாரிசுகள் ஐ.டி. வேலைக்கும், அயல்நாடுகளுக்கும், அரசு உத்தியோகத்திற்கும் சென்றபின் வருமானம் அதிகமாகிவிட்டதால் ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார். இன்னும் சில வருடங்களில் ஸ்ரீ எல்லைக்கருப்பணாரீஸ்வரன் என்றோ அல்லது ஸ்ரீ எல்லைக்கருப்பணார்பதி என்றோ உருமாற்றம் அடைந்து சமஸ்கிருத மந்திர உச்சாடனத்தில் ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எங்க குலதெய்வங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாமற்போய் வெகுநாட்களாகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சம்ஸ்கிருதத்தில் சொன்னால்தான் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.. கருப்பராயன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி யாகி, அண்ணமார் அண்ணன்மார் சுவாமி நாமதேஸ்யங்களாகி , ஆயுர் ஆரோக்ய குலசம்பத்தானாம் என்றுதான் எங்கள் கோரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.

என் குலதெய்வக் கோயிலில் மல்லாந்து படுத்து தூங்க முடியும். நாளையே ஆகம விதிப்படி நீங்கள் அங்கே படுக்கக் கூடாது என்றால் எனக்கு நிச்சயமாக கோபம் வரும். கிடா வெட்டுவது என்பது அசைவ உணவு சாப்பிடவதற்காக அல்ல. அது ஒரு கொண்டாட்டம்.

நான் -வெஜ். நம்ம கிராமத்து கோயில் திருவிழாவில் நல்லா கறி சோறு தின்னுட்டு தெம்பா சாமி கும்பிடுவோம். இப்போ சாமியையும் சைவமாக்கிடுவாங்க போல. செவ்வாய், சனி, கிருத்திகை கவுச்சி கலக்க கூடாதுன்னு சொல்றாங்க. அந்த நாள் ல சாப்பிடுறது தப்புன்னா மற்ற நாள்ல பரவாயில்லையா?

Friday, August 04, 2017

நல்லூர் முருகன் சக்தி

நல்லூர் முருகன் உண்மையில் சக்தி உள்ள கடவுள்தான் போலத்தான் கிடக்கு!

தனக்கு மேலே குண்டு போட்ட கோத்தபாயாவைக்கூட கெலிகொப்டரில் தனக்கு பூ தூவ வைத்தவர்

எங்கோ பிறந்த வெள்ளைக்காரியைக்கூட  தனக்கு காவடி தூக்க வைத்திருக்கிறார்.

ஆனால் ஏனோ தன்னை நம்பிய மக்களை  முள்ளிவாய்க்காலில் காப்பாற்ற தவறிவிட்டார்!

புத்தருக்கு எதிரான போராட்டத்தில் அவர் வேலாயுதம் வெற்றி பெற முடியவில்லையே?

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்ல தான் நான் ரம்யாவ பார்த்தேன்"னு வீட்டுலயே தக்காளி செடி வளர்த்திட்டு இருக்கப் பொண்ணு ஒன்னக் காட்டுறாங்க. நீங்க இந்தக் கம்யூனிட்டி மேட்ரிமோனி விளம்பரங்கள உத்து கவனிச்சாவே அதுல இருக்க வித்தியாசங்கள சீக்கிரம் புரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு சாதிக்கும் மதத்திற்கும் உரிய குணங்களைத் தான் பொண்ணு மாப்பிள்ளையோட குணங்களா சித்தரிச்சிருப்பாங்க. ஆன்சைட் போற பிராமின் பொண்ணு, பெரிய பதவில இருக்க நாடார் பொண்ணு, அடக்க ஒடுக்கமான முஸ்லீம் பொண்ணுனு காட்டிட்டு கொங்கு வேளாளர் பொண்ணுங்க தக்காளி வளர்க்குதாம். என்னடா சாதி பெயரால பொண்ணுங்களுக்கு வக்காலத்து வாங்குறாளேனு நினைக்க வேண்டாம். கொங்கு வேளாளர்னு இல்ல,கொங்கு மண்டலத்துப் பெண்களுக்கே இதே நிலைமைதான்.
"பொம்பளைங்கன்னா அடக்கமா புருஷனுக்குப் புடிச்ச மாதிரி இருக்கோணும்டீ"னு அன்னைக்குக் குஷ்பு அக்கா மீனாவைப் பார்த்து சொல்லுமே. இன்னைக்கும் அதே மீனா நிலைமை தான் இந்த மண்டலத்துப் பெண்களுக்கும். அந்த விளம்பரத்தில் எல்லாம் எந்தத் தப்பும் இல்லீங்க. இங்க இருக்கப் பெண்களில் குறைஞ்சது அறுபது சதவீதம் பெண்கள் அப்படித் தான் இருக்காங்க.கல்யாணப் பத்திரிகையில போட்டுக்க ஒரு டிகிரி, அதையும் மீறி ஜாதகம் சொல்லுச்சுனா இன்னொரு டிகிரி(அதிலும் ஆர்ட்ஸ் மட்டுமே). படிக்கறப்பவே மாப்பிள்ளை தேடி, பரீட்சை முடியுற அடுத்த வாரமே ஊரே பேசுற மாதிரி ஆடம்பரமா கல்யாணம். இல்லனா பேருக்கு ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ வேலை (இதெல்லாம் எஃசப்ஷனல்).
படிக்கும் போது கஷ்டமா இருந்தாவே பேசாம கல்யாணம் பண்ணிட்டு போய்டலாமானு பேச ஆரம்பிச்சுடுவோம். நடுவுல கடலூர் காரி வந்து 'அடிப்பாவிகளா நான்லாம் வேலைக்குப் போனா தான்டி கல்யாண பேச்சே எங்க வீட்டுல எடுப்பாங்கனு' எங்கள விசித்திரமா பாப்பா.
வேலைக்குப் போகனும்,சொந்தமா சம்பாதிக்கணும்கிற எண்ணத்தை எங்க ஜீன்லயே யாரோ மியூடேட் பண்ணிட்டாங்க போல. அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்கு அப்புறம் குழந்தை குடும்பம்னு ஒதுங்கிடணும்.பொருளாதார ரீதியிலும் நாங்க தேவைப்படாததால வேலைக்குப் போகணும் சாதிக்கணும்கிற உணர்வு வரதேயில்லை. (அடுத்த வருஷம் நானே got engaged னு ஸ்டேடஸ் போட்டா யாரும் பதட்ட பட வேண்டாம்)
'எந்தக் காலத்துலமா இருக்க நீ. இன்னைக்கு எத்தன பெண்கள் எத்தன பண்றாங்க தெரியுமா'னு எல்லாம் சொல்லிடாதீங்க.கொஞ்சம் அப்படியே திருப்பூர்,ஈரோடு,கோவை,நாமக்கல் னு ஒரு வலம் வந்தா தெரியும் எத்தன சாதனையாளர்களும் திறமைசாலிகளும் பாத்திரமும் பால் டப்பாவுமா இருக்காங்கன்னு.மிஞ்சி மிஞ்சி போனா நூத்துல நாலு பேர் தனியா மேல வந்துட்டு இருக்காங்க.மத்தவங்க எல்லோரும் daddy's little princess இல் இருந்து king's beauty queen ப்ரோமோஷன்லயே தன்னிறைவடைஞ்சறாங்க.
வேலைக்குப் போறதும் தனக்குன்னு ஏதாவது செஞ்சிக்குறதும் பெண்களோட தனியான விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே தான் இருக்கு. ஆனா அந்த விருப்பங்களைப் பிரித்துப் பார்க்குறதுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றளவும் கிடைக்கற மாதிரித் தெரியலை. தனக்கு எது வேணும, வேண்டாம்னு யோசிக்க வேண்டிய தேவையே இங்க உருவாகுற மாதிரி தெரியல.
பெண்களுக்கு அது வேணும் இது வேணும்,அவ்வளவு சாதிச்சுட்டாங்க அடுத்ததா இதை நோக்கி தான் அவுங்க போகனும்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காலைல இட்லிக்குத் தக்காளி சட்னியா தேங்காய் சட்னியானு தீர்மானிக்குறதுலயே இன்னும் கொங்கு மண்டல பெண்கள் இருக்காங்கனு ஒரு விளம்பரதாரர் கூடக் கணிக்கிற அளவுக்கு மோசமா இருக்காங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..
∆ பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு பெரும்பிழை.. அதன் குறி இலக்கு ஏதும் எட்டப்படவில்லை..
∆ பெருமதிப்பிலான கறுப்புப் பணம் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.. 4172 கோடி மட்டுமே சந்தேகத்திற்கிடமான பணமாக உள்ளது.
∆ ரொக்கமில்லா அல்லது குறை ரொக்க பொருளாதாரம் சாத்தியமாகவில்லை..
∆ பயங்கரவாத நிதியளிப்பு வலைப்பின்னலில் எந்த தாக்கத்தையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தவில்லை..
∆ பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களையும் அமைப்புசாரா தொழிலையும் பெருமளவு நலிவடைய செய்தது. 3 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 4 கோடி பேர் வேலையிழந்ததாக பாரதிய மஜ்தூர் சங்கம் தெரிவிக்கிறது..
∆ திட்டத்தின் அனைத்து முடிவுகளும் எவ்வித முன் யோசனையும் இன்றி எடுக்கப்பட் டுள்ளது. இன்றுவரை கிராமப் பகுதிகளில் ATM கள் வேலை செய்யவில்லை
∆ பண மதிப்பிழப்புத் திட்டத்தின் தோல்வி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவீனங்களில் கைவைக்க வழி வகுத்துள்ளது..
∆ வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.. முதலீட்டிற் கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது..
∆ இந்த அமைப்பு ரீதியான குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்பது.. இத்திட்டத்தால் ஏற்பட்ட ₹30000 கோடி செலவுக்கு யார் பதில் அளிக்கச் சொல்வது? 180க்கும் மேற்பட்ட சாவுக்கு யாரை குற்றஞ்சாட்டுவது?
சரியாகத்தான் சொன்னார் உங்களின் மௌன் மோகன் சிங் /அமைப்புசார் கொள்ளை/ என்று.. வாய் கிழிய பேசுபவர்கள் தான் இப்ப பொத்திக்கிட்டு இருக்காய்ங்க..
இப்பவும் அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.. ஓட்டை பத்திக் கவலைப்படாமல் இது மாதிரி ஓட்டை நடவடிக்கையை எடுக்க 56" மார்தான் வேண்டும்.. அதை கண்டு உங்களுக்கு ஏன் காண்டாவுது.. நாடு வல்லரசாக வேண்டாமா?
/எத்தனை பேரு வரி கட்டாத ஏமாத்துறாய்ங்க.. அடிச்சாரு பாரு ரிவீட்டு?/
/என்னால நம்பவே முடியல.. இப்டி ஒரு அதிரடியா?/
/தீவிரவாத கும்பல் எல்லாம் நாசமாப் போச்சி.. சிங்கிள் டீக்கு வழியில்ல/
/புதிய இந்தியா பொறந்த வுடனே டாக்டராயிடிச்சி/
/இனி ஒருபய அரசாங்கத்த ஏமாத்த முடியாது/
என்றெல்லாம் தாண்டிக் குதித்தவர்கள், அந்தரத்தில் பல்டியடித்தவர்கள், இதென்ன பித்துக்குளித்தனம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை மடையர்களாக/ நாட்டு நலனில் அக்கறையற்றவர்களாக சித்தரித்து படங்காட்டியவர்கள் அனைவரும் -
அவுரு மூஞ்சி தொடைச்சிட்டிருந்த கொடியை வாங்கி தலையில முக்காடு போட்டுக்கிட்டு கெளம்புங்க.. கெளம்புங்க..

Thursday, July 27, 2017

மூடநம்பிக்கைகள் அண்ட விடாமல் நிம்மதியாக வாழ்வதற்கு சில வழிகள்...

1.வீட்டுக்குள் வந்து, இந்த கோவிலுக்கு இது செய்தா நல்லது, அந்த கோவிலுக்கு அப்படி நேர்ந்துகிட்டா நல்லது என்று சொல்லும் உறவினர்களை உடனே எதையாவது பேசி “எனக்கு இதில் நம்பிக்கையில்லை” என்று நிறுத்திவிடுங்கள்.
2. உங்கள் முகத்தைப் பார்த்து குறிசொல்லும் ஒரு மொக்கை ஆசாமி ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். அவரையெல்லாம் பக்கத்திலேயே அண்ட விடாதீர்கள்.
3.உங்கள் மகனுக்கோ மகளுக்கோ ஜாதகம் எழுதாதீர்கள். உங்கள் அம்மா அப்பா ஜாதகம் எழுதியிருந்தால் வாங்கி வந்துவிடுங்கள். ஒருவேளை அவர்களிடம் இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி அதை எந்த ஜோசியரிடமும் காட்டக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்.
4.அந்தரங்கமான மூடநம்பிக்கைகள் உங்களுக்குள் இருக்கும். அதை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். வெளியே குடும்பத்தில் சொல்லாதீர்கள். சொல்லும் போது அது பயத்தைக் கொடுத்து குடும்ப மூட நம்பிக்கையாக ஆகிவிடும்.
5.நல்ல நாள், கெட்ட நாள் என்ற பகுதியையே மறந்துவிடுங்கள். முடிந்தால் அவைகள் இல்லாத கேலண்டராக வாங்கி வையுங்கள். எக்காரணம் கொண்டும் இன்று நல்ல நேரம் எப்போது என்று பார்க்காதீர்கள். குடும்பத்திலும் அதை அறிவுறுத்துங்கள்.
6. எப்படி ஒரு அல்லேலூயா பிரச்சாரக் கூட்டத்தை காமெடியாக பார்ப்பீர்கள். அதே காமெடி உணர்வு உங்களுக்கு கணபதி ஹோமம் பார்க்கும் போதும் வரவேண்டும். அவன் இயேசுவை கும்பிட்டால் நீங்கள் சொர்க்கம் போகலாம் என்று அவனை முன்னிறுத்துகிறான். இவன் கணபதி ஹோமம் செய்யமல் போனால் உன் வீடு அவ்ளோதான் என்று பயமுறுத்துகிறான். வாய்விட்டு சொல்லி சொல்லி திணித்தால்தான் அது திணிப்பு அல்ல. இது மாதிரியான ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
7. ’பணக்காரன் - புரோகிதன்’ உறவு பற்றி கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணக்காரனுக்கும் ஒரு புரோகித ஆலோசகர் இருப்பார். அந்த புரோகித ஆலோசகர் எப்படி தந்திரமாக பணக்காரனை சுரண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதை தெரிந்து கொள்வது எளிது. இந்த Concept ஐ வைத்துக் கொண்டு நீங்க தேட ஆரம்பித்தாலே நாலைந்து சம்பவங்கள் நிச்சயம் கிடைக்கும்.
8. ஆப்ரகாம் கோவூர் மாதிரி பகுத்தறிவாளர்களை கொஞ்சமாவது படியுங்கள். பகுத்தறிவு என்பதை ஒவ்வாத சொல்லாக நினைக்காதீர்கள். காய்ச்சலின் வெளித்தோற்றம்தான் உடல் சூடு. அந்த உடல் சூட்டை மட்டும் தணித்துக் கொண்டிருக்காமல், மருந்து கொடுத்து முக்கிய காரணியை அகற்றுவதுதான் பகுத்தறிவு. இந்த கோணத்தில் பகுத்தறிவைப் பாருங்கள். வாழ்க்கையில் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு பகுத்தறிவு Text ஐ படியுங்கள்.
9. பிராமணர்களின் பக்தியை பார்த்து நீங்கள் காப்பி அடிக்காதீர்கள். அவர்கள் திருப்பதி வேங்டரை கும்பிடுவதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. திருப்பதி வேங்கடரும் இந்து மதமும் பிராமணர்களுக்கு மாபெரும் அதிகாரத்தைக் கொடுக்கும் விஷயங்களாகும்.. மற்றவர்களை விட நீ உயர்ந்தவன் என்ற கருத்தை அம்மதமும் மதத்து எழுத்துக்களும் அவர்களுக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் பக்தியாய் இருக்கிறார்கள். அந்த பக்தியைப் பார்த்து நீங்களும் காப்பி அடித்து இருக்கும் போது ஆம் நான் அடிமை என்று ஒத்துக் கொள்வது போன்றதாகும். இது பற்றி யோசியுங்கள்.
10. பிராமணர்களின் பிள்ளைகள் மத்தியில் எப்படி அவர்கள் System ஏன் எதற்கு என்று கேட்க முடியாதபடி ”பெருமாள் பற்றை” புகுத்துகிறது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிராமண நண்பரிடம் இது பற்றி சாதரணமாக பேசினால் அவரே சொல்வார். இப்படி புகுத்தப்படும் ”பெருமாள்பற்று” அவர்கள் எவ்வளவுதான் முற்போக்காக ஆனாலும் அது எங்காவது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கமல் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்த "புகுத்துதல்” Concept பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11. ஒரு பிற்படுத்தப்பட்ட பணக்காரர் எப்படி பிராமணராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் என்பதை கவனியுங்கள். சரவணபவன் முதலாளி போன்றவர்களை கொஞ்சம் ஆராயுங்கள்.
12.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பல்வேறு மதரீதியான மூடநம்பிக்கைகளின் Flow இப்படித்தான் இருக்கிறது.
இந்து மதத்தில் ஒரு பகுதியான பார்ப்பனியம் - அதிலிருந்து பிராமணர்கள் - அதிலிருந்து பணக்கார பிற்படுத்தப்பட்டோர் - அவர்களைப் பார்த்து மற்றவர்கள். இப்படித்தான் பல மூடநம்பிக்கைகள் பரவுகிறது.
13. இந்த மூடநம்பிக்கைகளை பரப்பும் ஆளுமைகளை இனம் கண்டுகொள்ளுங்கள். இவர்கள் இப்படி சொல்வார்கள் “இந்த ஜோசியரிடம் போ இவர் உன் நலன் பார்த்துக் கொள்வார் “ என்ற ரீதியில் சொல்வார்கள்.
14. சக்தி விகடன் போன்ற சமூக விரோத கருத்துக்களை மூடநம்பிக்கைகளை பரப்பும் இதழ்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். குடும்பத்தில் யாராவது சக்தி விகடன் படித்தால் அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள்.
15. வாஸ்து சாஸ்திரம் போன்ற பேச்சுக்கள் வீட்டுக்குள் யாரும் பேச முடியாதபடி முதலிலேயே எதிர்ப்பு பேசி முடித்து விடுங்கள்.
16. உங்கள் கணவரோ மனைவியோ மூடநம்பிக்கை வைத்திருந்தால் அதை பேசி பேசி சரிசெய்யுங்கள். முதலில் இதைச் செய்ய வேண்டும். பகுத்தறிவை பரப்புவது எளிது. ஏனென்றால் அதுதான் உண்மை.
17. மாமனார் வீட்டின் வழியே பல மூடநம்பிக்கைகள் வரும். அதை முதலிலேயே எதிர்த்துவிடுங்கள். திருத்தணிக்கு கிருத்திகை என்று தெரியாமல் உங்கள் மாமனார் உங்களை கூட்டத்தில் கூட்டிச் சென்றால். போய் திரும்பும் வரை காரில் மூடநம்பிக்கைகளை மெலிதாக திட்டிக் கொண்டும், அங்கே இருக்கும் சுகாதாரமற்ற சூழலை விமர்சனம் செய்து கொண்டே வாருங்கள். கல்யாணமாகி ஒருவருடத்தில் இவன் அல்லது இவள் பக்திக்கு, மூட சம்பிரதாயங்களுக்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை எப்படியாவது துணை வீட்டுக்கு புரிய வைத்துவிடுங்கள்.
18. மொத்ததில் “இவரா இவரிடம் இந்த டாப்பிக்கை எடுக்கவே முடியாதே... இந்த குடும்பமா இந்த குடும்பத்துகிட்ட இந்த மூடசம்பிரதாயத்தப் பத்தி பேசவே முடியாதே” என்ற சூழலை உருவாக்குங்கள்.
19. ஒரு வாளியில் ஒட்டை போட்டுக் கொண்டு நீரை நிரப்ப முடியாது போலத்தான் ஒரு குடும்பத்தில் மூடநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அறிவியல் மீது Passion வளர்க்க முடியாது என்பதும். மூட சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது என்பதும்.
20. இதை ஏதோ சாதரணமான விஷயமாக நினைத்து அலெட்சியமாக இருக்காதீர்கள். வாஸ்து, ஜோசியம், நாடி ஜோதிடம் இது போன்று பல மூடநம்பிக்கைகளால் அப்படியே அழிந்து போன குடும்பங்கள், மனங்கள் ஏராளம். எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் கணவரோடு சேர்த்து கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டினார். வீடு கட்டி நான்கு வருடங்கள் கழித்து அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. சொந்த பந்தங்கள் சும்மானாலும் “வீடு ராசியில்லையோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். உடனே அப்பெண் வீடு சரியில்லை, வீடு சரியில்லை என்று தீவிரமாக புலம்ப ஆரம்பித்துவிட்டார். தானும் கணவரும் ஒவ்வொரு காசாக உழைத்து உழைத்து கட்டிய வீட்டை சிறு மூடநம்பிக்கை காரணமாக விற்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக குழந்தைக்கு உடல்நிலை சரியாக எப்படியோ பலரும் சமாதானப்படுத்திவிட்டார்கள். அந்த பெண் மூடநம்பிக்கைக்கு எதிராக அவர் மனதை வைக்காத காரணத்தினாலேயே இவ்வளவு துன்பம்.
21. நீங்கள் உங்கள் மனதை, உங்கள் குடும்பத்தை மூடநம்பிக்கைகளுக்கு ( ஜோசியம், வாஸ்து, சடங்குகள்) போன்றவற்றுக்கு எதிராக தயாராக வைத்திருக்கிறீர்களா ? இல்லையா ? அதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லையெனில் தயாராக இருங்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உங்கள் மனதோடு விளையாட வரலாம்.
22.விழித்திருங்கள். அந்த விழிப்பை தர்க்கப் பூர்வமாக யோசித்து, சமூகத்தை உற்று கவனித்து, தனி மனிதர்களை வெறுக்காமல் அடைந்துவிடுங்கள்.

அப்துல் கலாம் ஐயாவின் பிள்ளைகள்

மாதம் முப்பது நாற்பதினாயிரம் பொருளீட்டும் சக்தி படைத்த ஒரு இடைநிலை பொருளாதார வர்க்கம் இருக்கிறதே, அவர்களின் பிரத்யேக சமூகப் பார்வை, பொருளாதார நோக்கங்கள் உண்டு. அந்த சிந்தனா வினோதத்தின் மொத்த உருவம் அப்துல் கலாம்.
மூன்று பக்க மொக்கை வாட்சப் பகிர்வின் முடிவில் ஒரு பன்ச் லைன் வருமே "எம் தேசத்தை அழிப்பது இலவசங்களும் மானியங்களும்" என்று, அதன் தோற்றுவாய் கலாம்.
அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமே முன்னேற்றம், வளர்ச்சி என்ற அபத்தத்தின் அடித்தளம் அப்துல் கலாம்.
"எல்லாரும் செல் போன் வச்சிருக்கானுங்க சார், பசி பட்டினி இந்தியாவுலன்னு புளுகிறானுங்க" என்று அக்கவுன்ட் வைத்து டீ குடித்துக் கொண்டே பேசுபவர் கலாமின் அசிஸ்ட்டென்ட் தான்.
இடஒதுக்கீட்டில் படித்து பயன் பெற்று, அதிக பொருளீட்டும் வாய்ப்பு கிடைத்ததும், "மொதல்ல இந்த ரிசர்வேசன ஒழிக்கணும் சார்" என்ற டயலாக்கில் கலாம் ஒளிந்திருந்து சிரிப்பார்.
நாட்டில் எந்த மூலையில் பழங்குடியினரின், மீனவர்களின், சிறு விவசாயிகளின் இன்ன பிற எளியோரின் வாழ்வாதார அடிப்படை பறிப் போகிறது என்று போராட்டங்கள் நடந்தாலும், "இவனுங்களுக்கு இதே வேலைங்க, நாடு உருப்படாம போறதுக்கு காரணமே இவனுங்க தான், வளர்ச்சிய கெடுக்கிறாங்க.. பூரா வெளிநாட்டு பணம்.. நிக்க வச்சி சுட்டா தான் சரி வரும்" என்று ஆயுத ஏந்த சொல்பவர் அகிம்சாவாத கலாம் ஐயாவின் வன்மையான மாற்று வடிவமே.
"டேய், அதின்னா புஸ்தகம், தூக்கிப் போட்டுட்டு பாடத்த படி" என்று அப்பா அதட்டுவதில் அப்துல் கலாம் காணச் சொல்லிக் கொடுத்த சாதனைக் கனவுகள் தெறிக்கும்.
நான் சாதியே பார்ப்பதில்லை, அதனால் உலகத்தில் சாதிப் பிரச்சினைகளே இல்லை, இந்த போலி முற்போக்குவாதிகளின் தொல்லை தாங்க முடிவதில்லை என்ற திருட்டுத்தனமான சலிப்பிலும், என் பிள்ளைக்கு நான் சாதி சான்றிதழே வாங்கப் போவதில்லை என்ற கௌரவ அறியாமையிலும் கலாம் புகுந்திருக்கிறார்.
ஊழல் ஒன்று மட்டும் தான் இந்த தேசத்தின் பிரச்சினை என்கிற ரீதியில் இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதிக்கிறார்களே, டைரக்டர்கள் சினிமா எடுக்கிறார்களே, நாடாளத் துடிக்கும் நடிக சாம்ராட்டுகள் சீறுகிறார்களே, அனைவரும் கலாம் ஐயாவின் வழித்தோன்றல்களே.
தேசத்துரோகி என பாஜவும், பயங்கரவாத நக்சல்கள் என அதிமுகவும் போராடுபவர்கள் மேல் குதிக்கிறார்களே, கலாம் சாருக்கு பிடித்த விசயங்கள் தாம் அவை.
பணம் பார்த்ததும், கிராம தலித் காலனியில் இருந்தோ நகர குடிசைப்பகுதியில் இருந்தோ வெளியேறி, நகர எல்லையில் ஒரு வீடு வாங்கி குடியேறி, வெள்ளைத் தோலுடையவர் ஒருவரைத் தேடி மணம் புரிந்து, அதே நிறத்தில் பிள்ளை பெற்று, அண்டை வீட்டானிடம் சாதியை மறைத்து, அமாவாசை கிருத்திகை கும்பிட்டு, "இவனுங்கள்லாம் திருந்த மாட்டானுங்கபா, அவன் சாதி புத்தி அப்டி.. கேவலமானவனுங்க" என்று அயலான் இவன் சாதியை குறித்து பேசும் போது, இளித்துக் கொண்டே ஆமாஞ்சாமி போடுவது கலாம் ஐயாவின் தற்கால வார்ப்புகளே.
"இப்பல்லாம் யாரு சார் ஜாதி/மதம் பார்க்கிறா" என்று ஒலிக்கும் குரல்கள் அனைத்து கலாமின் டப் செய்யப்பட்ட குரல்களே.
மாடும் பன்றியும் தின்று உடல் வளர்த்துவிட்டு, நகர பன்மாடி சமூக குடியிருப்பு ஒன்றில் குடியேறியதும், சைவ உணவின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தையும் வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் ஃபார்வர்ட் செய்வது சாக்ஷாத் கலாம் சாஸ்திரிகள் ஐயாவே.
தேசம் என்பது மக்கள் அல்ல, நிலமும் எல்லைக் கோடுகளும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் கலாமின் வாரிசுகள் தான். தேச வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதும், எளியவரின் வாழ்வாதாரங்களை கபளீகரம் செய்வதும் தான் என்ற நவீன சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் நாம் அனைவரும் ஐயாவின் பிள்ளைகள் தாம்.
தேசபக்தி, எல்லை, ராணுவம் என்பவற்றை வைத்து எதையும் மூடி மறைக்கலாம் என்பதன் அடையாள சின்னம் அப்துல் கலாம்.
கடைசியாக, "யோகி ஆதித்யனாத் ஒரு முறை கக்கூஸ் இருக்க செல்லும் போது" என்று காவி கொலைகார கும்பலின் தியாக வரலாற்றை எழுத வைப்பது கலாம் ஐயா சிலாகித்த நம் தேசபக்தி தான்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நமது அரசியல்/சமூக அறியாமைகள் மற்றும் கயமைகள், அதனை பயன்படுத்தி அரசியல் செய்வோரின் கேப்மாறித்தனத்துடன் கைக்குலுக்கும் இடம் தான் அப்துல் கலாம்.
தனது சொந்தத் துறையில் அவர் பல அறிவியல் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் அவரது அரசியல் சமூக சித்தாந்தங்கள் மூடத் தனமானவை அல்லது கயமைத்தனமானவை

Friday, July 14, 2017

*கதர் சட்டைக்குள் கருப்புச் சட்டை * #காமராசர்....

நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?
அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,.
*ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான்.
*மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான்.
ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா *காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.*
யார் யாருக்கு எதிலே *லாபமிருக்கோ* அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?,
அவன் கஷ்டங்களப் போக்குமா?.
இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம *அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?*
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
*நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?* என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். *டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?*
ராமன், கிருஷ்ணன்கிறது *கற்பனைக் கதாபாத்திரம்னேன்*. அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் *கட்அவுட்* வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் *புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும்*. காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி *கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.* அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். *நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்* என்று விளக்கினார்.
*மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?* என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? *ஏழை* வீட்டுப் பெண்ணுக்கு ஒரு *தோடு , மூக்குத்திக்குக்* கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில *வைர* ஒட்டியாணம் செஞ்சி *காளியாத்தா* இடுப்புக்குக் கட்டி விடறான். *கறுப்புப் பணம்* வச்சிருக்கிறவன் *திருப்பதி* உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் *காசில ரோடு* போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு *பள்ளிக்கூடம்* கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான்., *சாமிக்குத்தம்* வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். *மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா?* படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என்றார்.
*கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?* இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” என்று கேட்டேன்.*
சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே *பத்ரகாளியம்மன்* கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே *சஞ்சீவரெட்டியோட திருப்பதி* மலைக்குப் போனேன். அவர் *மொட்டை* போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. *போயும் போயும் கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு?* எல்லாம் முடி வெட்டுரவன் (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். *தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?* என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
*அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?* என்று கேட்டேன்.
*அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை,* இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!!
காமராசர் என்கிற அந்த *மனிதாபிமானி* என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து *ஏன் பள்ளிக்கூடம் போகலியா?* என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.
இப்படி உண்மையை உடைத்து பேசியவரை காவி பாஜகவின் தாய் வீடான ஆர்எஸ்எஸ் டெல்லியில் வைத்து அவரை தீ வைத்து கொளுத்தி சாகடிக்க பார்த்தானுங்க.