Thursday, March 29, 2018

“கந்தன் கருணை”

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு
இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்
அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்
இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று
அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள்
இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.



இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..
விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு
இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி
இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்
பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா
தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி
அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது
பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்
இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.
இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு
கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு
தெய்வம் நின்று குண்டு வீசியது..
குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு
ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது
அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா
அந்த கொடூரம் அரங்கேறிற்று
அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்
மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்
எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்
அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை
ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது
இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்
அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.
எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை
இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்
விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் “அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி”
எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌
இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்
அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள்
இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,
தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு
இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..
இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்
கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்
இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி
இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?
அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள்
அந்த வீட்டை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று
இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.
“கந்தன் கருணை” படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது
அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு
அந்த அருணா என்ன ஆனான்?
பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..
கிட்டு என்ன ஆனான்?
மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்
1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.
அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான்
அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது
அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது
ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌
மாறாக இந்தியா
இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்
இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது
நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு..

Tuesday, March 27, 2018

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா எனக் கேட்கிறார்கள். நான் generalize செய்யவில்லை. ஆனாலும் விமர்சிக்கவே கூடாதென்று இலங்கையிலும், வேறு நாடுகளிலும் வசிக்கும் பெரியாரிஸ்டுகளில் சிலர் என்மேல் கோபப்படுகிறார்கள். நிற்க. இவர்களைப் பொறுத்தவரை என் பார்வை ஒன்றே ஒன்றுதான். பண்டைய ரோமில் அடிமைகளை சாகும்வரை புலிகளோடு மோதவிடும் கிளாடியேட்டர் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை பரணில் அமர்ந்து பார்த்து குதூகலித்த மக்களைப் போல இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கிறார்கள். காலம்காலமாக அதுதான் நடக்கிறது என்றாலும், 2009க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல்/அறிவு/சமூகச்சூழலை நிர்மூலமாக்க இவர்கள் வாரி இறைத்திருக்கும் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் தாலியில் மேக்னட் உள்ளது, மிஞ்சியில் அணு ஆயுதம் உள்ளது, சீமான் முதல்வர் ஆகிவிடுவார் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பல, "நம்மில் எத்னி பேருக்கு தெரியும்," வகை முகநூல் பக்கங்கள் இவர்களால் ஸ்பான்சர் செய்யப்படுகின்றன. இயக்குனர் சமுத்திரக்கனி பெயரில் முட்டாள்த்தனமான கருத்துக்களைப் பரப்பும் பல லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ஒரு போலி பக்கத்துக்கு எங்கேயிருந்து ஃபண்ட் வருகிறது எனப் பார்த்தால் இலங்கையில் இருந்து வருகிறது!! இதுபோல் பல நூறு பக்கங்கள் உண்டு. ஒரு தலைமுறையையே அறிவுக்குருடர்கள் ஆக்கும் வகையில் வாட்சப்களில், முகநூல் பக்கங்களில் காணொளிகளைப் பரப்புவதில் முதல் ஆளாக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே மேடை போட்டுக்கொண்டு 1800களைப் போல கிறுக்குத்தனமாக பேசிக்கொண்டிருக்கும் ஆட்கள் அத்தனை பேரும் சிலோன் தமிழர்களாலும், ஈழத்துக்காக போராடுகிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளில் அமர்ந்துகொண்டு இங்கிருக்கும் fraudகளுக்கு fund செய்யும் உணர்வாளர்களாலும் வளர்த்துவிடப்பட்டவர்கள்.
நடைமுறையை புரிந்துகொண்டு, தமிழக அரசியலைப் புரிந்துகொண்டு இணக்கம் காட்டும் புலம்பெயர்த்தமிழர்கள் பலர் உண்டு. ஆனால் 3% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்களில் 3% பேர் மட்டுமே எப்படி திராவிட இயக்கத்தின் நியாயத்தை புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களோ, அதேபோல சொற்பத்திலும் சொற்பமாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி இங்கிருக்கும் பாரிசாலன் வகையறா இளைஞர்களிடம் பேசும்போது அயர்ச்சியும், அதிர்ச்சியும் ஏற்படுமோ, அதுபோலவேதான் பல வளர்ந்த நாடுகளில் வசிக்கும் சிலோன் தமிழர்களிடம் பேசும்போதும் இருக்கிறது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்நுழைவது குறித்த ஏதோ ஒரு விவாதத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிலோன் தமிழர் ஒருவர் கேட்கிறார், "நீ கு** கழுவாம உள்ள போனீனா அவன் எப்படி விடுவான்?" என்று!! தமிழ்நாட்டில் பார்ப்பனர்களோ, தீட்சிதர்களோ கூட இப்படியெல்லாம் மடத்தனமாக காரணம் சொல்லமாட்டார்கள். அந்த இழை மட்டுமல்ல இதுபோல் அவர்களுக்குள் நடக்கும் ஏனைய விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்படியாகப்பட்ட சமூக அறிவுடன் சுற்றும் இவர்கள்தான் தமிழ்நாட்டை யார் ஆண்டால் நன்றாக இருக்கும் என்றும், திராவிடம் என்பது தமிழ் விரோதம் என்றும், தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வேண்டும் என்றும் இன்னொருபக்கம் விவாதம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 3% பேருக்கு பெரியார் பிரச்சினையாக இருக்கிறார் என்றால், அங்கே 97% பேருக்கு பிரச்சினையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இப்படியான விவாதங்களைக் கண்டு குமுறும் முற்போக்கு ஈழத்தமிழர்கள் கூட அவர்களுடன் பொதுவெளியில் மோத ஏனோ தயாராக இல்லை! ஆனால் என் போன்றவர்களுடன் மோதவோ, என் போன்றவர்களை விமர்சிக்கவோ ஆளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலோன் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தமிழர்களை எவ்வளவு தாழ்வாக பார்க்கும் மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடன் பழகுகின்றவர்களுக்குத் தெரியும்.
நான் மேலே சொன்னதைப் போல யாரையும் பொதுமைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 3% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்ததைப் போலவே, வெளிநாடுகளில் வாழும் 97% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்தேன். அதுவே வலிக்கிறது என்றால், மருந்திட்டுக்கொண்டு மாற வேண்டியது நீங்கள்தான். நானில்லை.

Monday, March 26, 2018

ராகவன் கோபம் நியாயம்! -- சுப. வீரபாண்டியன்

ராகவன் கோபம் நியாயம்!
                                 --------------------------------------------
                                                   -சுப. வீரபாண்டியன்

பாஜக செயலாளர்களில் ஒருவரான திரு கே.டி. ராகவன் அவர்கள், தொலைக்காட்சிகளில் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களை, ஈ.வி. ராமசாமி என்றுதான் குறிப்பிடுவார். கலைஞரைக் கூட, கலைஞர்  என்று குறிப்பிடுவார். ஆனால் பெரியாரை மட்டும் அப்படிக் கூறவே மாட்டார். திரு ஹெச்.ராஜாவும் அப்படித்தான்.  அது குறித்து நம் நண்பர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்படுகின்றனர். இது தேவையற்றது. அய்யாவின் பெயர் ராமசாமிதானே! அவர் பெயரைச் சொல்லி அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், சங்கராச்சாரியார்களை,  ஜெயேந்திரன், விஜேயேந்திரன் என்று அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லையே என்கின்றனர். தேவையில்லை, அது அவரவர் விருப்பம்.  நாம் பெரியாரால் பயன் பெற்றோம். அதனால் அவரை அப்படி அழைக்கின்றோம். அவர்கள் சங்கராச்சாரியார்களால் பயன் பெற்றார்கள். எனவே அவர்கள் அப்படி அழைக்கின்றனர்.

அவர்கள் பெரியாரால் பயன் பெறவில்லை என்பது மட்டுமில்லை. தாங்கள் பெற்றிருந்த சமூக அதிகாரத்தையும், பாவம்,  இழந்தார்கள். அந்தக் கோபம் அவர்களுக்கு  இருக்கத்தானே செய்யும். நினைத்துப் பாருங்கள் என் தாத்தா அவர் தாத்தாவைச் 'சாமி' என்றுதான் அழைத்திருப்பார். அவர் தாத்தாவைப் பார்த்ததும் என் தாத்தா, துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்திருப்பார்.

ஆனால் இன்றோ, நான்  அவரைச் சாமி என்று அழைப்பதில்லை. நண்பர் ராகவன் என்று அழைக்கிறேன். அவருக்குச் சமமாக ஒரே இருக்கையில் அமர்கிறேன். இதுவெல்லாம் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்! பெரியார் மாதிரி ஒருவர் பிறக்காதிருந்தால், திரு ராகவன் சோபாவில் அமர்ந்திருக்க,  இந்நேரம் நானும், அருள்மொழி போன்றவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரையில் அமர்ந்துதானே வாய்பொத்திப் பேசியிருப்போம். தொலைகாட்சி நெறியாளரும், அவாளாக இல்லையென்றால்,    எங்கள் பக்கத்தில் தரையில்தான் அமர வேண்டியிருக்கும்!

அந்தக் காலமாக இருந்தால், ராகவன் என்னைப்  பார்த்து, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டென்று கருதாமல், "என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?' என்றுதானே கேட்டிருப்பார். இப்போது 'அண்ணன் எப்படியிருக்கீங்க?' என்று அன்போடு (?) கேட்கிறாரே! இத்தனை மாற்றங்களுக்கும் இந்தப் பெரியார்தான் காரணம் என்கிறபோது, அவருக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதில் என்ன தவறு?

இவ்வளவு சமூகப் பெருமைகளையும் தாங்கள்  இழப்பதற்குக்   காரணமாக இருந்த ஒருவரைப் போய் அவர் பெரியார் என்று அழைக்க வேண்டும் நாம் எதிர்பார்ப்பது வன்முறை இல்லையா? ஆனாலும் என்ன ஒரு பெரிய இடைஞ்சல் என்றால். நம் அய்யாவின் பெயரிலேயே 'சாமி' இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி. நம் அய்யாவை அவர்கள் இப்போது சாமி, சாமி என்று அழைக்க வேண்டியிருக்கிறது. அதனையும் விட்டுத் தொலைக்க ஏதேனும் வழி கண்டு பிடித்து விடுவார்கள்.

ராகவன் கெட்டிக்காரர், புத்திசாலி. எப்படியாவது இந்தப் பெயரை ஒலிக்காமல் இருக்க ஒரு வழி கண்டுபிடித்து விடுவார். இல்லையானால், சாமி என்று அழைப்பதை விட, பெரியார் என்றே  சொல்லித் தொலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்.

அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் இருக்கிறது. கேலியும், கிண்டலுமாகப் பேசுகின்றார் என்கின்றனர். எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, அவைகளைக் கூட அவர்  வைத்துக் கொள்ளக் கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்? அவர் மனநிலையை, அவர் கோபத்தை, அவர் பக்கம் உள்ள நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் தாத்தா காலத்தில் இருந்த நிலைமை, மீண்டும் தங்கள் பேரன்கள் காலத்திலாவது வந்துவிடாதா என்று அவர்கள் ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா என்ன?

சரி, ராமரவி என்று ஒருவர் வேறு ராமசாமி நாயக்கர் என்று தொலைக்காட்சிகளில் பேசுகிறாரே, அது ஏன் என்று கேட்கின்றனர். ஐயோ அவர் ஒரு அப்பாவி, நம் பிள்ளை அவர். நாய்க்கர் என்பது ஆள் பெயரா, சாதி பெயரா என்று கூடத் தெரியாமல், விவாதங்களில் விழிக்கின்றார். அவர் விழிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நம் பிள்ளை என்று. நண்பர் ராகவனிடம் இருப்பது போல, ராமரவியிடம் அந்த எள்ளல், ஏகடியம் எல்லாம் இருக்கிறதா பாருங்கள். ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்லது வயப்பட்டதைப் போல ஒரு தோற்றம் இருக்கும், அவ்வளவுதான். உண்மையில் ராகவன் கோபத்தில் இருக்கும் நியாயம், ராமரவி கோபத்தில் இல்லை.அதில் ஒரு நன்றியுணர்ச்சி மட்டும் குறைகிறது. மற்றபடி தப்பு ஏதும் இல்லை.

"கணவனை இழந்ததாலே கண்ணகி கோபம் நியாயம்" என்பார் கவிஞர் தணிகைச் செல்வன்.  அனைத்தையும் இழந்ததால், ராகவன் கோபம் நியாயம், நியாயம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இருக்கட்டும், சங்கராச்சாரியார் போன்றவர்களால்தானே நாம் சமூக இழிவைப் பெற்றோம். அப்படியிருக்க, நண்பர் ராகவனைப் போல,  நீங்களும் அவர்கள் பெயர்களைக் குறிப்பிடும்போது, சங்கரன், விஜேயேந்திரன் என்று குறிப்பிட வேண்டியதுதானே, பாரதியார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர்களைப் போலவே கவிஞர் சுப்பிரமணி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நண்பர்கள் கேட்கின்றனர். அது எப்படி முடியும்? நாம் நாகரிகம் தெரிந்தவர்களாயிற்றே!
#KTRagavan #BJP