Monday, November 11, 2019

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள்.  அது இடிக்கப்பட்டுள்ளது.  அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது.  இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது….  அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது.  எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம்,  ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்?  ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது.  இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா?  அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது.  அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை  நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள்   இடிக்கப்பட வேண்டியிருக்கும்.  நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது.  ராம் யார்?  வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா?  இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது.  மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல.  ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது.  இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா?  நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது.  எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு.  எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.  வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை.  ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை.  ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.  அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது.  அதை மீட்டெடுக்க வேண்டும்.  அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்?  ஏன்?  மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால்  ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன்.  அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன்.  நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ,  அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.  வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன்.  அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது.  இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை.  அவர்கள் எந்த மஸ்ஜிதையும் -  - இன்றோ, பின்னரோ இடிக்க முடியும்.  அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்;  இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள்.  நான் மிகவும் கலக்கம் அடைகிறேன்.  பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”

Source: telegraph

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனகளின் பட்டியல் பெரிது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. பின்னர் இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான்.

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார்

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘#இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நடந்த உண்மை பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட கட்டுரையின் மீள் பதிவு இது.

அவரது கட்டுரையில் கூறியிருப்பதாவது, "இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.

நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணியில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர்களின் கதை’ என்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.

பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக் கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவுளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.

வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.

அந்த மாநாட்டையொட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது ‘இந்து’ ஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.

அப்போதே செய்தியைத் திரித்து ‘துக்ளக்’ ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!

இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.

எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். ‘இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிரசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். ‘இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோ’ என்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப்படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்’ என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.

இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.

1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.

ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்” என்று எழுதினார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற ‘மகாபுருஷர்களில்’ ஒருவரான ஹெச்.ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.”

இவ்வாறு உண்மையை திரித்து, கலவரத்தை உண்டாக்கி அரசியல் செய்யும் இந்து அமைப்பினரின் முகத் திரையை கிழித்தெரியும் வகையில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் கட்டுரை!