Saturday, November 19, 2022

இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை

 *“தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது.*

*எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.*

*ஒன்றைத்தவிர.*


 இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை.


 ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவதில்லை” என்று கேட்டான். 


நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன். 


 “மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான். 


“உங்கள் மாநில மொழி எது?”  


அவன் “இந்தி” என்று பதிலளித்தான்.


 “அது தான் உங்கள் ஊரில் பேசுகிறார்களா?” என


 “ஆம்” என்று உறுதியாக தலையாட்டினான். 


ஆனால் “உங்கள் ஊருக்கென்று ஒரு மொழி இருக்குமே?” என்று கேட்டேன். 


அவன் நெடு நேரம் யோசித்துவிட்டு, “மால்வி?”


 “எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள். அது எங்க ஊர் கிராமப்புறங்களில் பேசும் மொழி.” என்று சொன்னான். 


அதற்குப் பின் அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டதே தவிர எந்தக் கேள்வியும் எனக்கு எழவில்லை.


 “உன் தாய் மொழி ‘இந்தி’யா? ‘மால்வி’யா?” என்று நான் கேட்டால் அவனுக்கு அது புரியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. 


அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. அவர்கள் ஊரில் உள்ள பலருக்கும் இது தெரியாது. 


மத்தியப் பிரதேசத்தில் 1941 ஆங்கில அரசின் புள்ளி விவரக்கணக்குப் படி மால்வி மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,லட்சத்து 7

8, ஆயிரத்து 087 பேர். 


ஆனால் அதே ஆண்டு 

இந்தி மொழி பேசிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா..? 

14 லட்சத்து ,40,906 பேர்கள் மட்டும் தான். 


அதாவது 

மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி பேசியவர்களை விட மால்வி மொழி பேசிய மக்களின் மக்கள் தொகை அதிகம். 


1951லேயே நிலைமையை தலைகீழாக மாற்றியது.


 இந்திய அரசின் மக்கள் தொகை கணக்குப் படி மால்வி பேசு வோர் 

5 லட்சம், என்றும், 

இந்தி பேசுவோர் எண்ணிக்கை 

58 லட்சம் என்றும்.


பஞ்சாபில் இந்தியை ஆட்சி மொழி(?)யாக்கும் சுற்றறிக்கையை அந்த மக்களுக்கு இந்தி தெரியாது(?) என்பதால் மக்கள் பேசிக்கொண்டிருந்த(!) உருது மொழியில் அச்சடித்து கொடுக்கும் அளவிற்கு இந்திமயம் வேகமாக நடந்தது. 


அதனால்தான் அடுத்த 

10 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்கள் தொகை 40 விழுக்காடு என்ற கதை ஆனது. 


இதன் விளைவு மால்வி போன்ற மொழிகளின் இன்றைய நிலைதான்.


தன் தாய்மொழியையே அவனுக்குத் தெரியாமல் மறக்கடிக்கும் அளவிலான கொடூரத்தின் அடிமை அடையாளம் தான் அந்த இளைஞன். 


 அவன் மட்டுமல்ல. 


தாங்கள் இந்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்

 வட இந்தியாவைச் சேர்ந்த 90 விழுக்காடு மக்களின் நிலையும் கூட இதுதான்.


 80க்கும் மேற்பட்ட உங்கள் மொழிகளை முற்றிலும் அழித்து, அதன் இரத்த வெள்ளத்தின் மீது கட்டப்பட்ட பெரும் கோட்டை தான் நீங்கள் கொண்டாடும் இந்தி என்பதை அவர்களிடம் 

யார் போய் சொல்வது..? 


அல்லது அது நமக்கும் தான் தெரியுமா..?


இந்தி பெல்ட் என்று சொல்லும் மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் தனித்த மொழி இருக்கிறது. 


ஆனால் அவற்றை நாம் கூட இந்தி பெல்ட் என்றே பொதுப் புத்தியிலிருந்து அழைக்கிறோம்.


 இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் இவற்றோடு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்டவைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். 


ஆனால் மேற்கண்ட எல்லா மாநிலங்களுக்கும் இராஜஸ்தானி, பஞ்சாபி, பீகாரி, மராத்தி, குஜராத்தி என்று தனித்த மொழிகள் இருக்கின்றன. 


 இவற்றில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை முழுவதும் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் போல் இன்று வரை 

ஒரு பிம்பத்தை கட்டி உருவாக்கி வைத்துள்ளார்கள்.


 ஆனால் அதுவும் கூட போலி பிம்பமே என்பதை 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு நமக்குச் சொல்கிறது.  


இந்திய விடுதலைக்கு முன்பு வரை மேற்கண்ட இந்தி பெல்டுகளில் மட்டும் பேசப்பட்ட மொழிகளாக பிரிட்டிஷ் அரசு பட்டியலிட்டுள்ள மொழிகள் இந்தி, உருது, இராஜஸ்தானி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளோடு இந்துஸ்தானி, மைதிலி, பிரசு பாஷா, பக்ரி, மேவாரி, ஜெய்புரி, சட்டிஸ்காரி, மார்வாரி, பந்தேலி, ஆஜ்மீரி, தம்தி, ராகோ பான்சி, பலாகி, லோடி, கிராரி, மிர்கனி, பைகனி, பாண்டோ, ஸ்வதி, அதுகுரி, பாடு, இராஜ்காடி, நுனியா, பங்கி, கோசாவி, பர்தேசி, கலாரி, அபு, பர்பி, கோசங்கா, பாடி, பஸ்தாரி, சடி, போவாரி, மகேசுரி, போபாலி, மாதுரி, சடாரி, போஜ்புரி, உத்கேதி ௲ போலி, கோரக்பூர், முசல்மானி, பூலியா, புவானி, பரத்பூரி, கங்காபாடி, உத்தாரி, லோதாந்தி, சங்கலி, வாணி, கோத்யானி, இராஜபுதானி, ஆக்ராவாலி, சார்மாலி, பாமி, கோர்க்காலி, குர்சார், மராரி, ஓகி, நிமாதி, மிர்சாபுரி, கோட்வாரி, கங்கேரி, தேவநாதரி, கோர்த்தி, பான்சாரி, கந்தால், பிரதாப்காடி, அகரி, பான்சாரி, பூலி, குருமாலி, போயாரி, இரிவை, மேர்வாரி, இரங்கடி, கால்பீ என்று

 80க்கும் மேற்பட்ட மொழிகளை பட்டியலிடுகிறது. 


இவை ஒன்றும்

சமஸ்கிருதம் போல் சில நூறு பேரின் தாய்மொழி அல்ல. 


ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் பேசிய மொழிகள் ஆகும். 


ஆனால் இவற்றின் நிலை என்ன என்பது தான் நம் கேள்வியே. 


ஒரு மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல.


 அது அந்த மண்ணின் பண்பாட்டை, மக்களின் வரலாற்றை தாங்கியுள்ளது. 


மொழியை அழித்தால் அந்த மக்களை முழுவதும் அடிமையாக்கலாம் என்பதற்கு இந்தி பெல்டுகளே சாட்சி. 


 அந்த இளைஞனின் 

சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசம் நர்மதை - சோன் பள்ளத்தாக்குகளுக்குள் இருக்கிறது.


 பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலங்கள் முதல் மத்தியப்பிர தேசத்தின் வரலாறு தொடங்குகிறது. 


பிம்பேத்திகாவில் உள்ள 

600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருக்கின்றன. 


சாகர்களும் குஷானர்களும் 

மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப்

 பெரும் இராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆட்சி செய்துள்ளார்கள். 


வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், 

மற்றப் பகுதிகளைச் சத்ரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமி புத்திர சதாகாரணியும ஆதிக்கம் செலுத்தி யுள்ளார்கள். 


அவருக்குப் பிறகு குப்தர்கள்,

 ஹூனர்கள், 

யசோதர்மன், 

ஹர்ஷர், 

ராஷ்ட்டிரகூடர்கள், 

பராமார்கள், 

பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், 

டெல்லி, 

துருக்கி, 

குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், 

மராட்டியர்கள்,

ஹோ ல்கர்கள், 

மஹாகோசர்கள், 

சிந்திக்கள், 

போபாலை ஆண்ட 

ஆப்கானிஸ்தான் அரசர் 

தோஸ் மொகமது கான் என 

அந்த மண்ணை எண்ணற்ற மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். 


 கொடுங்கோன்மை மிக்க முடியாட்சி காலத்திலும், 

ஆங்கில ஆட்சிக் காலத்திலும்கூட அங்கு இந்தி ஆட்சி மொழியாக இருந்ததில்லை. 


மால்வி, 

நிமதி, 

பகேலி உள்ளிட்ட அந்த மண்ணின் மக்களின் மொழிகளே அங்கு கோலோச்சியுள்ளன. 


ஆனால் முடியாட்சி, 

அடிமையாட்சி நீங்கி நம்மை நாமே ஆண்டு கொள்ளும் ஜனநாயக ஆட்சி முறை நிலைபெற்றுள்ள இந்த 

70 ஆண்டுகளில் தான்

 அந்த மக்களின் மொழிகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று முரண். 


ஏன் இது நிகழ்ந்தது? 


இதற்குப் பின் வெறும் 

மொழி அரசியல் தான் உள்ளதா? என்றால் இல்லை. 


இது ஒரு சித்தாந்த அரசியல்.  


கிபி 1340 இல் தில்லியில் 

நிலை பெற்ற

முகமதுபின் துக்ளக் ஆட்சி அங்கு அப்போது மக்கள் பேசிவந்த சிதைந்த பிராகிரத மொழியை பார்த்தது. 


அது அப்போது ஒரு சீரான மொழியாக இல்லாத போது, 

அதில் தங்களின் அரபு மொழியை கொண்டு 

பாரசீக அரபு கலப்பால் ஒரு சீரான மொழியாக உருது மொழி உருவாக்கப்பட்டது. 


உருது எனும் சொல்லுக்குப் பொருள், பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதாகும். 


அதன் பின் உருது மொழி இந்தியாவில் அவர்களின் அரசு மொழியாக இருந்தது. 


இந்தி மொழியானது ‘லல்லு ஜிலால்’ என்பவரால் உருது மொழியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.


 உருது மொழியில் இருந்த 

அரபுச் சொற்களை நீக்கிவிட்டு

அந்த இடத்தில் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாக சேர்த்து இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். 


இவ்வாறு அவரால் உருவாக்கப்பட்ட இந்தி மொழிக்கும், 

அதற்கு முன்பாக வடநாட்டு மக்களால் பல இடங்களில் பேசப்பட்ட சிதைந்த பிராகிருத மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. 


இந்தி மொழி என்பதே 

இந்து சனாதனத்தின் 

தாய் மொழியாக அவர்கள் கருதும் சமஸ்கிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது.  


அதனை நன்கு உணர்ந்தவர்கள் உருவாக்கிய சித்தாந்தமே இந்தி, இந்து, இந்தியா என்பதாகும். 


அந்த கொடூர சித்தாந்தத்தை காங்கிரசிற்குள் இயங்கிக்கொண்டிருந்த வலதுசாரிகளின் துணை கொண்டு அரங்கேற்றினார்கள். 


அவர்கள் கனவு கண்ட இந்து தேசியத்தின் பலி பீடத்தில் 

பலி கொடுக்கப் பட்டுள்ள மாநிலங்கள் தான் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இந்த இந்தி பேசும் மாநிலங்கள். 


இது தான் இன்றைய இந்துத்துவ அரசியலின் கேந்திரமான பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. 


‘‘ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்” என்ற அந்த இளைஞனை போன்ற சிலர் நம்மூரிலும் கேட்கிறார்கள்.


 அவர்களுக்கு இதுவரை கிடைக்காத அந்தக் கேள்விக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம். 


3000 ஆண்டுகளுக்கு நிகரான நாகரீக சமூகத்திற்கான தொல்லியல் சான்றுகளோடு இருக்கும் 

தமிழ் மண்ணை போலி தேசியத்தின் பலி பீடத்தில் வைத்து காவு கொடுக்க நாங்கள் முட்டாள்களா என்ன?


 உலகின் பல்வேறு நாடுகளில் 

ஆட்சி மொழியாக இருக்கும் தமிழை இந்தியாவைத் தாண்டி எங்கும் இல்லாத இந்தியைக் கொண்டு அழித்துவிட முடியுமா என்ன..?


 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய சித்தாந்தத்தை கொண்ட தமிழ் மண் 

நான்கு 

வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளே வரும் வைதீகத்தின் 

மொழி வடிவத்தை ஏற்றுக் கொள்ளுமா என்ன..?


“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற, 

அதிகாரத்திற்கு எதிரான முழக்கத்திற்கு சொந்தக்காரர்களான தமிழ் மண் ஆங்கிலேய ஆட்சியானாலும், 

காங்கிரஸ் ஆட்சியானாலும், 

சங்பரி வாரத்தின் 

நேரடி ஆட்சியானாலும் 

யாருக்கும் அஞ்சாமல் 

மொழி உரிமைப்போரில் 

இந்தித் திணிப்பிற்கு எதிராக 

அதே கம்பீரத்தோடு எதிர்த்து நிற்கும் தானே.


 1937லும், 1948லும் 1965லும் 1986 லும் தமிழகம் மட்டுமே இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தனித்துப் போராடியது. 


ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. 


*நமக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராத்தியம் என்று பல்வேறு மாநிலங்களும் களத்தில் குதித்துள்ளன.*


இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டம். 


இந்தச் சூழலில் ஒன்றிய அரசு உருவாக்கிய அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரை போன்ற 

எந்த வடிவில் 

இந்தியை திணிக்க நினைத்தாலும் அதை முற்றாக புறந்தள்ளுவதே இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் நல்லதாகும்.