Friday, December 28, 2018

உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுவதால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்

உத்திரபிரதேசம் மாநிலம் 
அலிகார் நகரில் உள்ள இக்லஸ் (Iglas) என்னுமிடத்தில் ஆதரவற்ற மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதாம்.


விவசாய பூமியான இக்லாஸில் உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுகிறார்கள்.
வட இந்தியா முழுவதும் இப்படி தெருவில் விட்டு விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
அப்படி தெருக்களில் விடப்படும் ஏராளமான மாடுகளால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்.
தொல்லை தாங்க் முடியாத மக்கள் மொத்தம் 800 மாடுகளை அங்குள்ள அரசுப் பள்ளிகள் காம்பவுண்ட் உள்ளேயும், வகுப்பறையும் உள்ளேயும் கட்டி வைத்து போய்விட்டார்கள்.
காலையில் வந்து பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப் பார்த்து திகைத்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் விடுமுறை விட்டிருக்கிறார்கள். காவல்துறையும் கலெக்டரும் இது அரசியல் என்கிறார்கள்.
ஆனால் பொதுமக்களோ இப்படி திரியும் மாடுகளை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இதில்லாமல் சில மாடுகளை அங்கே உள்ள மக்கள் உயிருடன் புதைத்திருக்கின்றனர்.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் மூச்சு திணறி மாடுகள் இறந்ததாக வந்திருக்கிறது.
News - http://archive.is/GhKPC
மாடுகளை கொல்லக் கூடாது அது மதத்தின் படி மகா பாவம் என்று சொன்ன மக்கள் இன்று மாடுகளை உயிருடன் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உணவு சங்கிலி, ஒரு நாட்டில் உள்ள அனைவரும் எப்படி எதை உண்கிறார்கள். இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி எல்லாம் ஒவ்வொருவேளையும் பசியாறுகிறார்கள் என்பதை எல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக தெரிந்தவர்கள் மாட்டுக்கறியை எதிர்க்க மாட்டார்கள்.
வெறுமே மத அபிமானிகள் மாட்டுக்கறியை எதிர்ப்பார்கள். மாடு உண்பவர்களை கொல்லுவார்கள்.
இப்போது பாருங்கள் மதவாதிகளே ஒட்டுமொத்தமாய் தெய்வமாக வணங்கும் மாட்டையே உயிருடன் புதைக்கிறார்கள்.
உயிருடன் புதைக்கப்படும் போது அம்மாடுகள் அடைந்திருக்கும் மூச்சுத்திணறலை நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு கொடுமை அது...
ஜி.எஸ்.டி வரி மாதிரி ஒவ்வொரு மக்கள் செலவுக்கும் “மாட்டு வரி” என்று ஒன்று வைத்து இம்மாடுகளை காப்பாற்றுகிறேன் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும்.
மிக இயல்பான ஒரு விஷயம் உணவு...
அமெரிக்கர்கள் போல மாட்டுக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
சீனர்கள் போல பன்றிக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
நம்மை விட அவர்கள் எவ்விதத்தில் குறைந்து விட்டார்கள்.
மனிதநேயம், பண்பாடு, பிறரை மதித்தல் இதில் கூட அவர்கள் நம்மை முந்தியே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது.. பன்றிக் கறி சாப்பிடக் கூடாது... எவ்வளவு மனத்தடைகள்...
படித்த மக்களே திருந்துங்கள்... யோசியுங்கள்...
மாட்டின் பாலைக் குடிக்கிறீர்கள்... புரோட்டீன் சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்..
அது போல மாட்டுக்கறியை உண்டு புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு...
உங்களுடைய மதக்கொள்கையால் வடமாநிலங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் சத்துணவில் முட்டை கூட சாப்பிட முடியாமல் தவிக்கின்றன...
நாம் சொல்லும் ஸ்லோகங்கள் எல்லாம்
எத்தனையோ குழந்தையின் தட்டில் உள்ள
சத்தான உணவை தினமும் பிடுங்கி தூர எறிந்து அவர்களின் உணவின் மேல் கைவைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..
ஆனால் அதுதான் உண்மை...

Thursday, December 27, 2018

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?



பதில் - உழைத்து முன்னேறிய சமூகம் என்று அறியப்படும் நாடார்கள், அரசியல் முக்கியத்துவம் இன்றி தவித்தனர். பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு, அரசியல் ஈடுப்பாடும் அதிகரித்தது.

ஜாதீயை, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி, தெய்வ வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் நாடார்களை வளைத்தது. இந்து தூபம் போட்டு மயக்கியது. பொருந்தா கூட்டணி. ஆனாலும், தம் சமூகத்துக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்று தந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த நிலைபாட்டை எடுத்தனர் நாடார் தலைவர்கள்.

தமிழிசை அவர்கள் பதவிக்கு இன்னும் தோள் தருபவர்கள் நாடார் சங்க தலைவர்கள்தான். பொன்னர் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விஷயத்தில் சிறு சங்கடம் இருந்தாலும், பிஜேபியை வைத்து சாமர்த்தியமாக பயணித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

ஒன்றிய அரசு பலம், பணம் இருக்கும் தெம்பில் தமிழக அரசியலில் கலக்கலாம் என்று எண்ணியவர்களை கலங்க வைத்துவிட்டது ஆர்.கே நகர்.

பிஜேபியும் நாடார் சங்கத்திற்கு வரும் கூட்டம் அப்படியே தங்களை கோட்டைக்கு அழைத்து சென்றுவிடும் என்ற நினைப்பில் மண். இனி, பிஜேபிக்கு நாடார்கள் தேவைப்பட மாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அவமானம்.

இனியேனும், நாடார் தலைவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறை உழைத்து, ஒழுக்கத்துடன் இருந்து கட்டிக்காத்த நல்ல பெயரை, பிஜேபியுடன் சேர்ந்து ஏற்கெனவே கெடுத்தாகிவிட்டது, இனி, மேலும் அவமானப்படாமல் உடனே வெளியேறுங்கள்.

நீங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டுமானால், குறுக்குவழியை தேடாமல் மக்களுக்காக உழைத்து முக்கியத்துவத்தை பெறுங்கள். நீங்கள் வந்த பாதையில் கற்றப் பாடத்தை இன்றும் ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவராக இருப்பவர்களுக்கு பயன் பெறும் வகையில் செயலாற்றுவீர்களானால் அது உங்கள் முந்தைய தலைமுறைக்கு செய்யும் பெரும் பேறு மட்டும் இன்றி அரசியல் முக்கியத்துவம் தானாக தேடி வரும்.

சமூகம் என்று இனியும் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்காமல், தமிழர் நலனில் கவனம் செலுத்தினால், தமிழ் நாட்டுக்காக உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்ட சங்கரலிங்கனார் ஆன்மா சாந்தியடையும். செய்வீர்களா?

Wednesday, December 26, 2018

சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் அப்பொழுது மற்றைய நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த போராளிக் குழுக்களையே தமது வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் அப்பொழுது தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் குண்டு வைத்தார்கள். விமானங்களை கடத்தினார்கள். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தியா போன்ற நாடுகளிலும் இடதுசாரி புரட்சகர இயக்கங்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. பண்ணையார்களை கடத்துவது, கொலை செய்வது, அரசாங்கத்திற்கு தகவல் சொல்பவர்களை சுடுவது என்கின்ற பாதையில் அவர்களின் போராட்டமும் போய்க் கொண்டிருந்தது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எமது தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்தினார்கள். சிங்கள அரசாங்கத்தின் கட்சியில் இருந்தவர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டவர்கள், தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என்று எல்லோர் மீதும் அவர்களின் துப்பாக்கிகளும் திரும்பியது.
அன்றைய உலகின் போக்கில் இது தவிர்க்க முடியாத அவலமாகிப் போனது. சிறுவயதில் துரோகி அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டார் என்றுதான் படித்தோம். இன்று இருந்து சிந்தித்தால், சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது. துரையப்பாவை சுட்டது சரி என்றால், இன்றைக்கு விஜயகலா மகேஸ்வரனில் இருந்து அங்கஜன் வரை சுட வேண்டும்.
அண்மையில் இயற்கை எய்திய அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் இயக்கம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அன்றைக்கு அவரை சுட்டிருந்தால் 'ஒழிந்தான் துரோகி' என்பதோடு அவர் வரலாற்றை முடித்திருப்போமே என்று நினைக்கின்ற போதே உள்ளம் நடுங்குகின்றது. இன்றைக்கு அவர் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், மாணவர்களினதும் அஞ்சலியோடும், ஆசான் என்கின்ற மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிரமான தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் விருப்பப்பட்டியலில் இன்றைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இருக்கிறார். அன்றைக்கு புலிகளிடம் மாட்டியிருந்தால், அதோ கதிதான். ரெலோ இயக்கத்தின் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வை சிவாஜிலிங்கம் முன்னின்று நடத்துகின்றார்.
காலம் இவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை நிறையப் பேருக்கு வழங்காமல் போய்விட்டது. இன்றைக்கு தமிழர் அரசியலில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய பலரை துப்பாக்கிகள் கொன்று தீர்த்து விட்டன. அன்றைக்கு யார் துப்பாக்கி ஏந்தியிருந்தாலும், இந்த நிலை மாறியிருக்கப் போவதில்லை. ஏற்கனவே சொன்னது போன்று, உலகில் விடுதலைப் போராட்டம், மக்கள் புரட்சி என்று எல்லாவற்றின் பாதையும் இதுவாகத்தான் இருந்தது.
இன்றைக்கு நாம் இவற்றை படிப்பினைகளை பெறுவதற்கான சம்பவங்களாகத்தான் நோக்க வேண்டும். நியாயப்படுத்தல்கள் செய்து எதிர்காலத் தலைமுறையினரையும் இதே வழியில் செல்வதற்கு தூண்டக் கூடாது. சம்பந்தனை கொல்ல வேண்டும், சுமந்திரனைப் போட வேண்டும் என்று மனநோய் பிடித்து முகநூலில் சிலர் கவிதைகளையும் பதிவுகளையும் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த மனநோய் பரவக் கூடாது என்பதில் இனப்பற்றும் மானுடப்பற்றும் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.