Thursday, December 27, 2018

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?



பதில் - உழைத்து முன்னேறிய சமூகம் என்று அறியப்படும் நாடார்கள், அரசியல் முக்கியத்துவம் இன்றி தவித்தனர். பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு, அரசியல் ஈடுப்பாடும் அதிகரித்தது.

ஜாதீயை, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி, தெய்வ வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் நாடார்களை வளைத்தது. இந்து தூபம் போட்டு மயக்கியது. பொருந்தா கூட்டணி. ஆனாலும், தம் சமூகத்துக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்று தந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த நிலைபாட்டை எடுத்தனர் நாடார் தலைவர்கள்.

தமிழிசை அவர்கள் பதவிக்கு இன்னும் தோள் தருபவர்கள் நாடார் சங்க தலைவர்கள்தான். பொன்னர் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விஷயத்தில் சிறு சங்கடம் இருந்தாலும், பிஜேபியை வைத்து சாமர்த்தியமாக பயணித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

ஒன்றிய அரசு பலம், பணம் இருக்கும் தெம்பில் தமிழக அரசியலில் கலக்கலாம் என்று எண்ணியவர்களை கலங்க வைத்துவிட்டது ஆர்.கே நகர்.

பிஜேபியும் நாடார் சங்கத்திற்கு வரும் கூட்டம் அப்படியே தங்களை கோட்டைக்கு அழைத்து சென்றுவிடும் என்ற நினைப்பில் மண். இனி, பிஜேபிக்கு நாடார்கள் தேவைப்பட மாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அவமானம்.

இனியேனும், நாடார் தலைவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறை உழைத்து, ஒழுக்கத்துடன் இருந்து கட்டிக்காத்த நல்ல பெயரை, பிஜேபியுடன் சேர்ந்து ஏற்கெனவே கெடுத்தாகிவிட்டது, இனி, மேலும் அவமானப்படாமல் உடனே வெளியேறுங்கள்.

நீங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டுமானால், குறுக்குவழியை தேடாமல் மக்களுக்காக உழைத்து முக்கியத்துவத்தை பெறுங்கள். நீங்கள் வந்த பாதையில் கற்றப் பாடத்தை இன்றும் ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவராக இருப்பவர்களுக்கு பயன் பெறும் வகையில் செயலாற்றுவீர்களானால் அது உங்கள் முந்தைய தலைமுறைக்கு செய்யும் பெரும் பேறு மட்டும் இன்றி அரசியல் முக்கியத்துவம் தானாக தேடி வரும்.

சமூகம் என்று இனியும் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்காமல், தமிழர் நலனில் கவனம் செலுத்தினால், தமிழ் நாட்டுக்காக உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்ட சங்கரலிங்கனார் ஆன்மா சாந்தியடையும். செய்வீர்களா?

No comments: