Sunday, June 23, 2019

1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர்

எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள்.
1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர்.
வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறே தெரியாமல் அரசியல் தற்குறிச் சமூகமாகத் தான் சுற்றுக் கொண்டிருக்கிறோம்!
**
அறிஞர் அண்ணா எந்த இந்தியை எதிர்த்தாரோ அதே அண்ணா பெயரில் கட்சி நடத்திய மகோரா அவர் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதமாக ஒரு நிலைப்பாடை எடுத்தார்.
அதுதான் 86களில் இந்தி வாரம் தமிழ்நாட்டில் கடைப்பிடிப்பதென வந்த சுற்றறிக்கை, நவோதையா பள்ளிகள். மீண்டும் திமுக களத்தில் இறங்கி அனைவரையும் ஒன்று திரட்டியது. மாணவர்கள் ஒன்று திரண்டனர். இந்தி அரக்கி என்று ஒரு பெண் உருவபொம்மையை எரித்தனர்.
பேராசிரியர் தான் அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அவர் தலைமையில் அரசியலமைப்பு அரசியலமைப்பு சட்ட நகலை எரித்திட கோவையில் இந்தி எதிர்ப்பு மாநாடு முடிவெடுக்கப்பட்டது.
திட்டமிட்டபடி நவம்பர் 17ம் தேதி 1986ல் திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்று வழியனுப்பி வைக்க பேராசிரியரும் சென்னையின் மற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பேராசிரியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு
மாநிலம் முழுவழும் திமுகவினர் போராட்டத்தின் போது கைதாகினர்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் பாண்டியன் அந்த 7 பேரின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய தீர்மானம் போட்டார்.
திமுகவின் மதுராந்தகம் ஆறுமுகம் சபையில்,"அண்ணாவின் படத்தை இந்த சபையில் மாட்டிவைத்துவிட்டு இப்படி செய்தால் முறையா ? அறிஞர் அண்ணாவே அன்று சட்ட நகலை எரித்தவர் தானே ? அண்ணாவின் திருவுருவ படத்தை எடுத்துவிட்டு வேண்டுமானால் இதை நீங்கள் செய்யலாம் என்று கேட்க, அவரை உதாசீனப்படுத்தினார் சபாநாயகர்.
நாஞ்சில் மனோகரன், ரகுமான்கான் போன்ற உறுப்பினர்களை பேச அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்காமல் போக அவர்களும் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கும், ஆளுநருக்கும் கடிதம் மூலம் 7 பேரின் பதவியை பிடிங்கிட ஆணை பிறப்பிக்க கோரியதைத்தாண்டி, எந்த நாவலர் நெடுஞ்செழியன் 23 ஆண்டுகளுக்கு முன்னால் சபையில் காரசாரமாக விவாதம் நடத்தினாரோ அதே நாவலர் ஆளும் கட்சி சார்பாக 7 பேரின் பதவிப்பரிப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அந்த நேரத்தில், அதே போன்று ஒரு சட்டநகலை புதுடில்லியில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வைகோபாலசாமி எரித்த போது, இந்தியை பலவந்தமாக திணிக்க முனைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரின் பதவியை பறிக்கவில்லை என்பது கொசுறுத் தகவல்.
கலைஞர், பேராசிரியர் உட்பட 10000 திமுகவினர் கைதாகி சிறையில் இருந்தனர். நாவலரின் இந்த தீர்மானம் கலைஞருக்கும் பேராசிரியருக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.
பேராசிரியர் உட்பட திமுகவின் சமஉ விடுதலை பெற்றிட, எழும்பூர் நீதிமன்றம் கலைஞரை வாக்குமூலம் கேட்க,
"கழனியில் களைப்பறிக்கும் விவசாயி கழனியை அவமதித்தவன் ஆகமாட்டான். ஐந்து கோடி தமிழர்களின் எதிர்காலத்தில் இருள் சூழாதிருக்கவே போராடினோம், எனவே நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று வாக்குமூலம் கொடுத்தார்.
உண்மையை சொன்னதற்காக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு 10 வாரம் கடுங்காவல் சிறைவாசம் கொடுத்தது நீதிமன்றம். சிறைக்கைதிகள் உடையை சிறையில் அதிகாரிகள் கொடுத்து உடுத்திக்கொள்ளுமாறு அணையிட்டனர்.
சுற்றி இருந்த திமுகவினர் வருந்தி கண் கலங்க, மிகச்சாதாரணமாக,'என் தாய் தமிழிமொழியைக் காக்க இந்தியை எதிர்த்து நான் போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்திருக்கும் போது சிறை ஆடைகளை அணிவதும் எனக்கு கிடைத்த பெருமை தான்' என்று ஏற்றுக்கொண்டார். மாலையில் சிறைக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யவும், மற்றவர்களை சந்திக்கவும் தடை விதித்தனர்.