Tuesday, September 11, 2018

முதல்மரியாதை...

#1
பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஹிட்டடித்த சிவாஜி படம்....
கடைந்தெடுத்த ஒரு சாதிவெறிப்படம் என்றால் இது தான். படத்தில் ரஞ்சனி ஒரு சக்கிலியப்பெண். தேவர் வகுப்பை சேர்ந்தவர் தீபன். சிவாஜி பெருந்தன்மையாக சாதி பார்க்காமல் திருமணம் செய்து வைத்ததும் ரஞ்சனியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு கலங்குவதாக வரும் காட்சி. இந்தக்காட்சியில் பாரதிராஜா என்கிற கலைஞனைவிட பாரதிராஜா தேவர் தான் மனதில் வந்தார்.
அப்புறம் அந்த வடிவுக்கரசி. ராமாயணக்கூனி போல் சித்தரிக்கப்பட்ட கேரக்டர். வடிவுவின் நிலையை நினைத்துப்பாருங்கள். பருவகாலத்தில் வடிவு சத்யராஜை காதலிக்கிறார். காதலுக்காக இணைகிறார்கள். வடிவு கர்ப்பமாகிறார். ஒரு வைத்தியரிடம் செல்ல வைத்தியர் வடிவுவின் அப்பாவிடம் பொட்டுக்கொடுக்கிறார். சத்யராஜ் அவரை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அரிவாளும், ஆத்திரமும் அந்த பகுதிக்கு புதிதல்ல.
'மந்தையிலே நின்னாலும் வீரபாண்டி தேரு' எனச்சொன்னதற்காகவும், கைகழுவி மீன் குழம்பு சோறு கொடுத்ததற்காகவும் சிவாஜி ராதாவுக்காக அரிவாளை தூக்கியது நியாயமென்றால் தன் உடலையே கொடுத்த காதலிக்காக சத்யராஜ் வைத்தியரை வெட்டியதில் என்ன அநியாயம் இருக்கிறது? ஜெயிலிலிருந்து வந்தாலும் காதலியையும், மகளையும் பார்க்க வருகிறாரென்றால் எத்தனை காதல் இருக்கவேண்டும்.
வடிவுவின் நிலையோ காதலன் சிறையில்.. தந்தை தன் பேச்சை கேட்காமல் ஒரு ஆடு மேய்ப்பவனை(சிவாஜி) திருமணம் செய்துவிட்டாரே என்கிற ஆத்திரம். தன் நிலை அறிந்தும் கட்டிக்கிறானே என்ற வெறுப்பு. இதுவே வடிவுவை சிவாஜி மேல் எரிச்சலடைய வைக்கிறது. மேலும் சத்யராஜ் தொட்ட உடம்பை சிவாஜிக்கு எல்லாம் மறந்தும் கொடுத்துவிடவில்லை. 'புவனா ஒரு கேள்விக்குறி' சுமித்ரா செய்தால் நியாயம். வடிவுக்கரசி செய்தால் அநியாயமா?
வடிவுவின் குழந்தை அருணா. அருணாவுக்கு எல்லாம் தெரிந்த சிவாஜி ஒரு திருடனை மாப்பிள்ளையாக்கவேண்டும்?. தனக்கு பிறக்காததால் தானே. தன் சொந்தக்காரன் தீபன் ஆசைப்பட்டால் ரஞ்சனியை மணமுடித்துவைக்கும் சிவாஜி அருணாவுக்கு திருடனைக்கட்டிக்கொடுப்பாராம். பின் அவரே போலீசை கூப்பிட்டு நியாயத்தை நிலை நாட்டுவாராம்.
இந்தப்படத்தில் சத்யராஜ், வடிவுக்கரசி, அருணா கேரக்டர்கள் தான் மனித உளவியலை பறைசாற்றிய கேரக்டர்கள்.....
#2
இந்த சிறுக்கிமவ ஒரு தப்பு பண்ணிப்புட்டேன்...
இல்லேன்னு சொல்லல....
ஒரு நாள்.... ஒரு பொழுது...
ஒருத்தனோட படுத்து எந்திரிச்சேன்...
வயத்துல ஒரு புள்ளயோட வந்தேன்...
அதுக்காக உன் தலையில கட்டிவச்சு
எனக்கு ஆயுசு பூராவும் தண்டனையா....
இந்த வசனம் முதல்மரியாதை படத்துல... வடிவுக்கரசிங்கிற வில்லி காரக்டர் சொல்றது... நடிகர் திலகம் சிவாஜி தான் ஹீரோ..
இந்தப்படத்துல வெள்ளையும் சொள்ளயுமா சிவாஜி பந்தாவா பண்ணையார் மாதிரி வலம் வந்தாலும் அவர் மனசுக்குள்ள ஒரு ஆறாத சோகம் இருந்துகிட்டேயிருக்குறமாதிரி தான் கதைக்கரு அமைஞ்சிருக்கும்... எப்பப்பாத்தாலும் நொய்நொய்யின்னு வடிவுக்கரசி தன் புருசனை வஞ்சி கிட்டேயிருக்குறமாதிரியும்.. இவர் பரம பொறுமைசாலியா எல்லாத்தையும் சகிச்சிகிட்டு அதை கண்டுக்காம வர்றது மாதிரியும் தான் திரைக்கதை அமைச்சிருப்பாங்க.... ரசிகர்கள் எல்லாருக்கும் சிவாஜிமேல அனுதாபமும்... வடிவுக்கரசி மேல கோபமும் தான் வரும்...
இந்த படம் ரிலீசாகி கிட்டத்தட்ட முப்பது வருசம் ஆகப்போகுது... இதுநாள் வரைக்கும் முன்று தலைமுறை ஆட்கள் இந்த படத்தை பாத்துருப்பாங்க... ஆனா எல்லாருடைய பார்வையிலும் சிவாஜி தான் ஹீரோ... வடிவுக்கரசி கொடுமைக்கார வில்லி... அதைத் தாண்டி ஏன் எதுக்குங்கிற ரீதியில யாரும் சிந்திச்சிருப்பாங்களானனு தெரியல.... ஏன்னா மேலாப்புல பாத்தா அப்படித்தான் தெரியுது... இதை நியாயப்படுத்துறமாதிரி தான் பின்னணி இசையும் இயக்குநர் ஆலோசனைப்படி இளையராஜாவும் அமைச்சிருப்பாரு... சிவாஜியைக் காட்டும் போது பரிதாபம் ஏற்படுத்தக் கூடிய சோக இசைப்பின்னணி... நம்மளயும் அப்படித்தான் ஃபீல் பண்ண வைக்கும்....
கதைப்படி வடிவுக்கரசி ஒரு நாட்டாமையோட மகள்... பிறந்ததிலிருந்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வந்திருப்பா... ஒரு நாள் திருவிழாவுக்கு போயிருந்தப்ப.. அங்க ஆண்ட்டி ஹீரோ சத்யராஜ் இவரை கரெக்ட் பண்ணி எல்லாம் முடிஞ்சிருக்கும்... கிராமத்துப் பெண்ங்கிறனாலயும்... காதல் காமம் கருவுறுதல் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லததாலும் பருவத்தில் இயற்கையாகவே ஏற்பட்ற சலனத்தினாலும் தான் அந்த சூழ்நிலைக்கு பழியாகியிருப்பாங்க... அது சரின்னும் சொல்ல முடியாது தப்புன்னும் சொல்லமுடியாது...
பரம்பரை கௌரவம் அதுயிதுன்னு பல காரணங்களுக்காக அதை மறைச்சு தன் மருமகன் சிவாஜிக்கு வடிவுக்கரசியை கல்யாணம் பண்ணிய கையோட வடிவுக்கரசியோட அப்பனும் போய்ச் சேர்ந்துருவாப்ல... ஆனா கல்யாணம் பண்ணின நாள்ளயிலுருந்து கிட்டத்தட்ட இருபது வருசத்துக்கும் மேல தன் தாலிகட்டின மனைவி கிட்ட படுக்கையை பகிர்ந்துருக்கமாட்டாரு... சிரிச்சும்பேச மாட்டாரு... அது அந்தப் படத்துல நான் மொத பாராவில சொன்னவடிவுக்கரசி டயலாக்குக்கு அப்றம் சிவாஜி பேசறதுலயே தெரியும்...
தான் அறியாத வயசுல அந்த செயலுக்காக... தன்னோட வாழ்க்கை முழுவதும் கலவியின்பத்துல இருந்து தள்ளி வைக்கப்பட்டு... கணவன்ங்கிற அந்த ஒரு ஜீவன் கிட்ட யிருந்து ஒரு மனம் கனிந்த பேச்சும் இல்லாம ஒரு எந்த ஒரு மனைவியுமே இருந்தா... இது மாதிரி தானே நடந்திருப்பா... இது உளவியல் ரீதியான ஒரு பாதிப்பு தானே... அப்புறம் எப்படி வடிவுக்கரசி நெகட்டிவ் கேரக்டர் ஆவார்....
நியாயமா பாத்தா இந்தப்படத்துல சிவாஜி அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாம இருந்தாலும் சிவாஜி காரக்டர் தான் வில்லன் காரக்டர்... சாடிஸ்ட் காரக்டர்... தன் மாமனார் கால்ல விழுந்ததுக்காக இருபது வருசம் செருப்பே போடாம நடக்குற பாமரத்தனமான காரக்டர்... தன் மாமனாருக்காக குழந்தையோட இருக்குற பெண்ணை கல்யாணம் பண்ணினாலும்... அதையே காரணமா வச்சு அவளோட வாழ்க்கைய வாழா வெட்டியா ஆக்கி... அவளையும் சந்தோசமா வாழவிடாம... தானும் சந்தோசமா வாழாம... மனைவியை மனஉளைச்சல்ல பதற்றமான சூழ்நிலையிலேயே வாழ வச்சு... அதனால தானும் மனஉளைச்சலுக்கு ஆளாகி... சோகத்துல ஆலமரத்துக்கு அடியில ஒக்காந்து கிட்டு...பூங்காத்து திரும்புமா... ஏம்பாட்டவிரும்புமா.. எனக்கொரு தாய் மடி கிடைக்குமான்னு ஃபீல் பண்ணிட்ருப்பாரு....
தன் மனைவியின் நிறைகுறைகளை மன்னிச்சு.. அவ கூட வாழ்ந்திருந்தா இவருக்கு வடிவுக்கரசி மடியே போதுமாக இருந்திருக்குமே.. தாய் மடி தேவைப்பட்ருக்காதே....
இவரு சோகத்துல இருக்கும் போது... இவர் சோகத்துக்கு வடிகாலா மீன்காரி ராதா மேல காதல் அரும்புமாம்... இவரு மனசு விட்டு சோகராகம் பாட.... பதிலுக்கு மீன்காரி எசப்பாட்டுபாட... ரெண்டு பேரும் பார்வையாலயே காதல் பண்ண... அந்த காதலே ஒரு திருப்பு முனையா காட்டிருப்பாங்க... ஆனாஊனான்னா புருசனை வய்யிற வடிவுக்கரசி தன் புருசனோட அந்த காதலை அரசல் புரசலா காதுக்கு வந்துதும்.. ராதா வௌக்கமாத்தால அடிக்கபுறப்பட்றது கூட தன் புருசன் மேல தான் வெளிக்காட்டாம உள்வச்சிருக்குற அதீத காதலின் விளைவாக ஏற்படும் பொசசிவ்நஸ் தான்...
ஆனா பருவத்துலயே சலனப்பட்டு வழுக்கி விழுந்தஅந்த பணக்கார திமிர் பிடிச்ச வடிவுக்கரசி காரக்டர்... அதுக்கப்புறம் தன் புருசன் தன் கூட படுக்கமாட்டேங்கிறான்ங்கிறதுக்காக வேற ஒருத்தன் கூட காதலோ காமமோ பகிர்ந்துகிட்ட மாதிரி கதையில இருக்காது... அப்டீன்னா... நியாயமா பாத்தா... வடிவுக்கரசி தானே பெஸ்ட் இந்த படத்துல...
செம்பு நிறைய காப்பித்தன்னியும்... நகை நட்டு உடம்பு பூராவும் போட்டு.. வயிறு நிறைய கவிச்சிச்சோறு தின்னுட்டா... ஒரு பெண் சுகபோகமா வாழ்ந்துருவாளா.. அவ மனதிலும் ஆசாபாசங்கள்.. அன்பு பாராட்டுதல்கள்... காதல் சிந்தனைகள் தோன்றாதா..
என்னை்ப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு சித்தாந்தத்தில் பலத்த பெண்ணடிமைத்தனத்தைத்தான் இந்தப் படம்போதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன்.. இ்ன்னொருவன் தொட்டுட்டா கெட்டுப் போனவ ங்கிற அவளை தொட்டா கூட பாவம் ங்கிற கேவலமான சித்தாந்தைத்தை ஆணித்தரமா சொல்லுகின்ற படம் தான் இது...
திரு.செல்வராஜ் அவர்களின் கதையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த பெண்ணடிமை போதிக்கும் இந்த படம் 1985ம் வருடத்திய தமிழ் மொழியில் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை வென்றது என்பதும் வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது...