Friday, August 16, 2019

ஒரு ஊரில் ஒரு பிராடு சாமியார் இருந்தார்.

ஒரு ஊரில் ஒரு பிராடு சாமியார் இருந்தார்.

(சாமியார் என்றாலே பிராடு தானே என்று இதில் என்ன தனியா பிராடு சாமியார் என்று கேட்பவர்கள் கருப்பப் படுவார்கள்)

அவரிடம் ஒரு தமிழன்  வந்து
அய்யா! வாழ்க்கையிலே பணம் இருக்கு, வசதி சொத்து சுகம் எல்லாம் இருக்கு. ஆனால் இப்போ கொஞ்ச நாளா எதுவுமே இல்லைன்னு தோணுது. என்றானாம். .

அதற்கு அந்த சாமியார் மெல்ல சிரித்துக்கொண்டே கேட்டார்
எப்போதில் இருந்து இப்படி எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது ? என்று கேட்டார்.

அதற்கு அந்த தமிழன் சொன்னான்
சரியா நினைவில்லீங்க!, ஆனா, திராவிடத்தால் வீழ்ந்தோம்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க பாருங்க , அப்போதில் இருந்து தான் இப்படி தோணுச்சு என்று சொன்னார்.

சாமியார் மர்மப் புன்னகையோடு தலையசைத்தார்.

சரி! உன்னிடம் இருப்பதை எல்லாம் ஒரு மூட்டை கட்டி கொண்டு வா என்று  சொன்னார்.

அதற்கு தமிழனும் தன்னிடம் இருக்கிற பணம் நகை இவற்றை எல்லாம் மூட்டை கட்டி அந்த சாமியார் முன்னிலையில் வைத்தான்.

தீடீர்ன்னு அந்த சாமியார் அந்த பணம் நகை எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்


பதறிப் போன தமிழன் பின்னால் துரத்திக்கொண்டே போனான்.

சாமியாரை விரட்டி விரட்டி துரத்தியதில் , சாமியார் போகிற போக்கில் அந்த மூட்டை அவிழ்ந்து சில பண கட்டுகளும் , நகைகளும் விழ ஆரம்பித்தன.

பெரும்பாடு பட்டு விழுந்த அந்த பணக்கட்டுகளையும் நகைகளையும்   பொறுக்கிக்கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்தவாறே இன்னும் அந்த சாமியாரை துரத்த ஆரம்பித்தான் தமிழன்.

ஒரு கட்டத்தில் களைத்துப் போன தமிழன்
சரி இதுவாவது மிஞ்சியதே
என்று கையில் இருக்கிற பணக்கட்டுகளையும் நகைகளையும் கட்டி அணைத்தவாறே  திரும்பினான்.

அப்போது, அங்கே நின்ற பெரியார் சொன்னார்.
அடேய் தம்பி , உன்னிடம் இருந்தவை என்னவெல்லாம் என்று உண்மை உனக்கு தெரியாமல் போனதே,
அதன் அருமை பெருமை தெரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அடுத்தவன் சொன்னதை நம்பி, 
உன் உடமைகளை கொண்டுபோய் அந்த சாமியாரிடம் கொடுத்துவிட்டு 
இப்படி எஞ்சியதில் திருப்தி அடைகிற நிலைக்கு வந்து விட்டாயே, இனியாவது நீ பெற்றதை காத்துக்கொள், சாமியார் பயல்களை நம்பாதே என்று சொல்லி அனுப்பினாராம்.

ஆமாங்க, அந்த காவிகள் சொன்னதில் நான் புத்திகெட்டுப் போனேன் என்று  புலம்பிக்கொண்டே போனானாம். 

இந்த கதை எங்கோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதா ?

மருத்துவ படிப்பு உரிமை  , ஜல்லிக்கட்டு , காவிரி , நியாயவிலைக்கடை என்று நம்மிடம் இருந்ததை எல்லாம் பறிகொடுத்து விட்டு பாஜக அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற தமிழன் கதை தான் இது . 

மூன்று சம்பவம் - மூன்று கிளைமேக்ஸ்

மூன்று சம்பவம் - மூன்று கிளைமேக்ஸ்

சம்பவம் 1 :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகிறான், அப்போது அருகில் இருந்த இருவர் திருடனை மடக்கி பிடித்து செயினை மீட்டு அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார்கள்.

சம்பவம் 1 குறித்து மதவாதிகள் கண்ணோட்டம் :

அந்த ஆண்டவன் தான் இந்த ரெண்டு பேரையும் அனுப்பி செயினை காப்பாத்தி கொடுத்திருக்கான்.

சம்பவம் 2 :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகிறான், அப்போது அருகில் யாரும் இல்லை. திருடன் தப்பி விடுகிறான்

சம்பவம் 2 குறித்து மதவாதிகள் கண்ணோட்டம் :

 நல்ல வேளை செயினோட போச்சு, உயிர் போயிருந்தா திரும்பி வருமா ? ஆண்டவன் உயிரை காப்பாற்றி இருக்கிறான்.

சம்பவம் 3 :

கத்தியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணின் செயினை திருடன் ஒருவன் பறிக்க முயல்கிறான், அந்தப் பெண் அவனோடு போராடுகிறாள், கோபம் அடைந்த திருடன் அவளை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிக்கிறான். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் மரணம் அடைகிறாள்.

சம்பவம் 3 குறித்து மதவாதிகள் கண்ணோட்டம் :

விதியை யாரால் மாத்த முடியும், அவளுக்கு ஆண்டவன் கொடுத்த ஆயுசு அவ்வளவு தான்.

----- கடவுளை காப்பாற்ற மதவாதிகள் எப்படி எல்லாம் போராடுகிறார்கள்  ?

அவர்கள் மத வியாதிகள் மட்டும் அல்ல. கடவுளர்களின்Direct Representatives

ஒவ்வொரு தூண் துரும்பிலும் சாதி...

ஒவ்வொரு தூண் துரும்பிலும் சாதி...

திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று ஊர்வலம் முன்னேறியது. முகப்பில் செங்கமலத்தம்மாள் என்பவர் காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக்கொடியை ஏந்தி இருந்தார். ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியரும் சிறிய காகிதக்கொடிகளுடன் நடந்தனர். இவர்களைப்பார்த்து அங்கு மாடு மேய்ப்பவர்களும் ஊர்வலத்தில் உற்சாகமாக இணைந்தனர். சேரிகளில் வசித்த சிறுவர்களுக்கு இது புது அனுபவம்.

 அவர்கள் அக்ரஹாரத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருக்களிலும் அப்போது தான் முதன்முதலாக நுழைகிறார்கள். அக்ரஹாரத்தின் திண்ணையில் உட்காருவது கதவை தொடுவது, வீடுகளுக்குள் ஓடுவது என அவர்கள் பரபரத்தனர். அன்று மாலை பாங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. உயர் சாதியினர் எனப்படும் ஆண்டைகள் பலரும் அதில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களுக்கோ ஒன்றும் புரியவிலலை. எட்ட நின்று தாங்கள் கையெடுத்து கும்பிடும் ஆண்டைகளை தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.

அந்த பொழுது முடிந்தது.      மறுநாள்.... ஊர்வலத்திலே பங்கேற்ற ஒரு சிறுவன் அந்த அனுபவ நுகர்வோடு மறுநாள் விளத்தூர் என்ற கிராமத்திற்கு போனான். காத்திருந்தது போல் அவனைப் பிடித்துக் கொண்டு போய் ஒரு மாட்டுத்தொழுவத்தில் கட்டி போட்டார்கள். சிறிது நேரத்தில் அய்யர்களும் சில நிலபிரபுக்களும் கையில் புளிய விளாருடன் வந்தனர். உனக்கு என்ன திமிருடா? எங்க தெருக்குள்ள எல்லாம் நுழைகிற துணிச்சல் உங்கெளுக்கெல்லாம் எப்படி வந்திச்சு? என்று சிறுவன் கதற கதற அடித்தார்கள். சிறுவன் உடலெங்கும் ரத்தம் ஓடியது. பின்னர் தலையாரி அந்த சிறுவனை அவிழ்த்து அடித்து விரட்டினான்.      சிறுவன் வேதனையோடு உள்ளூர் காங்கிரஸ் தலைவரிடம் போய் சொன்னான். நேத்து நீங்க செஞ்ச காரியத்துக்கு உன்ன நேத்தே குழிதோண்டி புதைத்திருக்கணும்? ஓடுறா! என்று அவர் விரட்டினார். சிறுவன் அதிர்ச்சியோடு திரும்பினான். அந்த சிறுவனுக்கு விழுந்த அடி ஒரு அடையாள குறியீடு ஆகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை.

ஒரு மாதம் ஓடியது. திருத்துறைப்பூண்டியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. பெரியார், ஈ.வி.கே சம்பத், எம்.ஆர். ராதா, அண்ணா ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர். அந்த சிறுவன் கூட்டத்தில் கலந்து கொண்டு பரவசமாக ஊருக்கு திரும்பினான். அந்த கூட்டத்திற்கு அந்த ஊரில் டீக்கடை வைத்திருந்த ஒரு மிராசுதாரும் வந்திருந்தார். அவர் குடும்பமே கருப்பு உடை அணிந்திருக்கும். பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் பேட்ஜை அணிந்துக் கொண்டு சிறுவன் டீக்கடையின் உள்ளே உட்கார்ந்து டீ கேட்டான். அவ்வளவுதான் அங்கிருந்த அத்தனை பேரும் அவனை அடியோ அடி என்று அடித்து புரட்டினர். அய்யா நான் பெரியார் கட்சிக்காரன் என்று சிறுவன் கூக்குரலிட்டான். என்னடா பெரியார் கட்சி என்று கேட்டுக்கொண்டே கருப்பு சட்டைக்காரர் அடித்தார். அடி வாங்கிய சிறுவன் பெயர் பி.எஸ். தனுஷ்கோடி. சில மாதங்கள் ஓடின. அவனிடம் படிக்கச்சொல்லி சிலர் ஒரு செய்திதாள் கொடுத்தார்கள். ஜனசக்தி பத்திரிக்கையை மஞ்சவாடி நடராஜ கண்டியர், கீராளத்தூர் மாரிமுத்துப் பிள்ளை, காளிமுத்து மைனர் ஆகியோர் அந்த பத்திரிக்கையை படிக்கச் சொன்னார்கள்.

 சீனிவாசராவ் என்ற கன்னடத்து அய்யர் திருத்துறைப்பூண்டி வந்திருக்கிறார். அவர் சேரி வீட்டில் சாப்பிடுவார். அவர்கள் வீட்டு பாத்திரத்திலே சாப்பிடுவார். வீட்டில் பாய் இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டார். அவர் நல்ல சிவப்பாக இருப்பார் என்றும் அவரைப்பற்றி தனுஷ்கோடியிடம் கூறினார்கள். பிறகு தனுஷ்கோடி அவரைப் பார்க்க போனார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சி அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலைமை அதுவே.     ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் திராவிட இயக்கம் வேரூன்றிய  போது சேரிகளுக்குள் செங்கொடி நுழைந்தது. இருமுனை தாக்குதலை அது சந்தித்தது. அக்ரஹாரத்தினரும் பிற்படுத்தப்பட்ட தெருக்களை சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களை அடிமைவிலங்குகள் போல் நடத்தினர். அதே சமயம் அதே அக்ரஹாரங்களில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட தெருக்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளை நெஞ்சில் ஏந்தியவர்களும் வந்தார்கள். பி.சீனிவா சராவ் கன்னடத்து பிராமணர் என்றால் உள்ளூர் நெடும்பலத்திலிருந்து தண்டலை கண்ணப்பன் என்ற பிராமணர் செங்கொடியை ஏந்தினார்.

 இதேபோல் பிற்படுத்தப்பட்ட தெருக்களில் வெங்கடேச சோழகர், ஏ.ஆர். ராமானுஜம், சாமிநாதன் உள்ளிட்டோர் செங்கொடியை உயர்த்திப் பிடித்தனர். வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட் கொடி மரத்தை வெட்டினார்கள் என்றால் ஈசனூர் சுப்பையா நாயுடு உள்ளிட்டோர் கொடி மரம் நட்டனர். கருப்பின தலைவர் கிரீஷ் ஹானியை நிற வெறியர்கள் சுட்டுக்கொன்றனர். அவரை காப்பாற்ற ஆப்பிரிக்காவின் ஒரு வெள்ளை பெண்மணி சிலிர்தெழுந்தார் என்று நெல்சன் மண்டேலா குறிப்பிடுவார். இவ்வாறுதான் தீண்டாமையை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் சமர் நடத்தினர்.

 கம்யூனிஸ்டுகள் இயக்கம் நடத்தியது வாக்கு வங்கி அரசியலுக்காக அல்ல. சொல்லப்போனால் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே தேர்தல் என்ற முறை உருவாகும் முன்பே தீண்டாமையை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் களத்தில் நின்றனர். இக்கட்டுரை எழுதுபவர் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ராயமுண்டான்பட்டி ஆகும். அங்கு ஊராட்சி தலைவராக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்.

இந்த ஊர் நடுக்காட்டில் இருந்தது. இங்கு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளியும் இருந்தது. சோளகம் பட்டி ரயில்வே நிலையத்தில் இறங்கி கிழக்கே 2 மைல் நடந்தால் இந்த ஊர் வரும். இந்த பள்ளிக்கூடத்திற்கு திருச்சியிலிருந்து ஒரு ஆசிரியர் சோளகம் பட்டி ரயில் நிலையம் வழியே வருவார். மழைக்காலத்தில் சாலை சகதியோடு இருக்கும். இந்த ஆசிரியர் தன் கால் செருப்புகளை கழற்றி தூக்கிவரச்சொல்லி தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் தான் கொடுப்பார். இது தலைவரின் கவனத்திற்கு போனது. எது வேண்டுமாலும் செய்து இதனை தடுத்து நிறுத்துங்கள் என அந்த பள்ளியில் பயின்ற தன் மகன் உள்ளிட்ட மாணவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்தார்.

சிறுவர்களான மாணவர்கள் அந்த ஊரின் தெருக்களின் வழியே ஊர்வலமாக திரண்டனர். செய்தி அறிந்த ஆசிரியர் மாணவனிடம் ஊர்வலத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டார். பொதுவாக கிராமங்களில் சாதி வாரியாகத்தான் தெருக்கள் இருக்கும். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருக்கள் கிராமத்தின் கொல்லைப்புறமாக அமைந்திருக்கும். கம்யூனிஸ்ட் ஊராட்சித்தலைவரோ தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் நடுவில் வீடுகளைக் கட்ட வைத்தார். மேல்சாதிக்காரர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் தெருக்களிலேயே தாழ்த்தப்பட்ட மக்களை குடியிருக்க வைத்தார். இதேபோல் கிராமங்களில் விவசாய கூலிகளின் நடவு மற்றும் அறுவடை கூலி கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தங்கள் நடக்கும். உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டவர்களை தரையில் உட்கார வைக்க முயற்சிப்பர். அவர்களையும் சமமாக உட்கார வைத்தால்தான் பேசமுடியும். இல்லாவிடில் பேச்சு வார்த்தையே வேண்டாம் என்று அரசு அதிகாரிகளிடம் கறாராக அவர் சொல்லுவார். அவர் கம்யூனிஸ்ச்ட் கட்சியின் செயலாளராக இருந்த என். வெங்கடாசலம்.

கடைசியில் அதே சோளகம் பட்டி ரயில் நிலையத்திலிருந்து இறங்கி போகும் போதுதான் அவர் கடத்தி கொல்லப்பட்டார். அவர் சடலமே கிடைக்கவில்லை.

 தஞ்சாவூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்க ளின் ஒவ்வொரு பொருளாதார போராட்டத்திலும் அடிப்படை வசதிகள் கோரிய போராட்டத்திலும் சமூக நீதி பின்னப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் சாதியம் இருந்தமையால் அதற்கு ஏற்ப கம்யூனிஸ்ட்கள் அதை எதிர்கொண்டார்கள்.

தீண்டாமை எதிர்ப்பு என்பது போராட்டத்தின் இயல்பாகவே இருந்தது. சாதியை எதிர்ப்போரிடம்  இன்று இருவித போக்குகள் உள்ளன. எல்லா சாதியும் சமம், சம உரிமை வேண்டும் என்று சமத்துவம் பேசுவோர் உண்டு. சாதி என்பதே பொய். அது உடைமை வர்க்கத்தின் சதி. சமரசம் இன்றி அதன் ஆணி வேரை பிடுங்குவோம் என்ற முறையில்தான் தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் அப்போது போராடினர். தங்கள் பிள்ளைகளுக்கும் அந்த கல்வியை புகட்டினர். அதே மண்ணில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன் மாநில மாநாட்டை முதன் முதலாக நடத்துகிறது. சமூக நீதி காக்கும் வர்க்க போராட்டத்திற்கு தஞ்சாவூரின் கள அனுபவம் ஆசானாக உள்ளது. பட்டை தீட்டப்பட்ட அனுபவத்தோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேலும் பீடு நடைபோடும்