ஏதோ சிரியாவில் புதிதாக குழந்தைபலி நடப்பது போல பலர் பொங்குகின்றார்கள், கடந்த 7 வருடமாக நடக்கும் சோகம் அதுவும் சமீப 3 ஆண்டுகள் மகா மோசம்
அங்கு அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் மனம் மாற வேண்டும். அந்நிய நாட்டு தூண்டுதலினால் நாசமாய் போனோம் என்ற எண்ணம் அங்கிருக்கும் போராளிகள் மனதில் உண்டாகமல் சாத்தியமில்லை
சிக்கல் அவர்கள் அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கியதில் தொடங்கியது, ஆட்சி மாற்றம் வேண்டுமாம். உடனே அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் தடையின்றி கிடைத்தன
இதே அமெரிக்கா சவுதி, குவைத், ஐக்கிய அரபு நாடுகளில் மக்களாட்சி வேண்டும், ஜனநாயகம் வேண்டும் என பேசுமா? பேசாது, ஆனால் சிரியாவில் மட்டும் புரட்சி வேண்டுமாம், இவர்கள் ஆதரிப்பார்களாம்
சிரிய சிக்கல் இன்று வந்ததல்ல அதன் மூலம் சதாம் காலத்திலே தொடங்கிற்று, சதாம் அமைக்க முயன்ற அணுவுலையினை இஸ்ரேல் நொறுக்க பின் ஷியா தேசம் என்றும் பாராமல் சில சதாமின் உதவி மூலம் சிரியா செய்ததும் பின் அதனையும் இஸ்ரேல் நொறுக்கியதும் வரலாறு
இதை எல்லாம் விட மகா முக்கியமான விஷயம், சதாமின் பணம். பின்லேடனை தொலைப்பதற்கு முன் சதாமினை தொலைத்தே தீரவேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா பாய அப்பொழுது சதாமின் ஏராளமான பணங்கள் சிரியாவில் பதுக்கபட்டதாகவும், அமெரிக்கா அதனை கேட்டபொழுது சிரியா மறுத்ததாகவும் செய்திகள்
இதுவும் ஒரு கோணம்
இன்னொரு கோணம்தான் அரபு அரசியலின் இன்னொரு முகத்தை வெளிபடுத்துகின்றது, அது அசிங்கமானது
அதாவது ஷியாக்களின் கை ஓங்குவது சன்னிகளுக்கு பிடிக்கவில்லை. ஈரானின் செல்வாக்கு இன்று அங்கு ஓங்குகின்றது, ஏமனில் அவர்கள் ஆதரவுடனே யுத்தம் நடக்கின்றது, ஈராக் ஈரானுடன் ஐஎஸ் ஒழிப்பில் இணைந்தே நிற்கின்றது , சிரியாவும் ஈரானுடன் நெருக்கமான நாடு என்பதால் ஷியாக்கள் பலம் பெறுகின்றார்கள் இதில் லெபனானின் ஹிஸ்புல்லாவும் இணைகின்றது
இந்த ஷியாக்களின் எழுச்சி சன்னி நாடுகளுக்கு உவப்பானது அல்ல, இன்று சதாம் போல தைரியமான சன்னி தலைவர்களும் இல்லை, அவர்கள் எல்லாம் அமெரிக்காவின் பின் ஒழிந்து ஷியாக்களை அழிக்க சொல்கின்றார்கள்
சரி ஷியா கூட்டணி இணைந்ததில் என்ன இருக்கின்றது என்றால் குர்துகள் தனிநாடு பெற கூடாது என்ற அரசியலும் உண்டு இதனை துருக்கி ஆதரிக்கின்றது
ஐஎஸ் இயக்கம் இதில் இன்னொரு கொடுமை, எல்லாம் எங்களுக்கே என எல்லோருடனும் சண்டையிடும் அமைப்பு அது, குழப்பம் இங்கே கூடுகின்றது.
இதில் எண்ணெய் வியாபாரம், அரபு அரசியல் என பல விஷயங்களை கணித்து புட்டினீன் ரஷ்யாவும் வந்து நிற்கின்றது. நாங்கள் இல்லா காலத்தில் சதாமினை கொன்றுவிட்டீர்கள் இனி அப்படி விட முடியாது என பகிரங்கமாக வந்துவிட்டது ரஷ்யா
பொதுவாக ஈராக்கோ, ஆப்கனோ , சிரியாவோ பலமில்லா அரசுகள் மீது தங்கள் நவீன ஆயுதங்களை பரிசீலிப்பது அமெரிக்க வழக்கம். அங்கும் அதுதான் நடக்கின்றது
ரஷ்யா விடுமா? அதுவும் நேரடி யுத்தகளத்தில் அதனைத்தான் செய்கின்றது, ஐஎஸ் இயக்க ஒழிப்பு என வந்த ரஷ்யா சந்தடி சாக்கில் அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது தாக்கிவிட்டு இலக்கு குறி தவறிற்று என சொல்லிகொள்கின்றது
அமெரிக்காவும் நவீன ஆயுதங்களை கொடுத்து ரஷ்ய விமானங்களை வீழ்த்த சொல்கின்றது, பதிலுக்கு ரஷ்ய ஆயுதங்கள் சிரியா வழியாக இஸ்ரேலிய விமானங்களை வீழ்த்துகின்றன
இப்படியாக பல கோணங்களில் நடக்கும் யுத்தம் அது. இப்பொழுது சிரிய அரசை அகற்றமுடியா பட்சத்தில் அந்நாட்டை இரண்டாக பிரிக்கலாமா என யோசிக்கின்றது அமெரிக்கா , காரணாம் எண்ணெய் குழாய் கொண்டு செல்ல கொஞ்ச இடம் போதாதா?
ஆனால் சிரியா பிரிந்தால் தனக்கு ஆபத்து என எண்ணும் துருக்கி கடுமையாய் எதிர்கின்றது, இதில் அமெரிக்கா அப்செட்
இப்படி எல்லா தேசமும் , எல்லா தீவிரவாத இயக்கமும் சிரியா பக்கம் பிசி என்பதால் ஹேப்பியாக இருக்கும் ஒரே நாடு இஸ்ரேல்
இப்பொழுது அங்கு ஏதும் குண்டுவெடிப்பு, ஹமாஸ் தாக்குதல், கலவரம் என ஏதும் செய்தி வருமா? வராது. காரணம் இதுதான்
அதெல்லாம் இருக்கட்டும் 5 ஆண்டுகளாக நடக்கும் யுத்தம் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி பரபரப்பு பெற வேண்டும்? குழந்தைகள் கொல்லபடுகின்றார்கள் என ஏன் ஒப்பாரி வைக்க வேண்டும்?
இதுதான் ஊடக போர்
லிபியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் கொல்லபடும் மக்களும் குழந்தைகளும் கணக்கில்லாதவை, ஆப்கன் எல்லையில் என்ன நடக்கின்றது என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்
ஆனால் சிரியாவினை மட்டும் முன்னிறுத்துவது ஏன்? அதுவும் மிக சமீபமாக?
விஷயம் இதுதான் அமெரிக்கா குண்டுவீச்சில் கொல்லபட்டால் ஒரு படமும் வராது, அவர்கள் உலக ஊடக பலம் அப்படி. வியட்நாம் யுத்தத்தில் ஒரு சிறுமி ஆடையின்றி ஓடிவந்ததை கண்டு அமெரிக்கர்களே பொங்கி எழுந்து அவர்கள் ராணுவத்தை திரும்பபெற்றனர்
அதிலிருந்து தன் கொடூர தாக்குதலில் நடைபெறும் அழிவுகளை அமெரிக்கா வெளிவராமல் பார்த்துகொண்டது, எப்படி படமெடுக்க முடியும், அவர்கள் அனுமதித்தால்தான் உண்டு.
சிரியாவில் ரஷ்ய குண்டுவீச்சில் செத்த குழந்தைகளை மட்டும் படமெடுத்து உலகெல்லாம் ஒளிபரப்புவார்கள், உலகில் அவர்கள் கட்டுபாட்டில் உள்ள எல்லா ஊடகமும் அதற்கு பலம் சேர்க்கின்றன
அரபுநாட்டின் உண்மை செய்திகளை சொல்லும் ஒரே ஊடகமாக அல் ஜசீரா இருந்தது. ஆப்கனிலும் லிபியாவிலும் அமெரிக்கா செய்த அத்தனை அட்டகாசங்களையும் அதுதான் சொன்னது
ஆனால் அதனை எல்லாம் பெரும் செய்தி ஆக்காமல் பார்த்துகொண்டார்கள், அல் ஜசீராவிற்கு தொந்தரவு பெருகிற்று, இப்பொழுது அதுவும் பழைய வீச்சு இல்லை
அதனால் வல்லவன் வைத்ததே நீதி, வல்லவன் நடத்தியதே போர், அவன் சொன்னதே செய்தி என உலகெல்லாம் ஏதோ இப்பொழுதுதான் சிரியா எரிய தொடங்கி இருப்பது போல பிம்பம் காட்டுகின்றார்கள்.
அன்றே சொன்னதுதான் எண்ணெய் இருக்கும் வரை அங்கு எரிவது நிற்காது, அதனை தாண்டி நிற்க வேண்டுமென்றால் அந்த மக்கள் சிந்திக்க வேண்டும், ஒரே ஒரு வரியில் சிந்தித்தால் போதும், உண்மை விளங்கும்
ஈராக் அழிந்து கிடக்கின்றது, ஐஎஸ் இயக்கம் தாண்டவமாடுகின்றது, ஏமனில் யுத்தம், சிரியா கேட்கவே வேண்டாம். இந்த மாபெரும் அழிவிலும் ஒரே ஒரு விஷயம் தங்கு தடையின்றி நடக்கின்றது
அது என்ன? கச்சா எண்ணெய் வியாபாரம். எந்த யுத்தமும் அதனை பாதிப்பதில்லை ஏன்?
இந்த புள்ளியில் சிந்தித்தால் அவர்கள் திருந்துவார்கள், மாறாக ஷியா, சன்னி, அல்லாவி, அகமதியா, குர்து, பெர்ஷியா என பேசிகொண்டே இருந்தால் அமைதி திரும்பவே திரும்பாது
இவ்வுலகில் நாடோடிகளாகவும், தங்களுக்குள் அடித்துகொண்டும் இருந்தவர்களை ஒன்றாக்கி மாபெரும் பேரரசை கட்டியது ஒருவர் ஒருவன் செங்கிஸ்கான் இன்னொருவர் நபி பெருமான்
செங்கிஸ்கான் வாள் முனையில் அதனை செய்தான், ஆனால் இறை தூதரான நபிபெருமான் தன் அன்பான கண்ணியமான போதனையால் செய்தார்
இஸ்லாம் வாள்முனையில் எல்லாம் பரப்பபடவில்லை, ஆப்கன் எனும் அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் கலப்பினத்தில் வந்த முரட்டு கூட்டத்தின் போர்களில் அப்படி சொல்லபடமாலே தவிர தொடக்கம் அப்படி அல்ல
நபி பெருமான் வலிய ஒரு யுத்தமும் செய்தவர் அல்ல, தற்காப்பிற்காக இரு யுத்தம் செய்தார். மெக்காவினை பிடித்தபொழுது ஒரு சொட்டு ரத்தமும் அவர் சிந்தவிடவில்லை மாறாக அவர்களை மன்னித்தருளினார்
அந்த பெருந்தன்மைதான் பின்னாளைய கலீபாக்கள் மாபெரும் சாம்ராயத்தை உருவாக்க வைத்தன. அந்த சாம்ராஜ்யத்தில் யூதரும், கிறிஸ்தவரும் வாழ்ந்தனர். துளி கலகமுமில்லை
சலாவுதீன் போன்றவர் ஆட்சியில் ஜெருசலேமில் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் எந்த குறையுமில்லை அப்படி எல்லாம் காலமிருந்திருக்கின்றது, நபிபெருமானின் பெரும் சாதனை அது. அவர் போதனையின் தாக்கம் அப்படி இருந்திருக்கின்றது
இதெல்லாம் ஓட்டோமன் சாம்ராஜ்யம் வரை தொடர்ந்திருக்கின்றது
பின் எங்கு சிக்கல் வந்தது என்றால் எண்ணெய் வளம் வந்ததில் இருந்து, அதில் வெளிநாடுகள் தலையிட்டதில் இருந்து
ஆம் அதுவரை இஸ்லாமியர்களாக ஒன்றுபட்டு இருந்த இனங்கள், புது பணக்காரர்கள் ஆனபின்பு அந்த பணத்திலும் வசதியிலும் நிலைக்க மீண்டும் முகமது நபி காலத்திற்கு முற்பட்ட அந்த இன குழு மோதலுக்கு திரும்பிவிட்டார்கள்.
"தங்கள் ஒற்றுமைக்கும் நலனுக்கும் தானே இறைவன் நபிபெருமானை அனுப்பினான், அதனால் மாபெரும் அமைதி சாம்ராஜ்யம் எல்லாம் கண்டோமே, மதங்களை ,இனங்களை எல்லாம் தாண்டி மகா ஒற்றுமையாக இருந்தோமே இன்று ஏன் மோதிகொள்கின்றோம்?" என அவர்கள் சிந்தித்தல் வேண்டும்.
இந்த எண்ணெய் பணத்தின் வசதியும், அதிகாரமும் அல்லவா அந்த நபிபெருமானின் போதனைகளை மீறி நம்மை சண்டையிட வைக்கின்றது என அவர்கள் சிந்தித்தாலே அங்கு அமைதி நங்கூரமிடும்
தங்கள் வரலாற்றையும், தங்களை ஒற்றுமையும் அன்பும் சமாதானமும் நிறைந்த சமூகமாக மாற்ற நபிபெருமான் செய்த முயற்சிகளையும் , அதன் பின் இன்றளவும் பெருமையாக பேசபடும் அந்த தூய கலீபாக்களின் ஆட்சியினை கண்ட அந்த காலத்தையும் நினைத்தாலே போதும்,
அவர்கள் மனம் மாறும் அரபுகளின் காதில் விழும் வெடிசத்தம் நிற்கும், தேசங்களின் அழுகை நிற்கும்.
அந்த பிஞ்சுகளின் முகமும் பூக்கும்
கூடவே பாலஸ்தீன அழுகையும் புன்னகையாக மாறும்
இந்த உலகில் அமைதியான நாடுகள் குறைவு, அதில் நம் பாரத தேசம் எவ்வளவோ கொடுத்து வைத்தது. ஓரளவு பாதுகாப்பான தேசத்தில் அமைதியாக வாழ்கின்றோம்
பிழைக்க வெளிநாடு சென்றிருப்போமே அன்றி இத்தேசத்தில் வாழமுடியாது, பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்ததில்லை. இத்தனைக்கும் ஏகபட்ட மதம், மொழி,இனம் என பல விஷயங்கள்
அதனை தாண்டி நிலைத்து நிற்பதுதான் இத்தேசத்தின் மகா சிறப்பு
சுதந்திர போராட்ட காலத்தில் கூட இந்திய அகதிகள் என யாரும் உருவாகவில்லை, இனி எக்காலத்திலும் உருவாக விடவும் மாட்டோம்
உலகின் பல நாடுகளை பாருங்கள், சிரியா, லிபியா ஏமன் என பலவற்றை பாருங்கள்,குறிப்பாக அக்குழந்தைகளையும் நம் குழந்தைகளையும் காணுங்கள்
பள்ளிக்கு சென்றுவிட்டு வீதியில் விளையாடும் நம் குழந்தைகளையும், மாலையில் நம் தோளோடு விளையாடும் அக்குழந்தைகளையும். சிரியாவிலும் ஈராக்கிலும் மழலை மொழியில் ரத்தம் வழிய "எங்க வீட்டுல குண்டு விழுந்து ஆனா நான் சாகலை அப்பா செத்துபோனாங்க" என அப்பாவியாய் சொல்லும் அக்குழந்தைகள் பேச்சையும் கேளுங்கள்
இத்தேசத்தின் அருமை அந்நொடியில் உங்களுக்கு விளங்கும், தானாக இத்தேசத்தை கைஎடுத்து வணங்குவீர்கள். இந்தியா என்பது மகா இனிமையாக கம்பீர்கமாக, பெருமையாக உங்கள் காதுகளில் ஒலிக்கும்"