Thursday, March 01, 2018

திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரிடம் உலகமே பின்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஃப்ரான்ஸ் கிட்டத்தட்ட ஹிட்லரிடம் விழுந்துவிட்ட சூழலில் இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் பதவியேற்கிறார். ஆனால் இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆதரவில் இருந்து, கேபினேட்டின் ஆதரவு வரை சர்ச்சிலுக்கு அரைகுறையாகத்தான் கிடைக்கிறது. சர்ச்சில் மேல் பலர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். கேபினேட்டில் பலர் ஹிட்லருடன் சமாதானம் பேசி சரணடையச் சொல்கிறார்கள். சர்ச்சிலோ ஹிட்லர் போன்ற கொலைவெறி பிடித்த சர்வாதிகாரியுடன் எந்தக் காலத்திலும் சமாதானம் பேச முடியாது என்கிறார். அவர் பதவி பறிபோகுமோ என்கிற நிலை. சர்ச்சிலோ உறுதியாக நிற்கிறார். ஒரு நடு இரவில் சர்ச்சிலை அவரது வீடு தேடி சந்தித்த அரசர் சொல்கிறார், “இதுவரை நான் உங்களை அரைகுறையாக ஆதரித்திருக்கலாம். ஆனால் என் முழு ஆதரவும் இப்போது உங்களுக்கு உண்டு. நீங்கள் பிரதமர் ஆனது நம்மில் பலருக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நீங்கள் பிரதமர் ஆனது ஹிட்லருக்கு துளியும் பிடிக்கவில்லை. ஹிட்லர் உங்களை அடி ஆழத்தில் இருந்து வெறுக்கிறார். அதனாலேயே உங்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்றார். பின்னர் சர்ச்சில் போரைத் தொடர்ந்ததும், ஹிட்லரை கூட்டுப்படைகள் தோற்கடித்ததும் வரலாறு. நிற்க.
கலைஞரின் மகன் என்பதைத் தவிர திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி வேறெதுவும் தெரியாத காலம் அது. மிசாவைப் பற்றியெல்லாம் பின்னர் தான் அறிந்தேன். ஒருநாள் ஏதேச்சையாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது சென்னையின் மழை நிரம்பிய வீதிகளில் முட்டி வரை ஏற்றிவிடப்பட்ட பேண்டோடு அவர் தெருத்தெருவாக நடந்துபோய் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் மேயராக இருந்த குறுகிய காலத்தில் வெறும் சென்னை சிங்காரச் சென்னை ஆனதும், இன்று சென்னையின் போக்குவரத்தைக் குறைக்கும் அத்தனை பாலங்களையும், சாலைகளையும் அவர் நிர்மாணித்ததும் வரலாறு. ஸ்டாலின் என்பவர் வெறுமனே கலைஞரின் மகன் மட்டுமல்ல, தந்தைக்கு சற்றும் குறையாத மிகச்சிறந்த நிர்வாகி என்பதும் எதிரிகளாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அப்போதுதான். வளர்ந்த நாடுகள் குறித்த அவரது, ‘பயணம்’ என்னும் பயணக்கட்டுரைகள் நிறைந்த நூல் அதற்குச் சான்று. இன்றும்கூட சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்கள் பலருடன் பேசும்போது வளர்ச்சிப்பணிகள், தொழிற்சாலைகள் மீதான மு.க.ஸ்டாலினின் ஆர்வத்தை அவர்கள் வியந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன். மேம்பால ஊழல் என்ற பெயரில் வாரண்ட் கூட இல்லாமல் கலைஞரை நடு இரவில் கைது செய்து ஆட்டம் போட்ட ஜெவுக்கு சூட்டோடு சூடாக, “தினமும் இரண்டுமுறை அந்த பாலத்தில் நீங்கள் சென்றுவருகிறீர்களே, அந்தப் பாலம் மிகவும் வலிமையானது என்பதற்கு அதைவிட என்ன சான்று வேண்டும்,”என கேட்டபோதுதான் அவர் முதன்முறையாக என் மனதில் நின்றார். பின்னர் அதற்காக கலைஞர் ஸ்டாலினை கடிந்துகொண்டதாகக் கூட கூறுவார்கள். ஜெ மருத்துவமனையில் இருந்தபோது அவரை ஸ்டாலின் சந்திததுதான் இளைஞர்கள் பலருக்குத் தெரியும். ஆனால் சுனாமியின் போதே அரசியல் நாகரீகத்தோடு ஜெவை நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தவர் ஸ்டாலின். அரசியலில் என்றுமே எதிரிப்போக்கை கடைபிடிக்கக் கூடாது என்பது அவர் இன்றுவரை கடைபிடித்து வரும் கொள்கை. அதனால்தான் ஆன்மீக அரசியலுக்கு ஆசீர்வாதம் வாங்க பகுத்தறிவுக்கோட்டைக்கு வருகின்றவர்களை வரவேற்ற கையோடு, ஆன்மீக அரசியலுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இடமில்லை என பேட்டியும் தர முடிகிறது.
கலைஞர் ஆக்டிவாக இருந்தபோது துக்ளக், தினமலர் போன்ற ஏடுகளில் ஸ்டாலின் தலைவரானால் திமுகவை ஆதரிக்கலாம் என்றும், கலைஞர்தான் அவர்களுக்கு ஒரே பிரச்சினை என்றும் அடிக்கடி எழுதியதை பலர் கவனித்திருக்கலாம். மறைந்த பிரபல மிடாஸ் அதிபர் சோ கூட பலமுறை தன் கேள்வி பதில் பதிவுகளில் ஸ்டாலின் திமுக தலைவரானால் தன் ஆதரவு உண்டு என எழுதியிருக்கிறார். ஆனால் அவர் செயல்தலைவர் ஆனபின் என்ன ஆனது? எங்கே போனது அந்த ஆதரவு? ஏன் சதாசர்வ காலமும் ஸ்டாலினை இந்த ஏடுகள் விமர்சிக்கின்றன? ஏன் தன் குரு சோவின் முடிவை குருமூர்த்தி பின்பற்றவில்லை? இத்தனைக்கும் திமுக ஆட்சிக்கு கூட வரவில்லை எனும்போது ஸ்டாலின் மீதான தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை ஏன் இவர்கள் மாற்றிக்கொண்டார்கள்? காரணம் மிக எளிது. ஸ்டாலின் கலைஞரைப் போல சமூகநீதியைப் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் தமிழ்நாட்டை பெரியார் மண் என அழைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. “திராவிட இயக்கத்தை ஒரு கொம்பனாலும் அசைக்கமுடியாது,” என ஸ்டாலின் சூளுரைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மோடியே வீட்டுக்கு தேடி வந்தாலும், அடுத்தநாள் மேடை போட்டு மோடியை ஸ்டாலின் கிழிப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் அவர்கள் ஸ்டாலின் எல்லாவற்றிலும் ‘கலைஞரின் மகன்’ ஸ்டாலினாக இருப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான் எப்படியாவது ஸ்டாலினை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். தொட்டதெற்கெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். பாஜக கதவுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் தட்டிவிட்டு எதுவுமே திறக்கப்படவில்லை என்றவுடன் திருவோட்டை தூக்கிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் தினகரனை எல்லாம் பாஜகவின் பெரிய எதிரியாக ஊடகங்கள் சித்தரிக்கும் காரணமும் அதுதான். ரஜினி, கமல் என யார் யாரையோ அரசியல் மாற்று என சித்தரிக்கிறார்கள். ஜெவுக்கே பயந்து அறைக்குள் முடங்கிய இந்த கிழட்டுக் கன்றுக்குட்டிகள் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ பயப்படாமல் மார்பிலா பாய்வார்கள்? கொஞ்சமாவது லாஜிக் என்பது வேண்டாமா? எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்க்கும் தான் ரஜினியும் கமலும் மாற்றாக இருப்பார்களேயொழிய கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் அல்ல.
இன்று நாட்டை நிர்மூலமாக்கும் மதவாத சக்திகள், ஃபாசிஸ்டுகள், தமிழ்நாட்டை விற்கும் அடிமைகள், சமூகநீதி விரோதிகள், மோடி ஆதரவு ஏடுகள், RSSயின் கட்சி சார்பற்ற சமூக ஆர்வலர்கள் என அனைவரும் எப்படியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்களோ, அதே காரணத்திற்காகத்தான் நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டும்! நாம் ஏற்கனவே மநகூ என்கிற பெயரில் மாபெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினோம். மீண்டும் அதே தவறுக்கு இடம் கொடுக்காதீர்கள். முதல் பத்தியில் உள்ள வரலாற்றைப் படியுங்கள். யார் ஸ்டாலினை ஆதரிக்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். யாரெல்லாம் முதல்வரிசையில் நின்று எதிர்க்கிறார்கள் எனப் பாருங்கள். நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டிய காரணம் புரியும்.
காரிருள் முடியட்டும். சூரியனால் விடியட்டும்.

No comments: