Monday, February 26, 2018

சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”

ஒரு ஆட்டோ டிரைவர் தன்னை தேவர் ஜாதியை சேர்ந்தவர் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டவர்
மிக வெள்ளந்தியாய் பேசிக் கொண்டு வந்தார்.
தன் மகன் குரூப் 4 தேர்வு எழுதிருப்பதாக சொன்னார்.
“அப்படியா சூப்பர். என்ன படிச்சிருக்காரு” நான்
“பி.ஈ முடிக்க போறான்” அவர்
“அப்ப எதாவது கோச்சிங் கிளாஸ் சேர்ந்து பெரிய லெவல் தேர்வு எழுதச் சொல்லுங்கண்ணே”
“கோச்சிங் கிளாஸா எவ்ளோ செலவாகும்”
“ஐம்பதாயிரம் ஆகட்டுமே. ரெண்டு பவுன போட்டுத்தள்ளுங்க. வித்திருங்க. எதாவது தேர்வுல மாட்டிக்கும். உங்க பையன் நல்லா இருப்பாரு”
“எனக்கும் அதான் ஆசை”
“நீங்க கள்ளரா”
”இல்ல அகமுடையார்”
“அகமுடையார்னு சொல்றது ஒரு பெருமை உங்களுக்கு. இன்னும் நீங்களே மூணு சாதி ஒண்ணு சேந்து தேவரா ஆகல பாருங்க”
“ஹா ஹா ஹா அப்படி இல்ல தம்பி. தேவர்ல்லாம் ஒண்ணா சேந்தாச்சு”
‘சத்தியமா சொல்லுங்க பொண்ணு பாக்கும் போது அதெல்லாம் பாக்க மாட்டேன்னு”
“ஹா ஹா அது வசதியா அமைறதப் பொறுத்து. நீங்க எந்த ஊரு தம்பி”
“எந்த ஊரா ? எந்த ஜாதியா?” கேட்டேன்
“ (சிரிப்பு)”
“நா நாடார் சாதிண்ணே. ஆனா இப்ப நாடார் தேவர் Clash எல்லாம் வருதாண்ணே நம்ம ஊர் பக்கம்” (அவர் சிவகங்கை)
“சச்சே அது அந்த காலத்துல இப்ப அதெல்லாம் இல்ல”
“இப்ப எல்லா ஊர்லையும் எஸ்.சி கூட தான் Clash அப்படித்தாணன்னே”
“ஆமா ஆமா. எப்பவும் எதாவது பிரச்சனை”
“சட்டமும் அவுங்களுக்கு துணைண்ணே”
”ஆமா.. ஐயோ ரொம்ப தம்பி”
“எனக்கு ஒரு டவுட்டுண்ணே. இப்ப ஒரு தேவர் தலைவர் பள்ளர்கள் மாநாட்டுக்கு போறாரு. அது எப்படி ? அப்புறம் தேவர் சாதில இருந்து ரெட்டியார் சாதி பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினா மட்டும் எதுவும் சொல்ல மாட்டீங்களாம். என் ஃப்ரெண்டு சொன்னான்”
“அவரு எந்த ஊர்”
“அருப்புக்கோட்டை”
“அது ரெட்டியார் சாதின்னா கொஞ்சம் மேலத்தான. அது பிரச்சனை இல்லை. வேற சாதிதான் இங்க பிரச்சனை”
“வேற சாதின்னா எஸ்.சி ய சொல்றீங்க”
“ஆமா, அப்புறம் பள்ளர்கள் மாநாட்டுக்கு போனாருன்னு சொன்னீங்களே. ஊர்ல எல்லாம் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றது இந்த குடும்பம்னு இருக்கும்”
”ஒஹ் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றதுக்கு இந்த சாதிக் குடும்பம்னு இருக்கும்”
“ஆமா. அப்ப ஒரு குடும்பத்துக்கு வேலை செய்ற கிழ்சாதிக்காரன இன்னொரு தேவன் குறை சொன்னா இவன் கேப்பான்ல. எப்படி எனக்கு வேலை செய்றவன நீ திட்டலாம்னு. அப்படித்தான் நீங்க சொல்ற சாதிக்காரங்க மேல ஒரு அக்கறை”
“வேலை செய்றவங்க அதே கீழ்மட்ட வேலையே செய்துட்டு இருந்தா நீங்களும் அவுங்க மேலதான் அக்கறையா இருக்கீங்க. எல்லை மீறும் போதுதான் ரெண்டு தட்டி தட்டி கீழ இறக்கி விட வேண்டியதிருக்கு அப்படித்தான”
“அதேதான்”
“எல்லா இந்த கட்சித்தலைவர்கள் செய்றதுண்ணே எஸ்.சி ஆட்கள தூண்டி விடுறாங்கண்ணே”
“ஆமா என்னத்த சொல்ல. சிட்டிக்குள்ள (சென்னை) அவுங்க அட்டகாசம்தான். யாரு கேக்க முடியுது. ஊர்ல பிரெசிடெண்டா இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது”
“உங்க ஊர் பிரசிடெண்ட் எஸ்.சியா”
“ஆமா”
“அது எப்படி”
“எல்லாம் சட்டம்தான்”
“ஆமாண்ணே அத அமெண்ட்மெண்ட் 73 ன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இரநூறு ஏதோ ஆர்ட்டிகிள் வரும்னு படிச்சிருக்கேன். ஒஹ் பிரசிடெண்ட் ஆனாலும் அவரு ஒப்புக்கு சப்பாண் மாதிரி இருப்பாரு என்ன?”
“ஆமா”
“அப்ப யாரு பவரு”
“அதான் நம்மாளு வைஸ் பிரசிடெண்ட் இருப்பாருல்ல”
“ஒஹ் வைஸ் பிரசிடெண்ட் தேவரா. சும்மா பிரசிடெண்ட்ட அண்ணேன்னு சொல்லிட்டு. வைஸ் பிரசிடெண்டுக்கு முழு பொறுப்பு கொடுத்திருவீங்க. இப்ப புரியுது”
“அவன நான் ஏன் அண்ணேன்னு சொல்லப் போறேன். அப்படின்னா அப்படித்தான் நிக்கனும். பேசக் கூட பயப்படுவாங்க”
“பதவி இருந்தாலும் பவர் உங்கக்கிட்டத்தான் வெச்சிருக்கீங்க”
“ஆமா”
இப்படியாக தேவர் சாதியைச் சேர்ந்த அவரும் நாடார் சாதியைச் சேர்ந்த நானும் ஒண்ணுமண்ணாக அண்ணன் தம்பியாக பேசி பழகி சென்று கொண்டிருந்தோம்.
1.அந்த ஆட்டோ டிரைவர் அண்ணன் பொருளாதாரத்தில் நலிந்த இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் சாதி என்று வரும் போது மிகுந்த பெருமை கொண்டு பேசினார். சாதி பெருமிதம் அவருக்கு ஒரு இன்பம். சிறுவயதிலேயே ஏன் எதற்கு என்று தெரியாமல் அந்த வெறியை அவருக்குள் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
2.அவர் சொன்ன பிரசிடெண்ட் கதையை ஒரு வன்னியர் கார் டிரைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பிரசிடெண்டாக இருந்தாலும் தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்தவர் அங்கே அதிகாரமில்லாமல்தான் இருப்பார்.
3.சாதியை தவிர்த்து வாழ்க்கையில் அறநெறிக்கு கட்டுப்பட்டவராகவே அவர் இருக்கிறார்.
4. மேல் சாதி சம சாதி பற்றிய அன்பு அவருக்கு இருக்கிறது. ரெட்டியார் சாதி பற்றி பேசும் போது ரெட்டியார் சாதி பொண்ணுங்க சிவப்பா இருப்பாங்க அதனால நம்ம ஆட்கள் கட்டிக்கிடுவாங்க என்று பெருமை பொங்க சொன்னார். இதற்கு முன் பேசிய ஒரு வன்னியர் கார் டிரைவர் தான் ஒரு வேளாளர் பெண்ணை லவ் செய்து திருமணம் முடித்ததை அவ்வளவு பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
5.நான் தேவரா என்று அறிய அதிக ஆவல் கொண்டிருந்தார். நான் நாடார் என்றதும் ஒரு விநாடி தடுமாறி சுதாரித்துக் கொண்டதைப் பார்த்தேன். நாடார்களை விட தேவர்கள் வீரம் விளைந்தவர்கள் என்று சொன்னதும் அவர் குழந்தை மாதிரி குஷி அடைந்தார்.
6. அவர் சாதிக்கு மேல் உயர்சாதியினர்தான் அவரை ஆள்கிறார்கள் என்பது பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்.
7. பிரசிடெண்டை அவர் அண்ணே என்று விழிப்பார் என்று நான் புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் காட்டிய வேகம் அவர் சாதி உள்ளத்தைக் காட்டியது.
”உயர் சாதி எனப்படும் சாதிகளில் 200 சாதிகள்தாம் உண்டு. அதற்கு கீழே சூந்திர சாதிகளில் மூவாயிரம் சாதிகள் உண்டு. இங்கே ஒவ்வொரு சாதிக்கும் மேலே கொஞ்சம் சாதிகளும், கீழே கொஞ்சம் சாதியும் உண்டு. கீழே உள்ளவர்களோடு ஒப்பிட்டு நாம் பெரியவர்கள் என்று சிலாக்கிக்கும் அதே வேளையில் தம்மை விட மேல் சாதியினரிடத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு “நான் ஒசந்துட்டேன்” என்று சொல்லிக் கொள்வார்கள். சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”
பேராசிரியர் சத்யபால் பேசிய உரை நினைவுக்கு வந்தது.
பின்குறிப்பு : நீங்கள் சாதி பேசியிருக்கிறீர்கள் என்று மொக்கை கமெண்ட் செய்தால் ப்ளாக் செய்துவிடுவேன்.
சும்மா தலைவர்கள் பேசிய சாதி எதிர்ப்பு கொட்டேசன்ஸ் மட்டும் எப்போதும் எழுதிக் கொண்டிருக்க முடியாது.

No comments: