Saturday, July 10, 2021

கபாலி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையிடும் இந்து விரோதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.!

தமிழ்நாட்டின் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர் பாபுக்கு நன்றி!

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை
வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டு இருக்கிறார்.

மொத்தம் உள்ள 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள்.
ஹிந்துக்கள் 471 பேர்.

கபாலி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையிடும் இந்து விரோதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.!

வாடகை கொடுக்காத பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்.!

காந்தி கொலைக்குப் பின்னர் RSS மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய கே.எம். முன்ஷியால் தொடங்கப் பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யா பவன்.  

கல்வியைப் பரப்புவது என்ற பெயரில்  கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32,00,000 ரூபாய்.!

அடுத்தது, மயிலாப்பூர் கிளப்.

01-- 01-- 1903 அன்று தொடங்கப் பட்ட
பெருந்தனக் காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,   கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு  தயார் படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், என பல கிரவுண்டு கோயில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி
3,57,00,000 ரூபாய்.!

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய  நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப் பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6,45,00,000/-

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப் படுவது பி.எஸ். ஹைஸ்கூல்,  
கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928 இல் குத்தகைக்கு எடுத்தது.

பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.
இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும்.
பல பிரபல உயர் அதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக் கொள்ளும் இந்தப் பள்ளி,
76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக
ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்து விட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து வைத்து இருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார்.

இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்தவர்கள் இதனை உள்குத்தகைக்கு விட்டு,
அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப் பட்டு,
35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இப்படியே போகிறது பட்டியல்.

முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு,
பாவம்.... நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்.

பாரம்பரியம் மிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில்,
“இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத் துறை.

இவற்றை எல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்களா என்ன? அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக் கூடக் கொடுக்காமல், அறநிலையத் துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான்..!

Wednesday, July 07, 2021

கம்போடிய புரோகிதர்கள்

 நம்ம ஊர் மாதிரியே கம்போடியாவிலும் புரோகிதர்கள் பக்தர்களிடமிருந்து கட்டுக் கட்டாக பணம் பெற்றுக் கொண்டு மந்திரம் ஓதுகின்றனர்! 




கம்போடிய தலைநகர் நாம் பென் நகரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பகோடா வளாகத்தில் Phen பாட்டி கோயில் உள்ளது. சுடச் சுட, பாட்டி கோயிலில் கண்கூடாக கண்ட காட்சி இது. இந்தியாவிலிருந்து கம்போடியாவிற்கு வைதீகம் மற்றும் பௌத்தம் ஏற்றுமதி ஆனாலும் கம்போடியர்கள்  தாய்த் தெய்வ வழிபாட்டை மறக்கவில்லை.தாய்த் தெய்வ வழிபாட்டின் எச்சமே Phen பாட்டி வழிபாடு.

சுருங்கச் சொன்னால் கம்போடிய வரலாறு என்பது பௌத்தத்திற்கும் பிராமணீய மதத்திற்கும் இடையில் நடந்த
சண்டைகளே. இந்தியாவைப் போல் அல்லாமல், கம்போடியாவில் பௌத்தம் பிராமணீயத்தை வென்று  தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

பிராமணீய மதத்தின் எச்சங்களை கம்போடியா முழுதும் இன்றும் காணலாம். கம்போடியர்கள் பிராமணீய மதத்தை இந்து மதம் என்று அழைப்பதில்லை. பிராமணீய மதம் என்றே அழைக்கின்றனர். இந்த விசயத்தில் அவர்களுக்கு உள்ள தெளிவு வியப்பை அளிக்கிறது.அங்குள்ள மியூசியம் முதல் சுற்றுலாத் தளங்களில் இந்து மதம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை, பதிலாக பிராமணீய மதம் என்றே எழுதி வைத்துள்ளனர்.
பழைய மரபு மாறாமல் இருப்பதற்காக மன்னரின் அரண்மனையில் இன்றும் வைதிக பிராம்மணர்கள் புரோகிதர்களாக பணியாற்றுகிறார்கள். முக்கியமான நாட்களில் மன்னனுக்காக சடங்குகளைச் செய்கிறார்கள்.

பிராம்மணீயம்,வைதிகம்,சனாதனம்,புரோகிதம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த வடிவில் சென்றாலும் ஏமாற்றுவது,சுரண்டுவது,ஆதிக்கம் செலுத்துவது,அதிகாரம் செய்வது மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.