Tuesday, October 02, 2018

செத்தாலும் சாதி போகாது

கொஞ்ச நாளைக்கு முன்னாடி friend ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருந்தேன் ..
எப்பயும் சாதி எதிர்ப்பு பேசுரவன் அவன் ...
தீடீர்னு ஒரு நாள் அவங்க வீட்ல சண்ட ஏன்டானு கேட்டேன் இல்லடா பாட்டி சாதி வச்சு திட்டிருச்சுன்னு சொன்னான் என்னடா சொல்றா புரிலன்னு கேட்டேன் ...
எங்க அம்மா அப்பா காதல் பண்ணி கல்யாணம் பண்ணாங்க அப்பா தலித் அம்மா ஒரு இடைநிலை சாதிய சேந்தவங்க அவங்க மத்த பேரன பாக்குற விதமும் என்ன பாக்குற விதமுமே வேற மாறி இருக்கும் சின்ன வயசுல இருந்து என்ன அவங்க தூக்குனதே கெடையாது வீட்டுக்கு போய் சாப்பிட்டாலும் என் தட்டுக்கு மட்டும் வித்தியாசம் இருக்கும் மத்த எல்லாருக்கும் கீரை சாதம் செஞ்சு உருண்ட புடிச்சு வாயில திணிக்கும் போது நா மட்டும் கைல வாங்கி சாப்பிடுவேன் சின்ன வயசு கதையெல்லாம் சொல்லும் போதே கண்ணுல தண்ணி அடக்கிட்டு இருந்தான் ..
நா பேச்ச மாத்த எல்லா கொஞ்ச நாளைக்கு தான் உங்க ஆத்தாலும் ஐயனும் எங்க அம்மையும் அப்பனும் சாகுற வரையும் தான் அப்பறம் எல்லாம் மாறும் னு சொல்கிட்டு இருந்தேன்.
அந்த நேரம் வீட்ட விட்டு கிழவி வெளிய வந்துச்சு ஒரு மொற மொராச்சுட்டு போச்சு ....
கொஞ்ச தொலவு கிழவி போற வரையும் ரெண்டு பேரும் அமைதியா பாத்துட்டு இருந்தோம் இன்னும் வாழுறதே கொஞ்ச நாள் தான் அப்படி இருந்தும் தான் பெத்த பொண்ணு பையன் மேல இவ்ளோ வன்மத்த கக்க வைக்குது சாதி !
ஒரு சிலர் சொல்றாங்க செத்தாலும் சாதி போகத்துன்னு அது இந்த மாறி ஆளுங்க நடமாடும் போது தெளிவா தெரியுது .

Monday, October 01, 2018

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை
தன்னுடன் படித்த​ SC/ST பிரிவு மாணவர்கள் இட​ ஒதுக்கீடு பெற்று உயர் கல்வியோ அரசு வேலையோ பெற்றால் இடைநிலை சாதியை சேர்ந்தவர்களுக்கும் (BC/MBC) மேல் சாதியை (OC) சேர்ந்தவர்களுக்கும் கடுப்பாக​ இருக்கும்.
தன் கடுப்பை நேருக்கு நேராக​ காட்டாமல் புறம் பேசுவார்கள். மேலும் தன் கல்விநிலைய​ whatsapp குழுமங்களில், தன் கல்விநிலைய Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டிற்கு எதிரான பதிவுகளை share செய்வார்கள்.
தான் இருக்கும் whatsapp குழுமங்களில் Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அவர்களை இழிவு செய்ய​ இவ்வாறு செய்வார்கள்.
தன் ஊரை/பள்ளியை/கல்லூரியை சேர்ந்த​ SC/ST-யினரை friend list-ல் வைத்து கொண்டு SC/ST இட​ ஒதுக்கீடு பெற்றவர்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையில் போடப்படும் meme-களை பகிர்வார்கள்.
தங்களை இழிவு செய்ய​ தான் இவ்வாறு போடுகிறார்கள் என்பதை அறிந்தும் அவ்விடத்தில் பதில் கூறினால் பொதுதளத்தில் சாதி ரீதியிலான அடையாளம் தன் மீது விழுந்து விடும் என கருதி​ SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் மவுனமாக​ இருப்பார்கள்.
அந்த​ கல்விநிலையங்களில் பயின்றவர்களில், அந்த​ ஊரை சேர்ந்தவர்களில் "பரியேறும் பெருமாள்" ஆனந்த்களும் இருப்பார்கள். அவர்கள் தான் இங்கே பதில் கூறுவார்கள். ஏன் இட​ ஒதுக்கீடு தேவை என்பதை சுட்டிகாட்டுவார்கள், பலநூறு ஆண்டுகளாய் SC/ST பிரிவினர்
ஒடுக்கப்பட்டதை எடுத்துரைப்பார்கள். இட​ ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல​ அது சமூகநீதிக்கான உரிமை என வலியுறுத்துவார்கள்.
ஆனால்..ஆன்ந்த்கள் பேச​ ஆரம்பித்ததும் 'இந்த​ குழுவில் அரசியல் பேச​ கூடாது" என்று சொல்லி ஆன்ந்த்களின் வாயை மூட​ முயல்வார்கள்.
அதாவது ஜாதி வெறியர்களை பொருத்த​ வரையில், இட​ ஒதுக்கீட்டை இழிவு செய்து பேசுவது அரசியல் பேசுவதில் வராதாம்! ஆனால் ஆன்ந்த்கள் அவற்றிற்கு பதில் கொடுப்பது மட்டும் அரசியல் பேசுவதில் வந்து விடுமாம்.
இவர்கள் போடும் தடையை மீறி ஆன்ந்த்கள் பேசினால் ஆனந்த்களுக்கு "இந்து விரோதி, கிறிஸ்தவ​ கைக்கூலி, அரேபிய​ அடிமை நாய்" என்ற​ பட்டங்களை கொடுப்பார்கள்.
பெரும்பாலான சமூகவலைத்தள​ group-களில் இதுதான் நிலைமை என தோழர்கள் கூறுகிறார்கள்.

'நாசாவில் நடாராஜர் சிலை இருக்கிறது' கதை

நேற்று ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன். ஈழத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முதன்மை விருந்தினராக வந்திருந்தார். அப்படி இவர் பரதநாட்டியம் பற்றி என்னதான் பேசப் போகிறார் என்று ஆர்வமாகக் கவனித்தேன்.
சிறிதரன் எதற்கும் கவலைப்படவில்லை. இருக்கவே இருக்கிறது வாட்ஸ்ஆப் செய்திகள். அதில் சிலவற்றை எடுத்து அடித்து விட்டார். அதில் முக்கியமானது 'நாசாவில் நடாராஜர் சிலை இருக்கிறது' என்று அவர் பேசியது. சிறிதரன் மட்டும் அல்ல, வேறு சிலரும் நாசாவில் நடராஜர் சிலைக் கதையை மேடையில் பேசினார்கள்.
தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற பெரிய பொய்களில் இந்த நடராஜர் சிலைக் கதையும் ஒன்று. நாசாவில் நடராஜர் சிலை இல்லை. இல்லவே இல்லை. நாசாவில் நடராஜ் என்கின்ற இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி ஒருவர் பணிபுரிகிறார். அவ்வளவுதான்.
ஆனாலும் நடராஜர் சிலை ஒரு இடத்தில் இருக்கிறது. சுவிஸ் நாட்டில் ஜெனிவாவிற்கு அண்மையில் உள்ள மெய்ரினில் அமைந்துள்ள CERN என்கின்ற அணுவாராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை இருக்கிறது. இந்தக் கூடத்தில்தான் கடவுளின் துகளைக் கண்டுபிடிக்கின்ற மாபெரும் ஆராய்ச்சியாக சொல்லப்பட்ட துகள்களை மோதவிடுகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இங்கேயும் நடராஜர் சிலையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் வைக்கவில்லை. நடராஜர் சிலை 2004ஆம் ஆண்டு CERN ஆராய்ச்சிக் கூடத்திற்கு இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்களும் அன்பளிப்பாக வந்து விட்டதே என்று வைத்துக் கொண்டார்கள். இந்தியர்கள் யாராவது அங்கே போனால், நடராஜர் சிலை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கே சென்று படம் எடுத்துச் செல்கிறார்கள். இதைத் தாண்டி எந்த முக்கியத்துவத்தையும் CERNஇல் உள்ள நடராஜர் சிலை பெறவில்லை.
இப்பொழுது நாம் சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாசாவின் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டனில் அமைந்துள்ளது. CERN சுவிஸில் உள்ளது. நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கூடம். CERN ஒரு அணுவாராய்ச்சிக் கூடம். CERNஇலும் நடராஜர் சிலையை அவர்கள் வைக்கவில்லை. இந்தியாவின் அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
ஆனால் நாசாவில் நடராஜர் சிலை இருக்கிறது என்றும் விண்வெளிக்கு ராக்கட் அனுப்புவதற்கு முதல் நடராஜரை விஞ்ஞானிகள் வணங்குவார்கள் என்றும் எத்தனை கதைகள் இந்த நவீன காலத்தில் எம் மத்தியில் உலாவுகின்றன? இவற்றை நம்புகின்றவர்கள்தானே எம்மில் பெரும்பான்மையாக இருக்கிறோம்!
பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பத்திரிகை ஆசிரியர்கள் வரை இப்படியான வாட்ஸ்ஆப் கதைகளை நம்பி மேடைகளில் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மேடைகளில் பேசுபவர்களாயினும் சரி, ஊடகங்களில் எழுதுபவர்களாயினும் சரி, தேடலும் தயார்படுத்தலும் மிக அவசியம். தவறான, பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பக் கூடாது என்கின்ற பொறுப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமையாக இருந்தனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் உரிமையாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமையாக இருந்தனர் என்பது தோள் சீலை போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதி பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல கூடாது என்பதாகும்.
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடாது என சிந்திக்கும் பேசும் வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.



*******
தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்ளான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதியுகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பட்ட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்த கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களிம் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.[1]
[தொகு]உடை கட்டுபாடு
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.
[தொகு]முதல் போராட்டம்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.
[தொகு]இரண்டாம் கட்ட போராட்டம்
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர்.
[தொகு]மூன்றாம் கட்ட போராட்டம்
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.
[தொகு]உடை உடுத்த உரிமை
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
[தொகு]மேற்கோள்கள்
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.