நேற்று ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன். ஈழத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முதன்மை விருந்தினராக வந்திருந்தார். அப்படி இவர் பரதநாட்டியம் பற்றி என்னதான் பேசப் போகிறார் என்று ஆர்வமாகக் கவனித்தேன்.
சிறிதரன் எதற்கும் கவலைப்படவில்லை. இருக்கவே இருக்கிறது வாட்ஸ்ஆப் செய்திகள். அதில் சிலவற்றை எடுத்து அடித்து விட்டார். அதில் முக்கியமானது 'நாசாவில் நடாராஜர் சிலை இருக்கிறது' என்று அவர் பேசியது. சிறிதரன் மட்டும் அல்ல, வேறு சிலரும் நாசாவில் நடராஜர் சிலைக் கதையை மேடையில் பேசினார்கள்.
தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற பெரிய பொய்களில் இந்த நடராஜர் சிலைக் கதையும் ஒன்று. நாசாவில் நடராஜர் சிலை இல்லை. இல்லவே இல்லை. நாசாவில் நடராஜ் என்கின்ற இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி ஒருவர் பணிபுரிகிறார். அவ்வளவுதான்.
ஆனாலும் நடராஜர் சிலை ஒரு இடத்தில் இருக்கிறது. சுவிஸ் நாட்டில் ஜெனிவாவிற்கு அண்மையில் உள்ள மெய்ரினில் அமைந்துள்ள CERN என்கின்ற அணுவாராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை இருக்கிறது. இந்தக் கூடத்தில்தான் கடவுளின் துகளைக் கண்டுபிடிக்கின்ற மாபெரும் ஆராய்ச்சியாக சொல்லப்பட்ட துகள்களை மோதவிடுகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இங்கேயும் நடராஜர் சிலையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் வைக்கவில்லை. நடராஜர் சிலை 2004ஆம் ஆண்டு CERN ஆராய்ச்சிக் கூடத்திற்கு இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்களும் அன்பளிப்பாக வந்து விட்டதே என்று வைத்துக் கொண்டார்கள். இந்தியர்கள் யாராவது அங்கே போனால், நடராஜர் சிலை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கே சென்று படம் எடுத்துச் செல்கிறார்கள். இதைத் தாண்டி எந்த முக்கியத்துவத்தையும் CERNஇல் உள்ள நடராஜர் சிலை பெறவில்லை.
இப்பொழுது நாம் சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாசாவின் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டனில் அமைந்துள்ளது. CERN சுவிஸில் உள்ளது. நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கூடம். CERN ஒரு அணுவாராய்ச்சிக் கூடம். CERNஇலும் நடராஜர் சிலையை அவர்கள் வைக்கவில்லை. இந்தியாவின் அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
ஆனால் நாசாவில் நடராஜர் சிலை இருக்கிறது என்றும் விண்வெளிக்கு ராக்கட் அனுப்புவதற்கு முதல் நடராஜரை விஞ்ஞானிகள் வணங்குவார்கள் என்றும் எத்தனை கதைகள் இந்த நவீன காலத்தில் எம் மத்தியில் உலாவுகின்றன? இவற்றை நம்புகின்றவர்கள்தானே எம்மில் பெரும்பான்மையாக இருக்கிறோம்!
பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பத்திரிகை ஆசிரியர்கள் வரை இப்படியான வாட்ஸ்ஆப் கதைகளை நம்பி மேடைகளில் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மேடைகளில் பேசுபவர்களாயினும் சரி, ஊடகங்களில் எழுதுபவர்களாயினும் சரி, தேடலும் தயார்படுத்தலும் மிக அவசியம். தவறான, பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பக் கூடாது என்கின்ற பொறுப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment