தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் அப்பொழுது மற்றைய நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த போராளிக் குழுக்களையே தமது வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் அப்பொழுது தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் குண்டு வைத்தார்கள். விமானங்களை கடத்தினார்கள். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தியா போன்ற நாடுகளிலும் இடதுசாரி புரட்சகர இயக்கங்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. பண்ணையார்களை கடத்துவது, கொலை செய்வது, அரசாங்கத்திற்கு தகவல் சொல்பவர்களை சுடுவது என்கின்ற பாதையில் அவர்களின் போராட்டமும் போய்க் கொண்டிருந்தது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எமது தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்தினார்கள். சிங்கள அரசாங்கத்தின் கட்சியில் இருந்தவர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டவர்கள், தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என்று எல்லோர் மீதும் அவர்களின் துப்பாக்கிகளும் திரும்பியது.
அன்றைய உலகின் போக்கில் இது தவிர்க்க முடியாத அவலமாகிப் போனது. சிறுவயதில் துரோகி அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டார் என்றுதான் படித்தோம். இன்று இருந்து சிந்தித்தால், சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது. துரையப்பாவை சுட்டது சரி என்றால், இன்றைக்கு விஜயகலா மகேஸ்வரனில் இருந்து அங்கஜன் வரை சுட வேண்டும்.
அண்மையில் இயற்கை எய்திய அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் இயக்கம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அன்றைக்கு அவரை சுட்டிருந்தால் 'ஒழிந்தான் துரோகி' என்பதோடு அவர் வரலாற்றை முடித்திருப்போமே என்று நினைக்கின்ற போதே உள்ளம் நடுங்குகின்றது. இன்றைக்கு அவர் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், மாணவர்களினதும் அஞ்சலியோடும், ஆசான் என்கின்ற மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிரமான தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் விருப்பப்பட்டியலில் இன்றைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இருக்கிறார். அன்றைக்கு புலிகளிடம் மாட்டியிருந்தால், அதோ கதிதான். ரெலோ இயக்கத்தின் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வை சிவாஜிலிங்கம் முன்னின்று நடத்துகின்றார்.
காலம் இவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை நிறையப் பேருக்கு வழங்காமல் போய்விட்டது. இன்றைக்கு தமிழர் அரசியலில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய பலரை துப்பாக்கிகள் கொன்று தீர்த்து விட்டன. அன்றைக்கு யார் துப்பாக்கி ஏந்தியிருந்தாலும், இந்த நிலை மாறியிருக்கப் போவதில்லை. ஏற்கனவே சொன்னது போன்று, உலகில் விடுதலைப் போராட்டம், மக்கள் புரட்சி என்று எல்லாவற்றின் பாதையும் இதுவாகத்தான் இருந்தது.
இன்றைக்கு நாம் இவற்றை படிப்பினைகளை பெறுவதற்கான சம்பவங்களாகத்தான் நோக்க வேண்டும். நியாயப்படுத்தல்கள் செய்து எதிர்காலத் தலைமுறையினரையும் இதே வழியில் செல்வதற்கு தூண்டக் கூடாது. சம்பந்தனை கொல்ல வேண்டும், சுமந்திரனைப் போட வேண்டும் என்று மனநோய் பிடித்து முகநூலில் சிலர் கவிதைகளையும் பதிவுகளையும் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த மனநோய் பரவக் கூடாது என்பதில் இனப்பற்றும் மானுடப்பற்றும் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment