Sunday, February 05, 2023

இசை வாணி தோன்றும் ரின் சோப் விளம்பரம்

 ஹமாம் விளம்பரங்கள் எப்போதும் வலிந்த பிராமண ஒப்பனையுடன்தான் வரும். மற்ற விளம்பரங்களிலுமே இத்தகு சாய்வைக் காணலாம். சில ஆண்டுகள் முன் ஏதோ பைக் விளம்பரத்தில் ஐயர் என்று பெயரிட்டுப் பிரச்சனை ஆகிப் பின் நீக்கினார்கள்.


இதற்கெல்லாம் காரணம் விளம்பரம் எழுதும், இயக்கும், தயாரிக்கும் நிறுவனம், அந்த பிராண்ட் எல்லாம் உயர் சாதியினர் என்பதுதான். இன்னொரு காரணம் அப்படிக் காட்டும் போதுதான் உயர்சாதியினர் மட்டுமல்ல; சகல சாதியினரும் போட்டி போட்டு வாங்குவார்கள் ("ஆனானப்பட்ட பார்ப்பானே வாங்கற ப்ராண்டுங்க.") ஐயர் காஃபி, அய்யங்கார் பேக்கரி என்று இதற்குப் பல உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


உயர் சாதி reference இல்லை என்றாலும் தலித் அல்லது பழங்குடிச் சாய்வு விளம்பரங்களில் இல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு கூட சொல்ல முடியாது. ஏழ்மையில் இருப்பவர்களைக் காட்டுவார்கள், ஆனால் சாதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற தொனி இருக்கவே இருக்காது. ஏனெனில் ஒரு பொருளை அப்படி விளம்பரம் செய்த பின் அந்தப் பொருளை உயர்சாதியினர், பிற்பட்ட சமூகத்தினர் எவரும் வாங்க மாட்டார்கள். இந்தியர்களின் சாதி வெறி அத்தகையது.


இந்தச் சூழலில் இசை வாணி தோன்றும் ரின் சோப் விளம்பரம் வெளிப்படையாக அவர் ஒடுக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டு அவரை நாயகியாக முன்வைக்கிறது. டிடி நேஷனல் 1982ல் தொடங்கப்பட்டதை இந்தியத் தொலைக்காட்சி விளம்பர ஆரம்பமாகக் கொண்டால் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பே இந்தப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.


இந்த விளம்பரத்தை எழுதியவருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்துக்கும் ஒரு பலமான கைகுலுக்கல்.




No comments: