Monday, January 29, 2018

நாடார்களும் திராவிட இயக்கமும்

நாடார்களும் திராவிட இயக்கமும்..
நாடார்களின் கோவில் நுழைவுக்கு அச்சாரமிட்ட தந்தை பெரியார்... -- "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை செய்தி..
கேரளா வைக்கத்தில் ஈழவர் சாதி (இங்கே நாடார் என்று அழைக்கப்படுகிறார்கள்) பொது தெருவில் நடக்க உரிமை பெற்று தந்தவர் தந்தை பெரியார்...
டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மிகமுகியமான நீதிக்கட்சி தலைவர்.. திராவிட இயக்க முன்னோடி.. இவரின் நினைவால்தான் தி.நகரின் "பாண்டி பஜார்" அழைக்கபடுகிறது..
முதன்முதலாக தமிழன் செய்தித்தாள் ஆரம்பிக்கிறான் என்று ஆதித்தானருக்கு வேப்பேரியில் உள்ள பெரியார்திடலின் ஒரு பகுதி நிலத்தை தந்து உதவியர் பெரியார்..
பெருந்தலைவர் காமராஜரை, ராஜாஜிக்கு போட்டியாக காங்கிரஸ்சில் வளர்த்தெடுத்து, குலகல்வி திட்டதுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி.. எதிர்ப்பின் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்தவுடன், குடியாத்தம் தொகுதியில் காமராஜரை நிற்கசொல்லி, அவரை வெற்றிபெற செய்து, முதல்வராக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் தந்தை பெரியார்... அவரின் பல சாதனைகளுக்கு "காரியம் நானென்றாலும், காரணம் பெரியார்" என காமராஜரே குறிப்பிட்டுள்ளார்...
நாடார் சமையல் :
நான் (பெரியார்) ஏன் நாடார் சமையலை விரும்புகிறேன் என்றால் வைக்கம் போராட்டம் நடத்தியதே அங்குள்ள ஈழவ சமுதாயத்துக்காகத்தானே. இங்கு நாடார்கள் அங்கு ஈழவர்கள். அன்றிலிருந்து அந்த இனமக்கள் மீது எனக்கொரு பற்று, அவர்கள் சமூகத்தில் அவர்ணஸ்தர்களாக கருதப்பட்டவர்கள்.
அவர்ணஸ்தவர்கள் என்பவர்கள் எந்த வர்ணத்திலும் ஜாதியிலும் சேராமல் ஒதுக்கப்பட்டவர்கள் என ஜாதி ஆணவம் அவர்களை கருதியது. அதை உடைப்பதற்காக அவர்களை கொண்டே சமைக்க வைத்து மற்ற அனைவரையும் சாப்பிட வைப்பதன் மூலம் ஜாதி உணர்வை ஒழிப்பதாகும் அல்லவா. எனவே தான் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டிலிருந்து இன்றுவரை நாடார்கள் சமையலையே எற்பாடு செய்கிறேன் என்றார், தந்தை பெரியார்.
-- முன்னாள் அமைச்சர் இராசாராம் அவர்களின் சுயசரிதை
நாடார் ஆலய பிரவேசம்..
1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர்.
"மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத்தியநாத அய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று. அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப்பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923 இல் தந்தை பெரியார் அவர்களுடைய உரையை வெளியிட்டிருந்தது.
"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ்வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள்.
நாடார் சகோதரர்களின் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும்.
எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயாராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றியிருந்தார்.
-- "நாடார்குல மித்திரன்" 11.8.1923 செய்தி

No comments: