சங்க
இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ விநாயகரைப் பற்றி ஒரு சொல் இல்லை.
தமிழகத்தின் மிகப்பழைய விநாயகரான பிள்ளையார்பட்டி தேசிகவிநாயகர் (பல
தேசங்களுக்கும் சென்று வர்த்தகம் செய்வோர் தேசிகர். அநேகமாக இன்றைய
மகாராட்டிரப் பகுதியிலிருந்து விநாயகர் வழிபாட்டை தேசிகர்கள் கொண்டு
வந்திருக்க வேண்டும்) கூட நான்காம் நூற்றாண்டளவினதான புடைப்புச் சிற்பம்
தானாம். அதிலும் கூட யானைக்கான கூறுகளே அதிகம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
பரஞ்சோதியார்
வாதாபியைத் தீக்கிரையாக்கி வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சியில்
நிறுவிய வாதாபி கணபதியும் மிகப்பழைய விநாயகர் என்கிறார்கள். எதைக் கொண்டு
வந்து வைத்தாலும் பஜனை பாட ஒரு கூட்டம் இங்கே உண்டு. "வாதாபி கணபதிம் பஜே"
என்ற ஒரு பிரபலமான கீர்த்தனை உண்டு.
புத்தர்
கடவுளாக்கப்பட்ட பிறகு அவரது பிறப்பை விதந்தோதும் கதைகள் பிறந்தன.
அதிலொன்று அவரது தாயார் மாயாதேவியின் வயிற்றில் அவலோகிதரான போதிசத்துவர்
ஒரு வெள்ளையானை வடிவில் வந்து கருவாகத் தங்கினார் என்கிறது. இதன் காரணமாக,
புத்தம் தழைத்தோங்கிய காலத்தில், அரசமரத்தடியில் யானைச் சிலையை நிறுவி
வழிபடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வைதீகமதம்
தலையெடுத்த பொழுது அது யானைச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு விநாயகரை
நிறுவியது என்றும் அதற்காகப் பார்வதி-அழுக்குருண்டை-பாத்ரும்
காத்தல்-சிவனுடன் சண்டை- கழுத்தறுப்பு-யானைத்தலை ஒட்டல்-விநாயகர் பிறத்தல்
என்று கதை புனைந்து கொண்டது என்கிறார்கள். இந்தக் கதை தான் அடியேன்
முதன்முதலாக வாசித்த தொடர். இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததாக
நினைவு. அழகழகான படங்களுடன் சிறுவர் மலரில் வெளியாகிப் பரவசப்படுத்தியது.
இன்னொரு
கருதுகோள், அரசமரத்தடியில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுப் பரவலாக
வழிபடப்பட்டன. ஆனால் பௌத்தத்தை வீழ்த்திய வைதீகம், அந்த புத்தர்
சிலைகளுக்குப் பதிலாக யானைத்தலையும் மனித வடிவும் கொண்ட விநாயகரை
அமர்த்தியது என்கிறது.
ஆனால்
எனக்கென்னவோ இந்தக் கருதுகோள்களில் முழுஉண்மை இருப்பதாகப்படவில்லை.
விநாயகர் கதை பௌத்த வீழ்ச்சியை மட்டுமே சுட்டி நிற்பதாகத் தெரியவில்லை.
இன்னொன்றின் வீழ்ச்சியையும் அது சுட்டி நிற்கிறதாகவே படுகிறது.
ஆசீவகத்தின்
சின்னம் யானை. ஆசீவகத்தின் கடவுளரான ஐயனார்களின் வாகனமும் கூட. பௌத்தம்
வீழ்ந்த பின்னும் கிட்டத்தட்டப் பதினான்காம் நூற்றாண்டு வரை உயிரைப்
பிடித்துக் கொண்டு இருந்த மதம் ஆசீவகம். புத்தர் காலத்தில், புத்தரே
பொறாமைப்படும் அளவிற்கு அந்த மதம் மக்களிடையே செல்வாக்குப்
பெற்றிருந்திருக்கிறது.
சிவன்
ஆனை அரக்கனைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தி
ஆனான் என்னும் கதை சைவம் ஆசீவகத்தை அழித்ததன் உருவகம் தானே?
திருநாவுக்கரசர் ஆயிரம் ஆசீவகர்களை யானைக்காலால் இடறச் செய்தார் என்கிறது
பெரியபுராணம். மதுரையில் திருஞானசம்பந்தரும் மங்கையர்க்கரசியாரும்
குலச்சிறையாரும் கூன்பாண்டியனை மனம்மாற்றிக் கைக்குள் போட்டுக்கொண்டு
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்று ஒழித்தார்கள் அல்லவா? அந்த
எட்டாயிரம் பேரில், ஜைனர்களுடன் ஆசீவகர்களும் உண்டு என்று கொள்வதே மதி!
மதுரையைச் சுற்றிக் காணக்கிடைக்கும் கற்படுகைகள் பலவும் ஆசீவகர்களுக்கு
உரியவை என்கின்றன அண்மை ஆய்வுகள்.
வைணவம்
ஆசீகத்திற்கு ஆதரவளித்திருக்கிறது. முதலை, காலைக் கவ்வியதும் 'ஆதிமூலம்
ஆதிமூலம்' என்று அபயக்குரல் எழுப்பிய ஆனையை மகாவிஷ்ணு பறந்துவந்து
காப்பாற்றினார் எனும் கதை இதை விளக்கும். ஐயனாருக்கு நாமம் போடும்
பழக்கத்தை எண்ணிப்பார்க்கலாம். ஆனால், விநாயகர் புராணத்தின்படி வைணவமும்
கூட ஆசீவகத்தை எதிர்த்திருக்கிறது.
விநாயகர்
புராணத்தின்படி, சிவனால் தலை துண்டிக்கப்பட்ட பார்வதி பாலனை உயிர்பிக்கத்
தேவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் முதல் விலங்கின்
தலையைக் கொய்துவரவேண்டும் என்பது ஈஸ்வரன் ஆணை. அப்படி எதிர்த்து வந்த
களிறின் தலையைக் கொய்வது விஷ்ணுவின் சக்கரம்!
இங்கே,
சாக்தம், சைவம், வைணவம் மூன்றும் கூடி விநாயகனை உண்டாக்குகின்றன. இதில்
சைவத்தின் ஆணைப்படி, வைணவம் ஆசீவகச் சின்னமான யானையின் தலையைத்
துண்டிக்கிறது. அந்தத் தலையைத் தலையற்ற புத்தர் உடலில் சைவம்
பொருத்துகிறது. ஆசீவகமும் பௌத்தமும் சேர்ந்த ஒரு கலவையான தெய்வம்
உருவாகிறது. இப்போது அந்த தெய்வத்தை ஆசீவகமும் உரிமை கோரமுடியாது.
பௌத்தமும் கொண்டாட முடியாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! வைதீகம்
புத்தரையும் ஆசீவகத்தையும் இணைத்து ஸ்வீகரித்துக்கொண்டது. காரணம்
வெகுமக்களிடமிருந்த பௌத்த ஆசீவக ஆதரவை நைச்சியமாக ஒழித்துக்கட்ட வைதீகம்
செய்த வழக்கமான புரட்டாகவே இதை நான் பார்க்கிறேன்.
விநாயகரை
ஞானக் கடவுள் என்கிறார்கள். வைதீகத்திற்கும் ஞானத்திற்கும் ஸ்நானப்
ப்ராப்த்தி கூடக் கிடையாது. பொய்யும் புனைசுருட்டும் வஞ்சமும் சூழ்ச்சியும்
நிறைந்தது அது. ஆனால் பௌத்தமும் ஆசீவகமும் உண்மையிலேயே ஞானத்தை போதித்த
மதங்கள். அவற்றின் கூட்டான விநாயகரை ஞானக்கடவுளாகச் சொல்வதில்
வியப்பொன்றும் இல்லை.
ஜெயமோகன்,
சிலப்பதிகாரத்தைத் திரியோ திரி என்று திரித்துக் 'கொற்றவை' எழுதினார்.
அதில் கதை தொடங்குவது குமரிக்கண்டத்தில்! அங்கே சிவனின் மூத்த மகனாக,
ஞானக்கடவுளாக வருவது யார் தெரியுமோ? ஆனைத்தலை விநாயகர்! வைதீகப் புரட்டை
எங்கு கொண்டுபோய் வைக்கிறார் பாருங்கள்! தமிழின் பேரெதிரி, தமிழரைக்
காட்டிக் கொடுக்கும் புல்லுருவி தான் இன்றைக்குத் தமிழின் நம்பர் ஒன்
ரைட்டர்!
ஆனால்,
வெகுமக்களைப் பொறுத்தவரை இந்தக் கதைகளுக்கு எந்தப் பொருளும் இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை பிள்ளையாருக்கு உருவம் கிடையாது. ஒரு பிடி மாட்டுச்
சாணமோ, ஒரு உருண்டை மஞ்சளோ போதும். பிள்ளையாராக்கி விடுகிறார்கள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வெகுமக்களிடையே பிரபலமானது மிக அண்மையில்
தானே? அதற்கும் முன்புவரை அவர்களைப் பொறுத்தவரை விநாயகர் என்பவர் அவர்களது
கையால் உருவாகும் விருப்பத்திற்குரிய தெய்வம். அது புத்தரா ஐயனாரா என்று
கூடக் கவலைப்பட்டதில்லை. அவர்களது முதல் பூசைக்குரிய கடவுளும் அவர் தான்.
எங்கள்
பகுதியில் நிலாப்பிள்ளை என்று ஒரு அழகிய திருவிழா ஒன்று உண்டு. அதில்
பிள்ளையாரைப் பற்றிப் பாடும் கும்மிப்பாடல் வரியொன்று ரசமானது.
"பிள்ளாயா பொண்டாட்டி எப்பேருப் பட்டவ?
மாரு நெறஞ்சவ மங்கிலியம் பூண்டவ"
தங்கள்
பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ செய்த பிள்ளையார் சிலைகளைப் பெருமையாகப்
பதிவிடும் பெரியாரியர்களை நேற்று முதல் காணமுடிகிறது. பிள்ளைப் பருவத்தில்
பெரியாரை ஊட்டாமல் பிள்ளையாரை ஊட்டுகிறார்கள். அங்கே பார்ப்பனியம்
கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக்
கொட்டுகிறோம்.
No comments:
Post a Comment