ராஜேஷ் தாஸ் தனக்கு கீழ் வேலை செய்த பெண் காவல் அதிகாரியிடம் செக்ஸுவலாக அத்துமீறியதைத் தொடர்ந்து எஃப் ஐ ஆர் போடப்பட்டு இருக்கிறது. அதை மேம்போக்காகப் படித்துப் பார்த்தேன்.
காரில் தனக்குப் பக்கத்தில் ஏற்றிக்கொண்டு அந்தப் பெண் அதிகாரி சாய்ந்து கொள்ள தலைக்கு குஷன் வைக்கிறார். அந்தப் பெண் அதிகாரியின் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுகிறார். கடைசி வரை ஐயா "கைவிடவில்லை". தான் முன்பே எடுத்த அவரின் புகைப்படத்தைத் தன் மொபைலில் காட்டுகிறார். இப்படி போகிறது ரிப்போர்ட்.
இதைப் படிக்கும் ஆண்களுக்கும் , சில பெண்களுக்கும் இதெல்லாம் ஒரு செக்ஸுவல் ஹாரஸ்மெண்டா என்று தோன்றும். அந்தப் பெண் அதிகாரி ஓவராக சீன் போடுவதாகத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் தைரியமாகப் புகார் அளிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் , அமைதியாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு ,அடுத்த முறை முலையைக் கசக்கி விடுவார்கள். அப்போது அந்தப் பெண் எதிர்க்குரல் எழுப்பினால் ,
கையைப் புடிச்சப்ப ஏன் சும்மா இருந்தா ? இப்ப ஏன் சீன் போட்றா ? என்று சமூகமே கேட்கும்.
பெண் மனசு ஆழம் என்று பஜனை செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு சக ஆண்கள் இப்போது படு மர்மமான ஆசாமியாகத் தெரிகிறார்கள். பல ஆண்களுக்கே இந்த விஷயம் தெரியாது. ஆண்களிடம் சகஜமாக இயல்பான மனிதன் போல பழகிக்கொண்டிருக்கும் ஒரு ஆண் , பெண்ணிடம் முற்றிலும் வேறான ஒரு மனிதனாகப் பழகுகிறான். பாதிக்கப்பட்ட பெண் அவனைப்பற்றி புகார் சொன்னால் , உடன் பழகிய ஆண்களால் அதை நம்பவே முடியாது. "அவனா?" என்று ஆச்சர்யப்பட்டு , புகார் சொன்ன அந்தப் பெண்ணையே சந்தேகப்படுவோம்.
எனக்கு பர்ஸ்னலாக தெரிந்த சில அனுபவங்களைச் சொல்கிறேன்.
என் தங்கை மருத்துவர். ஒரு மைதானத்தில் காலையில் ஓட ஆரம்பித்து இருக்கிறார். மூன்றாவது நாளே அரசுப் பயிற்சியாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு நபர் வழிந்திருக்கிறார். தினமும் பேச ஆரம்பித்து இருக்கிறார். எடுத்த உடனே நீங்க அழகா இருக்கீங்க என்றவர் , உங்க ஸ்ட்ரக்ச்சர் செமையா இருக்கு என்று சொல்லி, போன் நம்பர் கேட்டிருக்கிறார். தங்கை மறுத்து விட்டு ஓட ஆரம்பித்து இருக்கிறார். மறுநாள் இரவு தங்கையின் மொபைலுக்கு போன் வருகிறது. அந்த ஆசாமிதான். எப்படி நம்பர் கிடைத்தது என்று பார்த்தால் , மெனக்கெட்டு அவள் பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு வந்து அவளின் போன் நம்பரை வாங்கிச்சென்றிருக்கிறான். தொடர்ந்து மெசேஜ் டார்ச்சர்.
வேறு ஒரு திருட்டு பிரச்சனைக்காக நான் தான் அவளை காவல் நிலையம் செல்லச் சொன்னேன். அவள் தயங்கினாள். நீயே இப்படி பயந்தா எப்படி ? இப்பல்லாம் நிறைய நேர்மையான இளம் அதிகாரிகள் வந்து விட்டார்கள். அரசு மருத்துவர் என்று சொல். டீஸண்டாக நடந்து கொள்வார்கள் என்றேன். போனாள், புகார் கொடுத்தாள். உதவி ஆய்வாளர் மரியாதையாக "மேடம் " "மேடம் " என்று அழைத்து பரபரப்பாக துப்பு துலக்கியிருக்கிறார். இரண்டு நாட்கள் தான். துப்பு துலங்கவில்லை . அடுத்த நாளில் இருந்து அந்த உதவி ஆய்வாளர் , குட் மார்னிங்க் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து இருக்கிறார். குட் நைட் , நாம ஃபிரண்ட்ஸா இருக்கலாமா ....இப்படியாகத் தொடர்ந்து டார்ச்சர் வர பிளாக் செய்து விட்டாள்.
என் அலுவலகத்தில் மேனேஜர் ஒரு பெண். அவர்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். இடத்தின் உரிமையாளர் பெரும் பணக்காரர்.வயது 79 இருக்கும். இந்த பெண்தான் மாதாமாதம் அவரிடம் வாடகை செலுத்துவார். ஒருநாள் , திடீரென்று சார் , இனிமே நீங்களே வாடகை கொடுங்க என்றார். ஏங்க, என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு , அவரு ஒரு மாதிரியா பிஹேவ் பண்றாரு சார் என்றார். நாகரீகம் கருதி அதை நான் விளக்கமாகக் கேட்கவில்லை. ஆனால் மகள் , மகள் மாதிரி என்று சொல்லிக்கொண்டு ஐயா ஏதோ விளையாடி இருக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து நான் வாடகை கொடுக்கப் போனேன். இந்தப் பெண் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அடுத்த இரண்டு மாதங்களில் எங்களை காலி செய்யச் சொல்லி விட்டார்.
ஒரு பெண்ணுடன் நாம் உடன் இருக்கையிலேயே கிடைக்கும் சைக்ளிக் கேப்பில் அத்து மீறும் ஆண்களும் இருக்கிறார்கள்.
ஒரு தோழியுடன் டீ குடிக்கச் சென்றிருந்தேன். ரெண்டு ஜிஞ்சர் லெமன் சொல்லி விட்டு காத்திருந்தேன். அந்த ஆசாமி , தலையைக் கூட ஆட்டவில்லை. அதாவது நான் ஒருவன் டீ ஆர்டர் செய்ததே தெரியாத மாதிரி , நான் என்ற ஒருவன் அங்கே இல்லாதது மாதிரி பரப்பிரம்மம் போல டீ போட்டுக் கொடுத்தார். நான் சீக்கிரம் குடித்து விட்டு ரெண்டு இழுப்பு இழுக்கலாம் என வெளியே வந்து விட்டேன்.
தோழி வெளியே வந்து , அந்த டீ மாஸ்டர் ஓவரா பேசறான் என்றார். ஜிஞ்சர் டீ பெண்களுக்கு அகாதாம்,அவரு உங்களுக்கு தப்பா வாங்கிக் குடுத்துட்டாரு. நீங்க லெமன் டீ தான் குடிக்கணும். உங்க மூஞ்சி அழகா இருக்கு. லெமன் குடிச்சா இன்னும் பளபளப்பா மாறும்.டயட்ல இருக்கீங்களா ? யோகா பண்றீங்களா ? உங்க உடல் வாகுக்கு ....இப்படியே போட்டுத் தாக்கி இருக்கிறான்.
ஒரு முறை மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஒரு பப்புக்கு போனோம். கர்ப்பிணி குடிக்கலாமா என்று கொந்தளிக்க வேண்டாம். அவள் குடிக்கவில்லை. அந்த அதிரும் இசையில் குழந்தை துடிக்கிறதா என்று சும்மா ஜாலியாகப் பார்க்கலாம் என்று போனோம். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து விடலாம் என்றுதான் திட்டம். ஒரு பியர் நான் மட்டும் குடித்துவிட்டு பில் சொல்லி விட்டு ரெஸ்ட் ரூம் போனேன். திரும்பி வந்து பார்ப்பதற்குள் ஒருவன் நம்பர் கேட்டிருக்கிறான். ஒருவன் டிரிங்க் ஆர்டர் பண்ணவா என்றிருக்கிறான். நீங்க க்யூட்டா இருக்கீங்க , நாம வெளில மீட் பண்ணலாம் என்றிருக்கிறான். இதெல்லாம் நான் மூத்திரம் பேயும் 3 நிமிட கேப்பில். நான் திரும்பி வருகையில் இதற்கான தடயமே இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே இல்லை. இதற்கே அவள் 8 மாத கர்ப்பத்தில் வயிற்றைத் தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்.
நாம் பழகும் சமூகத்தில் நம் கண்ணுக்கே புலப்படாமல் நொடிகளில் இதைப்போல அத்துமீறி விட்டு அமைதியாகி விடுவார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கையில் , ஓலா , ஊபர் , ஆட்டோக்களில் செல்கையில் , ஷாப்பிங்க் செய்கையில் , மருத்துவமனைக்குச் செல்கையில் , பொதுக்கழிப்பிடம் செல்கையில் என எங்கும் பெண்களிடம் அத்துமீற ஆண்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். நம் கண்ணுக்கேத் தெரியாது.
என் தங்கை பரிதாபமாகச் சொன்னாள். இந்த தடியனால பாருண்ணா நான் ஓடறதையே நிறுத்திட்டேன்.
இதைப்போல பல அடிப்படைச் செயல்களையே பெண்கள் இதைப்போன்ற அத்துமீறல்களால் நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால் சின்ன அத்துமீறல் என்றாலும் புகார் அளித்தால்தான் , இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். டென்ஷன் இல்லாமல் பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குத் தேவையான அடிப்படைச் செயல்களையே செய்ய முடியும். இப்போது ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு 100 வருடங்கள் கழித்து கொஞ்சம் மாற்றம் வரும்.
பி.கு: மென்மையான சீண்டல்கள் என்று வகைப்படுத்துவதால் இந்த வகை சீண்டல்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். வன்மையான சீண்டல்கள் பல இருக்கின்றன. அது தனி ஏரியா.
No comments:
Post a Comment