Thursday, October 12, 2017

அறிவியற் கண்டுபிடிப்புகள் - பிற்காலத்தில் கற்பனை பீதியை உண்டாக்கும்

கேள்வி: இயல்பாக நடக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகள், அதன் பயன்பாடுகள், தொழிற்புரட்சியின் தாக்கம், வணிகம், தொழில் போட்டி, தேசபக்தி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை பிற்காலத்தில் கற்பனை கலந்து பீதியை உண்டாக்கும் வண்ணம் பரப்ப இயலுமா? மக்கள் அதை நம்புவார்களா?
பதில்: நீங்கள் திருப்பூரில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும் உங்கள் சகோதரர் கோவையில் ஒரு ஃபவுண்ட்ரி ஆலை நடத்துவதாகவும் வைத்துக்கொள்வோம். உறவினர்கள், நண்பர்களின் சின்னச்சின்ன யூனிட்கள் மூலம் ஜாப் ஒர்க் செய்து பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். திடீரென இந்தியாவுக்கும் பக்கத்து நாட்டுக்கும் போர் மூள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாடே பரபரப்பாக யுத்தத்தை கவனிக்கிறது, குடிமகன்கள் எல்லோரும் தன்னாலான உதவிகளை செய்வதன் மூலம் தாய்நாடு போரில் வெற்றிபெறவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவ வீரர்களுக்கு போர்க்கள உடைகளைத் தைக்கும் வசதி உங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருப்பதால் இராணுவத்தினர் உங்களுக்கு பெரிய ஆர்டரைத் தருகிறார்கள். போருக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றாலும் நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்தியவாறே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவம் கேட்டதைவிட அதிக தரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறீர்கள். உங்கள் ஊழியர்களும் காலை மாலை ஒரு மணிநேரம் கூடுதலாக உழைத்து தேசத்தற்கு தங்களாலான சேவையை நல்குகிறார்கள்.
ஆடை தயாரிப்பில் மிச்சம் விழும் கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட இராணுவம் தளவாடங்களைத் துடைக்கப் பயன்படும் என வாங்கிச் செல்கிறது. உங்களது சகோதரர் நடத்தும் பவுண்ட்ரியும் போர்க்கருவிகளின் உதிரி பாகங்களை தயாரித்து இராணுவத்துக்கு அனுப்பி யுத்தத்துக்கு உதவுகிறது. நாடு போரில் வெல்கிறது. போருக்கு உதவிய நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க & தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் பெருமிதத்துடன் கர்வத்துடன் மிடுக்காக வலம் வருகிறார்கள். இராணுவ ஆர்டர் கிடைத்த நிறுவனங்கள் பெருநிறுவனங்களாகின்றன. நாட்கள் மகிழ்ச்சியாக செல்கின்றன. ஊடகங்கள் மக்கள் மகிழும்வண்ணம் செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.
யுத்தம் நடக்கும்போது இராணுவத்துக்கு சப்ளை செய்யமுடியாது என்று நீங்கள் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாளே தேசத்துரோகி, அந்நிய நாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். வழக்கமாக நடக்கும் அத்தனை அரசாங்க நெருக்கடிகளும் தரப்படும். தேசத்துரோகி என்பதால் உங்களது சப்ளையர்கள், வாடிக்கையாளர்களே விலகுவார்கள். அல்லது ஒருகட்டத்தில் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டுவிடும். உங்களை ஆதரிப்பவர் யாருமின்றி அநாதையாக சொந்த நாட்டிலேயே சாக நேரிடலாம். நடைமுறை என்னவோ இப்படித்தான் இருக்கும்.
ஆனால் பின்னாளில் வரும் அரைகுறை அறிஞர்கள் நீங்களும் உங்கள் சகோதரரும் யுத்தத்துக்குத் தேவையான நாசகார பொருட்களை தயாரித்து இராணுவத்துக்கு வழங்கி பல இலட்சம் அப்பாவி மக்களை அண்டை நாட்டில் படுகொலை செய்ய துணைபோனதாகவும், கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட விற்று காசு பார்த்ததாகவும், ஊழியர்களை மனசாட்சியே இல்லாமல் ஓவர்டைம் பார்க்க வைத்ததாகவும், உங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஒர்க் ஆர்டர்களைக்கூட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி கொள்ளை இலாபம் பார்த்ததாகவும், இதற்கு பல வங்கி அதிகாரிகள் துணைநின்றதாகவும், பின்னாளில் அவர்களும் பதவி உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் எழுதுவார்கள்.
பிற்காலத்தில் இதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு வாட்சப்பில் படிப்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கும். இன்னொருவாட்டி படித்துப் பார்த்து இனப் படுகொலைக்கு துணைபோன இலுமினாட்டி என்று ஓலமிடுவார்கள்.
காற்றில் 78% நைட்ரஜன் இருந்தாலும் தாவரங்களால் அதை நேரடியாக கிரகிக்க இயலாது. விலங்குகளின் செல்களில் உள்ள புரதத்துக்கும் நைட்ரஜன் அடிப்படை. மக்கள்தொகை பெருக ஆரம்பித்ததால் வேட்டையாடி உண்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் விவசாயம் செய்து தானியங்களை சேமித்துவைத்து உண்ணவும், வியாபாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விவசாயம் செய்ததால் மண்ணில் நைட்ரஜன் குறைய ஆரம்பித்தது. சாணங்களாலும், தாவரக் கழிவுகளாலும் நைட்ரஜன் எடுக்கப்படும் வேகத்துக்கு திருப்பியளிக்க முடியவில்லை.
அந்த காலகட்டத்தில் சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தின் மணலில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இருந்ததால் கப்பல் கப்பலாக மணலை அள்ளிச் சென்றார்கள். சில வருடங்களில் மணலே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று பூகோளவியலாளர்கள் கவலைப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என அஞ்சினார்கள்.
அந்நேரத்தில் குறைவான வினைபடுதிறன் கொண்ட நைட்ரஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரிய வைத்து அம்மோனியாவை செயற்கையாக உண்டாக்குகிறார் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி. இதற்காக 1918-இல் நோபல் பரிசு பெறுகிறார். இதனடிப்படையில் Haber - Bosch process உருவாகிறது. காலங்காலமாக இருந்து வந்த அம்மோனியா, நைட்ரேட் தேவையை Haber Bosch process மூலமாக நிறைவேற்ற பல ஆய்வகங்கள் முற்பட்டன. தொடர்ந்து பல மூலக்கூறுகளை, ஆய்வு முறைமைகளை ஃப்ரிட்ஸ் ஹேபர் தலைமையிலான குழு கண்டறிகிறது.
BASF, Bayer, Hoechst போன்ற நிறுவனங்களின் இணைப்பில் உருவான IG Farben கம்பெனி, சயனைடு அடிப்படையில் ஃப்ரிட்ஸ் ஹேபர் கண்டுபிடித்த Zyklon B எனும் இரசாயனத்துக்கு தானிய கிட்டங்கிகளில் பூச்சிகளைக் கொல்லும் fumigant-ஆக பயன்படுத்த காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்கிறது. ஹேபர் ஆரம்பித்த Degesch என்ற கம்பெனியே கடைசியில் IG Farben நிறுவனத்திடம் Zyklon Bயைப் பயன்படுத்த லைசன்ஸ் வாங்கி அமெரிக்காவில் கப்பல்களில் வரும் தானியங்களுக்கு fumigation செய்ய சப்ளை செய்கிறது. பின்னாளில் IG Farben கம்பெனி BASF, Bayer நிறுவனங்களுக்குள் கரைந்துபோனது. அதன் தலைமை அலுவலக கட்டிடம் இன்று University of Frankfurtஇன் நிர்வாக கட்டிடமாக மாறி ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளைக் கூடையில் அல்லாத குறையாக வாங்கிக் குவிக்கிறார்கள்.
உலகப்போர் நடக்கும்போது ஹிட்லரின் இராணுவத்தினர் இந்த Zyklon Bயை பெருமளவில் வாங்கி யூதர்களின் முகாம்களில் விஷவாயுவாக செலுத்தி படுகொலை செய்கிறார்கள். ஹேபரின் Degesch கம்பெனியும் கரைந்துபோனது. போருக்கு உதவ மறுத்த பல விஞ்ஞானிகள் காணாமல் போனார்கள். சிலர் அமெரிக்கா ஓடிப் போனார்கள்.
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் விதைகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரம் நன்றாக இருந்ததால் Queeny Monsanto என்ற அந்த பெண்மணியின் பெயரிலேயே மான்சாண்டோ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து விதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். பின்னாளில் அது ஒரு பெரிய நிறுவனமாகிறது. அந்நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த களைக்கொல்லியின் விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது.
அப்போது வியட்நாம் போர் வருகிறது. கொரில்லா தாக்குதலில் அனுபவம் இல்லாத அமெரிக்கப் படை பலத்த அடி வாங்குகிறது. எப்படி தேடினாலும் வியட்நாம் வீரர்களை நெருங்க முடியவில்லை. ஒரு தளபதிக்கு புதிய யோசனை வருகிறது. மான்சான்டோவின் களைக்கொல்லியை பெரிய பேரல்களில் வரவழைத்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகளின்மீது தெளிக்கிறார்கள். சில நாட்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் வியட்நாமிய வீரர்களின் முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது ஆரஞ்சு நிற பேரல்களில் வரவழைக்கப்பட்ட களைக்கொல்லியானது ஏஜென்ட் ஆரஞ்சு என்றே அழைக்கப்பட்டது.
எல்லாப் போர்களும், இன அழித்தொழிப்புகளும், காலனிகளும் குரூரமானவையே. போர் என்று வந்துவிட்டால் எல்லாவிதமான போர் முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதில் உயிரோடு மீண்டு இருப்பது மட்டுமே வரலாறாகக் கருதப்படும். யுத்தத்தை ஆதரித்து உயிரோடு இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். தேசபக்தி என்பது அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படும். போரை எதிர்க்கும் தனிநபர்கள் தினசரி நடவடிக்கைகள்கூட யுத்த ஆதரவு செயலாகவே முடியும்.
இயல்பாக நடந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாமே நாடுகளால் தேச பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அணு ஆராய்ச்சி, தொலைத் தொடர்புக்கருவிகள் முதல் தானியங்கள்வரை அத்தனையும் தேச நலனுக்காகவே அர்ப்பணிக்கப்படும். அதில் இராணுவம், போர் என்பதும் ஓர் அங்கம்.
அம்மோனியா, நைட்ரேட் போன்றவை வெடிமருந்துக்கு பயன்பட்டதோடு விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. போர்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளைவிட பாறைகள், மலைகளை உடைத்து சாலைகள், தண்டவாளங்கள், பாலங்கள், அணைகள், குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்டவையே உலகளவில் அதிகமான ஒன்றாகும். ஆனாலும் வெடிமருந்து என்றாலே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது வீசவே தயாரிக்கப்படுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகள், வர்த்தகம், நாடு பிடிக்கும் போட்டிகள் என வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தபோதும் இந்தியாவில் ஓடுகிற ஆற்றுநீரில் குளித்தாலே, வீதியில் நடந்து சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற அளவில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆங்கிலேயர் காலனி வருகைக்கு முன் பஞ்சமே வந்த்தில்லை என இன்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தானியங்களை, எண்ணையை மற்றும் பலவற்றை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
வெடிமருந்தை விவசாயத்துக்கு விற்ற வெள்ளைக்காரத் துரோகியே என திண்ணைகளில், சாவடிகளில் உட்கார்ந்து அறைகூவல் விடுக்கிறோம். இரண்டாயிரம் வருடத்துக்கும் மேலான வேளாண் வரலாறு கொண்ட சமூகம் ஏன் எலிக்கறி தின்று, அம்மணமாக நின்று வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கையேந்துகிறது என்று சிந்திக்க மறுக்கிறோம். சங்க இலக்கியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த தகவல் இருக்கிறது என்கிறோம்; ஆனால் சொட்டுநீர்க்குழாய்க்கான sand filter தொழில்நுட்பம் இஸ்ரேலிலிருந்து வர வேண்டியிருக்கிறது. இதன் பின்னாடி இலுமினாட்டி இருக்கிறான் என்கிறோம், மெக்காலே கல்வியால் கெட்டது என்கிறோம், அந்நிய சக்தி என்கிறோம்.
எல்லாம் தெரிந்திருந்தும் பகுத்தறிவுக்கு முரணான முடிவுகளை ஏன் எடுக்கிறோம் என்பதைச் சொல்லி இந்த ஆண்டு ஒரு அறிஞர் நோபல் பரிசு வாங்குகிறார். இங்கே நாம் technical fault என்று சொல்லி பசப்புகிறோம். பின்னாளில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கும் சமூகம் இன்றைய சமூகத்தைப் போலவே ஏதேதோ கற்பனைகளில் மிதக்கவே செய்யும்

No comments: