Thursday, May 13, 2021

ஐடா ஸ்கடர்

 1877ம் ஆண்டு..!




நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினி சாவு 50 லட்சத்தை தாண்டியது... பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்..!

ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமணாளுங்க.. பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.

"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார்.. டாக்டராகிறார்..!

சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார்..  ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி நிதி உதவி கேட்கிறார்.. ஓரளவு நிதியும் சேர்கிறது...!

இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின்,  முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்.. படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து.. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!

யார் இந்த பெண்?  இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்?  இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!

அங்குமிங்கும் அலைந்து திரிந்து 5 இளம்பெண்களை திரட்டி, அவர்களுக்கு பயிற்சி தருகிறார் ஐடா.. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!

நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை !

ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!

நர்ஸ் தினமான இன்றைய நாளில், ஐடா என்ற மனித தெய்வத்துக்கு மட்டுமில்லை, இன்றைய ஆபத்தான சூழலில்,  உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளுடை தாய்களுக்கும் என் கோடி நன்றிகள்!!

No comments: