ரத்னபுரி இளவரசி என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். 1960-ல் வெளியானது.
எம்.ஆர்.ராதா வழக்கம் போல் ஓர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்த நகைச்சுவையை இத்திரைப்படத்திலும் அட்டகாசமாக இறைத்திருக்கிறார். இது வழக்கமானதுதான். ஆனால் ஓரிடத்தில் அவர் செய்த குறும்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அதற்காகவே இந்தப் பதிவு.
பின்னணி விவரங்களை அதிகம் நீட்டாமல் சுருக்கமாகச் சொல்கிறேன். அந்தச் சூழலை புரிந்து கொள்வதற்காக மட்டும்.
அரசனுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டு விடுவார் ராதா. காவலாளி ஒரு ராமபக்தன் என்பதை அறிந்து கொள்ளும் ராதா, அங்கிருந்து தப்பிப்பதற்காக தன் கூட்டாளியுடன் ஓர் உபாயம் செய்வார். தான் ஒரு தீவிரமான ராம பக்தன் என்பதை நிறுவும் வகையில் பக்திப்பாடல்களை பாடுவார். இதன் மூலம் காவலாளியின் கவனத்தைக் கவர்ந்து அவனிடமுள்ள சாவியை களவாடுவது என்பது நோக்கம்.
அவர் பாடல்களைப் பாட காவலாளியும் தன்னிலை மறந்து அவருடன் இணைந்து கொள்வான். பக்தியுணர்வில் திளைப்பது போல் நடிக்கும் ராதா, ஒரு கட்டத்தில் . “ ராமசாமி…… உன்னைப் பார்த்துட்டேன்…. என் பாக்கியம்…’ என்பது போல கத்தி உச்சநிலை கொள்வார்.
ராதாவின் குறும்பு புரிகிறதா…
**
இன்னொரு காட்சியில் வானத்தில் வால்நட்சத்திரம் தோன்றும் என்கிற செயற்கையான நிலையை ஏற்படுத்தி அரசனை ஏமாற்றுவார். ‘எப்படி இந்த யோசனை உங்களுக்கு வந்தது?” என்று கூட்டாளி கேட்பான். :”நம்ம பயலுகதான் வானத்தில எது போனாலும் விழுந்து கும்பிடுவாங்களே” என்று நையாண்டி செய்வார்.
ராதாவின் நகைச்சுவை வெளிப்பட்டு எத்தனையோ வருடங்கள் கழிந்தும் இன்னமும் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது. வானத்தில் ஹெலிகாப்டர் சென்றாலும் விழுந்து கும்பிடும் ஆசாமிகளை நாம் பார்த்தோம்தானே?
காட்சிகளின் பின்னணிகளுக்கும் சூழலுக்கும் பொருத்தமில்லாமல் அதிலிருந்து விலகி, தன் கொள்கைகளை திணித்த பாணிதான் ராதாவின் நகைச்சுவை என்றாலும், மூடநம்பிக்கைகள் மேலும் மலிந்திருந்த அந்தக் காலத்தில் தான் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய பிரத்யேக நையாண்டியின் மூலம் அதற்கு எதிரான பரப்புரையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்த ராதாவின் பிடிவாதத்தையும் திறமையையும் வியக்கிறேன்.
No comments:
Post a Comment