Friday, October 06, 2017

சீமான் - இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள்

நாம் தமிழர் தம்பிகள் அவ்வப்போது அவர்களை விமர்சிக்கும் போது "எங்களை நீங்க புறக்கணிக்கவே முடியாதபடி விமர்சனம் பண்ணுறது தாண்டா எங்க அண்ணன் கெத்து" ரேஞ்சிக்கு பில்ட் அப் கொடுப்பதும், நாம் தமிழர்களை பார்த்தால் கதறுறாங்க என்று அவர்களுக்கு அவர்களே ஹார்டின் விட்டு கொள்வதும் அங்கங்கே நடக்கிறது.
சீமானுக்கு தேர்தல் அரசியலில் வெல்லும் சூட்சமும் தெரிந்தால், அதற்கு நாம எந்த வகையிலும் தடையாக இருக்க முடியாது என்கிற யதார்த்த அரசியல் பேசுற ஆள் தான் நான். யார் வர வேண்டும் யார் வர கூடாது என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது, ஆனா கொள்கை, அபிப்பிராயம், விமர்சனம் எல்லாம் தனிநபர் உரிமைகள்.
சீமான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்காமல், உள்ளே நுழையும் போதே ஏன் விமர்சனம் என்கிற கேள்வியும் politically immature தனமான கேள்விகள் தான். ஒருவரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ய அவர் நீண்ட கால ஆட்சியில் இருந்திருக்க வேண்டியதில்லை, கொள்கைகளே போதுமானது, அவர் பேசுகிற விவகாரங்கள் போதுமானது. இதில் சீமான் பேசுவது அடிப்படைவாத கருத்தியலுக்கு ஒற்று போவதால் மட்டுமே சீமானை விட்டு வெளியேறிய நிறைய முற்போக்கு தோழர்கள் இருக்கிறார்கள், ஆரம்பத்தில் இவர்களும் சீமான் பேச்சை கேட்டு சிலிர்த்து சில்லறைகளை விட்டெறிந்தவர்கள் தான்.
சீமான் பெரியாரை ஏற்று ஹிந்து மதத்தை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்த காலத்தில் கூட சீமானை என்னால் ரசிக்க முடியவில்லை, ஏனினில் நீங்கள் ஒரு மதத்தை, சித்தாந்தத்தை எதிர்த்து வாதம் வைக்க வேண்டுமானால், அதில் ஆக்கபூர்வமான தரவுகள், சிந்தனைகள் இருக்க வேண்டும். கடவுளர்களை கண்டபடி வசைபாடுவதால் மட்டுமே ஒருவன் பகுத்தறிவாளன் ஆகிவிட முடியாது, அப்படி data இருந்தால் தான் இந்த சமூகத்தில் ஆக்கபூர்வமாக ஒரு கருத்தை முன்னெடுத்து செல்ல முடியும், இல்லையெனில் அது ஒரு வெறுப்புவாதமாக தான் பார்க்கப்படும்.
இப்படி வெற்றி பெற்றவர்கள் ஏராளம், தற்காலத்தில் சொல்ல வேண்டுமானால் டாக்கின்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், இந்தியாவில் அம்பேத்கர் பெரியார் போல. பிரபல மனவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். இவர்கள் வரலாற்றை படித்தவர்கள், அதை பொறுத்து சித்தாந்தங்களை நிறுவியவர்கள், அம்பேத்கர் ஆய்வு செய்து இருக்கிறார், அதை ஆதாரமாக வைத்து தான் கட்டுரை எழுதினார்.
இதையெல்லாம் மறுக்க முடியாத காரணத்தினால் தான் அவர் வரலாற்றில் இந்திய சீர்திருத்தங்களுக்கு உழைத்தவர் என்பதை தாண்டி, அறிவுஜீவிகள் புறக்கணிக்க முடியாத இடத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.
ஆனால் சீமான், கண்ணதாசன் பேசிய நாத்திக கருத்துக்கள் அரைவேக்காட்டு தனமான கருத்துக்கள். அதில் வெறுப்பு மட்டுமே எஞ்சியது, எந்த ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான விவகாரங்களையும் பேசியதில்லை. அநேகமாக கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்தவர்கள், கண்ணதாசன் நாத்திகனாக இருந்த போது உதிர்த்த முத்துக்களை கேட்டிருக்க மாட்டீர்கள். நாத்திகம் ஏற்ற போதும் சரி, ஆத்திகத்தை ஏற்ற போதும் சரி, கண்ணதாசனிடம் எந்த ஆக்கபூர்வ கருத்தியல்களும் இல்லை.
அண்ணன் சீமான் அப்படியானவர் தான், கிருஷ்ணனையும், மஹா பாரத்தையும் கிழித்து தொங்க விட்டவர், ஆனால் அது வெறும் உணர்ச்சி பிழம்புகள். ஆகையால் சீமான் போன்றவர்கள் பெரியாரியத்தை ஏற்று பேசினாலும் அதில் எனக்கு சிலாகிக்க எதுவுமில்லை. பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்கு counter கொடுக்கத்தான் பெரியார் கடவுளர்களை திட்டினாரே தவிர, அதை தாண்டி அவர் எழுதிய சமூக நுண் அரசியல்கள் ஏராளம்.
அண்ணனுக்கு வருவோம், அண்ணன் எந்த ஆர்வத்தில் ஆரம்பத்தில் பேசினாரா, இப்போ அதற்கு எதிர்மறையான அதே ஆர்வத்துல பேசுறார் அவ்ளோ தான். எல்லா நேரமும் சமூகத்தை உணர்வு அடிப்படையில் கட்டமைக்க முடியாது. ஒரு விபத்து நடந்து இழப்புகள் நடந்தால் அங்கே உணர்வுகள் தலைதூக்கும், அந்த விபத்தை நடக்க விடாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் போது அறிவு தலைதூக்கும்.
இதான் சமூக கட்டமைப்புக்கு அடிப்படை ஆதாரம், எல்லா நேரமும் ஒருத்தன் உணர்ச்சி பொங்கி கத்திட்டு இருந்தா அவர் புரட்சியாளன் ஆகிட முடியாது. சீமானிடம் இருப்பது வெறும் இந்த உணர்ச்சியை முதலீடு செய்து, வயசு வேகத்தில் இருக்கும் விடலை பசங்களை அறுவடை செய்ததே.
அம்பேத்கர் ஆலய நுழைவு போராட்டம் பண்ணிட்டு இருக்கார், சாதி ஹிந்துக்கள் தலித்துகள் கோவிலுக்குள் பிரவேசிக்க கூடாது என்று தலித்துகளை அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் அம்பேத்கர் எத்தனை நிதானம் காத்திருந்தால், அவர் பதிலுக்கு வன்முறை கூடாது என்று கேட்டு கொள்கிறார். காரணம் அவரின் சமூக செயல்திட்டம் காலம் தாண்டியது, சாதி ஹிந்துக்களுக்கு வன்முறை புதிதல்ல, ஆனால் தலித்துகள் திருப்பி அடித்து விட்டால் அதை இந்த பொது சமூகம் எப்படி திரித்து விடும் என்பதில் கவனமாக இருந்தார், இரண்டாயிரமாண்டு வன்முறை ஒரே பதில் தாக்குதல் மூலம் "தலித்துகளும் தான் வன்முறை பன்றாங்க" என்று விடுதலை நோக்கத்தை சிதைத்து விடும் என்பது அவருக்கு தெரியும்.
சம்மந்தமில்லமால் இந்த உதாரணத்தை சொல்வதற்கு காரணம், அங்கே அடிபடும் போது சுயமரியாதையும், உணர்வுகளும் அம்பேத்கருக்கு இல்லாமலில்லை, ஆனால் அதை தாண்டி ஒரு நிதானம் வேண்டும், அப்படி நிதானத்தோடு சொல்லப்படுகிற விவகாரங்கள் தான் வரலாற்றில் இடம் பிடிக்கும். சர்வ வல்லமை படைத்த நாஜி இன வெறியனான ஹிட்லரை இந்த சமூகம் தூக்கி குப்பையில் போடவில்லையா? இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் ஹிட்லர் ஒரு அறமற்ற பொறுக்கி தான் என்று வரலாறு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கும். இன பாசம் வெறியானது, அந்த வெறியே லச்சக்கணக்கில் கொல்ல செய்தது, ஹிட்லர் கையில் எடுத்ததும் உணர்வுகள் தான், அறிவு இல்லை.
இப்படியாக இனப்பாசத்தை உணர்ச்சி பொங்க பேசி பேசி, தமிழ் சாதிய அடையாளத்தோடு "நாங்களே ஆள்வோம்" என்று சொல்லும் போதே அது அடிப்படை வாதத்திற்குள் வந்து விட்டது. மராத்தி இன வெறியர்களான சிவ சேனா எப்படி இந்துத்துவததோடு connect ஆகிறதோ, சீமானும் அப்படி தான் சாதி ஹிந்துத்துவத்தோடு connect ஆகி விட்டார், நான் விமர்சிப்பதற்கு அதுதான் ஆதார காரணம், அவர் பேசுற சித்தாந்த கோட்பாடுகளோடு இந்த similarity பாருங்களேன்,
1. இந்தியா ஹிந்துக்களுக்கே
தமிழ் நாடு தமிழருக்கே
2. ஹிந்து மதத்தின் அடையாளம் ஹிந்து சாதிகள்
தமிழ் சமூகத்தின் அடையாளம் தமிழ் சாதிகள்
3. இஸ்லாமியர்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கலாம், ஆனால் ஹிந்து தேசத்தை ஹிந்து தான் ஆள வேண்டும்
மற்ற மொழிக்காரர்கள் இருக்கலாம், ஆனால் தமிழ் தேசத்தை தமிழன் தான் ஆள வேண்டும்
4. ஹிந்துக்களாக ஒன்றிணையுங்கள்
தமிழர்களாக ஒன்றிணையுங்கள்
(அடிப்படையில் இப்படி ஒன்றிணைவதில் இருக்கும் சிக்கலாக இருக்கும் சாதி முரண்பாடுகள் கண்டுக்காம, தீர்க்காம ஒன்றிணையணுமாம்)
5. மஹாபாரத போர் வரலாற்று நிகழ்வு,
பாரத போருக்கு சோறு கொடுத்தான் தமிழன்
6. கிருஷ்ணர், ராமர் இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்
முருகன் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்
7. வெள்ளைக்காரன் ஹிந்துத்துவத்தை ஏற்றால் கடல் தாண்டும் இந்து பெருமை, நம்மூர்காரன் வெள்ளைக்காரன் மதத்தை ஏற்றால் அவமானம்
தமிழன் தமிழகம் தாண்டி போர் புரிந்தது பெருமை, அந்நியன் தமிழகத்தில் நுழைந்து ஏற்படுத்திய அடையாளங்கள் சிறுமை
8. தாஜ்மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
திருமலை நாயாக்கர் மஹால் வந்தேறி அடையாளம், புறக்கணி
9. இந்துத்துவத்தை இஸ்லாமியன், கிருஸ்துவன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
தமிழ் சமூகத்தை, தெலுங்கன், கன்னடன் விமர்சனம் செய்தால் கோபம், கைக்கூலிகள்
10. சாவர்க்கருக்கும் மாலை, காந்திக்கும் மாலை, அம்பேத்கருக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்
பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கும் மாலை, ரெட்டமலை ஸ்ரீனிவாசனுக்கும் மாலை, இமானுவேல் சேகரனுக்கும் மாலை, நாங்கள் எல்லோருக்குமானவர்,
11. சாதிபேதமற்று நாம் இந்துக்களாக தான் இருந்தோம், நம்மை பிரிட்டிஷ் என்கிற அந்நியர்கள் தான் பிரித்து விட்டார்கள்,
சாதிபேதமற்று நாம் தமிழர்களாக தான் இருந்தோம், வந்தேறிகள் தான் சாதி பிரிவினை செய்தார்கள்
இப்படியாக நீங்கள் அடுக்கி கொண்டே போகலாம், இந்த ஒற்றுமை திட்டமிட்டு ஒட்டப்பட்டது அல்ல. இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இயல்பிலேயே இருக்கும் ஒற்றுமைகள், இதை நீங்கள் உலகின் எந்த "வாதத்தோடும்" ஒப்பிட்டு கொள்ளலாம், அது இனவெறிக்கே உண்டான சித்தாந்தங்கள். நாஜிக்களின் சித்தாந்தத்திற்கும், பார்பனீயத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கூட இப்படி நம்மால் எழுத முடியும். இனவெறி என்கிற தன்மையின் மூலக்கூறு வேறு ஒன்றாக இருந்தாலும், "சர்வாதிகாரம் உங்கள் கைக்கு கிடைத்து விட்டது / சர்வாதிகாரம் உங்கள் கைகளில் இல்லை" என்கிற இந்த இரண்டே வேறுபாட்டை வைத்து தான், உங்களிடம் இருப்பது இனவெறியா, இனபாசமா என்பதை வரையறுக்க முடியும், மற்றபடி இந்த எந்த சித்தாந்தமுமே மானுட சமூகத்துக்கு எதிரானது.
இந்த அடிப்படைவாத மூலக்கூறுகளை யார் உலகத்தில் பேசினாலும், அதை விமர்சனம் செய்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். ஹிட்லர் என்கிற கொடுங்கோலன் சர்வாதிகாரத்தின் நாற்காலியில் இருந்த போதே பகடி செய்து காமெடியாக விமர்சித்த உலகமிது, சீமான் எம்மாத்திரம்?
இனபாசத்துக்கும், இனவெறிக்கும் இருக்கும் வேற்றுமை "வாய்ப்பு" மட்டுமே.

No comments: