Tuesday, February 20, 2018

பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஹிந்து சமூகத்தில் மற்ற எல்லா வர்ணத்தாருமே வேத தர்மம் நசித்துப் போகக்கூடாது; பிராமண ஜாதி அழிந்து போகக் கூடாது என்று மனசார நினைத்து அதற்காக அள்ளிக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கிற நூற்றுக்கணக்காண பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்திருப்பது யார்? பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும்தான். நகரத்தார் செய்த கோயில் திருப்பணிக்குக் கணக்கில்லை. அதே மாதிரி, ‘இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்’ உண்டு என்ற நம்பிக்கையில், ஒரு ஆலயத் திருப்பணி செய்தால் ஒரு வேத பாட சாலையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வைத்திருக்கிறார்கள். வேளாளர்களில் பெரிய நிலச்சுவான்தார்களாக இருந்தவர்களும் இப்படியே வேத பாடசாலைகளுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். மேல் நாட்டு நாகரிகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால் பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. ‘ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ, அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும்’ என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’ என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

No comments: