இட ஒதுக்கீட்டு முறை என்பது அநீதியானது, சற்றும் தகுதியற்ற ஒரு சாராருக்கு அநியாய சலுகை அளிக்கும் திட்டம் என்று நினைப்பவருக்கு - சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். இட ஒதுக்கீட்டு முறை வேண்டாம். அதற்கு முன்னதாக:
ரொம்ப வேண்டாம் - ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு தலித் அல்லாதவர்கள் - தலித் வீடுகளில் பண்ணைக்கு இருக்கலாம். கொடுக்கும் கூழையும் கஞ்சியயும் குடித்துவிட்டு மாடாய் அவர்களுக்கு உழைத்துக் கொட்டிவிடலாம். அவர்கள் வீடுகளில் பண்ணைக்கு செல்லும்போது செருப்பு அணியாமல் சென்று விடுவோம் - நம் வீட்டுப் பெண்கள் மேலாடை இல்லாமலேயே சென்று வரட்டும். நம் தந்தயைரை அவனே இவனே என்று அவர்கள் வீட்டுப் பொடியர்கள் அழைப்பதை செவிக்கினியதாக கேட்டும் விடுவோம். நமது சில தலைமுறைகள் கல்வியற்ற மூடர்களாய்ப் போகட்டும். நம் அடையாளம் சாராயமும் மாட்டுக்கறியுமாக ஆகட்டும். ஆண்ட பரம்பரை தலித்கள் கால்மேல் கால்போட்டு அதிகாரம் செய்து நம் உழைப்பைத் திருடட்டும் - அதுவே நியாயம் என்று நம்மையும் சொல்ல வைக்கட்டும். மலக்குழியில் இறங்கி பீ அள்ளுதல், பிணங்களை புதைத்தல், சாக்கடை சுத்தம் செய்தல் என்று கேவலமானதாக கருதப்படும் வேலைகளையே செய்து ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் நமக்கான சேரிகளில் வாழ்ந்துவிடுவோம். நம்மைப்பார்த்து அவர்கள் மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டு போகட்டும்.
கொடிய பசியில் கடுமையாய் உழைப்பத்துதான் எத்தனை சுகமாக இருக்கிறது நமக்கு, அந்த உழைப்பின் பயனை ஆண்ட பரம்பரை தலித்துகள் அனுபவிக்கும் போது ஒரு இன்பம் கிடைக்குமே... ஆஹா!. சுயமரியாதை பொங்கி நாம் கொந்தளிக்கும் போது நம் வாயில் மலத்தையும் மூத்திரத்தியும் ஊற்றட்டும். நம் நிலை நொந்து கடவுளே துணை என்று - கோயிலுக்கு வெளியே நின்று மட்டும் - வேண்டிக்கொள்வோம்.
ஒரு நூறாண்டு வாக்கில், மிகவும் கொடிய பழக்கங்களில் சில பல வழக்கொழிந்து போகலாம் - என்றாலும் அவர்கள் நம்மை ஆண்ட பரம்பரை என்று பேசித்திரிவதைப் பற்றி, இன்றும் சாக்கடை அள்ள எப்போதும் நம்மில் ஒருவரையே அவர்கள் தேடி வருவது பற்றி, அவர்களுக்கு விவசாய அடிமை வேலை செய்யாமல் நாம் எதோ ஒரு வழியில் பொருளீட்ட முடிந்தால் (100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் போன்று) அது தவறென வாதிடும் நிலை பற்றி, அவர்கள் உடலுழைப்பைத் தரத் தயாரில்லை என்ற நிலைபற்றி, வெளியே தெரியாதானாலும் உள்ளிருக்கும் சாதிவெறி பற்றி, ஒடுக்கப்பட்ட அடிமைகளாய் வாழ்ந்துவிட்ட நம்மில் பலர் இன்னும் அவர்களை அண்டி வாழ்வதே நமக்கு விதிக்கப்பட்டது என்றெண்ணி வாழ்வது பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக - மறுக்கப்பட்ட கல்வியின் விளைவாக நாம் பிந்தங்கிப்போனதைப் பற்றி பேச என்ன வேண்டியிருக்கிறது? சரிதானே?
பிறகு சமத்துவத்துக்கென்ன தடை? இட ஒதுக்கீட்டு முறையை நீக்கி விடலாம்
No comments:
Post a Comment