Friday, February 09, 2018

குப்பாயம் " மறந்த குள்ளநரி ஒன்றிற்கு .....

குப்பாயம் " மறந்த குள்ளநரி ஒன்றிற்கு ......

கடும் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகத்தில் இருந்து வந்த ஒருவன் ஆட்சி அதிகாரம் என்பதற்காக சாதி தான் தமிழனின் அடையாளம் என்று கூவலாம் . அப்படிக்கூவ ..ஒன்று வரலாறு தெரியாமல் இருக்கலாம் . இல்லை கடந்து வந்த பாதையை மறக்கும் கயமையாய் இருக்கலாம் .
தஞ்சை மாவட்டத்தின் தரங்கம்பாடியில் தன்னைக் கிறித்துவராக மாற்றிக் கொண்டு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்ட மயிலாடிக்கு வருகிறார் "மாராயன் " என்கிற வேதமாணிக்கம் .முட்டாள்தனமும் ..மூர்க்கத்தனமும் கொண்ட சாதிய ஒடுக்கு முறைகளுக்கு மதமாற்றத்தின் மூலம் சவால் விட்ட முதல்மனிதன் .
இவரைக்காண கிருத்துவப் போதகரான " வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தௌபே " 1806 ஏப்ரல் மாதம் வருகிறார் .அனுமதியின்றி தெருவில் நடமாடக் கூட மறுக்கப்பட்ட ...ஆச்சாரமானவர்கள் எட்டிப்பார்க்காத ....ஒரு பகுதிக்கு ...அந்த ஆச்சாரமானவர்களை விட வெள்ளைநிறம் கொண்ட ஒருவர் வந்திருப்பது அறிந்து அப்பகுதி மக்கள் கூடுகின்றனர் .
பாதிரியோ மிகுந்த முகச்சுழிப்போடு அவர்களை உற்று நோக்குகிறார் . முகச்சுழிப்பின் காரணம் சாதிய அருவருப்போ ...அழுக்குத் தன்மையோ ...நிற வேறுபாடோ அல்ல . வந்திருந்த மக்களில் ஆண் பெண் வேறுபாடு இன்றி மேலாடை இல்லாமல் இருந்தது தான் .
ஒரு முழம் துணிகூடவா கிடைக்கவில்லை உங்களுக்கு உடலை மூடிக்கொள்ள ? என்று கொந்தளிக்கிறார் . ஆனால் இது அம்மக்களுக்கு கிஞ்சிற்றும் உறைக்கவில்லை .அப்படி ஒரு அனுமதி எங்களுக்கு இல்லை என்கின்றனர் ..வேதமாணிக்கம் அவர்கள் இந்தச் சமுதாயத்தின் .....தீண்டாமை ...தோன்றாமை ....பார்க்காமை ...முதலிய விலக்குகளைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் .துன்பத்தில் உழன்று உழன்று அதையே நடைமுறையில் ரசிக்கப் பழகிவிட்ட மக்களுக்கு படிப்படியாகத்தான் எழுச்சி ஊட்ட முடியும் என்ற புரிதலோடு சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார் . ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் தொடர முடியாமல் போகிறது .
தொடர்ந்து 1819 இல் அப்பகுதிக்கு ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாய் வந்து சேர்ந்த பாதிரியார் " மீட் "தௌபே விதைத்த கனலை ஊதிப் பெருக்குகிறார் .
மத போதகத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளி விட்டு மக்களின் இழிநிலை போக்க இவரும் இவரின் மனைவியும் முனைகின்றனர் .அப்படி அவரும் அவர் மனைவியும் அந்த எளிய மக்களுக்கு வடிவமைத்துக் கொடுத்த ஆடைதான் "குப்பாயம் ".கழுத்து.. கைகளை முழுமையாக மூடியும் இடுப்பு வரை நீண்டும் இருந்தது இந்த ஆடை .
இந்த மண்ணில் பிறந்த பாதிரியார்கள் சாதிப்பாகுபாடுகளோடு கிருத்துவ ஆலயங்களில் இயங்கிய போது ....அவர்களின் மீட்சிக்கு உதவிய தௌபே ...மீட் போன்றோர் மண்ணின் மைந்தர்கள் ஆனார்கள் .
ஆனாலும் குப்பாயம் அணிவது கண்டு கொதித்துப் போன ஆதிக்க சாதிப் பழமைவாதச் சமூகம் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றியது .பெண்கள் அம்மணம் ஆக்கப்பட்டார்கள் .தடுக்க வந்த ஆண்கள் அடித்துக் குற்றுயிர் ..குலையுயிர் ஆக்கப்பட்டார்கள் . மாடுகளோடு மாடுகளாக ஏர்களில் பூட்டப் பட்டார்கள் .குடிசைகள் தீக்கிரை ஆக்கப்பட்டன .பள்ளிகளில் இருந்த இவர்களின் பிள்ளைகள் வெளியே எறியப்பட்டனர் .
இப்பெண்களுக்கு பரிந்து வந்த ஆண்கள் சிறைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டனர் .சில முற்போக்கு நம்பூதிரிகளே சிறைக்குச் செல்லவும் நேர்ந்தது .சிறைக்குச் சென்ற நம்பூதிரிகள் தீட்டுப் பட்டதாக குடும்ப விலக்கம் செய்யப்பட்டதும் நிகழ்ந்தது .
1823..பார்வதிபாய் ...திருவிதாங்கூர் அரசி ........உயர்சாதி மக்களின் பிரத்தியேக பழக்க வழக்கங்களை தாழ்ந்த குல மக்கள் பின்பற்றக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கிறார் .
1858 ...விக்டோரியா மகாராணி இந்திய அரசின் பொறுப்பேற்ற பின்பும் நிலைமை சீரடையவில்லை .இந்த பொழுதில் தான் சாமித்தோப்பு வைகுண்ட சாமி அவர்கள் ........மேல் துண்டு போடவே அனுமதியற்ற எளிய மக்களுக்கு தலைப்பாகை கட்டிவிடத் துவங்குகிறார் .
இதுவரை எளியசாதி கிருத்துவப் பெண்களின் போராட்டமாக இருந்த இந்தப் புரட்சி ...இந்துப் பெண்களையும் தொற்றிக்கொண்டு பற்றிப் படர்கிறது .மத வேறுபாடுகள் கடந்து அனைத்துப் பெண்களும் ஒன்றுபட்டுப் போராட ........வேறு வழியின்றி .....1865 இல் எல்லாச் சாதியினரும் முழுமையாக அணிந்து கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிவிக்கிறது .
ஒரு நெடிய போராட்டம் வெற்றி பெறுகிறது .
இந்தப் பாதை மறந்த சுயநலமிகள் சிலர் சாதி தான் அடையாளம் எனும் போது எரிகிறது .
# சு .சமுத்திரம் அவர்களின் நெடிய கட்டுரை ஒன்றை சுருக்கி வரைந்திருக்கிறேன்.

No comments: