Monday, April 23, 2018

ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான்

இன்றும் நாம் தமிழர் தம்பிகள் தங்களின் எதிரிகள் யாரென கண்டு கொள்ளாமல் தெலுங்கர்கள் என்று இன்னும் அதே விசயத்தை பேசிக்கொண்டிருப்பது யார் எழுதிக் கொடுத்தது அல்லது யாரை காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை. இன்று அவர்கள் தெலுங்கர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று தொடங்கியுள்ளனர்.
ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான். இரண்டின் சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஒன்று போன்றது தான்.
சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவெங்கும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்கள் தனிநாடு கோரிக்கை வைத்து பாகிஸ்தான் என்ற நாட்டை வாங்கி விட்டு சென்ற பின்னர் எல்லா முஸ்லிம்களும் சென்று விடவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மதம் அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. எல்லா மனிதனுக்கும் அடிப்படை தேவைகள் உணவு உடை உறைவிடம் தான். இது மூன்றும் கிடைக்கப்பெற்ற ஒருவன் தான் தன்னிடம் தன் தேவைக்கு மீறி உள்ளதை கடவுள் மதம் என்று செலவிடுவான்.
அதே நிலைதான் அந்த முஸ்லிம்களுக்கும். அவர்களுக்கு தங்களின் அடிப்படை தேவை தான் முதலாகப்பட்டது. இனி இன்னொரு புதிய இடத்திற்கு சென்று வாழ்க்கையை தொடங்கி அமைப்பதற்கு ஏற்கெனவே இங்கிருக்கும் வாழ்வை விட்டு விட்டு செல்ல அவர்கள் தயாராய் இல்லை. அதனால் அவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். இன்றும் அவர்களை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்‌. காந்தி அவர்களுக்கு ஆதரவாக பேசியதால் காந்தியையே கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தவிர அவர்களின் அரசியல் முகமான பாஜகவை தவிர ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் நம்முடன் நமது சகோதரர்களாகவே இருந்து வருகின்றனர்.
இப்போது அப்படியே தமிழகத்தின் சூழ்நிலைக்கு வருவோம். தமிழகத்திலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் என மூன்று மொழி பேசும் மக்களும் கலந்து இருந்தனர். அவர்கள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இங்கு வந்தவர்கள்.
கன்னடர்கள் களப்பிரர் காலத்தின் போதே இங்கு வந்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் சொல்கின்றனர். அதாவது இரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில்.
தெலுங்கர்கள் பதினான்காம் நூற்றாண்டின் போது விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட நாயக்கர்கள் காலத்திலேயே வந்தவர்கள்.
எப்படி பார்த்தாலும் தெலுங்கர்கள் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கன்னடர்கள் குறைந்தது ஆயரத்தி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்குள் வந்து விட்டனர். வந்தவர்களில் பலருக்கு தேவை அடிப்படை வசதிகளே. அவர்களுக்கு அவர்களின் மொழியை விட அவர்களின் வாழ்வாதரமே பெரிதாக இருந்தது. அதனால் தான் அவர்கள் தங்கள் மொழியையே மறந்து விட்டு தமிழர்களாகவே வாழ ஆரம்பித்தனர்.
இங்கும் பலருக்கு முக்கியத்தேவை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளே. மொழி இனம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் இன்றும் அவர்களின் சாதியை கொண்டு அவர்கள் தமிழர்கள் இல்லை தெலுங்கர்கள் என்று முத்திரை குத்துவது நாசிக்கள் செய்த ஆரியர் யூதர் இனவேறுபாட்டை ஒத்ததே.
தம்பிகள் தர்க்க ரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அறிவுரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ஒப்பீட்டு முறையில் சொல்லியிருக்கிறேன். இதையாவது புரிந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்.
இன்னும் நீங்கள் சாதி வைத்து தெலுங்கர்களை பிரித்தால் மதத்தை வைத்து உருது பேசும் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று மல்லாக்க படுத்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...

No comments: