Friday, August 24, 2018

சாதி அறிந்ததினம்

#சாதி_அறிந்ததினம்
5வது படித்துக்கொண்டிருந்த சமயத்தில், நானும், ஜெகதீஸும், பாலாவும், குமாரும் சென்று (எல்லாரும் 5வது வேறு வேறு பள்ளி) 10வது படிக்கும் அண்ணனின் வீட்டிற்கு சென்று விளையாட, அந்த அண்ணனோ நாங்கள் பிள்ளைமார், நீங்கள் என்ன என்று வினவ, எங்களுக்கு என்ன கேட்கின்றார் என்றே புரியவில்லை.
அப்போது வெளியில் உட்கார்ந்து எனது அம்மா, பாலாவின் அம்மா மற்றும் குமாரின் அம்மா அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர் (அப்போ எதப்பத்தி பேசியிருப்பாங்க? இப்போவாச்சும் சீரியல பத்தி பேசலாம், சரி அத விடுங்க). நேராக சென்றவுடன் நான்தான் முதலில் கேட்டேன், "அம்மா நாம என்ன மார்னு கேட்டேன்" அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
என்னடா கேட்கிறேன்னு சொல்ல, குமார் கேட்டான், இல்லம்மா அந்த அண்ணே ஏதோ மார்னு சொன்னாங்க, நீங்க என்னானு கேட்டாங்கம்மானு சொல்ல, என்னடா சொல்றீங்கன்னு குமார் அம்மா வினவ, உடனே பாலா தெளிவாகச் சொன்னான், அந்த அண்ணே பிள்ளைமாராம், எங்கள என்ன மார்னு கேட்டார்னு.
உடனே அனைத்து அம்மாக்களும் சிரித்து விட்டு, பதில் சொல்ல, அப்போதும் குழப்பம் ஏனெனில் என்னுடைய அம்மாவும், குமாரின் அம்மாவும் மாரில் முடியும்படி பதிலைக் கூற, பாலாவின் அம்மா மட்டும் வேறு ஏதோ பதில் கூறினார், மீண்டும் குழப்பம், பாலா கேட்டான், அம்மா இதுல என்ன மார்னே சொல்லலியேன்னு. பிறகுதான் அவன் அம்மா கூறினார், அது மார் இல்லடா தம்பி, அதன் பெயர் ஜாதி என்று. அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது.
பிறகு 6வது சேர்க்கையில் அப்ளிகேசனில் எழுதும்பொழுது எனது தந்தை என்னிடம் கூறி கூறித்தான் நிரப்பினார் அந்த விண்ணப்பத்தினை, அதிலும் கேட்டிறுந்தார்கள், அதில் அப்பா வேறு சாதிப்பெயர் போட, நான் குழப்பத்துடன் கேட்டேன் மார்லைல முடியும், நீங்க என்ன ளர் ல முடியுற மாதிரி எழுதுறீங்கன்னு, அப்போதுதான் சொன்னார், இரண்டும் ஒன்னுதாண்டானு, இப்படித்தான் சாதி தெரிய ஆரம்பித்தது.
பிறகு 7வது படிக்கும்பொழுது, இடைவேளை நேரத்தில், சாதியைப் பற்றி அறியவர எனது நெருங்கிய நண்பன் தன்னை '' சேர்வார்" எனக்கூற, இன்னொரு நெருங்கிய நண்பன் அருணாச்சலம் அரண்டு போய், (அந்த நண்பன் வேறுபக்கம் சென்றபிறகு) என்னிடம் ''டேய் செந்திலு சேர்வாரோடு சேரவேண்டாம்னு ஆத்திச்சூடில இருக்குடான்னு" பயமுறுத்த, வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கேட்டால், விளக்கமளித்தார், இந்த சேர்வார்ன்றவங்க, முந்தி காலத்துல இராஜாவுக்கு தளபதியா இருந்தவங்கடா, நீ ஆத்திச்சூடில படிச்ச சேர்வார்ன்றது வேற, அது பொய் சொல்றவங்க, ஏமாத்துறவங்கள சொல்றது, ரெண்டும் வேற வேறடான்னு, அதே விளக்கத்தினை அருணாச்சலத்திற்கு அடுத்த நாள் நான் கூற, அதற்குமுன் அவன் வீட்டிலும் இரண்டு திட்டுகளோடு விளக்கம் கிடைக்கபெற்றதனை அறிந்துகொண்டேன்.
இப்படியே சென்றுகொண்டிருந்த எனக்கு சாதிய பிரிவினையால் ஏற்பட்ட இழப்பு என்றால் அது 10வது முடித்து டிப்ளமோவிற்கு விண்ணப்பம் கொடுக்க, என்னை விட கம்மியான மார்க் எடுத்த பையனிற்கு தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் கொடுத்திருந்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை, என் தந்தையிடம் இதுல ஏதோ மிஸ்டேக் இருக்குப்பா, வாங்க போய் கேட்போம்னு சொன்னபொழுது, விளக்கமளித்தார், அவங்க எஸ் சி கேட்டகரிடா தம்பி, நீ பிசி கேட்டகரி அதுனால உனக்கு சீட் கிடையாதுன்னு.
பிறகு பாலிடெக்னிக் போக அங்கு ஒரே சாதிமயம்தான். சென்று சில வாரங்களில் அங்கிருந்தவர்களின் சாதி தெரியவந்தது. இருந்தாலும் பிரிவினையில்லை. பிறகு படித்து முடித்து வெளியில் வந்தால் அப்போதுதான் இந்த சாதிய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.
பிறகுதான் உணர்ந்தேன் இந்த சாதியமே இந்துத்துவத்தின் முதல் எதிரி என்பதினை.

No comments: