Monday, August 20, 2018

ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பி.எஸ்.சி. கணிதம் எடுத்து அதில் 80 விழுக்காடு மதிப்பெண் மேல் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அப்போது குரூப் 4 போட்டி தேர்வில் கலந்து கொண்டு ஆர்.ஐ வேலைக்கு செலக்ட் ஆனேன். ஏனோ என் மனம் அரசாங்க வேலைக்கு செல்ல பணிக்கவில்லை. கணிதம் என் அறிவை வேற லெவெலுக்கு முழிக்க வைத்திருந்தது. வீட்டில் மிக்க வறுமை. வெத்தலை பாக்கு கடை வைத்திருந்தார் என்னுடைய அப்பா. அன்றாடம் செலவுகளுக்கே மிகவும் கஷ்டம். கெஞ்சி கூத்தாடி சாப்பிடாமல் இருந்து அஹிம்சை மூலியமாக அப்பாவை இருக்கிற கடையை விற்று ஈரோடு கல்லூரியில் எம்.சி.ஏ சேர்ந்தேன். மூன்று வருட படிப்பு. மிகவும் கஷ்டப்பட்டு இஷப்பட்டு படித்தேன். ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம் தான். என்னுடைய அம்மாவின் மாமா மும்பையில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.அவரிடம் போன் செய்து வேலைக்கு உதவுமாறு கேட்டேன். அவரும் வர சொல்லி விட்டார். மிகவும் குஷியாக சென்றேன்.மும்பை பழக்கம் இல்லாததால் அவர் வீட்டிலேயே தங்க சொன்னார். சென்ற 10 நாட்களில் டாடா கம்பெனியில் வேலை கிடைத்து. கை நிறைய சம்பளம். நான் வேறு வீடு எடுத்து இருப்பதற்கு மறுப்பு சொன்னார். என் அப்பா அம்மாவை கூடி வர திட்டம் வைத்திருந்தேன். அவர்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். மும்பையில் 10 மாதம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். கொஞ்ச நாள் போகட்டும் என்று காத்து இருந்தேன். 
என் அம்மாவின் மாமாவுக்கு மகள் வழி பேத்தி இருந்தாள். வார வாரம் நான் தங்கி இருந்த தாத்தா வீட்டிற்கு வருவாள்.பார்க்க நம்ம ஊரு நார்த் இந்தியா ஹீரோயின் மாதிரி இருப்பாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் இளமை அழகு அவள் மேல் ஈர்ப்பு கொள்ள செய்தது. அவர்கள் வீட்டிலும் நாங்கள் பழகுவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.என் அப்பா அம்மாவை கூட்டி வருவதை தற்காலிகமாக ஒத்தி வைத்து அவளுடன் ஆவலுடன் சுற்றினேன். திருநெல்வேலி பையனுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. அம்மாவிடம் அவளை திருமணம் செய்ய கேட்குமாறு கேட்டேன். எல்லோரும் சரி சொல்லி கல்யாண நாளும் குறிக்க பட்டது. அப்போதே கல்யாணத்துக்கு அப்புறம் தங்க மீண்டும் வீடு பார்த்தேன் - அப்பா அம்மாவை கூட்டி கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். தாத்தா மற்றும் மாமா அத்தை - இப்போது என்ன அவசரம் கல்யாணம் முடியட்டும் என்றார்கள். 
கல்யாண நாள் நெருங்கியது. மும்பையில் அவர்கள் நம்ம ஊரில் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை துளி கூட கொடுப்பதில்லை. வேலைக்கு சேர முதல் நாள் அவர்கள் வீட்டில் எப்படி பணிவாக இருந்தேனோ அதே போல் தான் நடத்தினார்கள். கல்யாணம் பேசி முடித்த பிறகும் அவ்வாறு நடத்துவது எனக்கு வித்யாசமாக பட்டது. அவள் அப்பாவோடு இது சம்பந்தமாக பேசினேன். அவர் உன் தகுதிக்கு என் மகளை கொடுப்பதே பெரிய விஷயம் என்ற அர்த்தத்தில் பேசினார். 
எனக்கு தூக்கி வாரி போட்டது. அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் சுய மரியாதை அவசியம் என்று நினைத்தேன். கல்யாணம் முடியட்டும் அவள் என்னவள் ஆகி விட்டால் இவர்கள் யார் நமக்கு என்று எனக்கு நானே சமாதானம் செய்தேன். இருந்தாலும் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. கல்யாண வீட்டிலும் எதிரொலித்தது. நாங்கள் யாரும் மதிக்க பட வில்லை. கல்யாணம் முடித்து மீண்டும் மும்பை சென்றேன். சென்ற ஒரே வாரத்தில் வீடு பார்த்து நண்பனிடம் கடன் வாங்கி வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். மனைவியை வா போகலாம் என்று கூப்பிட்டேன்.அவள் எங்கு என்றாள். நம் வீட்டுக்கு என்றேன். இது தான் நம் வீடு. நாம் இங்கேயே இருக்கலாம் என்றாள். 
சண்டை ஆரம்பம் ஆனது.ஏற்கனவே கல்யாணத்தில் எங்கள் வீடு ஆட்களை உதாசீனப்படுத்தியது எல்லாம் சேர்ந்து அவளை நான் பார்த்த வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்தினேன். என் பெற்றோர்களும் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை நான் கவனிப்பேனா மாட்டேனா என்று. ஏனெனினில் நான் சம்பளம் வாங்கியது முதல் அவளுக்கே எல்லா செலவுகளையும் செய்திருந்தேன். 
1 மாதம் பல்லை கடித்து வாழ்ந்தேன். மனம் புரட்டி போட - வாழுகிற வாழ்க்கை நரகமாய் தோண - போட்ட சட்டையுடன் தனியாக மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து விட்டேன். அப்பா அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கல்யாணத்திலேயே அவர்களுக்கு யூகிக்க முடிந்தது. பையன் தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து வந்து விட்டான் என்று. வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் இருந்துருக்கலாம். ஆனால் உறவுகள் முக்கியம் என்று வந்து விட்டேன். நான் அவர்கள் தாத்தா வீட்டில் இப்போது கண்டிப்பாக சமாதானம் பேச வருவார்கள் என்று நினைத்தேன். 2 வருடம் ஓடியது. டிவோர்ஸ் நோட்டீஸ் தான் வந்தது. விழுந்து அடித்து ஓடினேன். அவளை பார்த்து சேர்ந்து வாழ வேண்டும் என்று கெஞ்சினேன். பிரிந்தது சேர தான் ஒழிய நிரந்தமாக அல்ல என்றேன். அவள் ஏளனமாக என்னை பார்த்து ஒதுங்கி போய் விட்டாள். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. அதோடு நான் ஒரு ஆணே இல்லை என்ற ரீதியில் பொய்கள் பரப்ப பட்டது. பரப்பியது அந்த பெண்ணின் அப்பா அம்மா. நெஞ்சம் வலித்தது. மீண்டும் 2 ஆண்டுகள் ஓடியது. நண்பர்கள் பெற்றோர் எல்லோரும் டிவோர்ஸ் செய்து விடு என்று வலியுறுத்த அவளுடைய ஏளன பார்வையும் ஏளன பேச்சுகளும் வெறியேற்ற டிவோர்ஸ் கையெழுத்து போட்டு விட்டேன். ஆணே இல்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட அதை உடைப்பதற்காகவே மறு திருமணத்திற்கு சம்மதித்தேன். இப்போது எங்கள் ஊரு பெண்ணொருத்தியை திருமணம் செய்து 2 குழந்தைகளோடு வாழ்கிறேன். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. மன வேதனையில் செய்கிற சாப்ட்வேர் வேலையில் கவனம் செலுத்தினேன். இன்று எங்கள் உறவினர்களில் விரல்ஐ விட்டு என்னும் பணக்காரர்களில் நானும் ஒருவன். போன வாரம் வைட் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் 28 லட்ச ருபாய் காரில் சொந்த ஊர் கோயில் விழாவுக்கு சென்றேன். முன்னாள் மாமாவும் அத்தயும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். எங்களை காரை குடும்பத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து சென்றார்கள். அவள் மகளுக்கு வரன் பார்த்தார்கள். ஒன்றும் அமைய வில்லை. ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

No comments: