Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Monday, August 20, 2018

ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பி.எஸ்.சி. கணிதம் எடுத்து அதில் 80 விழுக்காடு மதிப்பெண் மேல் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அப்போது குரூப் 4 போட்டி தேர்வில் கலந்து கொண்டு ஆர்.ஐ வேலைக்கு செலக்ட் ஆனேன். ஏனோ என் மனம் அரசாங்க வேலைக்கு செல்ல பணிக்கவில்லை. கணிதம் என் அறிவை வேற லெவெலுக்கு முழிக்க வைத்திருந்தது. வீட்டில் மிக்க வறுமை. வெத்தலை பாக்கு கடை வைத்திருந்தார் என்னுடைய அப்பா. அன்றாடம் செலவுகளுக்கே மிகவும் கஷ்டம். கெஞ்சி கூத்தாடி சாப்பிடாமல் இருந்து அஹிம்சை மூலியமாக அப்பாவை இருக்கிற கடையை விற்று ஈரோடு கல்லூரியில் எம்.சி.ஏ சேர்ந்தேன். மூன்று வருட படிப்பு. மிகவும் கஷ்டப்பட்டு இஷப்பட்டு படித்தேன். ஆங்கிலம் கொஞ்சம் தடுமாற்றம் தான். என்னுடைய அம்மாவின் மாமா மும்பையில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.அவரிடம் போன் செய்து வேலைக்கு உதவுமாறு கேட்டேன். அவரும் வர சொல்லி விட்டார். மிகவும் குஷியாக சென்றேன்.மும்பை பழக்கம் இல்லாததால் அவர் வீட்டிலேயே தங்க சொன்னார். சென்ற 10 நாட்களில் டாடா கம்பெனியில் வேலை கிடைத்து. கை நிறைய சம்பளம். நான் வேறு வீடு எடுத்து இருப்பதற்கு மறுப்பு சொன்னார். என் அப்பா அம்மாவை கூடி வர திட்டம் வைத்திருந்தேன். அவர்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். மும்பையில் 10 மாதம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். கொஞ்ச நாள் போகட்டும் என்று காத்து இருந்தேன். 
என் அம்மாவின் மாமாவுக்கு மகள் வழி பேத்தி இருந்தாள். வார வாரம் நான் தங்கி இருந்த தாத்தா வீட்டிற்கு வருவாள்.பார்க்க நம்ம ஊரு நார்த் இந்தியா ஹீரோயின் மாதிரி இருப்பாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் இளமை அழகு அவள் மேல் ஈர்ப்பு கொள்ள செய்தது. அவர்கள் வீட்டிலும் நாங்கள் பழகுவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.என் அப்பா அம்மாவை கூட்டி வருவதை தற்காலிகமாக ஒத்தி வைத்து அவளுடன் ஆவலுடன் சுற்றினேன். திருநெல்வேலி பையனுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. அம்மாவிடம் அவளை திருமணம் செய்ய கேட்குமாறு கேட்டேன். எல்லோரும் சரி சொல்லி கல்யாண நாளும் குறிக்க பட்டது. அப்போதே கல்யாணத்துக்கு அப்புறம் தங்க மீண்டும் வீடு பார்த்தேன் - அப்பா அம்மாவை கூட்டி கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். தாத்தா மற்றும் மாமா அத்தை - இப்போது என்ன அவசரம் கல்யாணம் முடியட்டும் என்றார்கள். 
கல்யாண நாள் நெருங்கியது. மும்பையில் அவர்கள் நம்ம ஊரில் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை துளி கூட கொடுப்பதில்லை. வேலைக்கு சேர முதல் நாள் அவர்கள் வீட்டில் எப்படி பணிவாக இருந்தேனோ அதே போல் தான் நடத்தினார்கள். கல்யாணம் பேசி முடித்த பிறகும் அவ்வாறு நடத்துவது எனக்கு வித்யாசமாக பட்டது. அவள் அப்பாவோடு இது சம்பந்தமாக பேசினேன். அவர் உன் தகுதிக்கு என் மகளை கொடுப்பதே பெரிய விஷயம் என்ற அர்த்தத்தில் பேசினார். 
எனக்கு தூக்கி வாரி போட்டது. அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் சுய மரியாதை அவசியம் என்று நினைத்தேன். கல்யாணம் முடியட்டும் அவள் என்னவள் ஆகி விட்டால் இவர்கள் யார் நமக்கு என்று எனக்கு நானே சமாதானம் செய்தேன். இருந்தாலும் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. கல்யாண வீட்டிலும் எதிரொலித்தது. நாங்கள் யாரும் மதிக்க பட வில்லை. கல்யாணம் முடித்து மீண்டும் மும்பை சென்றேன். சென்ற ஒரே வாரத்தில் வீடு பார்த்து நண்பனிடம் கடன் வாங்கி வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். மனைவியை வா போகலாம் என்று கூப்பிட்டேன்.அவள் எங்கு என்றாள். நம் வீட்டுக்கு என்றேன். இது தான் நம் வீடு. நாம் இங்கேயே இருக்கலாம் என்றாள். 
சண்டை ஆரம்பம் ஆனது.ஏற்கனவே கல்யாணத்தில் எங்கள் வீடு ஆட்களை உதாசீனப்படுத்தியது எல்லாம் சேர்ந்து அவளை நான் பார்த்த வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்தினேன். என் பெற்றோர்களும் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை நான் கவனிப்பேனா மாட்டேனா என்று. ஏனெனினில் நான் சம்பளம் வாங்கியது முதல் அவளுக்கே எல்லா செலவுகளையும் செய்திருந்தேன். 
1 மாதம் பல்லை கடித்து வாழ்ந்தேன். மனம் புரட்டி போட - வாழுகிற வாழ்க்கை நரகமாய் தோண - போட்ட சட்டையுடன் தனியாக மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து விட்டேன். அப்பா அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கல்யாணத்திலேயே அவர்களுக்கு யூகிக்க முடிந்தது. பையன் தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து வந்து விட்டான் என்று. வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் இருந்துருக்கலாம். ஆனால் உறவுகள் முக்கியம் என்று வந்து விட்டேன். நான் அவர்கள் தாத்தா வீட்டில் இப்போது கண்டிப்பாக சமாதானம் பேச வருவார்கள் என்று நினைத்தேன். 2 வருடம் ஓடியது. டிவோர்ஸ் நோட்டீஸ் தான் வந்தது. விழுந்து அடித்து ஓடினேன். அவளை பார்த்து சேர்ந்து வாழ வேண்டும் என்று கெஞ்சினேன். பிரிந்தது சேர தான் ஒழிய நிரந்தமாக அல்ல என்றேன். அவள் ஏளனமாக என்னை பார்த்து ஒதுங்கி போய் விட்டாள். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. அதோடு நான் ஒரு ஆணே இல்லை என்ற ரீதியில் பொய்கள் பரப்ப பட்டது. பரப்பியது அந்த பெண்ணின் அப்பா அம்மா. நெஞ்சம் வலித்தது. மீண்டும் 2 ஆண்டுகள் ஓடியது. நண்பர்கள் பெற்றோர் எல்லோரும் டிவோர்ஸ் செய்து விடு என்று வலியுறுத்த அவளுடைய ஏளன பார்வையும் ஏளன பேச்சுகளும் வெறியேற்ற டிவோர்ஸ் கையெழுத்து போட்டு விட்டேன். ஆணே இல்லை என்ற பேச்சு பரவலாக பேசப்பட அதை உடைப்பதற்காகவே மறு திருமணத்திற்கு சம்மதித்தேன். இப்போது எங்கள் ஊரு பெண்ணொருத்தியை திருமணம் செய்து 2 குழந்தைகளோடு வாழ்கிறேன். 
ரிஜெக்ஷன் - மிக கொடுமை. மன வேதனையில் செய்கிற சாப்ட்வேர் வேலையில் கவனம் செலுத்தினேன். இன்று எங்கள் உறவினர்களில் விரல்ஐ விட்டு என்னும் பணக்காரர்களில் நானும் ஒருவன். போன வாரம் வைட் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் 28 லட்ச ருபாய் காரில் சொந்த ஊர் கோயில் விழாவுக்கு சென்றேன். முன்னாள் மாமாவும் அத்தயும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். எங்களை காரை குடும்பத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து சென்றார்கள். அவள் மகளுக்கு வரன் பார்த்தார்கள். ஒன்றும் அமைய வில்லை. ஜெயிச்ச பீலிங். பட் தோத்த மாதிரியும் இருக்கு.

Tuesday, June 19, 2018

பூங்கோதையும் 100 ரூபாயும்

பூங்கோதையும் 100 ரூபாயும்
காலை ஆறு மணி அப்பாவின் மொபைல் அலாரம் ரீங்காரம் ஒலிக்க சட்டென எழுந்தாள் பூங்கோதை, ஏதோ கலவரம் கலந்த முகம் ஏதோ ஒன்றை நினைத்து கொண்டு அப்படியே படுக்கையில் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்து வேகமாக தன் ஸ்கூல் பேக் இருக்கும் இடத்திற்கு சென்று ஸ்கூல் பேக்கில் உள்ள ஜிப்பைத் திறந்து ஏதோ தேடிக்கொண்டிருந்தாள். ஆம் அவள் கையில் இப்பொழுது 100 ரூபாய். வேகமாக ஆர்ப்பரித்து அடித்து திரும்பி மெல்ல அழகாக உள்வாங்கி செல்லும் கடல் அலைபோல பூங்கோதை மிகுந்த ஆசுவாசத்துடன் மீண்டும் படுக்கைக்குச் சென்று கண்ணயர்ந்தாள்.
ஏது அந்த நூறு ரூபாய் அதற்கு ஏன் பூங்கோதை இவ்வளவு அதிர்ச்சியானாள். அதற்கு நாம் ஆறு நாள்களுக்கு பின்னே செல்ல வேண்டும்.
பூங்கோதையின் அப்பா பாரி வழக்கமாக காலையில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். அன்று பூங்கோதைக்கும் லீவு என்பதால் அவளையும் கூட கூட்டி சென்றார். பாரி வேகமாக மொபைல் போனை காதில் வைத்துக்கொண்டு வாக்கிங் செல்ல பூங்கோதை அவரை பின் தொடர்ந்தாள்.
அப்போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த நூறு ரூபாய். ஆம் இன்று காலையில் பதட்டத்துடன் பேக்கிலிருந்து எடுத்து பார்த்தாளே அதே நூறு ரூபாய். அதனை எடுத்த பூங்கோதை பாரியை கூப்பிட்டாள் பாரியோ போன் கவனத்தில் இவளை கவனிக்கவில்லை. மீண்டும் அந்த நூறு ரூபாயை பார்த்த அவள் எண்ணத்தில் டேரி மில்க் சாக்கலேட், குல்பி ஜஸ்கிரிம் என்று ஓட அதை மடித்து தன் பைக்குள் வைத்து கொண்டாள்.
அன்று காலை கையில் நூறு ரூபாய் இருக்கும் மகிழ்ச்சியில் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பினாள். பூங்கோதையின் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் நடந்தே செல்வாள். அவள் பள்ளி அருகிலேயே மாநகராட்சி பள்ளி ஒன்றும் உண்டு என்பதால் நிறைய பிள்ளைகளும் பெற்றோர்களும் உடன் வருவதால் அவள் பயம் ஏதும் இன்றி தனியே சென்று வருவாள். செல்லும் வழியில் ரோடு போடுவதால் பள்ளம் பறித்து கற்களை மேலே கொட்டி வைத்திருந்தார்கள். அந்த கற்களினால் பூங்கோதையின் shoe சற்று நொடித்து நொடித்து சென்றதால் ரோட்டினை திட்டிக் கொண்டே பூங்கோதை நடந்து சென்று பள்ளியை அடைந்தாள்.
முதல் பிரியட் வரப்பவே பூங்கோதைக்கு நியாபகம் முழுக்க பிரேக் டேரி மில்க் சாக்லேட்லே இருந்தது. பிரேக் மணி ஒலித்து பூங்கோதை நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வேகமாக கேண்டின்க்கு ஓடினாள்.
மூச்சு வாங்கிக் கொண்டே கேண்டின் அண்ணாவிடம் அண்ணா ஒரு டேரி மில்க் சாக்லேட் என்றாள். அவரும் ஒரு டேரி மில்க் எடுத்து கொடுத்தார். பூங்கோதை தன் பையில் இருந்த நூறு ரூபாய்யை நீட்டானள், அதை வாங்கிய கேண்டின் அண்ணா
“ என்னமா இது வெறும் பேப்பரை தர”
அந்த நோட்டை மீண்டும் வாங்கி பார்த்த பூங்கோதை
“ இல்லை அண்ணா அது நூறு ரூபாய் நல்லா பாருங்கள”
என்றாள்.
மீண்டும் கேண்டின் அண்ணா
“இல்லமா நல்லா பாரு அது வெறும் பேப்பர்மா, நீ வேணும்னா சாக்லேட் எடுத்துட்டு போ பணம் அப்புறமா அப்பாகிட்ட வாங்கிக்கிறேன்”
என்றார்
பூங்கோதைக்கு ஒரே குழப்பம். சரி பக்கத்து ஸ்டேஸ்னரி போய் செக் பண்ணி பாக்லாம் என்று பக்கத்தில் உள்ள ஸ்டேஸ்னரிக்கு சென்றாள்.
“ அக்கா எனக்கு ஒரு பேனா வேண்டும்”
என்றாள் பூங்கோதை.
“ இதோ இதை எடுத்துக்கோமா 20 ரூபிஸ்மா”
“ ம்ம்ம்ம் ஒகே கா இந்தாங்க 100 ரூபிஸ்” என்றாள் பூங்கோதை
“ என்னம்மா வெள்ளை தாளை கொடுத்துட்டு நூறு ரூபானு சொல்லுற"
“ இல்லை அக்கா நல்லா பாருங்க இது நூறு ரூபாய்”
என்றாள் பூங்கோதை.
“ இல்லமா இது வெறும்‌ பேப்பர் தான்மா’
என்றாள் ஸ்டேஸ்னரி அக்கா.
பூங்கோதேக்கு ஒரே குழப்பம். அப்படியை அந்த நூறு ரூபாயை பையில் மடித்து வைத்துக்கொண்டு குழப்பத்துடன் ஒரு மரத்தடியில் நிழலில் அமர்ந்தாள்.
அப்போது ஒரு குரல் பூங்கோதை பூங்கோதை என்றது
இவள் முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் அந்த குரல் பூங்கோதை பூங்கோதை என்று அழைத்தது.
மீண்டும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் கேட்கவே அப்போதுதான் அந்த சத்தம் தன் பையினுள் இருந்து வருவதை உணர்ந்தாள்.
உடனே அதிர்ச்சி அடைந்தாள் அந்த நூறு ரூபாயை எடுத்து வெளியே போட்டாள்.
ஆம் பேசியது அந்த நூறு ரூபாய்தான்.
“பூங்கோதை பூங்கோதை பயப்புடாதே நான் தான் நூறு ரூபாய் பேசுறன்”
“நிசமா நீ தான் பேசுறியா” என்றாள் பூங்கோதை
“ஆமா பூங்கோதை நான் தான் பேசுறான்" என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நீ பொய் சொல்ற நீ நூறு ரூபாயை கிடையாது நீ வெறும் பேப்பர்” என்றாள் பூங்கோதை.
“ இல்லே பூங்கோதை நான் வெறும் பேப்பர் இல்லை நூறு ரூபாய் தான் “ என்றது நூறு ரூபாய்.
“ அப்புறம் ஏன் கேட்டின் அண்ணாவும் ஸ்டேஸ்னரி அக்காவும் உன்னை பேப்பர்னு சொன்னாங்க”
என்றாள் ‌பூங்கோதை
“ ஆம்‌ அவர்களுக்கு நான் பேப்பராகத்தான் தெரிவேன்”
என்றது நூறு ரூபாய்.
“ அய்யோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
”குழம்பாதே பூங்கோதே நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்” என்றது நூறு ரூபாய்.
“ ம்ம்ம்ம். கேளு. “
“நான் யார் பூங்கோதை. நான் யாருக்கு சொந்தமானவன்” என்றது நூறு ரூபாய்
“ நீ நூறு ரூபாய். எனக்கு சொந்தமான்.”என்றாள் பூங்கோதை.
“நான் உனக்கு சொந்தமானவனா எப்படி பூங்கோதை” இது நூறு ரூபாய்.
“ நீ எனக்குதான் சொந்தம் நான் தானே உன்னை கீழே இருந்து எடுத்தேன். அப்படியென்றால் நான் தானே உன் சொந்தக்காரி” இது பூங்கோதை
“ கீழே இருந்து எடுத்த என்னை நீ எப்படி உரிமை கொண்டாட முடியும். நீ என்னை பெற எந்த உழைப்பையும் செலவழிக்க வில்லையே. அப்படி இருக்கையில் நீ எப்படி எனக்கு சொந்தக்காரி.” இது நூறு ரூபாய்.
அமைதியானாள் பூங்கோதை.
“ என்ன யோசிக்கிறாய் பூங்கோதை” என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நான் தான் உனக்கு முதலாளி. நான் சொல்ற மாதிரிதான் நீ கேட்க வேண்டும்” இது பூங்கோதை.
“ சரி பூங்கோதை அப்படி என்றால் நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம்” இது நூறு ரூபாய்.
“ என்ன பந்தயம்”
“ அதாவது 6 நாட்களுக்குள் நான் என் உரிமையாளரிடம் சென்றுவிடுவேன். அப்படி செல்லவில்லை என்றால் நீ என்னை ஏழாவது நாள் உன்னுடைய உரிமையாக்கிக் கொள். அதுவரை நீ என்னை செலவு செய்ய முடியாது நீ என்னை செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் உன்னை தவிர மற்ற அனைவருக்கும் நான் வெள்ளைத்தாள் ஆகவே தெரிவேன்” இது 100 ரூபாய்.
“ சரி நானும் பந்தயத்துக்கு வருகிறேன்” என்றாள் பூங்கோதை
பந்தயம் ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஓடியது.....
ஆம் இதுதான் கடைசி நாள் பூங்கோதை கலவரம் கலந்த முகத்துடன் பையிலிருந்த நூறு ரூபாய் எடுத்துப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்த நாள்.
இனி இன்று….
காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினாள் பூங்கோதை. இன்று அவளுக்கு சற்று உற்சாகம் மிகுதியாக இருந்தது. ஏனென்றால் இன்று தான் அந்த நாள் பந்தயத்தில் இறுதி நாள். இன்று மட்டும் உரிமையாளர் கையில் நூறு ரூபாய் போகவில்லை என்றால் அது பூங்கோதைக்கு தான் சொந்தம்.
இப்போது பூங்கோதை உற்சாகத்துடன் அதே சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.இன்று parents meeting என்பதால் அவள் அம்மாவும் அவளுடன் வந்தாள். அவர்களுக்கு முன்னே சென்ற ஒரு மாநகராட்சி பள்ளி பையன் அவளை விட சிறிய வயது பையன் தன் வெறும் கால்களுடன் அந்தக் கற்கள் முட்கள் நிறைந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பூங்கோதையின் அம்மாவிற்கு பாவமாய் தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது அவள் அம்மாவுக்கு ஒரு யோசனை சரி அந்தப் பையனை அருகிலுள்ள செருப்பு கடைக்கு கூட்டி சென்று ஒரு புதிய செருப்பு வாங்கி தரலாம் என்று, உடனே அந்த பையனிடம் சென்று
தம்பி நான் உனக்கு செருப்பு வாங்கி தருகிறேன் என்று கடைக்கு வருகிறாயா என்றால் பூங்கோதை அம்மா
சரி வருகிறேன் அக்கா. என்றான் அந்தப் பையன்.
இருவரும் அருகில் உள்ள செருப்பு கடைக்கு சென்றனர். அங்கே 80 ரூபாய்க்கு ஒரு அழகான செருப்பு இருந்தது அதை வாங்கிய பூங்கோதை அம்மா அந்த பையனிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு பார்க்கும்போதுதான் தெரிகிறது பூங்கோதையின் அம்மா தன்னுடைய பர்சினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கையில் காசும் இல்லை. சரி பூங்கோதை நீங்கள் இருவரும் இங்கேயே நில்லுங்கள் நான் வீட்டில் போய் பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து புறப்பட்டார்பூங்கோதை அம்மா.
இப்போது பூங்கோதைக்கு திடீரென்று ஒரு யோசனை நாம் அந்த 100 ரூபாய் கொடுத்து பார்ப்போமா என்று. கொஞ்சம் பயத்துடனே அந்த ரூபாயை எடுத்து கடைக்காரனிடம் நீட்டினாள்.
அவர் 80 ரூபாய் போக மீதி இருபது ரூபாயை தந்தார்.
பூங்கோதைக்கு ஒரே ஆச்சரியம். இன்று ஆறாவது நாள் தானே நியாயப்படி வெள்ளைத்தாளை தெரிந்திருக்க வேண்டும் எப்படி மாறியது என்று.
குழப்பத்தில் இருந்தால் பூங்கோதை.
அந்தப் பையன் செருப்பை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக
“ அக்கா எனக்கு அம்மா ஆறு நாட்களுக்கு முன்னாடி செருப்பு வாங்கி தரேன் என்று சொன்னால் ஆனால் ஏனோ எனக்கு வாங்கித் தராமல் விட்டு விட்டார். நீங்கள் வாங்கி கொடுத்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி அக்கா”
என்றான் அந்த பையன்.
பூங்கோதைக்கு இப்போதுதான் அனைத்தும் புரிந்தது……….
மீதமுள்ள 20 ரூபாயை அந்தப் பையன் கையில் கொடுத்து dairy milk chocolate வாங்கி தின்ன சொன்னால் பூங்கோதை...

நிலமும் நிச்சியமும்

நிலமும் நிச்சியமும்
அன்று – 1985
மாலை 4 மணி சாமிநாதன் ஒரு பைல் கட்டை தூக்கிக்கொண்டு அலுவலகத்தில் இருந்து மொபட்டில் கிளம்பினார். பன்னையாரின் 14 வயது மகள் தேன்மொழி வாசல் தெளித்து கொண்டிருக்க
ஏம்மா தேன்மொழி பன்னைவாள் இருக்காரா
ம்ம்ம்… அப்பா உள்ள தான் இருக்காரு
சத்தே கூப்பிடுமா
அப்பா! அப்பா!
பன்னையார் வெளியே வந்தார்.
வாங்க சாமிநாதன் உள்ள வாங்க
இல்ல இருக்கட்டும்
என்ன செய்தி சொல்லுங்க
அது அந்த கீழத்தெரு சுப்பன் இருக்கான்ல
ஆமா
அவன் ஒரு மூணு குழி நிலம் பதிவு பண்ண வந்தான்.
அப்படியா
ஆமா நான்தான் இன்னிக்கு நாள் சரியில்ல ராதுகாலம் நாளைக்கு பண்ணிக்கலாம் அப்படினு சொல்லி அனுப்பின்டேன்
ஒஒஒ...இந்த பயல்வோலுக்கு தனியா நிலம் வாங்குற அளவுக்கு ஆய்போச்சா
ஆம இவன்கள இப்படியே விட கூடாது
ம்ம்ம். நாளைக்கு ஆகட்டும், நீங்க இந்த சுப்பன் பயல காலைல ஒரு பத்து மணிக்கு மணியன் டீ கடைக்கு வர சொல்லுங்க.
ம்ம்ம் சரி சொல்லிடுறன் .
ம்ம்ம்ம. சரி டீ குடிச்சிட்டு போங்க சாமிநாதன.
இல்ல இருக்கட்டும் பிள்ளையாண்ட ஸ்கூல்ல இருந்து கூப்பிடனும். நான் கிளம்புறன்.
சரி சாமிநாதன் கிளம்புங்க. அந்த சுப்பன் பயல மறக்காம காலைல டீ கடைக்கு வர சொல்லிடுங்க.
சாமிநாதன் மொபட்டை எடுத்தார். நேராக சுப்பன் வீடு இருக்கும் கீழத்தெருவின் முகப்பிலே மொபைட் நின்றது. தெரு முனையில் ஒரு பள்ளி செல்லும் வயதுடைய ஐந்து சிறுவர்கள் சட்டை இல்லா உடம்புடன் அழகாக பச்ச குதிர ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு சிறுவனை நோக்கி டேய் என்றார் சாமிநாதன்.
சொல்லுங்க ஐயா என்று கையை முன் கட்டிக் கொண்டு கேட்டான் சிறுவன்.
இந்த சுப்பன் பயலே கொஞ்சம் கூப்பிட என்றார் சாமிநாதன.
சிறுவன் விறுவிறுவென்று ஒரே ஓட்டத்தில் சுப்பனின் குடிசைக்கு வந்தான்
சுப்பன் தன் மனைவி பொட்டுவின் வயிற்றில் காது வைத்து தன் அழகிய பிள்ளையின் மழலையை தொலைத் தொடர்பு கருவியே இல்லாமல் ரசித்தபடி இருந்தான்.
மாமா ஒரு ஐயா உன்னை கூப்பிடுது.. தெரு முனையில நிக்குது என்றான் சிறுவன்.
உடனே சுப்பன் ஒரே மூச்சாக துண்டை கையில் எடுத்துக்கொண்டு தெரு முக்கு ஓடினான்.
துண்டை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு, தன்நேரான வலிமையான முதுகில் கூனினை இடைச்செருகலாக செருகி சொல்லுங்க சாமி என்றான்.
பண்ணை நீ நிலம் வாங்குற விஷயமா உன்ன பாக்கணும்னு சொன்னார். காலை 10 மணிக்கு மணியன் டீக்கடைக்கு வந்துடு.
சரிங்க சாமி வந்துடுறேன் என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டான் சுப்பன்.
மீண்டும் மொபைட்டை எடுத்துக்கொண்டு தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு கொஞ்சி விளையாடிய படி சுவாமிநாதன் தன் வீட்டிற்கு சென்றார்.
இன்று - 2018
மாலை 4 மணி மகாலட்சுமி, ஆயிரம் நட்சத்திரங்களை தன்னுள் விழுங்கி செரித்தது போல பளபள உற்சாக முகத்துடன் தன் காதலன அருண் நோக்கி வந்தாள். மாநகராட்சி பூங்கா என்று கூட பாராமல் அருணின் கைகளை மெல்ல பிடித்து காதோரமாய் அணைத்து
நான் அப்பாகிட்ட பேசிட்டேன் அருண். அப்பா உன்னை மீட் பண்றேன்னு சொல்லிட்டாரு.
அப்படியா என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான் அருண்.
அருண். நல்ல படிப்பு ஐடி கம்பெனியில் வேலை. இரு முறை ஆன் சைட்டுக்கு வெளிநாடு சென்று வந்துள்ளான். இன்றைக்கு அவருடைய சம்பளம் மட்டும் 1.5 லட்சம் இருக்கும். சொந்தமாக அப்பார்ட்மெண்டில் ஒரு வீடும் வாங்கி வைத்துள்ளார்.
மகாலட்சுமியின் அப்பா கணேசன் ஓய்வுபெற்ற தனியார் வங்கி கிளார்க். மிடில் கிளாஸ் ஃபேமிலி. அருணை விட வசதியில் சற்று குறைவு.
சரி அப்பா எங்க என்ன மீட் பண்ணனும்னு சொன்னாரு உன் வீட்டிலயா மகா
இல்லடா எங்க தெருமுக்குல இருக்க காபி ஷாப். நாளைக்கு காலைல 10 மணிக்கு.
சரி நான் வந்துடுறேன்
அன்று - 1985
காலை ஒன்பது 45 மணி. சுப்பன் மணியன் டீ கடைக்கு சென்றான். டீ கடையின் முன் ஆட்கள்் உட்கார இரண்டு மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அதில் இருவர் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். சுப்பன் மர பெஞ்சிகளுக்கு பின்னுள்ள மண்மேட்டில் கீழே உட்கார்ந்தான். அந்த இருவரும் டீ சொன்னார்கள். சுப்பனும் எனக்கு ஒரு டீ கொடுங்க சாமி என்றான். டீ போடுபவர் நன்கு சுட சுட மூன்று டீயை போட்டு அதில் 2 க்ளாசில் ஊற்றி அந்த இருவருக்கும் எடுத்துக்கொண்டு போய் கையில் கொடுத்தார். இன்னொரு டீயை அப்படியே கொண்டு வந்து சுப்பனிடம் நின்றார். அங்கு அருகில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கொட்டான் குச்சியில் ஒன்றை எடுத்து நீட்டினான் சுப்பன் கீழே உட்கார்ந்து கொண்டு. டீ போடுபவர் மேலே நின்றவாரே அந்த டீயை அவன் கொட்டாங்குச்சியில் ஊற்றினார். டீயை குடித்துவிட்டு அந்த இருவரும் காசு கொடுத்தனர். சுப்பனும் காசு கொடுத்தான்.
புல்லட் சவுண்ட் புடு சுடு என்று கேட்க திரும்பி பார்த்தான சுப்பன். அங்கே பண்ணையார் தன்னுடைய பெரிய மீசையை முறுக்கியவாறு புல்லட்லிருந்து இறங்கி டீ கடை நோக்கி வந்தார்.
பண்ணையாரை பார்த்தவுடன் சுப்பன் துண்டைத் தன் கக்கத்தில் வைத்து கூனினான்.
என்னடா சுப்பா உனக்கு நிலம் வாங்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா
இல்லை ஐயா என் பெண்சாதி நிறை மாசத்தில இருக்கு அதுக்கு ஒரு ஆசை ரெண்டு குழி நிலம் வாங்கி சொந்தமாக ஒரு கான்கிரீட் வீடு போட்டு வாழனும்னு அதுக்குதான் ஐயா.
உன் பொஞ்சாதி ஆசைப்பட்டா நீ எல்லாம நிலம் வாங்கிடலாமா.அதுக்கெல்லாம் ஒரு இது வேணாம்.
ஐயா
சரி உனக்கு ஏது இவ்வளவு பணம்.
ஐயா என் பொஞ்சாதி சொந்தமா கொஞ்சம் சவரன் வச்சிருந்தா அப்புறம் கூலி வேலை பாத்து நானும் அவளும் சொந்தமா கொஞ்சம் காசு சேத்து வச்சி இருக்கோம்
என்னது நீ எல்லாம் காசு சேத்து வச்சிருக்கியா. சரி போன அறுப்புக்கு அப்புறம் என்கிட்ட இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கடன் வாங்குனல
ஆமா ஐயா அதுக்குத்தான் நான் வட்டி தவனை கரெக்டா கட்டிகிட்டு இருக்கனேய்யா
என்னையே எதித்து பேசுறியா. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு இப்போ முழு காசு தேவைப்படுது நீ கொண்டு வா.
ஐயா ஐயா மன்னிச்சிடுங்க ஐயா
அதல்லாம் முடியாது போ போய் வீட்ல இருக்க காசு கொண்டு வா.
வீட்டை நோக்கி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் சென்றான்
சுப்பன்…...
இன்று(2018)
காலை ஒன்பது 45 மணி காபி ஷாப் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அருண்.
அங்கே அவனுக்காக ஏற்கனவே மகாலட்சுமியும் அப்பா கணேசனும் காத்திருந்தனர்.
சமமாக போடப்பட்ட உயர்தர கண்ணாடி டேபிளின் ஒரு முனையில் அப்பா கணேசனும் நடுவில் மகாலட்சுமியும் உட்கார்ந்திருக்க எதிரே உள்ள நாற்காலி அருணுக்காக காத்து இருந்தது.
அருண் உள்ளே வந்து ஹாய் அங்கிள் என்று சொல்லி எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்
சொல்லுப்பா என் பொண்ணு எல்லாத்தையும் சொன்னா
ஆமா அங்கிள் நாங்க 3 இயர்ஸா லவ் பண்றோம். நான் அவள நல்லா பாத்துப்பேன் சொந்தமா வீடு வச்சிருக்கேன். என்னோட சேலரி இப்போ 1.5 லட்சம் அங்கிள் கொஞ்ச நாள்ல இன்னும் அதிகமாகும் அங்கிள். அப்புறம் எனக்கு சிகரெட் தண்ணி என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது அங்கிள். என்று தன்னை பற்றி சொல்லி முடித்தான் அருண்
ம்ம்ம்ம் எல்லாம் சொன்னாபா என் பொண்ணு எனக்கு சம்ம்ம்ம் என்று சொல்ல வரும் போது கனேசனின் போன் அடித்தது
போனில் சிவராமன,கணேசனின் நண்பன் தன் காதல் விவகாரத்தை சொன்ன உடன் சிவராமன் அருண் ஊர் என்பதால் அவரிடம் அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தார கனேசன்.
போனை எடுத்து செல்லு சிவராமன் என்றார.
இப்பொழுது இரண்டு உயர்தர கோப்பையில் மூவருக்கும காபி டேபிளில் வந்து வைக்கப்பட்டது.
சிவராமன் ஒரு இரண்டு நிமிடம் கணேசனுடன் பேசினார். ஆனால் கணேசன் எதுவும் பதில் பேசவில்லை .சரி சரி என்று ம்ம்ம் கொட்டியவாரே போனை கட் செய்தார்.
ஏதோ ஒன்று நினைத்தபடி அமைதியாக இருந்தார் கணேசன்.
இப்பொழுது மகாலட்சுமி அப்பா எனறார்்
டக் என்று நினைவுக்கு வந்த கணேசன் சொல்லுமா என்றார்
அருண் பா
சொல்லு தம்பி
உங்களுக்கு சம்மதம் தானே அங்கிள்
இல்லை அது வந்துபா என் பெண்ண இன்னும் கொஞ்சம் படிக்க வைக்கலாம் நினைக்கிறேன்
கல்யாணதுக்கு அப்புறம் நானே படிக்க வைக்கிறன் அங்கிள்.
அது இல்லப்பா எங்க குடும்பத்திற்கு இந்த காதல் அது இது எல்லாம் சரியா வராது. உன்னை நேர்ல பாத்து சொல்ல தான் உன்னை இங்க கூப்பிட்டேன்.நீ அவளை மறந்துடு பா நீ உன் வாழ்க்கையை பாரு என்றார் கணேசன.்
இடி இறங்கியது போலிருந்தது மகாலட்சுமிக்கும் அருணுக்கும்
உடனே அங்கிருந்து எழுந்து சரி நான் கிளம்புறேன் அங்கிள் என்று காபியை அப்படியே வைத்துவிட்டு கிளம்பினான்.
யோசனையில் காபி ஷாப் கதவைத்திறந்து வெளியே செல்லும்போது அருணின் போன் ரிங் அடித்த்து.
போனை பார்த்தான். அப்பா கால் செய்து கொண்டிருந்தார்.
கவலையில் கை நடுக்கத்துடன் போனை அட்டன் செய்து
சொல்லுப்பா என்றான் அருண்
என்ன ஆச்சி தம்பி பொண்ணு வீட்ல பேச போறதா சொன்னல. பேசிட்டியா தம்பி. சம்மதம் சொல்லிட்டாங்களா.
ம்ம்ம் இல்லப்பா அவங்க அப்பாக்கு என்ன முதல்ல பிடிச்சி இருககுனு சொன்னாரு. ஆனா திடீர்ன்னு ஏது எதோ சொல்லு சம்மதம் இல்ல சொல்லிட்டாங்கப்பா என்றான் தன் தள தளத்த குரலில்.
நீ கவல படாத தம்பி எல்லா நல்லதா நடக்கும் என்று சொல்லி போனை கட் செய்து விட்டு
ஏதோ ஒன்றை யோசித்தபடி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் நின்றான்
சுப்பன்…