Tuesday, June 19, 2018

பூங்கோதையும் 100 ரூபாயும்

பூங்கோதையும் 100 ரூபாயும்
காலை ஆறு மணி அப்பாவின் மொபைல் அலாரம் ரீங்காரம் ஒலிக்க சட்டென எழுந்தாள் பூங்கோதை, ஏதோ கலவரம் கலந்த முகம் ஏதோ ஒன்றை நினைத்து கொண்டு அப்படியே படுக்கையில் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்து வேகமாக தன் ஸ்கூல் பேக் இருக்கும் இடத்திற்கு சென்று ஸ்கூல் பேக்கில் உள்ள ஜிப்பைத் திறந்து ஏதோ தேடிக்கொண்டிருந்தாள். ஆம் அவள் கையில் இப்பொழுது 100 ரூபாய். வேகமாக ஆர்ப்பரித்து அடித்து திரும்பி மெல்ல அழகாக உள்வாங்கி செல்லும் கடல் அலைபோல பூங்கோதை மிகுந்த ஆசுவாசத்துடன் மீண்டும் படுக்கைக்குச் சென்று கண்ணயர்ந்தாள்.
ஏது அந்த நூறு ரூபாய் அதற்கு ஏன் பூங்கோதை இவ்வளவு அதிர்ச்சியானாள். அதற்கு நாம் ஆறு நாள்களுக்கு பின்னே செல்ல வேண்டும்.
பூங்கோதையின் அப்பா பாரி வழக்கமாக காலையில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். அன்று பூங்கோதைக்கும் லீவு என்பதால் அவளையும் கூட கூட்டி சென்றார். பாரி வேகமாக மொபைல் போனை காதில் வைத்துக்கொண்டு வாக்கிங் செல்ல பூங்கோதை அவரை பின் தொடர்ந்தாள்.
அப்போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த நூறு ரூபாய். ஆம் இன்று காலையில் பதட்டத்துடன் பேக்கிலிருந்து எடுத்து பார்த்தாளே அதே நூறு ரூபாய். அதனை எடுத்த பூங்கோதை பாரியை கூப்பிட்டாள் பாரியோ போன் கவனத்தில் இவளை கவனிக்கவில்லை. மீண்டும் அந்த நூறு ரூபாயை பார்த்த அவள் எண்ணத்தில் டேரி மில்க் சாக்கலேட், குல்பி ஜஸ்கிரிம் என்று ஓட அதை மடித்து தன் பைக்குள் வைத்து கொண்டாள்.
அன்று காலை கையில் நூறு ரூபாய் இருக்கும் மகிழ்ச்சியில் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பினாள். பூங்கோதையின் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் நடந்தே செல்வாள். அவள் பள்ளி அருகிலேயே மாநகராட்சி பள்ளி ஒன்றும் உண்டு என்பதால் நிறைய பிள்ளைகளும் பெற்றோர்களும் உடன் வருவதால் அவள் பயம் ஏதும் இன்றி தனியே சென்று வருவாள். செல்லும் வழியில் ரோடு போடுவதால் பள்ளம் பறித்து கற்களை மேலே கொட்டி வைத்திருந்தார்கள். அந்த கற்களினால் பூங்கோதையின் shoe சற்று நொடித்து நொடித்து சென்றதால் ரோட்டினை திட்டிக் கொண்டே பூங்கோதை நடந்து சென்று பள்ளியை அடைந்தாள்.
முதல் பிரியட் வரப்பவே பூங்கோதைக்கு நியாபகம் முழுக்க பிரேக் டேரி மில்க் சாக்லேட்லே இருந்தது. பிரேக் மணி ஒலித்து பூங்கோதை நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வேகமாக கேண்டின்க்கு ஓடினாள்.
மூச்சு வாங்கிக் கொண்டே கேண்டின் அண்ணாவிடம் அண்ணா ஒரு டேரி மில்க் சாக்லேட் என்றாள். அவரும் ஒரு டேரி மில்க் எடுத்து கொடுத்தார். பூங்கோதை தன் பையில் இருந்த நூறு ரூபாய்யை நீட்டானள், அதை வாங்கிய கேண்டின் அண்ணா
“ என்னமா இது வெறும் பேப்பரை தர”
அந்த நோட்டை மீண்டும் வாங்கி பார்த்த பூங்கோதை
“ இல்லை அண்ணா அது நூறு ரூபாய் நல்லா பாருங்கள”
என்றாள்.
மீண்டும் கேண்டின் அண்ணா
“இல்லமா நல்லா பாரு அது வெறும் பேப்பர்மா, நீ வேணும்னா சாக்லேட் எடுத்துட்டு போ பணம் அப்புறமா அப்பாகிட்ட வாங்கிக்கிறேன்”
என்றார்
பூங்கோதைக்கு ஒரே குழப்பம். சரி பக்கத்து ஸ்டேஸ்னரி போய் செக் பண்ணி பாக்லாம் என்று பக்கத்தில் உள்ள ஸ்டேஸ்னரிக்கு சென்றாள்.
“ அக்கா எனக்கு ஒரு பேனா வேண்டும்”
என்றாள் பூங்கோதை.
“ இதோ இதை எடுத்துக்கோமா 20 ரூபிஸ்மா”
“ ம்ம்ம்ம் ஒகே கா இந்தாங்க 100 ரூபிஸ்” என்றாள் பூங்கோதை
“ என்னம்மா வெள்ளை தாளை கொடுத்துட்டு நூறு ரூபானு சொல்லுற"
“ இல்லை அக்கா நல்லா பாருங்க இது நூறு ரூபாய்”
என்றாள் பூங்கோதை.
“ இல்லமா இது வெறும்‌ பேப்பர் தான்மா’
என்றாள் ஸ்டேஸ்னரி அக்கா.
பூங்கோதேக்கு ஒரே குழப்பம். அப்படியை அந்த நூறு ரூபாயை பையில் மடித்து வைத்துக்கொண்டு குழப்பத்துடன் ஒரு மரத்தடியில் நிழலில் அமர்ந்தாள்.
அப்போது ஒரு குரல் பூங்கோதை பூங்கோதை என்றது
இவள் முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் அந்த குரல் பூங்கோதை பூங்கோதை என்று அழைத்தது.
மீண்டும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் கேட்கவே அப்போதுதான் அந்த சத்தம் தன் பையினுள் இருந்து வருவதை உணர்ந்தாள்.
உடனே அதிர்ச்சி அடைந்தாள் அந்த நூறு ரூபாயை எடுத்து வெளியே போட்டாள்.
ஆம் பேசியது அந்த நூறு ரூபாய்தான்.
“பூங்கோதை பூங்கோதை பயப்புடாதே நான் தான் நூறு ரூபாய் பேசுறன்”
“நிசமா நீ தான் பேசுறியா” என்றாள் பூங்கோதை
“ஆமா பூங்கோதை நான் தான் பேசுறான்" என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நீ பொய் சொல்ற நீ நூறு ரூபாயை கிடையாது நீ வெறும் பேப்பர்” என்றாள் பூங்கோதை.
“ இல்லே பூங்கோதை நான் வெறும் பேப்பர் இல்லை நூறு ரூபாய் தான் “ என்றது நூறு ரூபாய்.
“ அப்புறம் ஏன் கேட்டின் அண்ணாவும் ஸ்டேஸ்னரி அக்காவும் உன்னை பேப்பர்னு சொன்னாங்க”
என்றாள் ‌பூங்கோதை
“ ஆம்‌ அவர்களுக்கு நான் பேப்பராகத்தான் தெரிவேன்”
என்றது நூறு ரூபாய்.
“ அய்யோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
”குழம்பாதே பூங்கோதே நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்” என்றது நூறு ரூபாய்.
“ ம்ம்ம்ம். கேளு. “
“நான் யார் பூங்கோதை. நான் யாருக்கு சொந்தமானவன்” என்றது நூறு ரூபாய்
“ நீ நூறு ரூபாய். எனக்கு சொந்தமான்.”என்றாள் பூங்கோதை.
“நான் உனக்கு சொந்தமானவனா எப்படி பூங்கோதை” இது நூறு ரூபாய்.
“ நீ எனக்குதான் சொந்தம் நான் தானே உன்னை கீழே இருந்து எடுத்தேன். அப்படியென்றால் நான் தானே உன் சொந்தக்காரி” இது பூங்கோதை
“ கீழே இருந்து எடுத்த என்னை நீ எப்படி உரிமை கொண்டாட முடியும். நீ என்னை பெற எந்த உழைப்பையும் செலவழிக்க வில்லையே. அப்படி இருக்கையில் நீ எப்படி எனக்கு சொந்தக்காரி.” இது நூறு ரூபாய்.
அமைதியானாள் பூங்கோதை.
“ என்ன யோசிக்கிறாய் பூங்கோதை” என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நான் தான் உனக்கு முதலாளி. நான் சொல்ற மாதிரிதான் நீ கேட்க வேண்டும்” இது பூங்கோதை.
“ சரி பூங்கோதை அப்படி என்றால் நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம்” இது நூறு ரூபாய்.
“ என்ன பந்தயம்”
“ அதாவது 6 நாட்களுக்குள் நான் என் உரிமையாளரிடம் சென்றுவிடுவேன். அப்படி செல்லவில்லை என்றால் நீ என்னை ஏழாவது நாள் உன்னுடைய உரிமையாக்கிக் கொள். அதுவரை நீ என்னை செலவு செய்ய முடியாது நீ என்னை செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் உன்னை தவிர மற்ற அனைவருக்கும் நான் வெள்ளைத்தாள் ஆகவே தெரிவேன்” இது 100 ரூபாய்.
“ சரி நானும் பந்தயத்துக்கு வருகிறேன்” என்றாள் பூங்கோதை
பந்தயம் ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஓடியது.....
ஆம் இதுதான் கடைசி நாள் பூங்கோதை கலவரம் கலந்த முகத்துடன் பையிலிருந்த நூறு ரூபாய் எடுத்துப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்த நாள்.
இனி இன்று….
காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினாள் பூங்கோதை. இன்று அவளுக்கு சற்று உற்சாகம் மிகுதியாக இருந்தது. ஏனென்றால் இன்று தான் அந்த நாள் பந்தயத்தில் இறுதி நாள். இன்று மட்டும் உரிமையாளர் கையில் நூறு ரூபாய் போகவில்லை என்றால் அது பூங்கோதைக்கு தான் சொந்தம்.
இப்போது பூங்கோதை உற்சாகத்துடன் அதே சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.இன்று parents meeting என்பதால் அவள் அம்மாவும் அவளுடன் வந்தாள். அவர்களுக்கு முன்னே சென்ற ஒரு மாநகராட்சி பள்ளி பையன் அவளை விட சிறிய வயது பையன் தன் வெறும் கால்களுடன் அந்தக் கற்கள் முட்கள் நிறைந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பூங்கோதையின் அம்மாவிற்கு பாவமாய் தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது அவள் அம்மாவுக்கு ஒரு யோசனை சரி அந்தப் பையனை அருகிலுள்ள செருப்பு கடைக்கு கூட்டி சென்று ஒரு புதிய செருப்பு வாங்கி தரலாம் என்று, உடனே அந்த பையனிடம் சென்று
தம்பி நான் உனக்கு செருப்பு வாங்கி தருகிறேன் என்று கடைக்கு வருகிறாயா என்றால் பூங்கோதை அம்மா
சரி வருகிறேன் அக்கா. என்றான் அந்தப் பையன்.
இருவரும் அருகில் உள்ள செருப்பு கடைக்கு சென்றனர். அங்கே 80 ரூபாய்க்கு ஒரு அழகான செருப்பு இருந்தது அதை வாங்கிய பூங்கோதை அம்மா அந்த பையனிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு பார்க்கும்போதுதான் தெரிகிறது பூங்கோதையின் அம்மா தன்னுடைய பர்சினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கையில் காசும் இல்லை. சரி பூங்கோதை நீங்கள் இருவரும் இங்கேயே நில்லுங்கள் நான் வீட்டில் போய் பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து புறப்பட்டார்பூங்கோதை அம்மா.
இப்போது பூங்கோதைக்கு திடீரென்று ஒரு யோசனை நாம் அந்த 100 ரூபாய் கொடுத்து பார்ப்போமா என்று. கொஞ்சம் பயத்துடனே அந்த ரூபாயை எடுத்து கடைக்காரனிடம் நீட்டினாள்.
அவர் 80 ரூபாய் போக மீதி இருபது ரூபாயை தந்தார்.
பூங்கோதைக்கு ஒரே ஆச்சரியம். இன்று ஆறாவது நாள் தானே நியாயப்படி வெள்ளைத்தாளை தெரிந்திருக்க வேண்டும் எப்படி மாறியது என்று.
குழப்பத்தில் இருந்தால் பூங்கோதை.
அந்தப் பையன் செருப்பை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக
“ அக்கா எனக்கு அம்மா ஆறு நாட்களுக்கு முன்னாடி செருப்பு வாங்கி தரேன் என்று சொன்னால் ஆனால் ஏனோ எனக்கு வாங்கித் தராமல் விட்டு விட்டார். நீங்கள் வாங்கி கொடுத்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி அக்கா”
என்றான் அந்த பையன்.
பூங்கோதைக்கு இப்போதுதான் அனைத்தும் புரிந்தது……….
மீதமுள்ள 20 ரூபாயை அந்தப் பையன் கையில் கொடுத்து dairy milk chocolate வாங்கி தின்ன சொன்னால் பூங்கோதை...

No comments: