Thursday, June 21, 2018

லஷ்மி அக்கா


நேற்று 19 ந்தேதி, காலை உணவுக்காக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு உணவகம் சென்றேன்...... அப்போது எனது எதிரில் உள்ள இருக்கைகளில் இரண்டு மாநகர துப்புரவு தொழிலாளர்கள் உணவருந்த வந்து அமர்ந்தார்கள்.... அவர்களில் ஒருவர் எனது நெருங்கிய உறவினரும் கூட....
"நைனா உன் போட்டா போட்டு ஒரு பேனர் அங்க கட்டியிருந்துச்சே...ஸ்கூல் பசங்க போட்டால்லாம் கூட இருந்துச்சே....

" ஆமாம் மா படிக்கிற பசங்களுக்கு பரிசு தர்றோம்.... மத்த பசங்களுக்கு ஊக்கமா இருக்கும் இல்ல அதனால தான் "
" நீயும் அம்பேத்கர் அது இதுன்னு என்னன்னமோ பண்ற, நம்ம ஜனங்களுக்கு நல்லது நடந்தா சரி"
என்று சொல்லிவிட்டு அவரது தோழியுடன் உரையாடலை தொடர்ந்தார்....
அப்போதுதான் அவரது இடது கையை கூர்ந்து கவனித்தேன்.... அதில் லஷ்மி என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.. பொதுவாக மனம் கவர்ந்த மற்றவர்களின் பெயரைதான் தங்களின் கைகளில் பச்சை குத்திக்கொள்வார்கள்.....
இது என்ன புதுசா இருக்கே.... ஏனெனில் அவரின் பெயர் லஷ்மி என்பதை நான் நன்கு அறிவேன்.... குழப்பமும் ஆர்வமும் கலந்த உணர்வினால் உந்தப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தேன்...
இறுதியில் கேட்டுவிட துணிந்தேன்....

"உங்க பேரையே ஏன் நீங்க பச்சை குத்திட்டிருக்கீங்க என்றேன்....
" அதுவா.... ஒன்னுமில்ல என்றவர், சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார்.... நாங்க சின்ன வயசா இருக்கும் போது உன்ன மாதிரி அம்பேத்கர் பத்தி எங்களுக்கு சொல்லிக்கொடுத்து இப்படியெல்லாம் பரிசு குடுத்திருந்தா நான் ஏன் நைனா இப்படி என் பேரையே பச்சை குத்திக்கிட்டு அலையப்போறேன் "
கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் என்றேன்...
" அப்பல்லாம் நாங்க பள்ளிக்கூடம் போறதே மத்திய சோத்துக்காகத்தான்.. படிப்போட அருமை தெரியாது... அத தெரிஞ்சு சொல்றத்துக்கும் யாருமில்லை.....
எங்கப்பா பிணம் அறுக்கற வேல..... அந்த பிணத்தின் மேல சுத்தற வெள்ள காடா துணி யை தான் நாங்க யூனிபார்ம் தச்சு போட்டுட்டு போவோம்.... பட்டினிய ஜெயிக்கறதுதான் எங்களோட மிகப்பெரிய போராட்டமாக இருந்ததால படிப்பு ஏறல....
அவ்ளோதான்...
அப்புறம் நகராட்சி யில் துப்புரவு வேலைக்கு போயி சேர்ந்தேன்...
அப்பல்லாம் பம்பாய் கக்கூசு கிடையாது...நாத்தம் குடல புடுங்கும்..
என்ன பண்றது.... வயித்தக் கழுவனுமே... சமாளிச்சிட்டு செய்வேன்....
அப்பதான்... "மஸ்டரோல்" ல (வருகை பதிவேடு) கண்டிப்பா கையெழுத்து போடனும் னு மேஸ்திரி strict ஆ சொல்லிட்டாரு.... இந்த வேலைய விட்டுடக்கூடாதுன்னு.... எவ்வளவோ முயற்சி பண்ணேன்...எழுத வரல... அஞ்சில வராதது அம்பதுலியா வரும்..? அப்புறம் ஒரு ஐடியா பண்ணேன், போயி எம்பேர பச்சை குத்திக் கிட்டேன்.... இதைப்பார்த்து பார்த்து தான் கையெழுத்து போடுவேன்.... அப்ப படிப்போட அரும தெரியல.... என்னா பண்றது நைனா...
நம்ப புள்ளைங்களுக்கு எங்கள மாதிரி நிலம வரக்கூடாது நைனா....படிப்பு தான் நைனா நம்ம சொத்து..... ஊர் அழுக்கையெல்லாம் சுத்தம் பண்ண நமக்கு சொந்தமா பொட்டு நிலம் கிடையாது..... பாட்டன் சேத்து வச்ச சொத்தும் கிடையாது..... படிப்புதான நைனா.. அதான் நீ தான் அம்பேத்கர் கட்சிக்காரனாச்சே உனக்கு தெரியாதா? என்று சொல்லிவிட்டு ஊர் அழுக்க சுத்தம் பண்ண கிளம்பிட்டாங்க...
இன்னும் அதிகமாக இப்படியான நிகழ்ச்சிகள் நடத்தி... சுய மரியாதை உணர்வூட்டி, மாண்புள்ள மனிதர்களை உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் நிறைய இருக்கு என்று எண்ணிக் கொண்டேன்....
ஓடிப்போய் நிகழ்ச்சிக்கான நோட்டீசை அவர்களிடம் கொடுத்தேன்.....வருவதாக உறுதியளித்தார்...
ஆம் கல்வி ஆயுதமே...
சமூகத்தையும் சேர்த்து படிக்கும் கல்வி புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதுபோல்
ஓர் ஆயுதமே......

No comments: