சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அரசன்(ராமன்) தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். பிரார்த்தனை செய்வதிலும், விரதமிருப்பதிலும், தன் அன்பு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சுவதிலும் அவன் தனது நாட்களைச் செலவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசனிடமிருந்து சீதையை அவன் வெற்றிகரமாக மீட்டிருந்தும்கூட, பழமைவாதக் கொள்கைகளின் பிடியிலிருந்து தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குரிய சக்தி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் தன் குடிமக்கள்மீது அக்கறை கொண்டிருந்தான் என்பதை வெறுப்போடு நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் தங்கள் சாதிக் கடமைகளிலிருந்து தவறாமல் இருந்தவரை, அவனுடைய ஆட்சியின்கீழ் அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது. ஆனால் சம்புகனைப் போன்றவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், தர்மத்தின் நீண்ட வாள் அவர்களைத் துரத்தி வேட்டையாடிவிடும். ஒட்டுமொத்த அமைப்புமுறையானது பாகுபாட்டின் அடிப்படையிலும், அனுகூலங்கள் பிறப்பின் அடிப்படையிலும் இருக்கும்போது, வெறுமனே ஓர் ஆட்சியாளனாக இருப்பது மிகவும் கடினம்.
No comments:
Post a Comment