Thursday, June 21, 2018

நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, "நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்" என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். "நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே" என்று கூறினர்.
ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். "நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.
இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. 17.02.1956-இல் மணல்மேட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 05.03.1956

No comments: