விதவைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.
விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.
கல்வியும் கிடையாது... 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.
இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.
ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.
தவிர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.
இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.
ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.
விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.
இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.
அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.
சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.
கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.
கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.
முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.
ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?...
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
No comments:
Post a Comment