Thursday, June 21, 2018

பொறுப்பும் பொறுப்பின்மையும் - படங்களில் சாதி 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது

பொறுப்பும் பொறுப்பின்மையும் .
சங்கிலி முருகன் தான் தயாரித்த எல்லா படங்களின் முதல் காட்சியிலும் இரண்டு அடையாளங்களை வைப்பார். முதலாவதாக மாட்டிலிருந்து செம்பு நிறைய பால் கறக்கும் காட்சி. அடுத்ததாக சிலையாகவோ படமாகவோ முத்துராமலிங்கத் தேவரின் பிம்பம் இடம் பெற்று விடும். முதல் அடையாளம் சினிமாவிற்கான சகுனம். அடுத்த அடையாளம் ஏன் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்போக்கு 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது. நினைவே ஒரு சங்கீதம் (1987) நம்ம ஊரு நல்ல ஊரு (1986) போன்ற படங்களில் பசும்பொன் என்ற ஊர்ப் பெயரிலிருந்து தான் காட்சிகள் தொடங்கும். தங்கள் சொந்த சாதிய பிம்பங்களையும் கதையாடல்களையும் தான் இந்த இயக்குநர்கள் இப்படங்களில் காட்டினர். இவையே வளர்ந்து 1990 களின் சினிமா கதையாடல்களை ஆட்டிப்படைத்தன. அதன் தொடர்ச்சியில் நடிகர் கார்த்திக்கை சாதியின் பிம்பமாக அவருக்கே காட்டித் தந்தனர். சிவாஜி கணேசன் பாரதிராஜா போன்றோரும் அந்த வாசனைக்கு இலக்காகினர்.இக்கதையாடல்கள் வணிக வெற்றிக்கான பார்முலாவாக ஆனதால் அச்சாதியினர் அல்லாதவர்களும் அவ்வகை படங்களையே எடுத்தனர். தமிழ்ச் சினிமாவில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் முத்துராமலிங்கத் தேவர் புகழ்ச்சி (சீமானே எழுதிய பாஞ்சாலங்குறிச்சி படப் பாடல் உள்பட) இடம் பெற்றுள்ளது.இது வேறு எவருக்கும் கிடையாது.
இவை யாவும் பிராமணரல்லாத வட்டார பெரும்பான்மை சாதி கதையாடல்கள் என்பது தெளிவு. இவர்களும் பிராமணர்களால் சாதிய ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றே அரசியல் ரீதியாக சொல்லப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியினாலேயே தலித்துகளை ஒடுக்குபவர்களாக இருந்தாலும் பிராமணர் எதிர்ப்பு என்ற வகையில் தலித்துகளோடு ஒத்தவர்களாக சொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இது மகத்தான அரசியல் கதையாடல்.
இந்த கதையாடலின்படி இடைநிலை பிரிவினர் பிராமணர் எதிர்ப்பு அரசியல் குறியீடு என்ற முறையில் பெரியாரை ஏற்றிருக்க வேண்டும். அதோடு பெரியாரின் உழைப்பால் அதிகாரத்திற்கு வந்த திராவிட அரசியலால் பலன் பெற்றவர்கள் என்ற முறையிலும் பெரியாருக்கு / பிராமணர் அல்லாத அரசியலுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் அதற்கான எந்த ஓர்மையும் இருந்ததில்லை. உள்ளூரில் சாதிய சமூக அதிகாரத்தை கைக்கொண்டிருக்கும் இவர்கள் பெரியார் போன்றோரின் பிராமணரல்லாத அரசியலின் பலனையும் எவ்வித தீவிர பங்களிப்பும் இல்லாமலே பெற்றிருக்கின்றனர். ஆனால் இவ்வகுப்பினர் தாங்கி பிடித்து வந்திருப்பதோ தத்தம் சாதிகளுக்கேயுரிய பிம்பங்களையே. அதன்படி தான் மேற்கண்ட முத்துராமலிங்கத் தேவர் பிம்பங்களை பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் பிராமணரல்லாதோர் அரசியலால் பயன் பெற்றோர் என்ற முறையில் இவர்கள் பெரியாரை ஏன் காட்டவில்லை? என்ற கேள்வியோ மாறாக அவரை காட்ட வேண்டும் என்ற நெருக்கடியோ அரசியல் சமூகத்திடமிருந்து இதுவரையிலும் ஒரு கேள்வியாக எழுப்பட்டதில்லை.
இடைநிலை வகுப்பினர் சாதியவாதிகளாக இருப்பது இயல்பானதாக பார்க்கப்படுவதே இதற்கான அடிப்படைக் காரணம். எனவே அவர்களிடம் வலியுறுத்துவதற்கோ எதிர்பார்ப்பதற்கோ எதுவுமில்லை என்று கருதப்படுகிறது. எனில் சாதிக்கு எதிராக இருக்க வேண்டிய பொறுப்பும் அதற்கு எதிராக போராடி இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலையும் தலித்துகளுடையதாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வகை போராட்டங்களின் பலன் பிராமணர் அல்லாதவர் என்ற முறையில் இடைநிலை சாதியினருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்ற சொல்லப்படாத அரசியல் விளக்கமும் இங்கிருக்கிறது. அதிலிருந்து விலகுவதாக சந்தேகப்படும் போதெல்லாம் தலித்துகள் தங்களை நிருபிக்கும் வரையிலும் தாக்கப்படுகிறார்கள்.

No comments: