Thursday, June 21, 2018

ஜி.டி. நாயுடு

ஜி.டி. நாயுடு
நாங்கள் பள்ளியில் படிக்கிற காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. யாராவது புதிதாக ஏதாவது சொன்னால், “ஆமா... இவரு பெரிய ஜி.டி. நாயுடு!” என்பார்கள். அந்த அளவுக்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் மக்களிடையே பரவியிருந்தது. அரசுப் பள்ளிகளின் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது ஜிடி நாயுடுவின் இல்லம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். பள்ளி மாணவனாக ஏதோவொரு காலத்தில் சென்று வந்த நினைவுகள் மிகமிக மங்கலாகவே நினைவில் உள்ளன. வளர்ந்த பிறகு அவருடைய இல்லத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேற வாய்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவருடைய வீட்டுக்கு மிக அருகில் போலீஸ் பயிற்சிப் பள்ளியின் கேன்டீனில் பல மாதங்கள் வேலை செய்திருந்தும்கூட அந்த நேரத்தில் வாய்க்கவில்லை. இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய?
இந்திய விஞ்ஞானிகளை / கருவிகளைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், ஜிடி நாயுடு நினைவு வரும். அவர் இருந்திருந்தால் இதைக் கண்டுபிடித்திருப்பார் என்று தோன்றும். அவ்வளவு ஏன், பாதாள சாக்கடை சுத்தம் செய்ய இறங்கிய மூன்று பேர் உயிரிழந்த செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்னால் வாசித்தபோதும் நாயுடுவின் நினைவு வந்தது. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பார் – அதுவும் மிக மலிவாக. இத்தனை பெரிய மனிதர் எப்படி தேசிய அளவில் கவனிக்கப்படாமல் போனார் என்பது இப்போதும் எனக்கு வியப்புதான்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எப்போதுமே எனக்கு உண்டு. ஆனால் கிடைப்பவை எல்லாம் ஆதாரங்கள்-அலசல்கள் குறைவாகவும், செவிவழிச் செய்திகள்-மிகைப்படுத்தல் மிகுதியாகவும் கொண்ட வழக்கமான தமிழ் வாழ்க்கை வரலாற்று நூலாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவை சென்றிருந்தபோது விஜயா பதிப்பகத்தில் ஒரு சிறிய நூல் கிடைத்தது. அது மேலே சொன்ன ரகம்தான். கடந்த வாரம் ஏதோ தேடும்போது, இணையத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது. கலைமணி என்பவர் எழுதியது. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. (இந்த நூலை எழுதிய கலைமணி என்பவர், தொழிலாளியாக இருந்து, படிப்படியாக உயர்ந்து, கலைமணி என்ற பெயரில் அச்சு இயந்திரத்தை உருவாக்கி வெற்றி கண்ட அதே நபர்தானா என்று தெரியவில்லை.)
என் காலத்தில் அவருடைய சாதனைகளைப் பற்றிய செய்திகளோடு சாகசங்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஏராளம். சிக்கல் என்னவென்றால், சாகசங்களை நம்பாமலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவை சாதனைகளோடு கலந்திருக்கும். உதாரணமாக, அவர் ஏராளமான பேருந்துகளை இயக்கி வந்தார். ஒரே எண்ணில் பல வழித்தடங்களில் வாகனங்கள் ஓடுமாம். வருமான வரிக்காரர்கள் ரெய்டு நடத்த வந்தால் பேருந்துகளே மாயமாகி விடுமாம். அண்டர் கிரவுண்டில் அவ்வளவு பெரிய கிடங்கு வைத்திருந்தாராம். சாகசக் கட்டுக்கதைகளுக்கும் மேலே அவருடைய சாதனைகள் இருந்தன என்பது உண்மை. அவற்றில் சிலவற்றின் பயன்களை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒன்றல்ல இரண்டல்ல, எண்ணற்ற விஷயங்களுக்கு அவர் முன்னோடி. பள்ளிப்படிப்புகூட முறையாக முடிக்காத ஒருவர் எப்படி எண்ணற்ற துறைகளில் கால்பதித்து சாதித்துக் காட்டியிருக்க முடியும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் கிடையாது. சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஜி.டி. நாயுடு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர். பள்ளியில் படிக்க விருப்பமில்லாமல் பாதியில் விட்டவர். ஆங்கிலேயர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் பைக்கை தற்செயலாகப் பார்க்க நேர்ந்து, வீட்டைவிட்டு ஓடி கோவைக்கு வந்து, ஹோட்டலில் வேலை செய்து, காசு சேர்த்து, மோட்டார் பைக்கை விலைக்கு வாங்கி, ஊருக்குக் கொண்டு போய் அக்க்க்காகப் பிரித்து மீண்டும் பொருத்தி இயக்கிப் பார்த்தவர். இதிலிருந்து தொடங்குகிறது அவரது சாதனைப் பயணம்.
1920இல் பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் பஸ் ஓட்டுகிறார். அவரே டிரைவர், அவரே கண்டக்டர், அவரே மெக்கானிக்.
அடுத்த சில ஆண்டுகளில் யுஎம்எஸ் என்ற பேருந்து நிறுவனம். இதிலும் என் நினைவிலிருந்து குறிப்பிட வேண்டியது, இந்த நிறுவனம் டீசென்டிரலைஸ் செய்யப்பட்டிருந்தது. உடுலை கிளை பேருந்துகள் யுஎஸ், கோவை கிளை பேருந்துகள் சிஎஸ், தாராபுரம் கிளை பேருந்துகள் டிஎஸ் – என எல்லாமே ஒரே மாதிரியான லோகோ கொண்டிருக்கும். பேருந்தின் நடுவே வட்டத்தில் இந்த இரண்டு எழுத்துகளும் இருக்கும். தன்னுடைய பேருந்துகளில் டிக்கெட் கொடுக்க தானியங்கி இயந்திரம் அவரே வடிவைத்தார். இப்போது கண்டக்டர் கையில் வைத்திருக்கும் எலக்டிரானிக் கருவி போல, அப்போது மெக்கானிக்கல் இயந்திரம் இருந்தது.
பாலசுந்தரம் என்பவருடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே முதல் மோட்டார். (இந்த பாலசுந்தரம் டெக்ஸ்டூல் என்ற நிறுவனத்தை அமைத்தார். அதுதான் பிற்காலத்தில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் ஆக விரிவடைந்தது.)
சர்வதேச அளவில் பரிசு பெற்ற பேட்டரி ரேசர்
மெல்லிய ரேசர் பிளேடு
ஐந்து வால்வு ரேடியோ
கால்குலேட்டர்
புகைப்படக் கருவிக்கு போகஸ் செய்யும் இயந்திரம். லண்டனில் ஜார்ஜ் மன்னர் இறந்தபோது, இறுதிச்சடங்கை முழுமையாக படம்பிடித்தவர்.
1952இல் 2000 ரூபாய்க்கு கார். அரசு அனுமதி தரவில்லை.
வீரிய ஒட்டுவிதைப் பயிர்கள்.
தொழில்துறை, இயந்திரத்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை என பல துறைகளிலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் வேறு எவரும் கிடையாது.
கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி எல்லாம் அறியப்படாத காலத்திலேயே, தொண்டிலும் தன் கவனத்தை செலுத்தியவர் அவர். சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் என்பவர் மீது கொண்ட மரியாதையால் ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக், ஆர்தர் ஹோப் என்ஜினியரிங் கல்லூரியை நிறுவினார். அதுதான் பின்னாளில் அரசு பொறியியல் கல்லூரி ஆனது. கோவையில் இப்போதும் ஹோப் காலேஜ் என்ற பெயரில்தான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. கல்லூரிகளிலும் என்ஜினியரிங் கல்விக்கு நான்காண்டுகள் தேவையில்லை, இரண்டு ஆண்டுகள் போதும் என்பது அவர் கருத்தாக இருந்தது. 15 நாட்களில் என்ஜினியர் ஆக்கும் சிறப்பு படிப்பும்கூட நடத்த முடியும் என்றாராம் அவர்.
அவருடைய மூளையை 2 கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்து வைத்திருந்தார். இல்லை இல்லை, இன்ஷ்யூர் செய்ய விரும்பினார், ஆனால் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அதற்குத் தயாராக இல்லை. அவர் இறந்த பிறகு, கோவையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த சில நாட்கள் கழித்துப் பார்த்தபோது உடலைக் காணவில்லை. அமெரிக்காகாரன் அவருடைய மூளையை ஆராய்ச்சி செய்வதற்காக எடுத்துக்கொண்டு போய்விட்டான். ... இதெல்லாம் எங்கள் மாணவகால கட்டுக்கதைகள்.
இன்று ஜி. துரைசாமி நாயுடுவின் பிறந்தநாள். அவரைப்பற்றிய தகவல்களைத் தேடும்போது, கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியம் பற்றிய தகவலும் கிடைத்தது. வாய்ப்புக்கிடைக்கும்போது அவசியம் பாருங்கள், குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.
G.D Naidu Museum
734, Avinashi Road, President Hall, Coimbatore - 641018
Phone: +91 422 2222548

No comments: