Tuesday, June 19, 2018

மனமோ கருணாநிதியை தேடுகிறது

2005 இல் கட்டுரைப்போட்டி ஒன்றிற்காக மும்பை (அன்று பம்பாய்) சென்றிருந்த போது, இந்தி தெரியாமல் முழித்த போது திமுக மீது எரிச்சலும் வெறுப்பும் கோபமும் வந்தது. அது மட்டுமில்லாமல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எங்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் "இந்தியை படிக்கவிடாமல் செய்த கருணாநிதியையும், திமுக வையும்" மேடையில் கண்ணீரோடும் மிகுந்த கோபத்தோடும் வசைபாடினேன். அப்போது எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் வரலாறும் தெரியாது. திமுக தான் இந்தியை படிக்கவிடாமல் தடுத்தது என்ற செய்தியை மட்டும் பத்திரிக்கை(அன்றைய வாட்ஸாப்) படித்து தெரிந்துவைத்திருந்தேன்.
2009 களுக்குப் பின்னர் அரசியலை படிக்க, கவனிக்க ஆரம்பித்த பின்னர் வாங்கிய புத்தகங்களில் முதன்மையான புத்தகம் பழ கருப்பையா எழுதிய "கருணாநிதி என்ன கடவுளா?".
இன்று 2018. கருணாநிதி உடல்நலமின்மையால் செயல்படாமல் இருக்கிறார்.
"கருணாநிதி என்ன கடவுளா" புத்தகம் எழுதிய பழ கருப்பையாவோ திமுகவில் சேர்ந்துவிட்டார்.
இந்திக்காக கருணாநிதியை வசைபாடிய நானோ திமுகவின் பாதையில் இந்தி எதிர்ப்பு பாதையில் நிற்கிறேன்.
என் மனமோ கருணாநிதியை தேடுகிறது.
என்ன காரணம்?
பல காரணம் இருந்தபோதிலும் ஒற்றைக்காரணமே போதுமே.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
இது அனைவருக்கும் தெரிந்த குறள். அதன் பொருளும் அனைவருக்கும் தெரிந்ததே.
மு.வரதராசனார் ஆத்திகர், "எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கின்றது". இது மு.வ உரை.
இனி மு.க முறை. அவர் சீரிய பகுத்தறிவாளர். இந்த குறள் தான் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல்குறள்.
ஆதிபகவன் என்றால் என்ன என்று திருவள்ளுவனுக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் உரை எழுதிய எல்லோரும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்றே உரை எழுதிவிட்டனர்.
கலைஞர் கருணாநிதி என்ன செய்திருக்க முடியும்? கடவுள் என்ற சொல்லை சொன்னால், பகுத்தறிவாளர் தன் நிலை தாழ்ந்து எழுத வேண்டி வருமே..
எனவே இப்படி எழுதினார்.
"அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை,
ஆதிபகவன் உலகில் உள்ள உயிர்களுக்கு முதன்மை".
இதுல வரும் ஆதிபகவனுக்கு என்ன பொருள்.?
நீ என்ன வேண்டுமானாலும் வச்சுக்கோ. எனக்கு "ஆதிபகவன் னா கடவுள் இல்லை".. ன்னு சொல்லிட்டார் மு.க.
படிப்பவர் சாய்வைப் பொறுத்து ஆதிபகவன் பொருள் மாறும். ஆனால் எனக்கு ஆதிபகவன் னா கடவுள் கிடையாது. ஏன்னா ஆதிபகவன் னு எழுதிய திருவள்ளுவரே எந்த பொருளையும் சொல்லவில்லை, நான் ஏன்டா சொல்லனும் என்கிறார் கலைஞர். உனக்கு தேவைப்பட்டதை நீ வச்சுக்கோ. அவ்ளோ தான்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள குறளுக்கு விளக்கம் எழுதும்போது, "கடவுள்" என்ற சொல்லையோ, அந்தப் பொருளையோ பயன்படுத்தாமல் விளக்கம் எழுதும் திறமை, தைரியம், நுண்ணறிவு யாருக்கு வரும்?
அது கலைஞருக்கு உண்டு. இந்த ஒற்றைக்காரணம் போதாதா? கலைஞரை என் மனம் நினைக்க?

No comments: